தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (1)

அழகுக் கலைகள் எவை?

மனிதன் மிகப் பழைய காலத்திலே காட்டு மிராண்டியாக வாழ்ந்தான். இருக்க வீடும், உடுக்க உடையும், உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரியாமல் அக்காலத்திலே மனிதன், விலங்குபோல அலைந்து திரிந்தான். பிறகு அவன் மெல்ல மெல்ல சிறிது சிறிதாக நாகரிகம் அடைந்தான். வசிக்க வீடும், உடுக்க உடையும், உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரிந்து கொண்டான். இதனால் அவன் மிருக வாழ்க்கையிலிருந்து விலகி நாகரிக வாழ்க்கை பெற்றான். ஆனால், மனிதன் நாகரிக வாழ்க்கை அடைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன. மனிதன் நாகரிகம் பெறுவதற்குப் பேருதவியாக இருந்தவை அவன் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்ட பலவகையான தொழில்களேயாகும். ஒவ்வொரு தொழிலையும் கற்றுத் தேர்வதற்கு அவனுக்குப் பல நூற்றாண்டுகள் கழிந்தன.

மனிதனுடைய நல்வாழ்விற்கு உதவுகிற எல்லாத் தொழில்களையும் கலைகள் என்று கூறலாம். தச்சுவேலை, கருமாரவேலை, உழவு, வாணிபம், நெசவு, மருத்துவம் முதலிய தொழில்கள் யாவும் கலைகளே. பண்டைக் காலத்திலே நமது நாட்டிலே அறுபத்துநான்கு கலைகள் இருந்தன என்று மணிமேகலை முதலிய நூல்கள் கூறுகின்றன. அக்காலத்தில் அறுபத்துநான்கு கலைகள் இருந்தன என்றால், பல துறையிலும் நாகரிகம் பெருகியுள்ள இந்தக் காலத்திலே கலைகளின் எண்ணிக்கை மிக மிகப் பெருகியிருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

நாம் இங்கு ஆராயப் புகுவது இந்தப் பொதுக் கலைகளைப் பற்றி அன்று. இப்பொதுக் கலைகளுக்கு வேறுபட்ட அழகுக் கலைகளைப் பற்றித்தான் ஆராய்ச்சி செய்யப் போகிறோம்.

பலவகையான தொழில்களில் வளர்ச்சியும் தேர்ச்சியும் அடைந்து, தனது வாழ்க்கைக்கு வேண்டிய உணவு, உடை, உறையுள், கல்வி, செல்வம் முதலியவையும் பெற்று நாகரிகமாக வாழ்கிற மனிதன், இவற்றினால் மட்டும் மனவமைதி அடைகிறதில்லை. நாகரிகமாக வாழும் மக்கள் உண்டு, உடுத்து, உறங்குவதனோடு மட்டும் திருப்தியடைவதில்லை. அவர்கள் மனம் வேறு இன்பத்தை அடைய விரும்புகிறது. அந்த இன்பத்தைத் தருவது எது? அழகுக்கலைகளே. நாகரிக மக்கள் நிறை மனம் – திருப்தி – அடைவதற்குத் துணையாயிருப்பவை அழகுக் கலைகள்தாம். அழகுக் கலைகள் மனிதனுடைய மனத்திற்கு அழகையும் இன்பத்தையும் அளிக்கின்றன. அழகுக் கலைகளின் வாயிலாக மனிதன் நிறைமனம் (திருப்தி) அடைகிறான்.

அழகுக் கலைக்கு இன்கலை என்றும், கவின்கலை என்றும், நற்கலை என்றும் வேறு பெயர்கள் உண்டு. மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கிற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. மனிதன் தன்னுடைய அறிவினாலும் மனோபாவத்தினாலும் கற்பனையினாலும் அழகுக் கலைகளை அமைத்து, அவற்றின் மூலமாக உணர்ச்சியையும் அழகையும் இன்பத்தையும் காண்கிறான். அழகுக் கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிறபடியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள்; போற்றி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள்.

அழகுக் கலையை விரும்பாத மனிதனை அறிவு நிரம்பாத விலங்கு என்றே கூறவேண்டும்; அவனை முழு நாகரிகம் பெற்றவன் என்று கூறமுடியாது.

அழகுக் கலைகள் எத்தனை? அழகுக் கலைகள் ஐந்து. அவை கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை, இசைக் கலை, காவியக் கலை என்பன. பண்டைக் காலத்தில் நமது நாட்டவர் கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் ஒரே பெயரால் சிற்பக்கலை என்று வழங்கினார்கள். ஆனால், கட்டடக் கலை வேறு; சிற்பக் கலை வேறு.

காவியக் கலையுடன் நாடகக் கலையும் அடங்கும். அழகுக் கலைகளில் காவியக் கலை, இசைக் கலை இரண்டையும் பண்டைத்தமிழர் இயல், இசை, நாடகம் என்ற மூன்றாகப் பிரித்தனர். அவர்கள் இயற்றமிழ் என்று கூறியது காவியக் கலையை. செய்யுள் நடையிலும் வசன நடையிலும் காவியம் அமைப்பது இயற்றமிழ் எனப்பட்டது. செய்யுளை இசையோடு பாடுவது இசைத் தமிழ் எனப்பட்டது. இயலும் இசையும் கலந்து ஏதேனும் கருத்தையோ கதையையோ தழுவி வருவது நாடகத் தமிழ் எனப்பட்டது. நாடகத் தமிழில் நடனம், நாட்டியம், கூத்து என்பனவும் அடங்கும். எனவே, அழகுக் கலைகள் ஐந்தையும் விரித்துக் கூறுமிடத்து, கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, கூத்துக் கலை (நடனம், நாட்டியம்) காவியக் கலை, நாடகக் கலை என ஏழாகக் கூறப்படும்.

அழகுக் கலைகளைக் கண்ணினால் கண்டும், காதினால் கேட்டும், உள்ளத்தினால் உணர்ந்தும் மகிழ்கிறோம். இனி, இவற்றை விளக்குவோம்.

கண்ணால் கண்டு இன்புறத்தக்கது கட்டடக் கலை. பருப்பொருளாக உள்ளபடியால், கட்டடத்தைத் தூரத்தில் இருந்தும் கண்டு களிக்கிறோம்.

இரண்டாவதாகிய சிற்பக் கலை மனிதன், விலங்கு, பறவை, தாவரம் முதலான உலகத்திலுள்ள இயற்கைப் பொருள்களின் வடிவத்தையும், கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட பொருள்களின் உருவத்தையும் அழகுபட அமைப்பது. இந்தச் சிற்பக்கலை, கட்டடக் கலையை விட நுட்பமானது. இதனையும் கண்ணால் கண்டு மகிழ்கிறோம்.

மூன்றாவதாகிய ஓவியக்கலை, சிற்பக் கலையை விட நுட்பமானது. உலகத்தில் காணப்படுகிற எல்லாப் பொருள்களின் உருவத்தையும், உலகில் காணப்படாத கற்பனைப் பொருள்களின் வடிவத்தையும் பலவித நிறங்களினாலே அழகுபட எழுதப்படுகிற படங்களே ஓவியக் கலையாம். முற்காலத்தில் சுவர்களிலும், துணிகளிலும் ஓவியங்கள் எழுதப்பட்டன. படம் என்னும் சொல் படாம் (துணி) என்னும் சொல்லிலிருந்து உண்டாயிற்று. இதனையும் அருகில் இருந்து கண்ணால் கண்டு மகிழ்கிறோம்.

நான்காவதாகிய இசைக் கலையைக் கண்ணால் காண முடியாது. அது காதினால் கேட்டு இன்புறத்தக்கது.

ஐந்தாவதாகிய காவியக் கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது. ஏனென்றால், இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்கக் கூடுமாயினும், கேட்பதனாலே மட்டும் மகிழ முடியாது. காவியக் கலையைத் துய்ப்பதற்கு மனவுணர்வு மிக முக்கியமானது. மனத்தினால் உணர்ந்து அறிவினால் இன்புற வேண்டும். ஆகையினாலே, காவியக் கலை கலைகளில் சிறந்த நுண்கலை என்றும் மென்கலை என்றும் கூறப்படுகிறது.

இசைக் கலையோடு தொடர்புடைய நடனம், நாட்டியம், கூத்து என்பனவும், காவியக் கலையுடன் தொடர்புடைய நாடகமும் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் மகிழத்தக்கன.

நாகரிகம் பெற்ற மக்கள் உலகத்திலே எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் அவர்கள் அழகுக் கலைகளை வளர்த்திருக்கிறார்கள். அழகுக் கலைகள் மனித நாகரித்தின் பண்பாடாக விளங்குகின்றன. நாகரிகம் பெற்ற எல்லா நாட்டிலும் அழகுக் கலைகள் வளர்ச்சியடைந்திருந்தாலும், இந்த நுண்கலைகள் எல்லாம் எங்கும் ஒரே விதமாக வளரவில்லை. அழகுக் கலைகளின் அடிப்படையான தன்மை எல்லா நாட்டிலும் ஒரேவிதமாக இருந்தபோதிலும், அதாவது, கற்பனையையும் அழகையும் இன்பத்தையும் தருவதே அழகுக் கலைகளின் நோக்கமாக இருந்தபோதிலும், அவை வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு விதமாக உருவடைந்து வளர்ந்திருக்கின்றன. அந்தந்த நாட்டின் இயற்கையமைப்பு, தட்பவெப்ப நிலை, சுற்றுச்சார்பு, மக்களின் பழக்கவழக்கங்கள், மனோபாவம், சமயக் கொள்கை முதலியவற்றிற்கு ஏற்றபடி அழகுக் கலைகள் வெவ்வேறு விதமாக உருவடைந்திருக்கின்றன. இக் காரணங்களினால்தான் அழகுக் கலைகள் எல்லாம் எல்லா நாட்டிலும் ஒரேவிதமாக இல்லாமல் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு விதமாக உள்ளன. இக்காரணங்களினால்தான் நமது நாட்டு அழகுக் கலைகளும், கிரேக்க நாட்டு அழகுக் கலைகளும், சீனநாட்டு அழகுக் கலைகளும், ஜப்பான் நாட்டு அழகுக் கலைகளும், உரோம நாட்டு அழகுக் கலைகளும், இலங்கை நாட்டு அழகுக் கலைகளும், ஏனைய நாட்டு அழகுக் கலைகளும் வெவ்வேறு விதமாக வளர்ச்சியடைந்துள்ளன.

ஈண்டு*, நமது தமிழ்நாட்டின் அழகுக் கலைகளைப் பற்றித் தனித்தனியே ஆராய்வோம்.

–கலை வளரும்…

*ஈண்டு = இங்கு.

About The Author