தருணம் (10)

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

வேகம்

அறிவழகன்

ச்சே… அம்மாவாம், அம்மா! கொஞ்சமும் இங்கிதம் தெரியாமல்… இப்ப இதுக்கென்ன அவசரம்? இந்தப் பாவாடையை அப்புறமாத்தான் தச்சுக்கினாப் போச்சு. என்னமோ… இது இல்லேன்னு கல்யாணத்தயே நிறுத்திடப் போறாப்பல… பிடிச்சா ஒரே பிடிதான். இப்பவே மணி நாலரையாச்சு. இனிமேல நான் எப்ப இத முடிச்சுட்டு… அங்க போறது? எனக்காக அவரு காத்துக்கினு இருப்பாரே! சொன்ன நேரத்துக்குள்ள போகலேன்னா… ஒருவேளை நான் வர்லேன்னு போயிட்டா? அப்புறம் ஒரு மாசத்துக்கு மூச்சுப் பேச்சே இருக்காது. என்னத்தச் சொல்லியும் இந்த மனுசனைச் சமாதானப்படுத்த முடியாது. அதுக்காக ஒரு பொய்க்கோபத்தை நானும் வரவழைச்சிக்கினு முரண்டு பண்ணணும்.

மிஷினில் பாவாடையை இறுக்கம் கொடுக்காமல் மனம் பொருமியபடி ஓட விட்டாள் வித்யா.

சாதாரணமாய் எதையுமே பதட்டமில்லாமல் செய்யக்கூடியவள். இப்போது முற்றிலும் மாறான பரபரப்புடன், அமைதியில்லாத இதயத் துடிப்புடன் இயங்குவது வித்தியாசமாக நிச்சயமாக உடனிருந்து பழகியவர்களுக்குத் தெரியும்.

"என்னடி… உன் போக்கே சரியாப் படலே? அப்படி எங்க வெட்டுக்காடு வெட்டப் பறக்கறே? ஆற அமரத்தான் செய்யேன்? கடனுக்குத் தைக்கறாப்பல. துணி கிழிஞ்சாலும் தையலு போகக் கூடாதுடி. அதான் நல்ல டைலருக்கு அர்த்தம்!"

அம்மா எதையாவது சந்தேகப்படற மாதிரி கேட்டுவிடக் கூடாதே என்கிற அது வேறு உதைப்புடன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தவித்தபோது, அம்மா கேட்டே விட்டாள்.

அவள் அப்படித்தான்; திருஷ்டிக்கண் அவளுக்கு. நினைப்பதைச் சொல்லிக் கொடுத்தது போலக் கேட்டு விடுவாள்.
"சரியாத்தானே தைக்கறேன்?"

வெறுப்பு வெளிப்படையாகத் தெரியும்படியாகத்தான் சற்று அழுத்தமாகவே சொன்னாள்.

"என்னடியம்மா இன்னைக்கு வந்தது உனக்கு?"

பதிலுக்குக் காத்திராமல் அடங்கிப் போனாள் அம்மா. இதைவிட முக்கியமான சிந்தனையில் மூழ்கிப் போயிருக்கிறாள் போலும்.
நிமிஷத்துக்கு நிமிஷம் மணியைப் பார்த்தாள். என்றுமில்லாமல் இன்று மட்டும் எவ்வளவு சீக்கிரமா நேரம் போவுது? அய்யோ! இன்னும் ஒரு மணி நேரந்தானே இருக்கு! அதுக்குள்ளாற இதை முடிச்சுட்டு… ரெண்டாம் நம்பர் பஸ்ஸப் பிடிச்சு பீச்சுக்குப் போயிச் சேரணுமுன்னா ஆகற காரியமா?

அம்மா அப்படித்தான் கத்துவாள். அவள் எப்போதுதான் கத்தாமலிருந்தாள்? இனிமேலும் அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருக்க முடியாது. வருவது வரட்டும்.

துணியை அப்படியே மிஷினில் விட்டுவிட்டு எழுந்து சென்று முகம் அலம்பி, தலைசீவி அழகுபடுத்திக் கொள்கிறாள். திரும்பத் திரும்பக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறாள்.

தலை வார, பவுடர் பூச, பொட்டு வைக்க, பூ வைக்க… விழுந்த புடவையைக் கட்டிக் கொள்ள… ஒவ்வொரு செயலுக்கும் கண்ணாடியில் பார்த்து… இது அவளுக்கு மிக மிக அவசியமாகப் பட்டது. பெண் பார்க்க நாலைந்து பேர்களோடு ஒரு மாப்பிள்ளை வந்தபோது கூட அவள் அவ்வளவு அக்கறையுடன் தன்னைச் சிங்காரித்துக் கொள்ளவில்லை. பார்த்துப் பார்த்துத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு கடைத் தெருவுக்குப் போகும் போக்காகக் கைக்கடிகாரத்தை எடுத்துக் கையில் கட்டிக் கொள்ளும்போது மணியைப் பார்த்தாள். எக்கச்சக்கமாய் ஆகி விட்டது போலத் தோன்றியது. என்ன இருந்தாலும் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது!

அவசரம் அவசரமாகச் செருப்பை மாட்டிக் கொண்டு வீட்டு வாயிற்படியைத் தாண்டியபோது மணி நான்கு முப்பத்தைந்தைக் காட்டியது. அம்மா ஒரு நிமிஷம் கேள்வி ஏதும் கேட்காமல் ஒரு மாதிரியாக நின்று பார்த்தாள்.

நெடுநேரமாகி விட்ட பிரமிப்பில் கைப்பையை நெஞ்சில் அணைத்தவாறு பஸ்ஸைப் பிடிக்க ஓடினாள். எதிரில் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்கிற கவனமேயில்லாமல் ஓடினாள்.

பஸ் நிற்குமிடத்தை நெருங்கியபோது, "ஹேய்… வித்யா!…"

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். அத்தை! என்றும் வராதவள். சந்தோஷமாயிருந்தது. கருத்து தெரியுமட்டும் அவள் மடியிலே கிடந்ததாக அப்பா சொல்லுவார்.

"எங்கேடி அவ்வளவு அவசரமா?"

"எங்கேயுமில்லே அத்தே! கொஞ்ச தூரந்தான். நீங்க வீட்டுக்குப் போயிகிட்டே இருங்க. பின்னாலயே வந்துடறேன்."

"என்னடி… நல்லாயிருக்கியா? ‘வீட்டுக்கு வாடி, வாடி’ன்னு நானும் எத்தனை பேருகிட்டத்தான் சொல்லியனுப்புவேன்? கையோட கூட்டிப் போகலாமின்னு நானே வந்துட்டேன். ஆமாம், அம்மா, அப்பால்லாம் சௌக்கியமா?"

"எல்லாருந் நல்லாருக்காங்க. அத்தே. நீங்க போயிட்டேயிருங்களேன். போனாப்பலே வந்துடறேன்."

"சரி சரி… சீக்கிரமா வாடி. இருட்டறதுக்கு முன்னால் பொறப்பட்டுடலாம்."

அத்தை சொல்லிக் கொண்டே நடந்தாள்.

எப்பவுமில்லாமல் இப்பத்தானா வரணும்? அய்யோ! இப்பவே நேரமாயிடுச்சே! நேரங்காலந் தெரியாமல் அத்தை வேறு… சாவதானமாகக் கேள்வி கேட்கிறாள். நல்லவள்தான். பேச்சுக் கொடுத்தால் போதும்; பேசிக் கொண்டேயிருப்பாள். உச்சி வெயில் என்று கூடப் பார்க்க மாட்டாள். ‘எப்படி இருக்கீங்க அத்தே?’ என்று ஒரு கேள்வி கேட்டிருக்கலாம். என்ன நினைத்துக் கொள்கிறாளோ?

வேகமாக நடந்தாள். மக்கள் நடமாட்டம் இல்லாமலிருந்தால் ஓடவும் செய்யலாம். ஒரு பெண் ஓடினால் அதிசயமாய் நின்று பார்ப்பார்கள். என்ன ஆண்களோ?

என்னதான் ஊட்டி வளர்த்தவளானாலும் அவன் அன்புக்கு ஈடாகுமா? யார் வந்து தடுத்தாலும் நிற்கக்கூடாது; நிற்க முடியாது. கட்டுப்பட்டிருப்பது பைத்தியக்காரத்தனந்தான்.

பஸ்ஸிற்காகக் காத்திருந்தபோது, அவளைத் தொடர்ந்து இன்னும் நிறைய பேர் கூடிவிட்டிருந்தார்கள். இன்னும் அந்த பஸ்ஸைக் காணோம். அந்த ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் வந்து போகிறது. அரை மணிக்கு ஒரு பஸ். விட்டு விட்டால் மறுபடியும் அரைமணி நேரம் காத்திருக்க நேரும்.

மணியைப் பார்த்தாள். நான்கு நாற்பது ஆகியிருந்தது.

என்ன பஸ்! பங்ச்சுவாலிட்டின்னா என்னன்னு தெரியாதவனுகளெல்லாம் பஸ் விடறானுங்க. இதுக்கெதுக்கு ஷெடியூல் தரணும்? எல்லாமே பைத்தியக்காரத்தனமாயில்ல இருக்கு?

பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியதாயிற்று. அவளைப் பொறுத்தவரை அரை மணிக்கும் மேலாகக் காத்திருப்பது போன்றதொரு உணர்வு.

இதற்குள் தெரிந்தவர்கள் யாரேனும் வந்து நின்று அறுக்காமலிருக்க வேண்டும். திருட்டுத்தனமாய் அக்கம் பக்கம் பார்த்துக் கொள்கிறாள். தெரிந்தவர்கள் யாரேனும் நின்றிருந்தால் பார்க்காதது மாதிரி இருந்துவிட வேண்டும். இதுவே ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.

சொன்ன நேரத்தில் போகாவிட்டால், காத்திருக்காமல் போய்விடுவார். அது அவருடைய சுபாவம்.

வழியில் என்னாச்சோ, ஏதாச்சோ என்று கூட யோசிக்க மாட்டார். கோபம் மட்டும் சுர்ரென்று வந்துவிடும். அப்புறம் சமாதானத்துக்குத் தொங்க வேண்டும்.

அவரை எனக்காக ஏங்க வைத்துப் பார்க்க எவ்வளவோ ஆசைதான். பிகுவெல்லாம் செய்யலாம். என்ன செய்யறது? அம்மாவுக்குத்தான் மத்தவங்களோட அவசரம் தெரியாதே! வேலை மேல வேலை சொல்லுவா; அதுக்குத் தகுந்தாப்பல இப்ப பஸ் வேற…

ஒரு பஸ் சாய்ந்து கீழே விழுந்துவிடும் போலத் தெரு முனையைத் திரும்பி வந்தது.

"என்னப்பா அநியாயமா இருக்கே! இப்படியா கண்மண் தெரியாம வருவானுங்க? மெல்ல வந்தாத்தான் என்ன? அப்படி என்னத்தைக் கழட்டப் போறாங்களாம், இவ்வளவு வேகமாப் போயி?"

அவளுடன் நின்றிருந்தவர்களில் ஒருவர் அங்கலாய்த்தார்.

"இந்த டிரைவரே இப்படித்தான். ஸ்டாப்பிங் கூடத் தெரியாம வேகமாக அடிச்சுக்கினு போவான்."

பஸ் வந்து நின்றபோது, இறங்குபவர்களை முட்டி மோதிக்கொண்டு ஏறுவதற்குள் பெரும்பாடாய்ப் போயிற்று. கண்டக்டர் விசில் ஊதியதும் அவளுக்குச் சந்தோஷமாயிருந்தது. எப்போது விசில் சத்தம் கேட்கும் என்று காத்திருந்தவர் போல டிரைவரும் வேகமாக பஸ்ஸை எடுத்தார். இன்னும் சில பேர் ஏற முடியாமல் விட்டு விட்டுத் திட்டியது கேட்டது.

கூட்டத்தின் நடுவில் நிற்க முடியாமல் நெளிந்தாள் வித்யா. கொஞ்சம் ஏமாந்தால் போதும். கசக்கி எடுத்து விடுவார்கள் இந்த ஆண்கள். பெண்ணாச்சேன்னு எடஞ்சி நின்னாயென்ன?

அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றது. நிறையப் பேர் இறங்குவது போலத்தான் ஆளுக்காள் சத்தம் போட்டார்கள். வயசான கிழவி கூடை ஒன்றைத் தூக்கிக்கொண்டு எப்படியோ ஏறி இடம் பிடித்துக் கொண்டாள். வண்டி அந்தக் கிழவிக்காகவே கொஞ்ச நேரம் நின்றது.

ஏற முடிஞ்சா ஏறணும். என்னத்துக்கு இந்த வயசுல இப்பிடி முட்டி மோதிக்குனு… மத்தவங்களோட அவசரந் தெரியாம? ஏன் அடுத்த பஸ்ஸிலேதான் வர்றது?

கண்டக்டரைப் பார்த்தாள். சீட்டுக் கொடுப்பதிலேயே கவனமாயிருந்தார். ‘வண்டிய எடப்பா’ என்று கூடச் சொல்லலாமா? துடித்தாள். அடக்கிக் கொண்டாள். நெரிசல் கொஞ்சமும் குறையவில்லை. அனலாய்த் தகித்தது. வேர்வை வடிய ஆரம்பித்துவிட்டிருந்தது.

வண்டி நகர்ந்தது. இதே போக்கில் போனால் கூடப் போய் சேர்ந்து விடலாந்தான்.

இரண்டு நிறுத்தத்தைத் தாண்டியதும் வண்டி ஒதுக்குப்புறமாக வேகமான குலுக்கலுடன் நின்றது.

தீர்ந்தது! வண்டி ஓடும்போதே இந்தக் கண்டக்டர்களால் டிக்கட் கொடுக்க முடியாதோ? இன்னும் அரைமணி நேரத்துக்கு இப்படியே போட்டு விடுவார்கள். அதுவுமில்லாமல் ஓட்டலாய்ப் பார்த்துக் கூட நிறுத்திவிடுவார்கள்.

இதுகளும் அப்படித்தான். வண்டியில ஏறினதும் டிக்கட் கேட்டு வாங்க வேண்டியதுதானே? இப்படி நேரத்த வீணாக்கணுமா? ‘யார் யாருக்கு என்ன அவசரமோ’ன்னு யோசிக்க வேண்டாம்?

போயும் போயும் இந்த பஸ்ஸிலேதானா ஏறணும்? இறங்கி நடந்தாலே போயி சேர்ந்துடலாம் போல.

இன்னைக்கு…. அவ்வளவுதான். ஏமாந்து திரும்ப வேண்டியதுதான்.

அடிக்கடி மணியைப் பார்த்தாள். ஒவ்வொரு நிமிஷமும் ஒரு செகண்ட் போல ஓடிக் கொண்டிருந்தது. இதற்குள் பார்த்துப் பார்த்து அழகுபடுத்திய முகத்தில் வேர்வை வழிந்து கண்ணெரிச்சலெடுத்தது. இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் கண்ணாடி முன் அவ்வளவு நேரம் நின்றிருக்க வேண்டாம்.

ஒரு வழியாக வண்டியை எடுத்தபோது வண்டிக்கு ஏதும் ஆகிவிடக் கூடாதே என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.
டிரைவர் போற போக்கைப் பார்த்தால், எதிர்வரும் நிறுத்தத்தில் வண்டியை நிறுத்த மாட்டான் போல இருந்தது.
போகட்டும்… போகட்டும். நல்லதுதான்; டிரைவர் நல்ல மனுசன்.

வண்டி நிறுத்தத்தையும் தாண்டியது. வயதான கிழவி வண்டியை நிறுத்தச் சொல்லிக் கத்தியதோடல்லாமல், எட்டி மணியை அழுத்தி அழுத்தி அடித்தாள்.

டிரைவர் எரிச்சலோடு வண்டியை நிறுத்தினார். நின்றிருந்தவர்கள் எல்லாருமே ஒருவர் மீது ஒருவர் படுத்து நிற்க வேண்டியதாயிற்று. இது போன்ற சமயங்களில்தான் இவர்கள் மீது கோபமே வருகிறது.

"சீக்கிரம் இறங்கு கெழவி! மொதல்லேயே வண்டி லேட்டு…"

கண்டக்டர் கத்தினார். ‘அந்தக் கிழவியைக் கீழே பிடித்துத் தள்ளிவிட்டு விசில் கொடுக்க மாட்டாரா’ என்றிருந்தது வித்யாவுக்கு. கிழவி அவ்வளவு மெல்லத் தடவித் தடவி, கூடையைத் தூக்கிக்கொண்டு இறங்கினாள்.

அப்படி இப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்னும் அரைமணி நேரத்திற்கும் மேலாகலாம். எப்படியும் ஐந்தரையைத் தாண்டி விடும்.

மனம் ‘திக்திக்’கென்று அடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தது.

******

கடற்கரையில் அவன் நான்கு மணிக்கே வந்து காத்துக் கிடந்தான். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகவில்லை அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசி. ஆனால், பார்த்து வெகு நாளாகிவிட்டது போன்ற பிரமை! கட்டிய மனைவியைப் பிரிந்த பட்டாளத்தானின் வெறியைப் போல.

வித்யாவிற்காக இரு ஜோடி சங்கு வளையல்கள் வேறு வாங்கி வைத்திருந்தான். அடிக்கடி அதைப் பிரித்துப் பார்த்து அவள் கைகளில் போட்ட பிறகு எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்து, அதில் ஏற்பட்ட சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அவள் இல்லையே என்ற கோபத்துடன் அப்படியும் இப்படியும் நடந்து தணிந்தான்.

மணியைப் பார்த்தான். சரியாக ஐந்து மணிக்கெல்லாம் சந்திப்பதாகத் திட்டம். இன்னும் எவ்வளவோ நேரம் இருந்தது.
சுற்றுமுற்றும் பார்த்தான். ஏகக்கூட்டம். வருவதும் போவதுமாய்… இன்னும் அவளைத்தான் காணோம். கடலைக்காரனைக் கூப்பிட்டு நாலணாவிற்கு வாங்கிக் கொறிக்க ஆரம்பித்தான்.

அடிக்கடி அவள் வரும் வழியைப் பார்ப்பதும், பின் மணியைப் பார்ப்பதுமாய் நேரத்தைக் கழித்தான். ஒரு முறைக்கு நான்கு முறை அவள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்திற்குச் சென்று வருகிற பஸ்ஸை எல்லாம் ஆவலாகப் பார்த்துப் பார்த்து ஏமாந்து, திரும்ப எரிச்சலோடு வந்திருக்கிறான்.

அவளைப் பார்த்தால்தான் நிம்மதியே வரும். மணியைப் பார்க்கிறான். ஒவ்வொரு நிமிஷமும் நகராமல் யுகமாய்க் கழிந்தது! இன்னும் முக்கால் மணிக்கும் மேலிருக்கிறது.

அம்மாடியோவ்… எப்போ ஆவறது?

கடல் நீரில் காலார நடந்து வரலாமா என்று யோசித்தான்;

நடந்தான்.

சொன்னாச் சொன்னபடிதான் வரணுமா என்ன? கொஞ்சம் முன்னாடியே வந்தா என்ன? நான் வந்து காத்துக் கெடக்கலே? மனசிருந்தா… வரத் தானாத் தோணுது!

வரட்டும்; திட்டற திட்டுலே… என்ன வேண்டுமானாலும் நினைத்துட்டுப் போகட்டும்.

கையிலிருந்த கடலையெல்லாம் தீர்ந்து போனது. நேரம் மட்டும் இன்னும் ஆனபாடில்லை. நாலரையிலேயே இருந்தது.
டெல்லிக்குப் போகிற அப்பாவை ‘ரயிலேத்தி விட்டுட்டு வாடா’ன்னு அம்மா எவ்வளவோ கெஞ்சினாள். வண்டி நான்கு மணிக்குத்தான். எதை எதையோ சொல்லித் தட்டிக் கழித்துவிட்டு வர வேண்டியதாப் போச்சு. இங்க வந்த பிறகுதான் தெரியுது, அப்பாவ வண்டி ஏத்திட்டே வந்திருக்கலாம். என்னமோ சபலந்தான்.

மணியைப் பார்த்தான். கூடுதலாக இரண்டு நிமிடமே ஆகியிருந்தது.

பக்கத்தில் கழைக்கூத்தாடி கணிசமான அளவு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான்.
கூட்டங்களைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்காது. தனிமையில் எவ்வளவு நேரந்தான் இருக்க முடியும்?

மெல்ல நடந்து, கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து நின்று, சுற்றி நிற்பவர்களில் யாரேனும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று ஓரப் பார்வை பார்த்தான். யாரேனும் தென்பட்டால் கண்ணில் படாமல் நழுவிவிட வேண்டியதுதான். அதுவும் அவள் வரும் நேரமாகப் பார்த்து அட்டைபோல ஒட்டிக் கொண்டால்… காரியமெல்லாம் கெட்டுப் போகும்.

நல்லவேளை; யாருமில்லை. சந்தோஷமாயிருந்தது.

கீரியும், பாம்பும் சண்டை போட இன்னும் கொஞ்ச நேரம்தானிருந்தது. அவன் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
இன்னும் நேரமிருந்தது. பார்க்க ஆவலாயிருந்தது. சண்டையைப் பார்த்துவிட்டே போகலாம். கொஞ்சநேரம் அவளை மறந்து வேடிக்கை பார்த்தான்.

நெடுநேரமாய் அங்கேயே இருந்தான். கீரியும், பாம்பும் சண்டை போடுமா என்று சந்தேகமாயிருந்தது.

திடீரென்று நினைவு வந்தவனாய் மணியைப் பார்த்தான். இன்னும் நேரமிருந்தது. சூரியன் கூட இன்னும் உயரத்திலேயே இருந்தது. கடிகார முள் நகராமல் சண்டித்தனம் பண்ணுவதாய்த் தோன்றியது.

கால் வலித்தது. மீண்டும் சொன்ன இடத்திற்கே சென்றான். இடம் வெறுமையாய் இருந்தது.

ஒருவேளை நான் இல்லாத நேரத்தில் வந்து பார்த்து விட்டுச் சென்றிருப்பாளோ? சரியாக ஐந்து மணிக்குச் சந்திப்பதாகத்தான் சொன்னதாக நினைவு. ஒருவேளை… ஐந்து மணி என்றுதான் சொன்னேனா? இன்னும் ஐந்தாகவில்லையே!

இந்தக் காதல் விவகாரம் அவள் வீட்டிற்குத் தெரிந்திருக்குமோ? தெரிந்து விட்டிருந்தால் அவளால் எப்படி வர முடியும்? அவள் உடம்பிற்கு ஏதேனும் ஆகாமலிருக்க வேண்டுமே!

மணற்பரப்பில் மல்லாந்து படுக்கிறான். வானம் இதமான நீலநிறத்தில் குளிர்ந்திருந்தது.

அவள் மட்டும் இங்கே இருந்தா வான் நட்சத்திரங்களைத் தேடித் தேடி விளையாடலாம். கைகோர்த்தபடி கடலலைகளில் காலார நடக்கலாம்.

பெருமூச்சு வந்தது.

மணி நோய் கண்ட ஆமையாய் நகர்ந்தது. இன்னும் பத்து நிமிஷந்தான். அதுவே கூட அவனது பொறுமையைச் சோதிப்பதாயிருந்தது. சிரமமாகக் கூட இருந்தது.

சுற்றுமுற்றும் பார்த்து மறுபடியும் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்கிறான்.
‘எனக்கு அவசர வேலை இருக்கிறது. என்னை விடுகிறீர்களா?’ என்று முகத்திலடித்தாற் போலச் சொல்லவும் முடியாது. தேவையில்லாததையெல்லாம் பன்னிப் பன்னிப் பேசுவார்கள்.

இந்த விஷயத்தில் கவனமாயிருக்க வேண்டும்.

மணியைப் பார்த்தான்; ஐந்தாகவில்லை. அவளையும் காணோம். அவனுக்கு அப்படிக் காத்துக் கிடப்பது வெறுப்பாயிருந்தது. கோபம் உச்சந்தலைக்கு ஏறி ஏறி இறங்கியது.

எழுந்து உட்கார்ந்து மணலைக் குவித்துக் குவித்துக் கோபுரம் கட்டினான். பக்கத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப் பள்ளம் தோண்டினான்.

வழியைப் பார்த்தபடி, மணியைப் பார்த்தபடி… எழுந்து சென்றுவிட யோசித்த சமயத்தில்…

அவன் கண்களை அவள் மூடினாள். ஆவலால் கைகளைப் பற்றி இழுத்து உட்கார வைத்தான். அவளுக்கு மூச்சிரைத்தது. அவனைப் பார்த்துச் சொன்னாள்.

"எவ்வளவு சீக்கிரம் நேரம் போவுது தெரியுமா? எங்க அஞ்சாயிடப் போவுதுன்னு அவசர அவசரமா ஓடியாந்தேன்…"

"என்ன! ‘இன்னும் ஐந்தாகலையே’ன்னு அவஸ்தைப்பட்டுகிட்டு கிடக்கேன்… நீ என்னடான்னா?"

மணியைப் பார்த்தான்.

சரியாக ஐந்து!

–சந்திப்போம் வேறொரு தருணத்தில்…

About The Author