தருணம் 11

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

நொண்டிச்சாக்கு

ஆ.மாதவன்

"அய்யா, சாமி!… ரெண்டு காலும் இல்லாத மொடவன் அய்யா!… ஒங்களெப்போல ஓடியாடி பாடுபட முடியாத பாவி அய்யா! ஒரு ரெண்டு பைசா, அஞ்சு பைசா தர்மம் செய்யுங்க, தரும தொரையிங்களே! பாடுபட முடியாத நொண்டி சாமி! ஒரு தர்மம் போடுங்க புண்யவாங்களே…"

அன்னியூர் சந்தை பஸ் புறப்பட்டுப் போவதற்கு இன்னும் சிறிது நேரமே பாக்கியிருந்தது. நொண்டி துரைப்பாண்டி தனது மரக்கால் துணைகளைக் கையிடுக்கில் ஊன்றிக் கொண்டு, பஸ்ஸைச் சுற்றிச் சுற்றி வந்து… தன் தொழில் முறை வசனங்களை – கேட்போர் மனம் உருகும் வண்ணம், இரங்கிய குரலில் இழைந்தும் நயந்தும், பொழிந்து கொண்டிருந்தான்.

"புளியங்குடி, மானசத்திரம், தோப்புக்கடவு… ஏறுங்க, ஏறுங்க! ஆரு சாமி அது? டிக்கட் வாங்கிக்காமெ எங்கே ஓட்டம்? இந்தாம்மா பெரியம்மா! உங்களெத்தான்… தோ இங்கே டிக்கட் வாங்கிக்கிட்டு பஸ் உள்ளார போய் ஒக்காரு… அட, சில்லரை கொண்டா சாமி… இதென்ன பெரிய தொந்திரே… புளியங்குடியா? அறுவது காசு. கொண்டா ஜல்தி…" பஸ்ஸிற்கு வெளியே சிறிய கும்பலின் இடையே கண்டக்டர் கதறிக் கொண்டிருந்தான். காக்கி உடையில் அவனது குட்டை உருவம் கூட்டத்திற்கு வெளியே தெரியவில்லை.

"சாமி, தர்மவான்களே…" என்ற துரைப்பாண்டியின் குரல்தான் இரைச்சலை எல்லாம் மீறி இன்னும் அழுத்தமாகக் கேட்டது. பஸ்ஸின் இடதுபுறத்து முன் வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்தத் துப்பட்டித் தலைப்பாகைக்காரரிடம் இன்றும் வழக்கம்போல, துரைப்பாண்டியின் சாகசமும், இரங்கற்பாவும் எதுவும் பலிக்கவில்லை.

"அட போப்பா! எத்தினிவாட்டி சொல்றது? சில்லறை இல்லை போ" என்று, இடது உள்ளங்கைக் குழியிலிருந்து எதையோ எடுத்து சுவாரஸ்யமாகக் கொறித்துத் தின்றவாறு அலட்சியமாக பதில் சொன்னார், துப்பட்டிக்காரர்.

"பத்து பைசா கொடு சாமி, சில்லறை நான் தாறேன். ஒரு நொண்டி மொடவனுக்கு தர்மம் செய் சாமி. புண்ணியமுண்டு. நானு உங்களெப்போல ஓடியாடி பாடுபட முடியாதவன் சாமி…"

துரைப்பாண்டி விடாக் கண்டன் என்றால், அந்தத் துப்பட்டித் தலைப்பாகைக்காரர் கொடாக் கண்டனாகவே இருந்தார்.
கண்டக்டர் ரைட் கொடுத்துவிட்டான். பஸ்சும், அந்தப் பதினைந்து நிமிஷ நேர ஓய்வு போதாததுபோலச் சிணுங்கி, கனைத்து, புகையை உமிழ்ந்து, ஒரு உலுப்பு உலுக்கிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. பஸ் வந்து நின்ற எங்கள் காவடியூர் பஞ்சாயத்தின் செம்மண் ரோட்டில் கழிவுப் பொருள்போல ஆயில் மிச்சமும், டயர்களின் தடமும் தெளிந்து கிடந்தன. பஸ்ஸைச் சுற்றி நின்று தங்களது சின்னஞ்சிறிய வியாபார முறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருந்த பலூன்காரன், நிலக்கடலைக்காரன், இஞ்சி மொரப்பா, நூல் சீப்புக்காரன், ‘நடிகை அஞ்சனா தேவியின் அந்தரங்கக் காரியம்’ புத்தகம் விற்பவன்… எல்லோரும் அங்கிங்காகக் கலைந்து போயினர். இனி அடுத்த சந்தை பஸ் சாயங்காலம் அஞ்சரைக்குத்தான் வரும். அது வரையில் பஸ் நிலையத்தில் வேறு நாதியில்லை. வெயிலுக்குச் சளைக்காத செம்பன் நாயும், நாயைவிடாத ஈக்களும்தான் அந்தப் பாழ் வெயிலில் மிச்சம்!
துரைப்பாண்டி வழக்கம்போல என் கடையின் வடக்குத் திண்ணை ஓரத்தில் அமர்ந்து கொண்டவன், கை, டின் வருமானத்தை மடியில் கொட்டி எண்ண ஆரம்பித்தான். அவன் கைத்தடிகள் இரண்டும் ஓரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்தன.

"என்ன தொரைப்பாண்டி, இந்த கெடு சந்தைக்கும் உன் பாச்சா அந்த துப்பட்டிக்காரர்கிட்டே பலிக்கல்லே போலிருக்கே? பஸ் வந்து நின்றதும், அவர் பாட்டுக்குத் தலை துப்பட்டியை எடுத்து முகத்து வேர்வையை ஜோரா தொடச்சுக்கிட்டாரு… அப்பறம் நீண்ட மணிபர்ஸை தெறந்து துட்டு எடுத்து ஆயாக்காரிகிட்டே பொறி கடலை வாங்கினாரு… பலே ஆளுப்பா அந்த ஆளு… இன்னைக்கு கொடுத்தாரா காசு? நான் பாத்துக்கிட்டேதான் இருந்தேன். ஆனால் ஒரு கிழிசே தைக்க ஆள் வந்திரிச்சி, அப்பறம் பஸ் பெறப்பட்டதும்தான் பார்த்தேன். நீ கூட சில்லறை தாறதா சொன்னியே, கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்… என்னாச்சு?"

"அட, இரு சாமி! என்னா சேந்திருக்குதுன்னு பாத்துக்கினு வந்து சொல்றேன். தெய்யக்கார சாமி, ஒரு கணக்கு போட்டுக்கவேன்! அஞ்சு பைசா சல்லி ஒரு மூணு. மூணு பைசாவிலே ஒரு நாலு, ரெண்டையும் சேத்துக்க. அப்பொறம் ரெண்டு காசு சல்லியிலே ஒரு பன்னண்டு. ஆச்சா? ஒரு காசா ஒரு பதிமூணு சேத்துக்க. எம்பிட்டு ஆவுது சொல்லேன்… இன்னைய சந்தெ ரூட்டு கெராக்கி எளச்சுப் போச்சு சாமி. மத்யான சோத்துக்கு இன்னைக்கு கறி-மீன் வேணும். தள்ளீர வேண்டியதுதான். இன்னீப் பொளுதுக்கு அம்பிகடெ அளவுச் சாப்பாடுதான்… எத்தினி பைசா ஆச்சு சாமி? பார்த்துக்கிட்டியா கணக்கெ?"

"அல்லாம் பாத்தாச்சு. அஞ்சு பைசா சல்லி மூணு? மூவஞ்சு பதினஞ்சு. அப்பொறம் மூணு பைசாலெ நாலுதானே? நாமூணு பன்னண்டு. பன்னண்டும் பதினஞ்சும் இருவத்தி ஏழு. ரெண்டு காசு பன்னண்டு எண்ணமா? உம்… வந்து அப்போ, இருவத்தி நாலு, ஒரு இருவத்தி ஏழும் அம்பத்தி ஒண்ணு, ஒத்தெ காசா பதிமூணு. ஆக அறுவத்தி நாலு பைசா… முள்சா ஒரு ரூபாய்க்கு முப்பத்தி ஆறு காசு கொறச்சே. அதுக்கோசரம் எதுக்கு நாற்பது காசு அளவு சாப்பாடுன்னு போறே? முக்கு அய்யரு கடைக்கு போவேன். அறுவது காசுக்கு ரசம், மோர், அப்பளத்தோடு குஷாலா சாப்பிடலாமெ!…"

"அட போ சாமி – ரசம், மோரு, அப்பளமாம். என்ன சாமி அதுலே இது இருக்குது? ஒரு துண்டு தாளிஸம் பண்ண கறி மட்டும் நாற்பது காசு வாங்கிவிட்டு போட்றானே மிலிட்டேரி ஓட்டல்லே? அதும் பக்கத்திலெ வருமா இந்த மொடாத்தண்ணி ரசமும், மோரும்? பின்னெச் சொல்றியே…"

வெயில் கொளுத்துகிறது. கடைத்தெருவும், பஸ் நிலையமும் வெறிச்சிட்டுக் கிடக்கிறது.

"என்ன சாமி கம்னு இருந்துட்டே? சந்தெ கிராக்கி பஸ் வந்தா இப்பிடியா துட்டு சேரும்? மூணு ரூவா நாலு ரூவா கூட உளுந்த நேரம் உண்டே. நீயும்தான் கணக்கு பாத்திருக்கியே சாமி. பின்னெ சொல்றியே? அட, அந்த துப்பட்டிக்கார தடியன் காசு போட்டானா கேட்டியே, இன்னைக்கும் கைய்யெ தூக்கலெ பாத்தீங்களா? பொரியுண்டெக்காரி கிட்டே துட்டு கொடுத்துதானே உண்டை வாங்கி கொறிச்சிருக்கான்? ஆரஞ்சுபழம் கூட வாங்கி உரிச்சு துண்ணும் சாமி… இந்த பொடைக்கற வெய்யமேலெ குச்சு மாட்டிக்கினு கத்தா கத்தறனே, இவனுங்க மனசு என்ன கல்லுத்தானுங்களா? படு பாவிங்க! இந்தப் பாரு தெய்யக்கார சாமி, இந்த துப்படிக்காரன் அடுத்த சந்தைக்கு வராமலா போவான்? உண்மையா பாரு சாமி… வம்பு கொஞ்சமும் தமாஸ் காட்றேன் பாரு… சரி சாமி பொட்டணம், டின்னு கின்-னெல்லாம் இங்கியே இருக்கட்டும். வவுத்தெ காயுது. நான் நாயர் கடைக்குப் போயிட்டு வாறேனுங்க…"

"எல்லாத்தையும் அந்த ஓரமா வையி. யாருன்னாச்சியும் தய்ய கிராக்கி வர்ற எடம்…" என்று அவனுக்குக் கோடி காட்டிவிட்டு, காஜா போட ஆரம்பித்தேன். துரைப்பாண்டி கைத்தடி மேல் ஊஞ்சல் ஆடி, ஆடி நாயர் கடை பார்த்து நடந்து போனான்.

–இந்தத் தருணத்தின் தொடர்ச்சி அடுத்த இதழில்…

About The Author