தருணம் 12

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

அற்பஜீவிகள்

–மலர்மன்னன்

விடி விளக்கு மாடியில் மட்டும்தான். இரண்டு படிகள் கீழே இறங்கியதுமே அதன் ஒளி மறைந்துவிடும். இருட்டில் தடவிக்கொண்டே வந்து அறை விளக்கை ஏற்றினான். திடீரென வெளிச்சம் வந்ததும் அறிகுறி இல்லாத ஆக்கிரமிப்பு நேர்ந்துவிட்டாற் போல அவை திகைத்துப் போயிருக்க வேண்டும். மறைவிடம் தேடி ஒளிந்துகொள்ள எத்தனிப்பது போல் சரசரவென்று அங்குமிங்கும் விரைந்தன.

அவன் மனைவியின் மேலாக்கில் சாவகாசமாக ஊர்ந்து கொண்டிருந்த ஒன்று, பின்னால் யாரோ விரட்டுவதாய் உணர்ந்ததுபோல் அவசரமாய் அவள் கழுத்து, வாய், மூக்கு, நெற்றி, முன்னந்தலைக் கூந்தல் எல்லாவற்றையும் சட்டெனக் கடந்து கண்ணாடிச் சட்டத்தையும் தாண்டிக் கொண்டு சுவருக்குத் தாவியது. தன்னைச் சுற்றிலும் தாறுமாறாக ஓடி ஒளிபவைகளைப் பார்த்தபடி ஒரு நிமிடம் செயலற்று நின்றவன், சிறிது நிதானமடைந்து மேஜையின் பின்னால் போட்டிருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

இது ஒன்றும் ஆள் நடமாட்டமில்லாத வீடு அல்ல. தான் வாழும் வீட்டில் தனக்குத் தெரியாமல் தன்னோடு இத்தனை பூச்சிகள் வசித்து வருவதை அப்போதுதான் முதல் தடவையாக அறிந்தான். சின்னது, பெரியதாய் விதவிதமான பூச்சிகள். சில இதற்கு முன் அவன் பார்த்தேயிராத ஜீவராசிகள். பகலில் இவையெல்லாம் எங்கே போய் அடைந்து கொள்கின்றன? பகலிலும் இரவிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில கரப்பான் பூச்சிகளை மட்டும் பார்த்திருக்கிறான், அவ்வளவுதான். உண்மையில், வீட்டில் அவற்றின் எண்ணிக்கை இவ்வளவு அதிகம் என்பது இப்போதுதான் நிதரிசனமாய்த் தெரிந்தது.

பாதி இரவில் கெட்ட கனாக்கண்டு திடுக்கிட்டுச் சற்று நேரம் தூக்கம் பிடிக்காமல் படுக்கையில் புரண்டான். ஒருவாய்த் தண்ணீருக்காக எழுந்து, அதற்கப்புறம் தூக்கத்திற்கான முயற்சியாகக் கொஞ்ச நேரம் எதையாவது படிக்கலாம் என்று கீழே வந்து விளக்கைப் போட்டால் கூடம், படிப்பறை, மேஜை, அலமாரி எங்கும் கொட்டமடிக்கிற பூச்சிகள். தினமும் கீழ் வீட்டில் இரவு விளக்கணைந்த பின் இவற்றின் ராஜாங்கம் தொடங்கி விடுகிறது எனக் கண்டுகொண்டான். சமய சந்தர்ப்பம் தெரியாமல் இந்த நேரத்தில் பிரவேசித்துவிட்டதால் இப்போது இவன்தான் வீட்டின் ஆக்கிரமிப்பாளனாகவும் அவற்றின் தம்மிச்சையான வாழ்க்கையில் குறுக்கிட்டவனாகவும் தோன்றினான். முன் அனுமதியின்றி உள்ளே புகுந்த அன்னியனாகப் பூச்சிகள் அவனை உணர்ந்திருக்கும். சரசரவென்று அவை விரைந்த வேகத்திலிருந்து, அவனைப் பற்றி அவை தம் புலனில் கொண்ட வடிவம், விரோதியாகக் கூடிய ஒரு வேண்டாத விருந்தாளியாகத்தான் இருக்க முடியும் என அறிந்து கொண்டான்.

நாற்காலியில் அவன் சரியாக உட்கார்ந்துகொண்டபோது, சில கரப்பான் பூச்சிகள் திடீரெனப் பறக்கத் தொடங்கின. கரப்பான் பூச்சிகள் சாதாரணமாகப் பறப்பது கிடையாது. அவை திடீரென்றுதான் தங்களாலும் பறக்க முடியும் என்று நினைவு வந்தவைபோல் பறக்க ஆரம்பிக்கும். அதுவும் ஓர் ஒழுங்கோ நிதானமோ இல்லாமல் கண்மூடித்தனமாகப் பறக்கும். கரப்பான் பறந்தால் எங்கோ தேள் தலைகாட்டியிருப்பதாக அர்த்தம் என்று அம்மா சொல்வாள். கரப்பான் பூச்சிகள் வெறி பிடித்துவிட்டவைபோல் தாறுமாறாகப் பறந்தன. சுவரில் மோதி அவசரமாய் ஓடி மீண்டும் பறந்தன. எங்காவது தேள் வந்திருக்குமோ என்று இவன் பயந்தான். நாற்காலியின் மீது கால்களைத் தூக்கி வைத்துக் குந்திக் கொண்டு கவலையுடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

பறந்து வந்த கரப்பான் பூச்சியொன்று தெரியாத்தனமாக அவன் தோள்பட்டை மீதே உட்கார்ந்தது. விறுவிறுவென்று காலருக்குச் சென்று பிடரியில் தாவியது. அவன் அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்து சட்டையை உதறிவிட்டுக் கொண்டான். பிடரியைக் கையால் தட்டி விட்டான். கரப்பான்பூச்சி அவன் மேலிருந்து தெறித்துத் தரையில் மல்லாந்து விழுந்தது. நிமிர்ந்துகொள்ளும் முயற்சியில் கால்களை உதறிக்கொண்டு தவித்தது. காலால் அதை எட்டி உதைத்தான். அது தொலைவில் போய் விழுந்த வேகத்தில் நிமிர்ந்துகொண்டு திடுதிடுவென்று ஓடியது. அதன் இறக்கைகள் சிறிது விலகி உள்ளேயிருந்து மஞ்சள் நிற முதுகு தெரிந்தது. இவன் அருவெறுத்துப் பார்வையை வேறு பக்கம் செலுத்தினான்.

சிறு வயதில் இப்படி அருவெறுப்பு இருந்ததில்லை. அவன் தகப்பனார் இங்கிதமற்றவர். வெறும் புஸ்தக மூட்டை. "கரப்பாம் பூச்சியெ கண்ட இடத்திலே அடிச்சுக் கொல்லணும். கரப்பாம்பூச்சியை லெட்சுமி அது இதும்பாங்க. அதெல்லாம் சும்மா. கரப்பாம்பூச்சி சரஸ்வதிக்கு ஆகாது – அதான் லெட்சுமியின்னுட்டாங்க. சரஸ்வதிக்கும் லெட்சுமிக்கும் சேராதுன்னு இதை லெட்சுமியாக்கிட்டாங்க. வேற ஒண்ணுமில்லே" என்பார். சொன்னதைப் போலவே, கரப்பானைக் கண்டுவிட்டால் கையில் கிடைத்ததை எடுத்து அறைந்து கொல்வார். அடிபட்ட கரப்பான் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டு சப்பையாகிக் கிடக்கும். அம்மா சலித்துக் கொண்டே வந்து துடைப்பத்தால் அதைத் தள்ளிவிட்டு, அது நசுங்கிச் செத்த கறையைக் கழுவிவிடுவாள். தகப்பனாரைப் பார்த்து அவனும் கரப்பானை, அது வருகிறபோது பின்னாலேயே ஓடி அடித்துக் கொல்வான். கரப்பான் வெள்ளை ரத்தம் சிதற அசைவற்றுப் போகும். கொஞ்ச நேரங்கழித்துப் பார்த்தால் எங்கிருந்தோ சாரி சாரியாக எறும்புகள் வந்து மிகவும் கரிசனமாய்ப் பல்லக்குச் சுமக்கிற மாதிரி அதை அலாக்காகத் தூக்கிப் போய்க் கொண்டிருக்கும்.

இப்போது அறைக்குள் சில ஈக்கள்கூடப் பறப்பதை கவனித்தான். இரவில் ஈக்களை ஓட்டலில்தான் பார்த்திருக்கிறான். வீட்டுக்குள் நடு இரவில் அவை பறப்பது ஆச்சரியமாக இருந்தது. ஈக்கு ராத்திரியில் கண் தெரியாது என்று அம்மா சொல்வாள். அது சரிதான் என்று இவனுக்குத் தோன்றியது. கண் தெரியாதவர்கள் தட்டுத் தடுமாறி நடக்கிற மாதிரியே அவை சுவாதீனமின்றிப் பறந்தன. பறப்பதும் தடுமாறி அமர்வதும் திரும்பவும் பறப்பதுமாயிருந்தன. ஒரு ஈ இவன் புறங்கை மீதே வந்து உட்கார்ந்தது. சட்டென்று மறு கையால் அதை ஒரு தட்டுத் தட்டினான். ஈ சுருண்டு விழுந்தது. இவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஒரு தடவைகூட இவனால் ஈயை அடிக்க முடிந்ததில்லை. இப்போதோ வெகு சுலபமாக அதை அடித்து வீழ்த்திவிட முடிந்தது. ஈக்கு இரவில் கண் தெரிவதில்லை என்பது சரிதான் என்று மீண்டும் நினைத்துக்கொண்டான்.

பூச்சிகளின் நடமாட்டம் சற்று ஓய்ந்திருப்பதாகத் தோன்றியது. நூலகத்திலிருந்து எடுத்து வந்து பிரிக்கப்படாமலேயே மேஜை மீது கிடக்கும் ஒரு தடிமனான புஸ்தகத்தைக் கையில் எடுத்துப் புரட்டினான். இரண்டு பக்கங்களின் நடுவே பாடம் பண்ணி வைத்ததுபோல் ஒரு பூச்சியின் உடல் வெறும் கூடாக ஒட்டிக் கொண்டிருந்தது. புஸ்தகத்தைத் தட்டி அதைக் கீழே உதிர்த்தான். பூச்சிகள் இல்லாத இடமே கிடையாது என்று நினைத்துக் கொண்டான். அளவு கடந்தும் முறைகேடாகவும் கையாள்வதன் விளைவாக அணுக்கதிர் வீச்சால் பூமியே பாழடைந்து விட்டாலும், அப்போதுங்கூடச் சில பூச்சிகள் அழிவிலிருந்து தப்பித்திருக்குமாம். அதிலும் இந்தக் கரப்பான் பூச்சி, தான் தோன்றிய காலந்தொட்டு மாறவேயில்லை. அதுபாட்டுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பத் தன்னைச் சரிசெய்து கொண்டுவிடுகிறது. உயிர் பிழைத்திருத்தலுக்கான போராட்டத்தில் எல்லா ஜீவராசிகளையும் பின்னுக்குத் தள்ளிப் பரிணாம கதியின் இறுதிக்கட்டமாய் நிமிர்ந்து நிற்கிற மனிதன் மிஞ்சியிருக்க மாட்டான். ஆனால், அவன் காலடியில் மிதிப்பட்டுச் சாகும் கரப்பான் பூச்சிகள் மட்டும் எந்தச் சூழலிலும் பிழைத்திருக்கும். அப்படிப் பிழைத்தவை உடனே ஜோடி சேர்ந்து அவசர அவசரமாகத் தம் இனத்தை விருத்தி செய்யும். சேருவதற்கு உறவின் முறை நிபந்தனைகள் ஏதும் அவற்றுக்கு இல்லை. எதற்கும் கவலைப்படாமல், எவ்வித மன உறுத்தலோ தயக்கமோ இன்றி அவை அதைச் செய்யலாம். பூச்சிகள், அற்பஜீவிகள். கொஞ்ச காலமே உயிர்த்திருக்கும். கூட்டங் கூட்டமாய் மடியும். அதற்கு ஈடுகட்டுகிறாற் போலவே அவற்றின் உற்பத்தியும் இருக்கும். மனிதனோ வேறு பிராணியோ இல்லாத மௌன உலகில், தொடக்க காலத்தில் இருந்தது போலவே அவை சர்வ சுதந்திரமாய்த் திரியும். இப்போது போல் ஆளரவம் இல்லாத சமயம் வெளிப்பட்டு, வெளிச்சமும் நடமாட்ட அறிகுறியும் தெரிந்ததும் ஓடி ஒளியவேண்டிய அவசியமிருக்காது அவற்றுக்கு.

விளக்கை ஏற்றித் திடுமென அறை நடுவில் வந்து நின்றபோது பூச்சிகள் அச்சமுற்று ஓடி மறைந்த வேகம் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டியது. வீட்டில் பூச்சிகள் ரொம்பத்தான் பெருத்துப் போய்விட்டன. பொழுது விடிந்ததுமே ஞாபகமாக மருந்து வாங்கி வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஏற்கெனவே சில சமயம் அவன் மனைவி பூச்சிகளுக்கு மருந்து வைப்பதைப் பார்த்திருக்கிறான். இரவு எல்லா வேலைகளும் முடிந்ததன் பின் சுவர் ஓரங்களிலும், சாக்கடைவாய், தொட்டி முற்றம், அலமாரிக்குப் பின்புறம் இப்படிச் சில தேர்ந்தெடுத்த இடங்களிலும் வெள்ளைப் பொடியைத் தூவி வைப்பாள். மறுநாள் பொழுதுவிடிந்து பார்க்கிறபோது பலவிதமான பூச்சிகள் கும்பல் கும்பலாகச் செத்துக் கிடக்கும். எல்லாவற்றையும் குவியலாகச் சேர்த்துப் பெருக்கித் தள்ளுவாள், வேலைக்காரி. இந்த மருந்துப்பொடியில் பூச்சிகளை மிகவும் கவர்ந்திழுக்கும் எதையோ மனிதன் சாமர்த்தியமாகக் கலந்திருக்கிறான். இல்லாவிட்டால் விழுந்தடித்துக்கொண்டு வந்து முன்பின் பரிச்சயமற்ற நூதனப் பொடியை நக்கவேண்டுமென்கிற தூண்டுதல் இவற்றுக்கு ஏற்படாது. என்ன இருந்தாலும் கொல்வதில் மனிதனுக்குள்ள சாமர்த்தியம் யாருக்கும் வராது.

"இதை ஒருநாள் வெச்சாப் போதாது… தொடர்ந்தாப்பல மூணுநாள் வெக்கணும். அப்பத்தான் மிச்சம் மீதியில்லாம எல்லாம் செத்துத் தொலைக்கும்" என்பாள் அவன் மனைவி.

"அப்பக்கூட முட்டைகள் தப்பிச்சுக்கும்" என்று இவன் சிரிப்பான்.

"ரெண்டுநாள் எடைவெளி குடுத்து குஞ்சுங்க வந்து திங்கறாப்பல திருப்பியும் ஒருநாள் வெச்சிடணும்" என்று அவள் சிரித்துக்கொண்டே கூறுவாள்.

இவர்கள் உபத்திரவமில்லாமல் இருக்க அவை சாக வேண்டியதுதான். வேறுவழி கிடையாது. சாவதற்கே எல்லாம் பிறக்கின்றன என்றாலும் இவற்றின் விஷயத்தில்தான் படைப்பின் நோக்கமே சாவு என்பது வெளிப்படையாகப் புலப்படுகிறது. உயிர்த்திருக்கிறோம் என்று உணர்வதற்கு முன்பே அவற்றுக்கு மடிவதற்கு வேளை வந்துவிடுகிறது. அப்படியும் சொல்ல முடியாது. வெறிகொண்டாற் போல் அவசர அவசரமாய் அவை இனப்பெருக்கத்தில் முனைவதற்குக் காரணமே தமது சொற்ப ஆயுள் பற்றிய பிரக்ஞையாக இருக்கலாம்… என அவன் நினைக்கையில், எதிர்பாராத விதமாய் விளக்கு அணைந்தது.

–இந்தத் தருணத்தின் தொடர்ச்சி அடுத்த இதழில்…

About The Author