தருணம் (15.1)

தேவன் வருகை (2)

–சுஜாதா

கதையின் முன்பாதி: தருணம் (15)

"முதன்முதலாக முழுவதும் ரசாயன அடிப்படையிலேயே மனிதக் கருவை உண்டாக்கப் போகிறார்கள்!"

"உண்டாக்கட்டும். இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்…?"

"முதல் தடவை கடவுள் அமைத்த சிருஷ்டி நியதியை மீறப் போகிறோம்"என்றார் பெரியவர்.

"கடவுளாவது அமைத்ததாவது… என்னய்யா, அபத்தம் இது! சென்ற நூற்றாண்டின் இறுதியிலேயே இந்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டுக் காரண காரியங்களுக்கு எல்லாம் ஆதாரங்களை அலசித் தீர்வு கண்டுவிட்டோம். எகிப்திய ராவிலிருந்து, கிரேக்கக் கடவுள்களை, ஸென் தாமஸ் அக்வினாஸை, யூதர்களின் ஜெஹோவாவை, யங்கின் மனதத்துவ அடிப்படை விசாரணைகளை, ஹிந்துக்களின் வேத புராணங்களை, பௌத்தத்தை, ஜைனத்தை, இஸ்லாமை, தாவிஸத்தை எல்லாவற்றையும் அலசியாகிவிட்டது. கடவுள் என்பது மனிதனின் மன அமைதிக்கு ஏற்படுத்திக்கொண்ட சித்தாந்தம். அந்த அமைதியை அளித்துவிட்டால் கடவுள் என்கிற சித்தாந்தத்துக்கு அர்த்தமும் இல்லை, அவசியமும் இல்லை என்று ஆணித்தரமாக நிரூபித்துவிட்டோம். எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டி விட்டோம்! பள்ளிப் பாடங்களிலிருந்து கடவுளை நீக்கிவிட்டோம்! பரிசுத்த ஆவிகளையும் தந்தைகளையும் மகன்களையும் கிருஷ்ணர்களையும் அல்லாக்களையும் ஜாரதுஷ்டிரர்களையும் துப்புரவாக நீக்கிவிட்டோம். எங்கிருந்து கிளம்பியது இந்தக் கரையான்?"

"இருந்தும்……."

"சரிதான்! நண்பர்களே! வோட் எடுத்துப் பார்த்துவிடலாம். நாம் இந்தச் செய்தியை நம்புகிறோமா? ‘நம்பவில்லை’ என்பவர்கள் கை தூக்குங்கள்."

அந்தப் பெரியவரையும் தேர்ந்த விஞ்ஞானியான எலய்டோவையும் தவிர மற்றவர்கள் கை தூக்கினார்கள்.
"மெஜாரிட்டி தீர்ப்பு! உடனே மறுப்புச் செய்தி தயார் செய்."

*********

"மறுப்பு விட்டிருக்கிறார்கள் கவனித்தீர்களா?"

"ஏன் உடனே மறுப்புச் செய்தி அறிவிக்கவில்லை? ஏம்ப்பா, இன்னொரு சோமா கொண்டு வா, சாருக்கு!"

"இல்லை, நான் சாப்பிடுவதில்லை."

"சும்மா சாப்பிடுங்கள். தேவர்களின் பானம் போல் சோமா!"

"நீங்கள் நம்புகிறீர்களா?"

"கட்டாயம்! நிச்சயம் வெள்ளிக்கிழமை வரப்போகிறார்."

"எனக்கு அரசாங்கம் சொல்வதுபோல் இது ஒரு ஜோக் என்றுதான் படுகிறது."

"சிரிக்கப்போவது நாங்கள்."

"கடவுள் எப்படி இருப்பார்?"

"பார்க்கப் போகிறோமே!"

"நான் சொல்கிறேன்" என்று அருகில் இருந்த ஒருவர் எழுந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

"நீங்கள் எந்தக் கட்சி?"

"கட்டாயம் வரப்போகிறார்!"

"நண்பரே! கேட்டீரா? சபாஷ்!"

"ஸார் என்ன சொல்கிறார்? கடவுள் எப்படி இருப்பார் என்று….!"

"கீதை என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அரசாங்கம் தடை செய்த புத்தகம். (குரலைத் தாழ்த்தி) அதன் கையெழுத்துப் பிரதி ஒன்று என்னிடம் இருக்கிறது. என்ன அபாரமான பாடல்கள் தெரியுமா?"

"என்ன சொல்கிறது?"

"அது கடவுளே சொன்ன பாடல்கள்."

"கடவுள் பெயர் என்ன?"

"கிருஷ்ணர்! அவர்தான் கடவுள்… கீதையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். யுகத்துக்கு யுகம் நான் தோன்றுவேன் என்று."

"நல்ல காமிராவாக ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டும். ஸார், உங்கள் பெயர் என்ன? கிருஷ்ணனா?"

"கிருஷ்ணன் என்றே கூப்பிடுங்களேன்."

"உங்களுக்கு சரித்திரம் தெரியுமா? கிருஷ்ணன், ராமன் என்பதெல்லாம் பிற்பட்ட கடவுள்கள். ஹிந்துக்கள் முதலில் சூரியனையும், இந்திரனையும், வருணனையும் உபாசித்தார்கள். தெரியுமா?"

"கிருஷ்ணன்தான் எல்லாம். இந்திரன், வருணன், சிவன், விஷ்ணு, நீ, நான், அந்த ஸ்டீரியோவிஷன் பெட்டி – எல்லாம் கிருஷ்ணன்தான். கீதையில் சொல்லியிருக்கிறார்."

*********

"இரண்டு மூன்று நாட்களாகச் சரியாகவே சாப்பிடுவதில்லை நீங்கள்."

"அதிக எதிர்பார்ப்பில் எனக்கு உணவு கொள்ளவில்லை."

"தூக்கத்தில் கூட கடவுள் பேத்தலா?"

"இன்னும் பத்து நாள்கள்! இன்னும் பத்து நாள்கள்!"

"எனக்கு என்னவோ சூரியன்தான் கடவுள் எனச் சந்தேகம் ஏற்படுகிறது."

"போடி, முட்டாளே! விளம்பரத்தை சரியாக கவனித்தாயா? சூரிய உதயத்தின்போது நான் உங்கள் முன் தோன்றுவேன்… என்று இருக்கிறதே! அப்படி என்றால் என்ன அர்த்தம்? சூரியனும் அவரும் வேறு என்றுதானே! சூரியன் அவருக்குச் சின்ன சமாச்சாரம். அவர் சூரியனைவிட மிக மகத்தானவர்…"

"நான் அன்றைக்கு என்ன உடுத்திக்கொள்வது என்று யோசிக்கிறேன்."

"நீ நிர்வாணமாக வந்தாலும் ஒருவரும் – ‘உன்னைப்’ பார்க்கப் போவதில்லை!"

*********

"எங்கேய்யா, அட்வர்டைஸ்மெண்ட் மானேஜர்?"

"உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்…!"

"கூப்பிடு அவரை! இன்னும் ஏழு நாள்கள்தான் இருக்கிறது."

"நமஸ்காரம் ஸார்!"

"என்ன, விளம்பரம் தயாராகிவிட்டதா?"

"பாருங்கள்."

அட்வர்டைஸ்மெண்ட் மானேஜர் ஏழெட்டுப் போஸ்டர்களை விரித்தார்.

"ம்ஹூம்… ம்ஹூம்…" என்று அவைகளை ஒவ்வொன்றாக நிராகரித்துவிட்டு… ஒரு போஸ்டரை நிறுத்தி, "ம்….. இதையே அடியுங்கள், மூன்று கோடிப் பிரதிகள் பல வர்ணத்தில்…" என்றார்.

அந்த போஸ்டரில்……

"கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ……. கோகோ கோலா இருக்கிறது."

*********

"ஹே… அக்னியே! மர்த்யனான நான் மரணமில்லாத உம்மை ஸ்துதியிலீடுபட்டு மனத்தோடு அழைக்கிறேன். குழந்தைகளுடன் யான் மரணமில்லாமல் உண்ணும்படி அன்னத்தை அளியும்!"

"அக்னிதான் கடவுள்! பார்த்துக்கொண்டேயிருங்கள். கிட்ட நெருங்க முடியாதபடி ஓர் அக்னி தோன்றும். நம் எல்லோரையும் அப்படியே அணைத்துக்கொள்ளும்…"

"தீயணைக்கும் படைக்குச் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்."

"உங்களுக்குக் கிண்டலாக இருக்கிறது… இன்னும் மூன்று நாட்களில் தெரிந்துகொள்ளப் போகிறீர்."

"முட்டாள்தனத்தின் சிகரம்."

"உங்களுக்கு நம்பிக்கை இல்லை போலும்!"

"கடவுள் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன… என் தூக்கம் கெட்டுவிட்டது. பக்கத்து வீட்டில் தினமும் பஜனை செய்கிறார்கள். இதையெல்லாம் அரசாங்கம் அனுமதிக்கிறது."

"அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நிலைமை அளவுக்கு மீறிவிட்டது."

"ஏன்யா, எத்தனை கடவுள் இருக்கிறார்கள்? ஒருத்தன் கிருஷ்ணன், ஒருத்தன் அல்லா, ஒருத்தன் யேசு! நீர் புதுக்கட்சி, அக்னி! எத்தனை பேர் அய்யா தோன்றப் போகிறார்கள்… அங்கே இடம் போதுமா?"

"அக்னிதான் கடவுள்!"

"அது சரி! நம் ஊரிலே எங்கே தோன்றப் போகிறார் மிஸ்டர் அக்னி?"

"ஊருக்கு வெளியே பெரிய மைதானம் இருக்கிறது. அங்கேதான் எல்லாரும் கூடுகிற அளவு இடம் இருக்கிறது. இப்போதே ஜனங்கள் அமைதியாய்க் கூடித் தரிசிப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார்கள். நீங்கள் வருகிறீர்கள், இல்லையா?"

"நான் வரவே போவதில்லை."

"ஏன்?"

"வீட்டிலே ஸ்டீரியோவிஷனில் நல்ல கலரில் காட்டுவார்கள். கூட்டம் இல்லாமல் பார்க்கலாம். அதிகாலையில் எழுந்து கூட்டத்தில் மோதியடித்துக்கொண்டு யார் போவார்கள்?"

*********

"நாசம், நாசம்" என்றார் ஆத்மா.

"என்ன செய்வது ஆத்மா! இந்த ஹிஸ்டீரியாவை எதிர்பார்க்கவில்லை…"

"என்னதான் மறுப்புவிட்டாலும் அந்த முட்டாள் ஜனங்களுக்கு மண்டையில் ஏறவில்லையே?"

"இன்னும் இரண்டு நாள்கள்தானே! பல்லைக் கடித்துக்கொண்டு, எக்கேடு கெட்டுப்போங்கள் என்று இருக்க வேண்டியதுதான்."

"கூட்டம் அதிகம் இருக்கும்."

"என்ன செய்வது! அதற்கான போலீஸ் பந்தோபஸ்துகள் செய்தாக வேண்டும்."

"தலைவர் என்ன சொல்கிறார்?"

"அவரும் இந்த விளையாட்டு எதில் முடிகிறது என்று பார்த்துவிடலாம் என்கிறார். ஜனங்கள் முண்டியடித்துக் கொண்டு சாகாமல் இருந்தால் சரி… பரஞ்சோதி, ஒரு முக்கியமான விஷயம்… கூட்டம் முடிந்தபின்தான் கவனமாக இருக்க வேண்டும்… கலகம், கல்லடி எதுவும் ஏற்படக்கூடாது…"

"பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் வருகிறீர்களா?"

"நானா?" என்று சிரித்தார்.

*********

அந்த வெள்ளிக்கிழமை.

மைதானம். சூரியன் இன்னும் உதயமாகவில்லை. மெல்லிய வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. அந்த இடத்தில் இருந்த அத்தனை அத்தனை மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஆரவாரம் குறைவாக இருக்கிறது.

ஓர் எதிர்பார்ப்பு காற்றில் தொங்கியது.

"கிருஷ்ணா! கிருஷ்ணா! மறுபடியும் வா!"

"யேசுவின் இரண்டாம் வருகை!"

"தாவ்தான் கடவுள்!"

"அல்லாதான் கடவுள்!"

"ஜாரதுஷ்டிரரை வரவேற்கிறோம்!"

"அவன் சிவன்!"- என்று அங்கங்கே அட்டைகளில் ஒட்டிய எழுத்துகள் நடனமாடின. பலவித ராகங்களில் பாடும் திட்டுகள், சிறிய சிறிய ஹோமங்கள், பூக்கள், காமிராக்கள்… ஸ்டீரியோவிஷனின் டாலிகள், ஆர்க் விளக்குகள்…… விளம்பரங்கள்…
சூரிய உதயம் ஐந்து ஐம்பத்தெட்டுக்கு…….

மணி ஐந்து ஐம்பத்து ஏழு. ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அடங்கி… மௌனம். மிக மிக மௌனம்… தூரத்தில் மெதுவாகச் சோலையை அலைக்கும் காற்று கேட்டது… உறங்கி எழுந்த பட்சிகளின் உற்சாகக் குரல்கள் கேட்டன……. எல்லோரும் எதிர்நோக்கி தனியாக அமைக்கப்பட்டிருந்த அந்தக் காலி இடத்தை எதிர்நோக்கி இருந்தார்கள்…

ஐந்து ஐம்பத்து எட்டு.

ஆறு மணிக்கு அவர்கள் வீடு திரும்பினார்கள்.

–சந்திப்போம் வேறொரு தருணத்தில்…

About The Author