தருணம் (15)

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

தேவன் வருகை

–சுஜாதா

அந்தச் செய்தி எங்கிருந்து எப்படித் தோன்றியது? அதன் எதிரொலி உலகெங்கும் கிரகங்கள் எங்கும், மனிதன் மனிதனுடன் பேசும்போதெல்லாம் அவன் சிந்தனையின் பெரும்பான்மையை அடைத்துக்கொண்டு அந்த ஆகஸ்ட் மாதத்தை உயிர்களின் சரித்திரத்தில் ஒரு தழும்பாக, வடுவாக மாற்றியது. ஒரு சர்வதேச சர்வ அம்ச ஆவேசமாக ஜுரமாக விரவிப் பரவிய அந்தச் செய்தி ஒரு தினத்தில் ஏறக்குறைய ஒரே சமயத்தில் செய்தித்தாள்களில், ரேடியோ, டெலிவிஷன் போன்ற மனிதத் தொடர்புச் சாதனங்களில், ஏன் மழை காலப் பச்சை போலத் திடீர் என்று தோன்றிய சுவரொட்டிகளில் எங்கும் தோன்றியது.

செய்தி இதுதான்:

தருணம் வந்துவிட்டது! இன்னும் பதினைந்து தினங்கள் கழித்த வெள்ளிக்கிழமையில் சூரிய உதயத்தின்போது நான் உங்கள் முன் தோன்றுகிறேன். நாடு நகரங்களில் இருப்பவர்கள் ஒரு பொது இடத்தில் கூடி இருங்கள் என்னை எதிர்நோக்கி.

– கடவுள்.

செய்தித்தாள்களில் முன்பக்கத்தில் கட்டமிட்டுப் பெரிய எழுத்துகளில்; நட்ட நடுவே டெலிவிஷன் ஸ்டீரியோவிஷன் சாதனங்களில் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுத் திரைகளை ஆக்கிரமித்தது. ரேடியோ சங்கீதங்கள் வெட்டுண்டு அமைதியான குரல் ஒன்று இந்தச் செய்தியைப் பேசியது.

சுவரொட்டிகள் தோன்றின… யாரோ கொடுத்தார்கள் என்று கத்தைக் கத்தையாகச் சிறிய பையன்கள் நோட்டீஸ் துண்டுகளை வீதிகளில் வாரி இறைத்தார்கள்… எல்லாவற்றிலும் ஒரே வாசகம்… ஒரே கடவுள்…

உலக அரசின் உள்துறை அமைப்பின் தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டத்தில் ஒரு பிரம்மாண்டமான அறையில் அவர்கள் கூடியிருந்தார்கள்.

ஆத்மாவின் தலை கலைந்திருந்தது. தூக்கமின்மை அவர் கண்களில் தெரிந்தது. அவர் இரத்த அழுத்தம் எகிறிப் போயிருந்தது.
"என்னய்யா, கண்டுபிடித்தீர்களா? எங்கிருந்து இந்தச் செய்தி?"

அத்தனை முகங்களிலும் ஈயாடவில்லை.

"செய்தி வந்து இரண்டு நாட்களாகிறது. இன்னும் கண்டுபிடிக்கவில்லையா, யார் இந்த விஷமம் செய்தது என்று? என்னய்யா, டாக்டர் பரஞ்சோதி… அத்தனை விஞ்ஞான சாதனங்களையும் பரிபாலனம் செய்து வருபவரிடம் இது எப்படிப் புகுந்தது? உங்கள் முட்டாள் கம்ப்யூட்டர்கள் என்ன சொல்கின்றன… உங்களுக்கெல்லாம் தண்டத்துக்குச் சம்பளம் கொடுக்கிறதா..?”

"நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் நான் பேசுகிறேன்" என்றார் டாக்டர் பரஞ்சோதி.

"ஆல்ரைட்! உணர்ச்சியே இல்லை எனக்கு! நீங்கள் சொல்லப்போவதைக் கூர்ந்து கவனமாக, நிதானமாகக் கேட்கிறேன். மௌனமாக, குறுக்கிடாமல் கேட்கிறேன். சொல்லு" என்று மேஜையைக் குத்தினார்.

எல்லோரும் எச்சிலை விழுங்கிக்கொண்டார்கள்.

"ஆத்மா! இந்தச் செய்தி எப்படிப் புறப்பட்டது என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே சமயத்தில் அத்தனை சாதனங்களிலும் ஒரே வார்த்தை அமைப்பில் தோன்றுவது.. மனித சாத்தியமில்லை."

"அப்படியென்றால் நீயும் இது கடவுள் அனுப்பிய செய்தி என்கிறாயா? உனக்கும் ஜுரம் வந்துவிட்டதா?"

"வேறு ஒரு காரணமும் கண்டுபிடிக்க முடியவில்லை."

“சரிதான்! என்னய்யா செய்தி ஸ்தாபனம் நடத்துகிறீர்கள்… இந்தப்…”

"ஒரே ஒரு கேள்வி" என்று மேஜையின் ஓரத்திலிருந்து குரல் வந்தது. இளம் டாக்டர் க்ராஸ்மன்… மனோதத்துவப் பிரிவு.

"என்ன?"

"ஆத்மா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இதைப் பற்றி?"

"சத்தியமாக இது ஒரு விஷமம்! யாரோ கிளப்பிவிட்ட புரளி… திட்டமிட்டுச் செய்யப்பட்ட கேலி!"

"எதற்காக அப்படி ஒருவர் செய்ய வேண்டும்?"

"எதற்காக? நீயே பார்க்கிறாயே, உலகத்தின் இன்றைய மன நிலையை. எல்லோரும் இதைப் பற்றியே பேசுகிறார்கள். எங்கே போனாலும் கடவுள் வருகையைப் பற்றித்தான் பேச்சு… இது நிஜமா? பொய்யா? நீ நம்புகிறாயா? நம்பிக்கை இல்லையா? பந்தயங்கள், பேச்சுகள்… பொதுக்கூட்டாளிகள்… ஒருத்தன் கிருஷ்ணன் என்கிறான். ஒருத்தன் ராமன் என்கிறான். ஒருத்தன் யேசு என்கிறான். ஜெஹோவா என்கிறான். தாவ் என்கிறான். சென்ற நூற்றாண்டுடன் அந்தக் கேலிக் கூத்தெல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தோம். கடவுளுக்கே அர்த்தமில்லாமல் செய்திருந்தோம். அவசியமில்லாமல் செய்திருந்தோம். மறுபடியும் அடியைப் பிடிடா என்று ஆரம்பமாகி விட்டது. இந்தச் செய்தியின் மூலத்தை நாம் கண்டுபிடித்தே ஆக வேண்டும்… உலகத்தில் கலகம் ஏற்படுத்த அமைதியைக் குலைக்க ஒரு சதி இது…"

"ஆத்மா! கோபிக்காமல் இருந்தால் ஒன்று சொல்ல விரும்புகிறேன்."

"நான் கோபித்து என்ன பிரயோசனம்? வேலை நடக்கவில்லையே! காரணம் இன்னும் தெரியவில்லையே! சொல்லு, கோபிக்கமாட்டேன்."

டாக்டர் பரஞ்சோதி தன் வியர்வையைத் துடைத்துக்கொண்டு சட்டையைத் தளர்த்திக்கொண்டு ஒரு விழுங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு…

"ஒரே ஒரு வகையில் இந்தச் செய்தி வெளிவருவது சாத்தியம்.. ஒரே ஒரு ஆசாமியால்தான் அது முடியும்!"

"யார் அது சொல்லு? உடனே அவனைக் கைது செய்து கொண்டு வா! விளக்கடியில் போட்டு வாட்டி எடுத்துவிடலாம்… யார் அது, யார்?"

"நீங்கள்தான் ஆத்மா!"

"நானா?" நிதானமாகச் சிரித்தார். "என்னய்யா, நீ! உம்மாதிரி ஒரு முட்டாளையா உலகப் போலீஸ் தலைவனாக வைத்திருக்கிறார்கள்?"

"ஆத்மா! டாக்டர் பரஞ்சோதி சொல்வதை முழுவதும் கேட்கலாம் எனத் தோன்றுகிறது" என்றார் க்ராஸ்மென்.

"சொல்லு, சொல்லு!" என்று கைக்குட்டையால் சிரிப்புக் கண்ணீரைத் துடைத்தபடியே சாய்ந்துகொண்டார் ஆத்மா.

"ஆத்மா, ஞாபகம் இருக்கிறதா? Flash! மற்றவர்கள் எவருக்கும் தெரியாது. உங்களுக்கும் தலைவருக்கும் எங்கள் டிபார்ட்மெண்டுக்கும்தான் தெரியும்."

ஆத்மாவின் சிரிப்பு நின்றது.

மற்றவர்கள் மௌனமானார்கள். ஏர்கண்டிஷனரின் உறுமல் மட்டும் கேட்டது.

"மூன்று வருஷங்களுக்கு முன் இந்த ப்ளாஷ் சாதனத்தை அமைத்தோம். அதைப் பற்றி இப்போது மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது என நினைக்கிறேன்… சொல்லலாமா ஆத்மா? சொல்ல அனுமதி இருக்கிறதா?"

"சொல்லு!" என்றான் சிந்தனையின் ஊடே.

"உலக அரசின் புதிய திட்டம் ஃப்ளாஷ். உலகின் பத்திரத்தைப் பாதிக்கக்கூடிய மகத்தான, மிகத் தீவிரமான அபாயம் நேர்ந்தால் உலகின் அத்தனை செய்திச் சாதனங்களையும் ஒரே சமயத்தில் கவர்ந்து ஒரே செய்தியை அனுப்ப ஏற்படுத்திய ஒரே ஒரு சாதனம். எலெக்ட்ரானிக்ஸ் நிபுணர்களின் மூன்று வருஷ உழைப்பிற்குப் பின் ஏற்படுத்திய ஒரு சூப்பர் சாதனம்! அது ஆத்மாவின் அலுவலகத்தில் ஒரு தனி அறையில் இரட்டைப் பூட்டுப் போட்டிருக்கிறது."

"அதன் சாவி எங்கே இருக்கிறது?"

"அதற்குச் சாவி இல்லை. இரண்டு பூட்டுகள். அதுவும் நம்பர் அமைக்கும் காம்பினேஷன் பூட்டுகள். ஒரு காம்பினேஷன் ஆத்மாவுக்குத் தெரியும்… மற்றது?" என்று ஆத்மாவைப் பார்த்தார்.

"மற்றது உலகத் தலைவருக்குத் தெரியும்!"

மறுபடியும் மௌனம். எல்லோரும் ஆத்மா பேசக் காத்திருந்தார்கள்.

ஆத்மா புன்முறுவலுடன், "பரஞ்சோதி. ம்ஹூம்!" என்றார்.

"பரஞ்சோதி சொல்வது உண்மைதான். அப்படி ஒரு சாதனம் இருக்கிறது. இதைத் தலைவரோ நாமோ தனியாகத் திறக்க முடியாது. அவர் நம்பர் எனக்குத் தெரியாது. என் நம்பர் அவருக்குத் தெரியாது. இருவரும் சேர்ந்து சதி செய்திருக்கிறோம் என்று பரஞ்சோதி சொல்ல முற்படுகிறார் என்றால் அதையும் விசாரித்துப் பார்த்துவிடலாம்… தலைவர் இப்போது இங்கே இல்லை. நோவாவில் இருக்கிறார்… இன்றுதான் இந்தக் கலாட்டாவைக் கவனிக்கப் புறப்படுகிறார்… அவரைப் பார்த்துப் பதினைந்து நாள்களாகி விட்டன. செய்தி வந்தது நேற்று முன்தினம். அதற்கு மேலும் சந்தேகம் இருந்தால்…"

"சந்தேகத்துக்குச் சொல்லவில்லை. ஆத்மா! நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்… இந்தச் செய்தி தோன்றுவதற்கு இருக்கும் ஒரே ஒரு மார்க்கத்தைச் சொல்வது இந்தத் தருணத்தில் என் கடமையாகிறது…"

"இருந்தும் எங்கள் மேல் சந்தேகத்தை விதைத்து விட்டாய்! அந்த முட்டாள் பெட்டியை ஆரம்பப் பரிசோதனைகளுக்கு அப்புறம் நான் பார்த்தது கூட இல்லை… எதற்கும் பார்த்து விடலாம்…"

"பார்க்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அதை உபயோகிக்கவில்லை என்று சொன்னால் அந்த வார்த்தை போதும்!"

அவர்கள் ஃப்ளாஷ் சாதனம் அமைத்திருந்த அந்த அறை வாசலில் நின்றார்கள். நிபுணர்கள் அதன் இரண்டு பூட்டுகளைப் பரிசோதித்தார்கள். பௌடர் அடித்து விரல் ரேகைகளைத் தேடினார்கள். இன்ஃப்ரா ரெட் போட்டுப் பார்த்தார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள்.

"ம்ஹூம், நிச்சயமாகச் சொல்லலாம், இது திறக்கப்படவில்லை என்று."

"க்ராஸ்மன், என்ன செய்ய வேண்டும், சொல்லு! மனோதத்துவ நிபுணனாயிற்றே நீ!"

"உடனே அரசாங்க சார்பில் ஓர் அறிக்கை விட வேண்டும். மக்கள் மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிறார்கள். எல்லாரும் இதையே பேசுகிறார்கள்… உற்பத்தி குறைந்துவிட்டது… உலகின் மனநிலையே பாதிக்கப்பட்டுவிட்டது. செய்தி எப்படிக் கிளம்பியது என நம்மால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும்… "செய்தி தவறானது… வெறும் புரளி" என்று அறிக்கைவிட வேண்டும்."

"ஒரே ஒரு சந்தேகம்!" என்றொரு வயதான குரல் கேட்டது.

"என்னய்யா?"

"செய்தி புரளி, ஆதாரமற்றது என்று நாம் முழுமையாகத் தீர்மானித்து விட்டோமா?"

"ஏன், அதில் என்ன சந்தேகம்! நீ என்ன சொல்லப்போகிறாய்? கடவுள் வரப்போகிறார் என்றா?"

"இன்னும் பன்னிரண்டு தினங்கள்தானே? பார்த்து விடலாமே!"

"சரிதான். நீ கூட மாறிவிட்டாயா? பார்த்தாயா? செய்தி எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது! பெரியவரே, கடவுள் இருக்கிறார் என்று நீர் நம்புகிறீரா?"

"இருக்கலாம்."

"கடவுள் இருந்தால் இப்படி முட்டாள்தனமாகப் பேப்பரில் போட்டுக்கொண்டு, டெலிவிஷனில் அறிவித்துவிட்டு, ஒரு சினிமா நடிகனைப் போல் இன்ன தேதி, இன்ன நேரம் என்று அறிவித்துவிட்டு வருவாரா? இதென்ன அவதாரமா? அதுவும் திடீரென்று நம் மேல் அவருக்கு அவ்வளவு கருணை…… அவதாரம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்? நாம் என்ன, பாவம் செய்துவிட்டோமா? நாம் கொலைகள் செய்துவிட்டோமா? எவ்வளவு சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறோம்! கடவுளுக்கு என்ன அவசியம்?"

விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த எலய்டோ என்பவர் பேசினார், "எனக்கு ஒரு விஷயம் முக்கியமானதாகப்படுகிறது."

"என்ன?"

"அந்தத் தினம் வெள்ளிக்கிழமை!"

"அதனால் என்ன?"

"அன்று உலக பையாலஜி கேந்திரத்தில் ஒரு முக்கிய பரிசோதனை நடக்க இருக்கிறது…"

"என்ன?"

–இந்தத் தருணத்தின் தொடர்ச்சி அடுத்த இதழில்...

About The Author