தருணம் (3.2)-கவர்னர் பெத்தா (2)

இரவு முழுவதும் பீர்மா சரியாகத் தூங்கவில்லை. பேப்பரில் பார்த்த கவர்னரின் கருப்பு – வெள்ளைப் புகைப்படம் பலமுறை மனதில் வந்து போனது. மருமகள் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப மனதுக்குள் விழுந்து தெறித்தது.

காலையில் தர்ஹா பக்கத்தில் ரோட்டில் அஞ்சாறு ஆர்ச்சுகள் போடப்பட்டிருந்தன. தெருவின் முன்னாலும் ஆர்ச் போடும் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. வயதானவர்களும், சிறுவர்களும், இளைஞர்களும் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தனர். தர்ஹா பக்கத்தில் ஒன்றிரண்டு வீடுகளில் புதிதாக வெள்ளை அடித்தனர். ஜீப்பில் சில அதிகாரிகள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் பிறகு பள்ளியில் நேச்சையாகக் கொடுத்த பழங்களைத் தின்றுவிட்டு, பழத்தொலியைக் கசாப்பு மாஹீனிடம் கொடுத்தார்கள். மாஹீன் மொத்தமாக வாங்கிப் பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு வந்து வீட்டுக்கு முன்னால் கட்டிப் போட்டிருந்த கவர்னர் கிடாய்களுக்குப் போட்டார்.

நாளை காலைதான் கவர்னர் வரப்போகிறார். சாயங்காலமே தர்ஹா ரேடியோ பாடியது. தர்ஹாவில் சீரியல் லைட்கள் மின்னி எரிந்தன.

பீர்மா வாசலில் நின்று தெருவைப் பார்த்தாள். தெருவில் கடந்து போன ஆறேழு பேரிடமாவது கேட்டிருப்பாள்.

"காலையில் எத்தனை மணிக்கு வாராவோ?"

"ஒன்பது மணிக்கு."

எட்டு மணிக்காவது தர்ஹாவுக்குப் போய்விட வேண்டும். முதல் ஆளாக நிற்க வேண்டும். நினைக்க நினைக்க அவளின் நெஞ்சம் படபடத்தது.

பீர்மா பாய் போட்டுத் தூங்கப் போகும்போது பத்து மணி இருக்கும். அந்த இரவு அவளுக்கு ரொம்பவும் அவஸ்தையாக இருந்தது. எல்லாம் ஒரு நிமிடத்தில் மாயாஜாலம் போல விடிந்து விடவேண்டும் என்று விரும்பினாள். தஸ்பீகு மாலையை எடுத்து உருட்டினாள். தூங்கினால் கொள்ளாம் போல இருந்தது. ஆனாலும் எளவு தூக்கம் வரவில்லை.

அஞ்சாறு முறை கோழி கூவி சத்தம் கேட்டது. கிடாய்களின் சத்தம் கேட்டது. கவர்னர் கிடாய்களாகத்தான் இருக்க வேண்டும். சுபுஹ் பாங்கு சத்தம் கேட்டது. பட்டென்று பாயை விட்டு எழுந்தாள்.

தொழுதுவிட்டு வாசல் கதவைத் திறந்து திண்ணைக்கு வந்து தெருவைப் பார்த்தாள். மங்கலான வெளிச்சம் பள்ளி ரேடியோவில் கவர்னர் வருகை குறித்த அறிவிப்பு. தெருவைத் திரும்பிப் பார்த்தாள். கசாப்பு மாஹீன் வீட்டு முன்னால் கட்டிப் போட்டிருந்த கவர்னர் கிடாய்களைக் காணவில்லை.

நன்றாக விடிந்தபோது பெருநாளத்தைக்கு எடுத்த பட்டுக்கசவு கவுணியும், குப்பாயமும் போட்டுக் கொண்டு மறியம் பெத்தா வீட்டுத் திண்ணைக்கு வந்தாள். திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த மறியம், பீர்மா அமர்வதற்கு சவுரியம் செய்து கொடுத்தாள்.

"சவுக்குக் கம்ப போட்டுக் கெட்டி வச்சிருக்கானுவளாம். ஒருத்தரும் கிட்டே போவ முடியாதாம். சுத்தி ஆபிஸர்மாருவளாத்தான் இருப்பானுவளாம். போலிஸ்மாருவெல்லாம் தோக்கையும் தூக்கிட்டு விடியதுக்கு முன்னால வந்துட்டானுவளாம். அந்த துக்கயள பாக்கதுக்கே பேடி உண்டாவுது…"

மறியம் சொல்லும்போதே பீர்மா நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.

"ஆருளா சொன்னா?"

"தொழுதுட்டு போவத்துல… முக்கூட்டுப் பயலும் கரிச்சட்டிக்குப் பேரனும் பேசிட்டுப் போனானுவோ. நான் அந்தாக்குல கூப்ட்டுக் கேட்டேன். அவ வரதுக்கு ஒன்பதாவுமாம்… பப்பனாபுரம் கோட்டைக்கும் சுசீந்திரம் கோயிலுக்கும் போயிட்டுத்தான் இங்க வாராளாம்…"

"கோயிலுக்குப் போவாளா!…" பீர்மாவுக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

"அவ கவர்னருல்லா?…"

மறியத்தின் வெத்தலைப் பெட்டியை இழுத்து முன்னே வைத்துக் கொண்டு பீர்மா பேச ஆரம்பித்தபோது அஸ்மா வந்துவிட்டாள். தொடர்ந்து கொஞ்ச நேரத்திலெல்லாம் பாக்கு பெத்தா வந்துவிட்டாள். வந்த உடனே புதிய செய்தி சொல்ல வாய் திறந்தாள். அவள் எப்பவும் அப்படித்தான். அவளுக்கு ஏதாவது ஒன்று தெரிந்துவிட்டால் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும். இரவு என்றால் தூங்கமாட்டாள். பகல் என்றால் சாப்பிட மாட்டாள். செய்திகளை ஐந்தாறு செவிகளிலாவது சொன்னால்தான் அவளுக்கு சுகம். பாக்கு பெத்தா ஏதாவது வீட்டுக்குள் போனாலே வினை போவதாகத்தான் பலரும் சொல்லுவார்கள்.

"பிள்ளா! ஒரு விசயம் தெரியுமா?" பாக்கு பெத்தா சொன்ன உடன் எல்லோர் முகங்களும் ஆவலாயின.

"அவோ இங்கிளிஸ்லதான் பேசுவாளாம். தமிழ் தெரியாதாம்."

"பேப்பர்ல தமிழ்லதானே போட்டிருந்தானுவோ?…" அஸ்மா மடக்கினாள்.

"என்ன எளவோம்மா! இங்கிளிஸ்லதான் பேசுவாளாம். எனக்க மருமவன் சொன்னாரு."
கொண்டு வந்த விசயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது பாக்கு பெத்தாவுக்கு, ‘சே’ என்பது போல ஆயிப்போனது.

எட்டரை மணிக்கே தெருவிறங்கி நடந்தார்கள். பீர்மாதான் முன்னே நடந்தாள். தெரு திப்பில் பையன்கள் நின்று பரிகசித்தனர். மெயின் ரோட்டிலிருந்து தர்ஹா வரையிலும் இரண்டு பக்கமும் வரிசையாகப் போலீஸ்காரர்கள். மறியம் பயந்து போனாள்.

"இந்த பாளறுவானவளப் பாத்தாலே கொடலு கலங்குதுள்ளா!"

சேனாம்மா தைரியம் சொல்லி நடத்தினாள்.

தர்ஹாவைச் சுற்றியும் முன்பக்கமும் பாதை போன்று அமைத்து மற்ற இடங்களிலெல்லாம் சவுக்குக் கம்பால் அடைத்துக் கட்டி விட்டிருந்தனர். பீர்மா முன்னால் வேகமாக நடந்து வாசல் பக்கமாய்ப் போய் வாக்கான அந்த இடத்தில் வசமாக நின்று கொண்டாள். நேரம் ஆக ஆக பீர்மா பெத்தாவின் பின்னாலும் பக்கவாட்டிலுமாக நிறையப் பெண்கள் வந்து குவிந்து விட்டார்கள். ஆண்கள் எல்லாம் எதிர்ப்பக்கம்.

காலை வெயில் பீர்மாவின் மூஞ்சியில் பளிச்சென்று விழுந்தது. ஆனாலும் அவள் விலகிக் கொள்ளாமல் முட்டாக்கை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள். முட்டாக்குத் துணியின் விளிம்பிலிருந்த பட்டுக்கசவில் வெயில் பட்டு மின்னியது.

ஒரே பரபரப்பாக இருந்தது. ‘உய்ங்… உய்ங்…’ எனக் கார்கள் வருவதும் போவதும், அதிகாரிகளும் பெரிய போலீஸ்மார்களும் சரட்டுப் புரட்டு என்று அங்குமிங்கும் நடந்தார்கள். ஆங்காங்கே சிறு சலசலப்பு எழும்போதெல்லாம் பீர்மா முகத்தில் அதிகப்படியாக ஆவல் ஒட்டிக்கொள்ளும்.
பாக்கு பெத்தாவுக்கும், மறியம் பெத்தாவுக்கும் வெறுப்பாகப் போனது. கூட்டத்தில் கிடந்து மொனங்கினார்கள். சேனாம்மாவின் காலை யாரோ சமுட்டி விட்டார்கள் என சேனாம்மா திட்டித் திமிறினாள்.

"நாசமா போனதுவளுக்கு என் கால கண்டவுடனேதானா பேதி எடுக்கணும்!"

சேனாம்மாவின் வார்த்தை கேட்டுச் சில பொம்பளைகள் சத்தமாய்ச் சிரித்தனர். சிரித்துக்கொண்டே சேனாம்மாவை நெருக்கித் தள்ளினார்கள். சேனாம்மா மேலும் திட்டினாள். சிரிப்பு மேலும் கூடியது. கூட்டம் கூடி வந்து பீர்மா மேலும் ஒன்றிரண்டு பொம்பளைகள் சாய்ந்து தள்ளினார்கள்.

நல்லவேளை! முன்னால் சவுக்குக் கம்பு இருந்ததால் பீர்மா விழுந்து விடாமல் நின்று கொண்டாள். ஆனாலும் திரும்பி அஞ்சாறு அறுப்பும் கிழியும் வைத்துக் கொடுத்தாள்.

ஒன்பது மணிக்கு மேலே கார்கள் அணிவகுப்பு வர, கவர்னர் வந்து இறங்கினார். அதிகாரிகள் சுற்றிக்கொள்ள, ஒருவர் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டார். கவர்னர் பாத்திமா பீவி முட்டாக்கம் போட்டுக் கொண்டு கம்பீரமாய் நடந்து, நாலா பக்கமும் கூட்டத்தைப் பார்த்துக் கை அசைத்துப் புன்னகையுடன் திரும்பினார்கள்.

ஜமா-அத் தலைவர் பொன்னாடை கொடுத்து வரவேற்றார். கவர்னர் புன்னகையுடன் நடந்து வர, வாசல் அருகே வரும்போது பெண்களின் பக்கம் கவர்னர் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டுத் திரும்பும்போது பீர்மா பளிச்சென்று கவர்னரைப் பார்த்துக் கையை நீட்டினாள். கவர்னரும் பீர்மாவின் கரத்தைப் பற்றிக் குலுக்கினார். கடகடவென நிறையக் கரம் நீண்டது. கவர்னர் பீர்மாவின் கரத்தை விட்டபடி புன்னகையுடன் உள்ளே போய்விட்டார்.

கூட்டத்தில் சத்தம் வந்தது.

"பிள்ளா, கவர்னர் பெத்தா!"

பூரித்துப் போனாள்.

அடுத்த இருபது நிமிடங்களில் கவர்னர் போய்விட்டார். பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகி விட்டது. பீர்மாவைப் பலரும் விசாரித்தார்கள். பீர்மாவின் மருமகள் மயங்கியே விழுந்து விட்டாள். சிலர் பீர்மாவை வயித்தெரிச்சலோடு பார்த்தனர். பீர்மாவின் அடையாளப் பெயர் கவர்னர் பெத்தாவாகிப் போனது.

தர்ஹாவிலிருந்து திரும்பி நடந்து வரும்போது பீர்மா, மறியத்திடம் சொன்னாள்.

"நாசமாப் போனதுவோ… நம்மள படிக்க வைக்காம உட்டுட்டுதுவோ. நம்மள மாதித்தானே இருக்கா. எங்கம்மாக்காரி நெலையளிஞ்சி நின்னுட்டா. பள்ளிக்கோடத்துக்கு போட்டாளான்னு கேட்டதுக்கு, பொட்டப் புள்ள படிச்சி பெரிய கவர்னராட்டா ஆவப்போறான்னா…"

(அடுத்த இதழில் தருணம் 4 – பூமணி)

About The Author