தருணம் (6.1)

நாற்காலி

–கி.ராஜநாராயணன்

இதன் முன்பகுதி: தருணம் (6)

உள் திண்ணையில் படுத்திருந்த பெத்தண்ணா போய்க் கதவைத் திறந்தான். ஊருக்குள் யாரோ ஒரு முக்கியமான பிரமுகர் இப்பொழுதுதான் இறந்துபோய்விட்டாரென்றும் நாற்காலி வேண்டுமென்றும் கேட்டு எடுத்துக்கொண்டு போனார்கள்.

இறந்துபோன ஆசாமி எங்களுக்கும் வேண்டியவர் ஆனதால் நாங்கள் யாவரும் குடும்பத்தோடு போய்த் துட்டியில் கலந்து கொண்டோம். துட்டி வீட்டில் போய்ப் பார்த்தால்… எங்கள் வீட்டு நாற்காலியில்தான் இறந்துபோன அந்தப் ‘பிரமுகரை’ உட்கார்த்தி வைத்திருந்தார்கள்!

இதற்குமுன் எங்கள் ஊரில் இறந்துபோனவர்களைத் தரையில்தான் உட்கார்த்தி வைப்பார்கள். உரலைப் படுக்க வைத்து, அது உருண்டு விடாமல் அண்டை கொடுத்து, ஒரு கோணிச் சாக்கில் வரகு வைக்கோலைத் திணித்து, அதைப் பாட்டுவசத்தில் உரலின்மேல் சாத்தி அந்தச் சாய்மானத் திண்டுவில் இறந்து போனவரை, சாய்ந்து உட்கார்ந்திருப்பதுபோல் வைப்பார்கள்.

இந்த நாற்காலியில் உட்காரவைக்கும் புது மோஸ்தரை எங்கள் ஊர்க்காரர்கள் எந்த ஊரில் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்களோ, எங்கள் வீட்டு நாற்காலிக்குப் பிடித்தது வினை. (தரை டிக்கட்டிலிருந்து நாற்காலிக்கு வந்துவிட்டார்கள்!)

அந்த வீட்டு ‘விசேஷம்’ முடிந்து நாற்காலியை எங்கள் வீட்டு முன் தொழுவில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போனார்கள். அந்த நாற்காலியைப் பார்க்கவே எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயப்பட்டன. வேலைக்காரனைக் கூப்பிட்டு அதைக் கிணற்றடிக்குக் கொண்டுபோய் வைக்கோலால் தேய்த்துத் தேய்த்துப் பெரிய வாளிக்கு ஒரு பதினைந்து வாளி தண்ணீர்விட்டுக் கழுவித் திரும்பவும் கொண்டுவந்து முன் தொழுவத்தில் போட்டோம். பலநாள் ஆகியும் அதில் உட்கார ஒருவருக்கும் தைரியம் இல்லை. அதை எப்படித் திரும்பவும் பழக்கத்துக்குக் கொண்டுவருவது என்றும் தெரியவில்லை.

ஒருநாள் நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். அந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு வந்து அவருக்குப் போடச் சொன்னோம். அவரோ "பரவாயில்லை, நான் சும்மா இப்படி உட்கார்ந்து கொள்கிறேன்" என்று ஜமக்காளத்தைப் பார்த்துப் போனார். எங்களுக்கு ஒரே பயம்; அவர் எங்கே கீழே உட்கார்ந்து விடுவாரோ என்று. குடும்பத்தோடு அவரை வற்புறுத்தி நாற்காலியில் உட்கார வைத்தோம். அவர் உட்கார்ந்த உடனே சின்னத் தம்பியும் குட்டித் தங்கையும் புழக்கடைத் தோட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். மத்தியில் மத்தியில் வந்து நாற்காலியில் உட்கார்ந்தவருக்கு என்ன ஆச்சு என்று எட்டியும் பார்த்துக்கொள்வார்கள்!

மறுநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு உள்ளூர்க் கிழவனார் தற்செயலாகவே வந்து நாற்காலியில் உட்கார்ந்து எங்களுக்கு மேலும் ஆறுதல் தந்தார். (இப்பொழுதே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துக்கொள்கிறார்! – என்று பெத்தண்ணா என் காதில் மட்டும் படும்படியாகச் சொன்னான்.)

இப்படியாக, அந்த நாற்காலியைப் ‘பழக்கி’னோம். முதலில் வீட்டிலுள்ள பெரியவர்கள் உட்கார்ந்தோம். குழந்தைகளுக்கு இன்னும் பயம் தெளியவில்லை. "கொஞ்சம் உட்காரேண்டா நீ முதலில்" என்று கெஞ்சுவாள் குட்டித் தங்கை தம்பிப் பயலைப் பார்த்து. "ஏன், நீ உட்காருவது தானே?" என்பான் அவன் வெடுக்கென்று.

எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பக்கத்துத் தெரு சுகந்தி தன்னுடைய ஒரு வயசுத் தம்பிப் பாப்பாவைக் கொண்டுவந்து உட்கார வைத்தாள், அந்த நாற்காலியில். அதிலிருந்துதான் எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பயமில்லாமல் உட்கார ஆரம்பித்தார்கள்.

திரும்பவும் ஒரு நாள் ராத்திரி, யாரோ இறந்துபோய் விட்டார்கள் என்று நாற்காலியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். இப்படி அடிக்கடி நடந்தது.

நாற்காலியை வருத்தத்தோடுதான் கொடுத்தனுப்புவோம். வந்து கேட்கும் இழவு வீட்டுக்காரர்கள் எங்கள் துக்கத்தை வேறுமாதிரி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள் – தங்களவர்கள் இறந்துபோன செய்தியைக் கேட்டுத்தான் இவர்கள் வருத்தம் அடைகிறார்கள் போலிருக்கிறது, என்று நினைத்துக் கொள்வார்கள்.

தூக்கம் கலைந்த எரிச்சல் வேறு. "செத்துத் தொலைகிறவர்கள் ஏன்தான் இப்படி அகாலத்தில் சாகிறார்களோ தெரியவில்லை" என்று அக்கா ஒருநாள் சொன்னாள்.

"நல்ல நாற்காலி செய்தோமடா நாம்; செத்துப்போன ஊர்க்காரன்கள் உட்காருவதற்காக, சை" என்று அலுத்துக்கொண்டான் அண்ணன்.

"நாற்காலி செய்யக் கொடுத்த நேரப் பலன்" என்றாள் அத்தை.

பெத்தண்ணா ஒருநாள் ஒரு யோசனை செய்தான். அதை நாங்கள் இருவர் மட்டிலும் தனியாக வைத்துக்கொண்டோம்.

ஒருநாள் அம்மா என்னை ஏதோ காரியமாக மாமனாரின் வீட்டுக்குப் போய்வரும்படி சொன்னாள்.
நான் அவருடைய வீட்டுக்குள் நுழைந்தபோது மாமனார் நாற்காலியில் அமர்க்களமாய் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். அவர் வெற்றிலை போடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. தினமும் தேய்த்துத் துடைத்த தங்க நிறத்தில் பளபளவென்றிருக்கும் சாண் அகலம், முழ நீளம், நாலு விரல் உயரம் கொண்ட வெற்றிலைச் செல்லத்தை நோகுமோ நோகாதோ என்று அவ்வளவு மெல்லப் பக்குவமாகத் திறந்து, பூஜைப் பெட்டியிலிருந்து சாமான்களை எடுத்து வைக்கிற பதனத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைப்பார். வெற்றிலையை நன்றாகத் துடைப்பாரே தவிரக் காம்புகளைக் கிள்ளும் வழக்கம் அவரிடம் கிடையாது. (அவ்வளவு சிக்கனம்!) சிலசமயம் ‘மொறசல்’ வெற்றிலை அகப்பட்டுவிட்டால் மட்டும் இலையில், முதுகிலுள்ள நரம்புகளை உரிப்பார். அப்பொழுது நமக்கு, ‘முத்தப்பனைப் பிடிச்சு முதுகுத்தோலை உரிச்சி பச்சை வெண்ணெயைத் தடவி…’ என்ற வெற்றிலையைப் பற்றிய அழிப்பாங்கதைப் பாடல் ஞாபகத்துக்கு வரும்.

களிப்பாக்கை எடுத்து முதலில் முகர்ந்து பார்ப்பார். அப்படி முகர்ந்து பார்த்துவிட்டால் ‘சொக்கு’ ஏற்படாதாம். அடுத்து அந்தப் பாக்கை ஊதுவார்! அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்குப் புழுக்கள் போகவேண்டாமா, அதற்காக. ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த முகர்ந்து பார்த்தலும் ஊதலும் வரவர வேகமாகி ஒரு நாலைந்து தடவை மூக்குக்கும் வாய்க்குமாகக் கை மேலும் கீழும் ‘உம் உஷ், உம் உஷ்’ என்ற சத்தத்துடன் சுத்தமாகி டபக்கென்று வாய்க்குள் சென்றுவிடும்!

ஒருவர் உபயோகிக்கும் அவருடைய சுண்ணாம்பு டப்பியைப் பார்த்தாலே அவருடைய சுத்தத்தைப் பற்றித் தெரிந்துவிடும். மாமனார், இதிலெல்லாம் மன்னன். விரலில் மிஞ்சிய சுண்ணாம்பைக்கூட வீணாக மற்றப் பொருள்களின்மேல் தடவ மாட்டார். அவருடைய சுண்ணாம்பு டப்பியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். பதினைந்து வருசத்துக்குமுன் வாங்கிய எவரெடி டார்ச்லைட் இன்னும் புத்தம்புதுசாக இப்பொழுதுதான் கடையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்ததோ என்று நினைக்கும்படியாக உபயோகத்தில் இருக்கிறது அவரிடம். அதோடு சேர்த்து வாங்கிய எங்கள் வீட்டு டார்ச் லைட், சொட்டு விழுந்து நெளிசலாகி மஞ்சள் கலரில் பார்க்கப் பரிதாபமாக, ஒரு சாகப்போகும் நீண்டநாள் நோயாளியைப்போல் காட்சியளிக்கிறது.

நாற்காலியை அவர் தவிர அந்த வீட்டில் யாரும் உபயோகிக்கக் கூடாது. காலையில் எழுந்திருந்ததும் முதல் காரியமாக அதைத் துடைத்து வைப்பார். ஒரு இடத்திலிருந்து அதை இன்னொரு இடத்துக்கு தானே மெதுவாக எடுத்துக்கொண்டு போய் சத்தமில்லாமல் தண்ணீர் நிறைந்த மண்பானையை இறக்கி வைப்பதுபோல் அவ்வளவு மெதுவாக வைப்பார்.

மாமனார் என்னைக் கண்டதும் "வரவேணும் மாப்பிள்ளைவாள்" என்று கூறி வரவேற்றார். "கொஞ்சம் வெற்றிலை போடலாமே?” என்று என்னைக் கேட்டுவிட்டுப் பதிலும் அவரே சொன்னார். "படிக்கிற பிள்ளை வெற்றிலை போட்டால் கோழி முட்டும்!"

அம்மா சொல்லியனுப்பிய தகவலை அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

ராத்திரி அகாலத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வீட்டில் எல்லாரும் அயர்ந்த தூக்கம். நான் பெத்தண்ணாவை எழுப்பினேன்.

நாற்காலிக்காக வந்த ஒரு இழவு வீட்டுக்காரர்கள் வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். பெத்தண்ணா அவர்களைத் தெருப்பக்கம் அழைத்துக்கொண்டு போனான். நானும் போனேன். வந்த விஷயத்தை அவர்கள் சொல்லி முடித்ததும் பெத்தண்ணா அவர்களிடம் நிதானமாக பதில் சொன்னான்.

"நாற்காலிதானே…? எங்கள் மாமனார் வீட்டில் இருக்கிறது. போய்க்கேளுங்கள் தருவார்" அவர்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்து இருவரும் சத்தமில்லாமல் சிரித்தோம்!

அப்பா தூக்கச் சடைவோடு படுக்கையில் புரண்டுகொண்டே "யார் வந்தது?" என்று கேட்டார்.

"வேலையென்ன… பிணையலுக்கு மாடுகள் வேணுமாம்" என்றான் பெத்தண்ணா.

துப்பட்டியை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டார் அப்பா.

இப்பொழுது மாமனார் காட்டில் பெய்துகொண்டிருக்கிறது மழை!

ரொம்பநாள் கழித்து, நான் மாமனார் வீட்டுக்கு ஒரு நாள் போனபோது அவர் தரையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். வழக்கமான சிரிப்புடனும் பேச்சுடனும் என்னை வரவேற்றார்.
"என்ன இப்படிக் கீழே! நாற்காலி எங்கே?" சுற்றுமுற்றும் கவனித்தேன். வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். பின்பு அமைதியாக "அந்தக் காரியத்துக்கே அந்த நாற்காலியை வைத்துக்கொள்ளும்படி நான் கொடுத்துவிட்டேன். அதுக்கும் ஒன்று வேண்டியதுதானே?" என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பி வரும்போது இந்தச் செய்தியைச் சொல்லப் பெத்தண்ணாவிடம் வேகமாக விரைந்தேன். ஆனால், வரவர என்னுடைய வேகம் குறைந்து தன்நடையாயிற்று.

(அடுத்த இதழில் தருணம் 07 – கண்ணன் மகேஷ்)

About The Author