தருணம் (6)

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

நாற்காலி

–கி.ராஜநாராயணன்

நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?

எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோர்க்கும் தோன்றி விட்டது. அவ்வளவுதான்; குடும்ப ‘அஜெண்டா’வில் வைக்கப்பட்டு இந்த விஷயத்தில் விவாதம் தொடங்கியது.

முதல் நாள் எங்க வீட்டுக்கு ஒரு குடும்ப நண்பர் விஜயம் செய்தார். அவர் ஒரு சப்ஜட்ஜ். வந்தவர் நம்மைப்போல் வேட்டி சட்டை போட்டுக்கொண்டு வரப்படாதோ! சூட்டும் பூட்டுமாக வந்து சேர்ந்தார். எங்கள் வீட்டில் முக்காலிதான் உண்டு. அதன் உயரமே முக்கால் அடிதான். எங்கள் பாட்டி தயிர் கடையும்போது அதிலேதான் உட்கார்ந்து கொள்வாள். அவளுக்குப் பாரியான உடம்பு. எங்கள் தாத்தா தச்சனிடம் சொல்லி அதைக் கொஞ்சம் அகலமாகவே செய்யச் சொல்லியிருந்தார்.

சப்ஜட்ஜுக்கும் கொஞ்சம் பாரியான உடம்புதான். வேறு ஆசனங்கள் எங்கள் வீட்டில் இல்லாததால் அதைத்தான் அவருக்குக் கொண்டு வந்து போட்டோம். அவர் அதன் விளிம்பில் ஒரு கையை ஊன்றிக் கொண்டு உட்காரப் போனார். இந்த முக்காலியில் ஒரு சனியன் என்னவென்றால், அதன் கால்களுக்கு நேராகயில்லாமல் பக்கத்தில் பாரம் அமுங்கினால் வாரித் தட்டிவிடும். நாங்கள் எத்தனையோ தரம், உறியில் வைத்திருக்கும் நெய்யைத் திருட்டுத்தனமாக எடுத்துத் தின்பதற்கு முக்காலி போட்டு ஏறும்போது அஜாக்கிரதையினால் பல தரம் கீழே விழுந்திருக்கிறோம். பாவம் அந்த சப்ஜட்ஜும் இப்பொழுது கீழே விழப் போகிறாரே என்று நினைத்து அவரை எச்சரிக்கை செய்ய நாங்கள் வாயைத் திறப்பதற்கும் அவர் ‘தொபுகடீர்’ என்று கீழே விழுந்து உருளுவதற்கும் சரியாக இருந்தது. நான், என் தம்பி, கடைக்குட்டித் தங்கை எங்கள் மூவருக்கும் சிரிப்புத் தாங்க முடியாமல் புழக்கடைத் தோட்டத்தைப் பார்க்க ஓடினோம். சிரிப்பு அமரும்போதெல்லாம் என் தங்கை அந்த சப்ஜட்ஜ் மாதிரியே கையை ஊன்றிக் கீழே உருண்டு விழுந்து காண்பிப்பாள்; பின்னுங் கொஞ்சம் எங்கள் சிரிப்பு நீளும்.

எங்கள் சிரிப்புக்கெல்லாம் இன்னொரு முக்கிய காரணம் அவர் கீழே விழும்போது பார்த்ததும் எங்கள் பெற்றோர்கள், தாங்கள் விருந்தாளிக்கு முன்னால் சிரித்து விடக்கூடாதே என்று வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டதை நினைத்துத்தான்!

ஆக நாங்கள் எல்லார்க்கும் சேர்த்துச் சிரித்துவிட்டு வீட்டுக்குள் பூனைபோல் அடி எடுத்து வைத்து நுழைந்து பார்த்தபோது அந்தப் பாரியான உடம்புள்ள விருந்தாளியைக் காணவில்லை. அந்த முக்காலியையும் காணவில்லை. "அதை அவர் கையோடு கொண்டு போயிருப்பாரோ?" என்று என் தங்கை என்னிடம் கேட்டாள்!

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே, எங்கள் வீட்டில் எப்படியாவது ஒரு நாற்காலி செய்துவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்த நாற்காலி செய்வதில் ஒரு நடைமுறைக் கஷ்டம் என்னவென்றால், முதலில் பார்வைக்கு எங்கள் ஊரில் ஒரு நாற்காலிகூடக் கிடையாது! அதோடு நாற்காலி செய்யத் தெரிந்த தச்சனும் கிடையாது.

“நகரத்தில் செய்து விற்கும் நாற்காலியை வாங்கிக்கொண்டு வந்து விட்டால் போச்சு” என்று எங்கள் பெத்தண்ணா ஒரு யோசனையை முன்வைத்தான். அது உறுதியாக இராது என்று நிராகரித்துவிட்டார் எங்கள் அப்பா.

பக்கத்தில் ஒரு ஊரில் கெட்டிக்காரத் தச்சன் ஒருவன் இருப்பதாகவும் அவன் செய்யாத நாற்காலிகளே கிடையாது என்றும், கவர்னரே வந்து அவன் செய்த நாற்காலிகளைப் பார்த்து மெச்சி இருக்கிறார் என்றும் எங்கள் அத்தை சொன்னாள்.

அத்தை சொன்னதிலுள்ள இரண்டாவது வாக்கியத்தைக் கேட்டதும் அம்மா அவளை, ‘ஆமா இவ ரொம்பக் கண்டா’ என்கிற மாதிரிப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள்!

அப்பா வேலையாளைக் கூப்பிட்டு, அந்தத் தச்சனுடைய ஊருக்கு அவனை அனுப்பிவிட்டு எங்களோடு வந்து உட்கார்ந்தார். இப்போது, நாற்காலியை எந்த மரத்தில் செய்யலாம் என்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது.

தேக்கு மரத்தில்தான் செய்யவேண்டும். அதுதான் தூக்க, வைக்க லேசாகவும், அதே சமயத்தில் உறுதியாகவும் இருக்கும் என்றாள் பாட்டி தன்னுடைய நீட்டிய கால்களைத் தடவிக்கொண்டே. (பாட்டிக்குத் தன்னுடைய கால்களின்மீது மிகுந்த பிரியம். சதா அவைகளைத் தடவிவிட்டுக்கொண்டே இருப்பாள்!)

இந்தச் சமயத்தில் எங்கள் தாய்மாமனார் எங்கள் வீட்டுக்குள் வந்தார். எங்கள் பெத்தண்ணா ஓடிப்போய் அந்த முக்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தான். சிறிது நேரம் வீடே கொல்லென்று சிரித்து ஓய்ந்தது.

மாமனார் எங்கள் வீட்டுக்கு வந்தால் அவருக்கென்று உட்காருவதற்கு அவரே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். தலைபோனாலும் அந்த இடத்தில்தான் அவர் உட்காருவார். பட்டக சாலையின் தெற்கு ஓரத்திலுள்ள சுவரை ஒட்டியுள்ள தூணில் சாய்ந்துதான் உட்காருவார். உட்கார்ந்ததும் முதல் காரியமாகத் தன் குடுமியை அவிழ்த்து ஒருதரம் தட்டித் தலையைச் சொறிந்துகொடுத்துத் திரும்பவும் குடுமியை இறுக்கிக் கட்டிக்கொண்டுவிடுவார். இது அவர் தவறாமல் செய்கிற காரியம். இப்படிச் செய்துவிட்டு அவர் தன்னையொட்டியுள்ள தரையைச் சுற்றிலும் பார்ப்பார். "தலையிலிருந்து துட்டு ஒன்றும் கீழே விழுந்ததாகத் தெரியவில்லை" என்று அண்ணா அவரைப் பார்த்து எக்கண்டமாகச் சொல்லிச் சிரிப்பான்.

அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இப்படிக் காகித பாணங்களினால் துளைத் தெடுக்கப்படுவார்! ‘சம்மந்தக்காரர்கள் நீங்கள் பார்த்து என்னைக் கேலி செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்’ என்கிற மாதிரியே வாயே திறக்காமல் கல்லுப்பிள்ளையார் மாதிரி அவா பாட்டுக்கு உட்கார்ந்து புன்னகையோடு இருப்பார். எங்களுடைய ஏடாசிப் பேச்சுக்களின் காரம் அதிகமாகும் போது மட்டும் அம்மா எங்களைப் பார்த்து ஒரு பொய் அதட்டுப் போடுவாள். அந்த அதட்டின் வாக்கியத்தின் கடேசி வார்த்தை ‘கழுதைகளா’ என்று முடியும்.

மாமனார் வந்து உட்கார்ந்ததும் அம்மா எழுந்திருந்து அடுப்படிக்கு அவசரமாய்ப் போனாள். அவளைத் தொடர்ந்து ஆட்டுக்குட்டியைப் போல் அப்பாவும் பின்னால் போனார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஆளோடி வழியாக அம்மா கையில் வெள்ளித்தம்ளரில் காயமிட்ட மோரை எடுத்துக்கொண்டு நடந்து வர, அம்மாவுக்குப் பின்னால் அப்பா, அவளுக்குத் தெரியாமல் எங்களுக்கு மட்டும் தெரியும்படி வலிப்புக் காட்டிக்கொண்டே அவள் நடந்து வருகிற மாதிரியே வெறுங்கையைத் தம்ளர் ஏந்துகிற மாதிரி பிடித்துக்கொண்டு நடந்து வந்தார்! அவர் அப்படி நடந்து வந்தது, ‘அவ அண்ணா வந்திருக்கானாம்; ரொம்ப அக்கறையாய் மோர் கொண்டுபோய்க் கொடுக்கிறதைப் பாரு’ என்று சொல்லுகிறது மாதிரி இருக்கும்.

மோரும் பெருங்காயத்தின் மணமும், நாங்களும் இப்பொழுதே மோர் சாப்பிடணும்போல் இருந்தது.
மாமனார் பெரும்பாலும் எங்கள் வீட்டுக்கு வருகிறது மோர் சாப்பிடத்தான் என்று நினைப்போம். அந்தப் பசுமாட்டின் மோர் அவ்வளவு திவ்வியமாய் இருக்கும். அதோடு எங்கள் மாமனார் எங்கள் ஊரிலேயே பெரிய கஞ்சாம்பத்தி. அதாவது ஈயாத ‘லோபி’ என்ற நினைப்பு எங்களுக்கு.

இந்தப் பசுவை அவர் தன்னுடைய தங்கைக்காகக் கண்ணாவரம் போய் தானே நேராக வாங்கிக்கொண்டு வந்தார். இந்தக் காராம் பசுவின் கன்னுக்குட்டியின் பேரில் என் தம்பிக்கும் குட்டித் தங்கைக்கும் தணியாத ஆசை. வீட்டைவிட்டுப் போகும்போதும் வீட்டுக்குள் வரும்போதும் மாமனார் பசுவை ஒரு சுற்றுச் சுற்றி வந்து அதைத் தடவிக் கொடுத்து (தன் கண்ணே எங்கே பட்டுவிடுமோ என்ற பயம்!) இரண்டு வார்த்தை சிக்கனமாகப் புகழ்ந்துவிட்டுத்தான் போவார். ‘பால் வற்றியதும் பசுவை அவர் தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுபோய்விடுவார், கன்னுக்குட்டியும் பசுவோடு போய்விடும்’ என்று பெரிய்ய பயம் என் சிறிய உடம்பிறப்புகளுக்கு.

பின்னால் ஏற்படப்போகிற இந்தப் பிரிவு அவர்களுக்குக் கன்னுக்குட்டியின்மேல் மேலும் பிரீதியையும் மாமனாரின்பேரில் அதிகமான கசப்பையும் உண்டுபண்ணிவிட்டது. அவர் ருசித்து மோரைச் சாப்பிடும்போது இந்தச் சின்னஞ் சிறுசுகள் தங்களுடைய பார்வையாலேயே அவரைக் குத்துவார்கள்; கிள்ளுவார்கள்!

நாற்காலி விவாதத்தில் மாமனாரும் அக்கறை காட்டினார். தனக்கும் ஒரு நாற்காலி செய்யவேண்டுமென்று பிரியம் இருப்பதாகத் தெரிவித்தார். எங்களுக்கும் ஒரு துணை கிடைத்தது மாதிரி ஆயிற்று.

வேப்பமரத்தில் செய்வது நல்லது என்றும் அதில் உட்கார்ந்தால் உடம்புக்குக் குளிர்ச்சி என்றும், மூலவியாதி கிட்ட நாடாது என்றும் மாமனார் சொன்னார்.

வேப்ப மரத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்ததும் அப்பா மாமனாரை ஆச்சரியத்தோடு கூடிய திருட்டு முழியால் கவனித்தார். எங்கள் மந்தைப் புஞ்சையில் நீண்ட நாள் வைரம் பாய்ந்த ஒரு வேப்ப மரத்தை வெட்டி ஆறப்போட வேண்டுமென்று முந்தாநாள்தான் எங்கள் பண்ணைக்காரனிடம் அப்பா சொல்லிக்கொண்டிருந்தார்! பெத்தண்ணா சொன்னான். "பூவரசங்கட்டையில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். அது கண் இறுக்கமுள்ள மரம். நுண்ணமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்; உறுதியுங்கூட" என்றான்.

அக்கா சொன்னாள், "இதுகளெல்லாம் வெளிர் நிறத்திலுள்ளவைகள். பார்க்கவே சகிக்காது. கொஞ்சநாள் போனால் இதுகள் மேல் நமக்கு ஒரு வெறுப்பே உண்டாகிவிடும். நான் சொல்லுகிறேன், செங்கரும்பு நிறத்திலோ அல்லது எள்ளுப் பிண்ணாக்கு மாதிரி கறுப்பு நிறத்திலோ இருக்கிற மரத்தில்தான் செய்வது நல்லது; அப்புறம் உங்களிஷ்டம்" என்றாள். பளிச்சென்று எங்கள் கண்களுக்கு முன்னால் கண்ணாடிபோல் மின்னும் பளபளப்பான கருப்பு நிறத்தில், கடைந்தெடுத்த முன்னத்தங் கால்களுடனும் சாய்வுக்கு ஏற்ற வளைந்த, சோம்பல் முறிப்பதுபோலுள்ள பின்னத்தங்கால்களுடனும் ஒரு சுகாசனம் தோன்றி மறைந்தது.

எல்லார்க்குமே அவள் சொன்னது சரி என்று பட்டது. ஆக எங்களுக்கு ஒன்றும் எங்கள் மாமனார் வீட்டுக்கு ஒன்றுமாக இரண்டு நாற்காலிகள் செய்ய உடனே ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டு நாற்காலிகளும் எங்கள் வீட்டில் வந்து இறங்கியபோது அதில் எந்த நாற்காலியை வைத்துக்கொண்டு எந்த நாற்காலியை மாமனார் வீட்டுக்குக் கொடுத்தனுப்புவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒன்றைப் பார்த்தால் மற்றதைப் பார்க்கவேண்டாம்; அப்படி ‘ராமர், லெச்சுமணர்’ மாதிரி இருந்தது. ஒன்றை வைத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு ஒன்றைக் கொடுத்தனுப்பினோம். கொடுத்தனுப்பியதுதான் நல்ல நாற்காலியோ என்று ஒரு சந்தேகம்!

ஒவ்வொருத்தராய் உட்கார்ந்து பார்த்தோம். எழுந்திருக்க மனசே இல்லை. அடுத்தவர்களும் உட்கார்ந்து பார்க்கவேண்டுமே என்பதற்காக எழுந்திருக்க வேண்டியதிருந்தது. பெத்தண்ணா உட்கார்ந்து பார்த்தான். "ஆஹா" என்று ரசித்துச் சொன்னான். இரண்டு கைகளாலும் நாற்காலியின் கைகளைத் தேய்த்தான். சப்பணம் போட்டு உட்கார்ந்து பார்த்தான். "இதுக்கு ஒரு உறை தைத்துப் போட்டுவிட வேணும். இல்லையென்றால் அழுக்காகிவிடும்" என்று அத்தை சொன்னாள்.
குட்டித் தங்கைக்கும் தம்பிப் பயலுக்கும் அடிக்கடி சண்டை வரும். "நீ அப்போப் பிடிச்சி உக்காந்துகிட்டே இருக்கியே, எழுந்திருடா… நான் உட்காரணும் இப்போ" என்று அவனைப் பார்த்துக் கத்துவாள். "ஐயோ, இப்பத்தானே உட்கார்ந்தேன்! பாரம்மா இவளை" என்று சொல்லுவான், அழ ஆரம்பிக்கப்போகும் முகத்தைப்போல் வைத்துக்கொண்டு.

தீ மாதிரிப் பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் பெருங்கொண்ட கூட்டம் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் தடவிப் பார்த்தார்கள். ஒரு கிழவனார் வந்து நாற்காலியைத் தூக்கிப் பார்த்தார். "நல்ல கனம்! உறுதியாகச் செய்திருக்கிறான்" என்று தச்சனைப் பாராட்டினார்.

கொஞ்சநாள் ஆயிற்று.

ஒருநாள் ராத்திரி இருக்கும். யாரோ கதவைத் தட்டினார்கள்.

–தொடரும்...

About The Author