தருணம் 8

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

மனிதாபிமானம்

தி.ஜானகிராமன்

"அஞ்சரை, அஞ்சரை!" என்று அவசரமாக இந்தியில் உரக்கக் கத்தினார் தேவுடு.

அவன் காதில் விழுந்ததோ, என்னவோ? சைக்கிளில் போகிறான். "மணி என்ன ஸார்" என்று கேட்டான். அவர் கடிகாரத்தை முழுச்சட்டைக் கைப்பொத்தானைப் பிடுங்கி இழுத்துப் பார்த்துச் சொல்ல வேண்டியிருந்தது. அது இரண்டரை மணிதான் காட்டிற்று. பிற்பகலில் நின்று விட்டிருக்க வேண்டும். இப்போது மாலை. ஆபிஸிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டது ஐந்தே கால் மணிக்கு. கால் மணி நடந்திருப்போம். கூட்டி, பிறகு ஐந்தரைக்கு இந்தி என்ன என்று யோசித்துக் கத்தினார். இத்தனை பொறுப்பை அவன் தெரிந்துகொள்ளவில்லை. மணி கேட்கிறவன், சற்று இருந்து பதிலைக் கேட்டுக் கொண்டால் என்ன? அப்படிக் கேட்காமல் போகிறவன் எதற்காகக் கேட்கிறான்? ஏன், சைக்கிளில் ப்ரேக் இல்லையா? இல்லை, நிறுத்தினால் ஓடாதா?

முன்பெல்லாம் தேவுடுக்குக் கோபம் வரும். பதினைந்து வருஷங்களுக்கு முன்பு இப்படி யாராவது செய்திருந்தால், கூடவே ஓடி காரியரை இழுத்து சைக்கிளை நிறுத்தி “ஏண்டா சோம்பேறி, ஏன் மணி கேட்டாய்? கேட்ட பிறகு நான் சொன்னதை ஏன் கேட்காமல் போனாய்” என்று காலரைப் பிடித்து உலுக்கியிருப்பார்.

ஆனால் இன்று அவர் பொறுமையோடு நின்றார். மெதுவாகச் சிரித்துக்கொண்டார். வாழ்க்கையைப் பார்த்துச் சிரிக்க வேண்டும், கோபப்படக் கூடாது என்று பல தத்துவ ஞானிகள் சொல்லிவிட்டார்கள். இன்று அவர் பழைய தேவுடு இல்லை. இப்போது மார்க்ஸ், ப்ராய்டு, காந்திஜி, லெனின், ஜிட்டு என்று பல மகான்களின் கதைகளையும் எழுத்துக்களையும் படித்துவிட்டு, மனிதாபிமானியாகி விட்டார். கோபம் வருவதில்லை. யாராவது திருடி விட்டால், காரணமில்லாமல் திருடமாட்டார்கள். கொலை செய்தால் காரணமில்லாமல் கொல்ல மாட்டார்கள். பிள்ளை தன்னோடு சண்டை போட்டால், பெண்டாட்டி மகளோடு சண்டை போட்டால், ஈடிபஸ் காம்ப்ளெக்ஸாக இருக்கும். யாராவது பலாத்காரமாகக் கற்பழித்தால் கற்பழிப்பவனின் மனநிலைதான் முக்கியம் தேவுடுக்கு. சின்ன வயதில் அவனுக்கு, தாயுடைய அல்லது தகப்பனாருடைய ‘லௌ’ கிடைத்திருக்காது. தங்கள் சுயநலத்திற்காக அவனைப் புறக்கணித்திருப்பார்கள்…

தேவுடு பொத்தானைக் கழற்றி கடிகாரத்தை மணிக்கட்டிலிருந்து அவிழ்த்து ஆட்டிப் பார்த்தார். விநாடி முள் நகர்ந்தது. ஆனால் பத்தாவது இலக்கத்தில் நின்றுவிட்டது. ஆட்டினார் மீண்டும். ஒரு சுற்றுச் சுற்றிப் பத்தில் நின்று விட்டது. சாவி காலை பத்து மணிக்குக் கொடுத்தோம். அதிகமாகக் கொடுத்து விட்டோமோ? அப்படியானால் இரண்டரை மணி வரை ஓடியிருக்காதே.

தேவுடுக்கு வருத்தம். இது புது கடிகாரம். வாங்கி ஒரு வருஷம் இரண்டு மாதம்தான் ஆகிறது; கீழேயும் போடவில்லை. முரட்டுத்தனமாக ஆளவில்லை. தண்ணீர் படவில்லை. ஏன் இப்படித் தரக்குறையாக ஒரு பொருளைச் செய்கிறார்கள்? ஃபாக்டரியில் தரக் கண்காணிப்பு இல்லையா? இல்லை, பொருத்துகிற தொழிலாளிகள் சரியாகப் பொருத்தவில்லையா? அந்தத் தொழிலாளிக்கு அன்று என்ன கஷ்டமோ? பசியாக இருந்திருக்கும். குழந்தைக்குக் காய்ச்சலாக இருந்திருக்கும். முதலாளியோ நிர்வாகமோ லீவு கொடுக்க முரண்டியிருக்கும். தரக் கண்காணியும், என்னதான் நீண்ட முடியும் விறைத்த சட்டையும் தொள தொள கால் சட்டையும் அணிந்திருந்தாலும் அவனும் பாட்டாளிதானே. அவன் வீட்டில் என்ன தொல்லையோ!

வீட்டுக்கு வந்து கடிகாரத்தைப் பற்றிச் சொன்னபோது, "கடியாரத்துக்கும் நமக்கும் ராசி கிடையாதுன்னு தெரியறது" என்று சுருக்கமாகச் சொன்னாள் மனைவி.

தேவுடுக்கு இப்போது ராசியெல்லாம் நம்பிக்கை கிடையாது. ப்ராய்டும் மார்க்ஸும் இவருக்குக் கண் திறந்து விட்டிருக்கிறார்கள். திருச்சி ஓட்டல் ஒன்றில் கழுவிடத்தில் ஒரு கைக்கடிகாரத்தை அவர் மறந்து வைத்துவிட்டார். அது போய்விட்டது. அதேபோல கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் கழிவறையில் மறந்து வைத்த இன்னொரு கடிகாரமும் போய்விட்டது. அவர் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த கடிகாரம் வாங்கிய ஒரு மணி நேரத்தில், ஆட்டோ ரிக்ஷாவில் நழுவி விழுந்துவிட்டது. வீட்டுக்கு வந்த பிறகு வெறுங்கையைப் பார்த்து அவளுக்கு ரத்த அழுத்தம் வந்தது. ஒவ்வொரு ரிக்ஷா நம்பரையுமா குறித்து வைத்துக் கொள்வார்கள்? "இறங்கறபோது ஒரு வார்த்தை, கையிலே வாட்ச் இருக்கா பாத்தியானு நீங்களாவது சொல்ல மாட்டேளா? உங்களுக்கு உங்க ஞாபகம்தான்" என்று அவருக்குக் குழி வேறு பறித்தாள் அவள். அது அவள் சுபாவம். வாழைப் பழத்தோலில் சறுக்கி அவள் விழுந்தால் கூட, சுற்றியிருப்பவர்கள் தோலியை முன்னாலேயே பார்த்து அவளை எச்சரித்திருக்க வேண்டும் என்பது அவள் பார்வை.

"சமூகம் சமூகம்ங்கறேளே! ஒருத்தருக்கொருத்தர் பார்த்து ஆதரவா, முன் ஜாக்ரதையோடே அரவணைச்சுண்டாத்தான் சமூகம், தெரிஞ்சுக்கோங்கோ" என்று சமூக வாழ்க்கைக்கு முளையும் நடுவது அவள் வழக்கம்.

மறுநாள் தேவுடு மில்லர் கம்பெனிக்குப் போனார். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த புகழ் பெற்ற கடிகாரக் கடை அது. "பாவ்ஜி, நாங்கள் இதை ரிப்பேர் செய்வதில்லை" என்றான் பழுதுக்காரன்.

"ஏனாம்?"

"இது ரைனாஸரஸ் வாச்சாச்சே."

"இருந்தா என்ன?"

"வேறே எந்த வாச்சும் ரிப்பேர் பண்ணுவோம். இதுக்கு மட்டும் இப்ப இந்தியாவிலேயே ஸ்பேர்பார்ட்ஸ் கிடையாது. மும்தாஜ் சௌக்கிலே ஒரு கடையிருக்கு – பாமர் கம்பெனின்னு. அவங்கதான் ஏதாவது செய்ய முடியும்."

"அது ஏழு மைல்னா இருக்கு."

"என்ன செய்யறது?"

"இங்கே வேற யாரும் செய்ய மாட்டாங்களா?"

"கேட்டுப் பாருங்க."

வீலர் பட்டவர்வொர்த் போஸ்ட் கேட், மார்ஷல் என்று அந்தக் காலத்தில் ஆங்கிலேயக் கம்பெனிகளாயிருந்த கடைகளில் போய்ப் பார்த்தார் தேவுடு. எல்லோரும் மும்தாஜ் சௌக், பாமர் கம்பெனிக்குத்தான் கைகாட்டி விட்டார்கள். அதே வழியைத்தான் அக்கர்வால், பூரண்சிங், சரஸ்வதி, நாஷனல் – இந்த இந்தியர் பேர்க் கடைகளும் காட்டினார்கள்.

‘மும்தாஜ் சௌக்’ என்றதுமே தேவுடுக்கு ரத்தம் வற்றி விட்ட சோர்வு. கி.பி.2050ஆம் ஆண்டில் உலகத்து ஜனத்தொகை பன்மடங்காகப் பெருக ஜனங்களுக்கு வேகமாகவோ சாதாரணமான நடையாகவோ நடக்க முடியாது என்றும், தெருக்களில் ஒருவர் பின் ஒருவர் இடித்துக் கொண்டே மெதுவாக அடிமேல் ஐம்பது வருஷம் கழித்துப் படுக்கவே இடம் இல்லாமல் ஜனங்கள் நின்று கொண்டே தூங்குவார்கள் என்றும், ஏரோப்ளேனிலிருந்து பார்ப்பவர்களுக்குப் புழுக்கள் நெளிகிற தோற்றமாக இருக்கும் என்றும் முக்கால் சூழல் இயல் ஞானி காமனர் எச்சரிப்பது தேவுடுவை வாட்டிற்று. கி.பி.2050 மும்தாஜ் சௌக்குக்கு 1950-இலேயே வந்து விட்டது. அந்தக் கடைத்தெரு ஒரு மைல் நீளமும், உப்பிலிருந்து கர்ப்பூரம், கைவளையிலிருந்து கருத்தடை வளையம், குண்டூசியிலிருந்து காணாமற் போன கார்கள், நிஜமான கதரிலிருந்து நியூ யார்க்கில் அமெரிக்கர்கள் அணிந்து எறிந்து விட்ட முந்நூறு டாலர் ப்ளானல் சூட்டுகள் – எல்லாம் கிடைக்கிற அகில உலக பஜார் அது. மனிதர்கள் அடிமேல் அடிவைத்து எல்லா அங்கங்களும் இடிக்க நகர்ந்து கொண்டிருக்கிற பஜார். பாராஜாரி டாங்காக் குதிரை மனிதர்கள் தலையில் கனைக்கிற பஜார். சுத்த தேசிய நெய் ஜிலேபிகள், நாய்க் குட்டிகள், வைர நகைகள், நூறு ரூபாய் பீடர், பன்னல் இல்லாமல் டின்னிலிருந்து சீசாவுக்கு மண்ணெண்ணெய் இறக்குகிற மாஜிக் குழாய் எல்லாம் கிடைக்கிற பஜார்.

தேவுடு பஸ்ஸில் போனார். ஒரு பர்லாங்குக்கு முன்னாலேயே இறக்கி விட்டார்கள்; அங்கிருந்தே கூட்டம் ஆரம்பித்து விட்டது. அடி அடியாக நகர வேண்டியிருந்தது. பஜார் வீதிக்குள் திரும்பியதும் நடைபாதையின் குறுக்கே ஒரு க்யூவரிசை. ஒரே கத்தல். அறுபது பரட்டைத் தலைகள். கிழிசல் நிஜார்கள். கரி-அழுக்கு உடம்புகள். க்யூவரிசை தொடங்கின இடம் ஒரு கதவு ஒருக்களித்திருந்த ஒரு வாசற்படி. அங்கு ஒரு ஆள் தலைமீது ஒரு கூடை. பக்கத்தில் முட்டாக்குப்போட்ட ஒரு அம்மாள். அந்தக் கூடையிலிருந்து சப்பாத்தி ஒன்றை எடுத்துக் கையில் வைத்தபடி நின்று கொண்டிருந்தாள். ஒரு பதினைந்து கைகள் அதைப் பிடுங்கிவிடுகிறது போல நீட்டிக்கொண்டிருந்தன. மூன்றாவது ஆள் ஒருவன் ஒரு கம்பைச் சுழற்றிச் சுழற்றி "லைன் லைன், லைன்லெ நில்லு. எல்லாருக்கும் கிடைக்கும்" என்று இந்தியில் கத்தினான். தர்ம சப்பாத்தி.

நடைபாதையில் அப்பால் போக முடியவில்லை. வீதியில் இறங்கி க்யூவை வலம் வந்து மீண்டும் நடைபாதைக்கு ஏறினார். நடக்க முடியவில்லை. வருகிற ஜனங்கள் மோதினார்கள், முகத்தில் இடித்தார்கள். காலின் கீழே துப்பினான் ஒருவன். பாமர் கம்பெனி மணிக்கூண்டிற்கு அப்பால் இருக்கிறது. அது கிட்டத்தட்ட பஜாரின் அந்தக் கோடி. இந்த நடைபாதையின் ஜன வெள்ளத்தில் எதிர்-நீச்சுப் போட்டால் போய்ச்சேர ஒரு மணி பிடிக்கும். தேவுடு இறங்கி வீதிமத்திக்குப் போகக் கால் எடுத்துவைத்தார். ஆட்டோ-ரிக்ஷாக்களும் மிதி-ரிக்ஷாக்களும் இரண்டு பாரி பசுக்களும் போன பிறகு ஒரு தாண்டாகத் தாண்டி வீதி மத்திக்கு வந்தார். போகும் வழி வரும் வழி என்று வீதியைக் கூறிட்டு நடுவில் ஒரு சிமிண்ட் மேடை கட்டியிருந்தது – பஜார் கோடி வரையில் அதன்மீது நடந்தார். நூறு தப்படிக்கு மேல் நடை தடைபட்டது. அந்த சிமிண்டு வகிட்டின் மீது யாரோ ஆள் படுத்து அடித்துப் போட்ட மாதிரி தூங்கிக் கொண்டிருக்கிறான்.

–தொடரும்…

About The Author