தருணம்

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட – முகூர்த்த வேளைகளாக மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாக, தழும்புகளாகவோ அல்லது நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் பானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மக்த்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள் தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்.

தொகுப்பு – எஸ். சங்கரநாராயணன்

தருணம் 4

நேரம்

பூமணி

எப்படியும் அவளுக்கு அச்சலத்தியாகத்தான் இருந்தது. மேல வெயிலின் உறைப்புக்கு கம்புக் கூடெல்லாம் ஒரே கசகசப்பு. மாரப்பை இழுத்தி ஒத்திக் கொண்டாள்.

பயிர் சலிப்பில் மனசு கடுத்தது. பக்கத்து நிரைகளில் பெண்களின் கேலிப் பேச்சிலும் ஒட்ட முடியவில்லை. நஞ்சைக்கார அம்மா கிணற்று வேம்படியில் கால்நீட்டி உட்கார்ந்திருந்தது. பொழுதெல்லாம் எப்படித்தான் அடித்து வைத்தது மாதிரி ஒரே இடத்தில் இருக்க முடிகிறதோ.
ஒருத்தி கேட்டாள்.

"என்ன அண்ணாமல ரோசனையா இருக்கிறாப்புலருக்கு."
அவள் முருங்கைப் பயிர் குத்திய அரிப்பைச் சொறிந்து கொண்டாள்.

"ரோசன என்ன வேண்டிக் கெடக்கு."

"இல்லயே…."

இன்னொருத்தி குறுக்கிட்டாள்.

"என்னடி குளியாமக் கின்னா இருக்கயா."

"ஆரு கண்டா இருந்தாலும் இருக்கும்."

"புள்ள இன்னியும் உக்காரக்கூட இல்ல. அதுக்குள்ள கஞ்சி கழிச்சா நல்லாத்தான் இருக்கும்."
எல்லாரும் சிரித்துக் குணுகினார்கள்.

வயல் வரப்புக்கள் குறுக்கும் நெடுக்குமாகத் தோரண மிட்டிருந்தன. கரையடியில் பனை வரிசை நீண்டு நீண்டு போய் மேல மடையில் முடிந்திருந்தது. அந்தப் பக்கமும் வயல் குண்டுகளில் பெண்கள் கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது.

கீழமடையில் நீர்ப்பாய்ச்சி தண்ணீர் திறந்துவிட்டு கரைச் சரிவில் இறங்கினான். இறங்கு பாதையில் கருவ மரத்தில் கிடந்த தொட்டிலைத் தாண்டி வந்தவன் பெருவாய்க்கால் பக்கம் திரும்பி விட்டான்.
பிள்ளையழுதால் சொல்லாமலா போவான்.

மார்பு ரெண்டிலும் முன்பிருந்த ஊறல் விருவிருத்து ஏறக்கட்டி லேசாக வலிக்க ஆரம்பித்திருந்தது. கையிலிருந்த மண்ணை உருட்டி உதிர்த்து விட்டு உள்பாடியை இறுக்கி முடிந்து மாராப்பைச் சொருகினாள்.

கருவ மரத்தில் தொட்டில் அசைவுக்குக் காற்று தோதாக இருந்தது. பிள்ளை வெளியே கை நீட்டியிருந்தான். காற்றுக்குக் கையும் கூடவே அசைந்தது.

"இந்தப் பெயலப் பாரு காசலையா ஒறங்குறத. இந்த ஒறக்கம் வீட்ல உண்டுமா. ராத்திரி நேரம் கூடப் படுத்துக்கிட்டு தன்னால உரிக்கிறது மனுசர. இப்ப கெடக்கிற லச்சணமும் அவனும்…."

மார்பை உள்ளங்கையால் அழுத்திக் கசக்கினாள். உள் நரம்பின் விறைப்பு தளரத் தளர வலியும் குறைந்து கொண்டிருந்தது.

மத்தியானக் கஞ்சி குடித்துவிட்டு பிள்ளைக்குப் பால் கொடுத்து அமர்த்திப் போட்டது. அதுக்குள் இப்படி எண்ணெயுஞ் சோறும் சாப்பிட்ட மாதிரி சுரந்து விட்டது. பிள்ளைகளுக்கெல்லாம் இப்படி இருந்திருந்தால் கஷ்டமே இல்லை. மூத்த பயலுக்குத்தான் பட்ட பாடிருக்கிறதே. நிறைய நாலு மாசம் முடிவதற்குள் சோறு ஊட்டி அவனைக் கரையேற்றியது. ரெண்டாவது பெண்ணும் அப்படித்தான். இத்தனைக்கும் வீட்டில் சாப்பாடு தண்ணிக்குக் குறைச்சலில்லை. பத்து நாளைக்கொருக்க நல்லெண்ணெயும் நெத்திலியும் வீட்டுக்கு வந்துவிடும்.

"அவுகதான் கொஞ்ச நஞ்சமா வாங்கிப் போட்ருக்காக."

இந்தச் சின்னப்பயல் பிறந்த லட்சணத்திற்கு கைக்கு மெய்க்குத் துட்டுப் பழக்கமே நின்று போயிற்று. எவ்வளவுதான் வேலை செய்தாலும் வீட்டுக்குள் சாப்பாட்டுக்கே இழுத்துக் கொள்கிறது. ரெண்டும் வயிறாறக் குடிக்கிற பிள்ளைகளாயிற்றா. என்னேரமும் பானைக்குள் கஞ்சி இருக்கணும். அதுவேறு லச்சை.

எப்படியும் கையில் துட்டு வேண்டுமென்றுதான் பச்சப் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு வந்தது. எல்லாருக்கும் ரெம்ப நாளாகத் தலையில் எண்ணெய்ப் பதமில்லை. தேங்காயெண்ணெயாவது வாங்கிக் கொள்ளலாம். இதுக்காக வீட்டுக்காரரைக் கோவிக்க முடியாது. அவர் எதுக்கென்று தான் ஆவார். விடியக் காலம் மம்பட்டி தூக்கினால் அடைந்துதான் வருவார். இன்ன வேலைதான் என்றில்லை. கிடைத்ததுக்கெல்லாம் போகணும். ஒருநாள் கூட காலாற வீட்டிலிருந்தோம் என்று கிடையாது. அவருக்கு அப்படி லவித்திருக்கிறது.

தொடர்ந்தாற்போல் நாலஞ்சு நாள் வேலை செய்தால் செலவுக்கு ஓடியடையும். கொடுக்கிற ரெண்டு ரூபாய்க் காசுக்கு இந்த அம்மா வம்பாடு படுத்துகிறது. அக்கம்பக்கம் நகர முடியவில்லை. ஊர் உலகத்தில் இல்லாத பழக்கமாக இருக்கிறது. முதல் நாளிலேயே கேட்டது.

"தொட்லுல ஒம்புள்ளையாடி அண்ணாமல. நீ வேல செஞ்சாப்புலதான்."

ரெண்டு நாளைக்குப் பிறகு சாயங்காலம் நேரத்தோடு போகணுமென்றதுக்குச் சிடுசிடுத்தது.
"நான் அண்ணைக்கே சொன்னது சரியாப் போச்சுல்ல. எடுத்த எடுப்புலயே ஒன்னத் தள்ளீருக்கணும். சரி அந்த கொற நெறயப் பாத்துட்டுப் போகலாம்."

அதுக்கென்ன தெரியும் நிலைமை. மத்தியானம் சாப்பிட்டு விட்டால் வேப்ப மரத்தடியில் அட்ணக்கால் போட்டு மகராசி போல கந்தூங்குகிறது. மலையாளங்குளத்துக் காக்காய்க்குப் பகுதியா தீர்வையா.

சரி அதுதான் அப்படியென்றால் கூடவே இழுபடுதுகளே இந்தப் பொட்டாச்சிகளுக்குத் தெரிய வேண்டாமா. வாயை இளித்துக்கொண்டு ஊர்வம்பு பேசவே சரியாக இருக்கிறது. ஒண்ணுக்காவது வீட்டு நிலைமை மனசிலில்லை. அங்கே வீட்டிலென்ன அட்டியல் அட்டியலாகவா மூடை கட்டிக் கிடக்கிறது. நேரத்தோடு போகலாமென்றால் அதுக்கு ஒரு வார்த்தை பேசுவதில்லை. இங்கேதான் கோவித்துக் கொள்கிறது.

"இப்ப என்ன, கொறைய முடிச்சிட்டு போவமே" என்று தாளக்கம் போடுதுகள்.

என்னமோ இவர்கள்தான் நஞ்சைக்காரரைத் தாங்கி விடுகிறது மாதிரி. வேலை நேரமென்றால் ஒரு கணக்கு வழக்கு இல்லாமலா. கண் வெளிச்சம் கெட்டபிறகும் முருங்கைப் பயிரைப் பிடுங்கு என்றால் எப்படி. அதென்ன ஏகத்துக்கு வனமாக முளைத்துக் கிடக்கிறது. இப்படிக் கஷ்டப்படுகிறதை விட பத்தைந்துப் பார்க்காமல் தொழிப் போடணும். சும்மாவா.

முதலில் முருங்கைப் பயிர் சொனையை கழுவித் துடைத்தால் தான் பிள்ளையைத் தூக்க முடியும். சுள் சுள் என்று குத்தித் தொலைக்கிறது. அதைக் கழுவவாவது கண் வெளிச்சம் வேண்டாமா.
கொஞ்சம் நேரத்தோடு போனால் வீட்டில் கஞ்சிப்பாடு பார்த்து சின்னஞ் சிறுசுகள் உறங்குமுன் பசியமர்த்தலாம். இல்லையென்றால் அதுகள் மூலைக்கொன்றாக கோழிக்குஞ்சாக முடக்கி விடும். பிறகு அதுகளை எழுப்பி ரெண்டு வாய் சாப்பிட வைப்பதே பெரிசு. அதுகளை விட்டுவிட்டு சாப்பிட முடியுமா. அதென்ன பிழைப்பு. குடிச்ச கஞ்சிதான் உடலோடு சேருமா.

இந்தப் பொட்டச்சிகளுக்குக் கைப்பிள்ளைகளில்லாமலா. எல்லாம் சின்னதுகளிடம் விட்டு வந்திருக்கும். பாவம் சின்னதுகள் என்ன செய்யும். அழுகையை அமர்த்த முடியுமா. பச்ச மண்ணு அழுது அழுது நெஞ்சு வத்திப் போகும். இவள் பொழுதே அடைந்து போய்த்தான் அமர்த்தணும். இல்லை மத்தியானமாவது வீட்டிற்குப் போய்த் திரும்பணும். அதுவும் கிடையாது. மத்தியானம் போனால் சோம்பிப் போகுமாம்.

கருவ மரத் தொட்டில் இப்போது அசையக்கூட இல்லை. காற்று நின்று சிதறிக் கிடந்த மேகங்கள் கருக்கூடி வெயில் மந்தப்பட்டிருந்தது. புரட்டாசிக்கு இது ஒரு காலப் போங்கு. சற்று ஊதினாற்போல் காற்றடித்தால் போதும் பொல பொலவென்று ஒரு பாட்டம் மழை விழுந்து வேலையைக் கெடுத்து விடும். அப்புறம் பளிச்சென்று சுள்ளாப்பு திறந்தால் பயிர்த் தோகையில் மழைத் துளிகள் மூக்குத்திக் கல்லாக உருளும்.

அவளுக்கு நெஞ்சை இறுக்கிக் கவ்வியது. வெயில் பம்மியதுக்கும் அதுக்கும் ஒரு மாதிரி குதுகுதுப்பு. ஏங்கி மூச்சு விட்டாள். எல்லாரும் அண்ணாந்து பார்த்து ‘மழவருமோ’ என்று கேட்டுக் கொண்டார்கள். மழை வந்தால் அன்றைக்கு முழுச்சம்பளம் கெட்டது. பாதிதான்.

அவளுக்கு மழை ரெம்ப உறுத்தியது. ஒண்டுவதற்குக்கூட திரண்ட மரமில்லை. ஓடிப்போய் பிள்ளையை எடுக்க வேண்டும். தொட்டில் சேலை நனைந்து விடாமல் அவசரமாக அவுக்க வேண்டும். கண்டிப்பாக மழை வரும்.

மத்தியானம் கொஞ்சநேரம் பிள்ளையை எடுத்து வைத்து விளையாடியதற்கே நஞ்சைக்கார அம்மா சுருக்கென்று கேட்டது.

"என்னடி இதெல்லாம் வீட்லதான். கால நீட்டி உட்கார்ந்துட்டுச் சீராட்டணும்."

அவளுக்கு மனசுக்கு என்னமோ போலிருந்தது.

"நீங்க என்னம்மா செத்தநேரம் உட்காரக்கூட வுடமாட்டீகளே."

"ஒனக்கென்ன சொல்றவளுக்கு. நோட்டு நோட்டா ரூவாய எண்ணிக் குடுக்கிறவளுக்கில்ல வலிக்குது. ஒடந்தனக்காரிக எல்லாம் கெளம்பிப் போயிட்டாகளே அது தெரியல ஒனக்கு."

அவள் அவசரமாக பிள்ளையைத் தொட்டிலில் போட்டுவிட்டு ஆட்டிக்கூட விடாமல் வயல்பக்கம் இறங்கினாள். மடை வாய்க்காலைத் தாண்டும் வரை பிள்ளையழுகை கேட்டது.

"அந்தக் கெறக்கந்தான் இன்னியும் எந்திரிக்க முடியல புள்ளைக்கு."

அவள் முன்னால் நகர்ந்து கொண்டாள்.

"ஏன் ஒன்னத்தான் பாக்கியம், ஒம் புள்ளைக்கு ஆறு மாசங்கூட ஆகலையே. எப்பிடித்தான் மனசாறப் போட்டுட்டு வந்துறயோ. மத்தியானம் ஒரு நேரமாச்சும் அமத்துனா புள்ளையப் பாத்தாப் புலருக்கும்."
பாக்கியம் சிலுப்பிக்கொண்டு சொன்னாள்.

"ஆமா ஒரு கொளக்கட்ட கஞ்சிய ஊட்டிப்போட்டா அது பாட்டுக்குக் கெடக்கும். ஓயாம பாலு குடுக்கத்தான் கெடக்கு."

லேசாகக் காற்றடித்தது. கலவைத்த நெற்பயிர்கள் சுற்றிலும் களையின்றி விசாலமாக ஆடின. மறுபடியும் மேகங்கள் கலைந்து வெயிலுக்கு வழிவிட்டன. கண்மாய்ச் சரிவில் படர்ந்த வயல்வெளி துலாம்பரப் பட்டிருந்தது. அவளுடைய நிரையையும் சேர்த்துப் பார்க்கச் சொல்லிவிட்டு பிள்ளையைத் தூக்கிப் போகலாம் என்று நினைத்தாள். நிரை ஓடினாலும் நஞ்சைக்கார அம்மாவுக்கு மனசு ஒவ்வாது. காதோலை குலுங்கக் குலுங்க ரெண்டு வசவு உதிர்த்தால் தான் மனசாறும். எப்போதும் பூரித்துப் போயிருக்கிற முகம் வையும் போது மட்டும் லட்சணங் கெட்டு வயது கூடிப் போகிறது. இவளுக்குத்தான் அருசுகமாகப் பிள்ளை பிறந்திருக்கிறதாக்கும் என்று மற்றதுகள் வேறு முணுமுணுக்கும்.

அவளுக்கு மறுபடியும் இருப்புக் கொள்ளாமல் சிய்யென்றிருந்தது. அவக்கென்று எழுந்து போய் பெருவாய்க்கால் இறக்கத்தில் ஆதாளைச் செடி மறைவில் ஒண்ணுக்கிருக்கும் பாவனையில் உட்கார்ந்து ரெண்டு மார்பையும் திறந்து வலி தீர பாலைப் பீச்சி விட்டு வந்து நிரையில் உட்கார்ந்தாள்.

வேம்படியிலிருந்து முழித்து வந்திருந்த நஞ்சைக்கார அம்மா குத்தலாகக் கேட்டது.

"ஆமடி அண்ணாமலை பொடி நடையா ஊருல போயி மோண்டுட்டு வந்துருக்கப்புடாதா."

பயிர் சலித்த பெண்களின் ஏகமான சிரிப்பை அமுக்கிக் கொண்டு அவள் பொருமினாள்.

"என்ன சிரிப்பு வாழுது ரோசங்கெட்ட சிரிப்பு."

அவளுக்குக் கண்ணில் ஈரந் தட்டியது.

(அடுத்த இதழில் தருணம் 5 – கண்மணி குணசேகரன்)

About The Author