தருணம்(5.1)

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட – முகூர்த்த வேளைகளாக மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாக, தழும்புகளாகவோ அல்லது நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் பானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள் தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

தொகுப்பு – எஸ். சங்கரநாராயணன்

மண்காற்று

கண்மணி குணசேகரன்

ஓட்டமா ஓடியாந்து மாமரத்துங் கீழ் ஒக்காந்துங் காட்டியும் உசுரு பூடும் போல்ருக்கு. என்னா வெய்ய வரவு ஓட்டுல போட்டு வறுக்குற மாதிரி! எம்மாந் தூரம் ஓடறதா இருக்கு. இந்த கருமாந்தர மாடுவோ இம்மாம் அழிச்சாட்டியம் பண்ணுது. அய்யய்ய, என்னாப் பொடி! மாட்டு கூட தொரத்திக்கிட்டு ஓடறப்ப லப்பரு செருப்புல மணலு ஏறிகிட்டு, நறநறன்னு என்னா சூடு சுட்டுப் போச்சி. மாட்டுக்கூடயே ஓடலன்னா படாருன்னு மேற்கே அய்யனாரு கோயில்ப் பக்கம் திரும்பிடும்ன்னுட்டு செருப்பக் கைட்டி வுட்டுட்டு, மாட்டுவுள தொரத்திக் கிட்டு கோடியப்பக்கம் முந்திரியில அடிச்சிட்டு, போன அடிமேல வந்து பாக்கறன், கைட்டி வுட்ட செருப்பக் காணம். மொட்ட வெயிலுல ஓடியாந்தது வேற கண்ணு பூத்துப் போச்சி. சொயிட்டி சொயிட்டிப் பாக்றன். செருப்பக் காணம். பொடி நிக்க முடியில. வரப்புல காய்ஞ்சி போன தும்பச்செடி ஒன்னு இருந்தது. அது மேல ஏறி நின்னுக்கிட்டுப் பாக்கறன். நண்டு வூட்டுக் கொல்லையில ஒன்னு கெடந்தது. இன்னொன்னு, நின்ன நெலயில பாக்கறன் காணம். இப்பதான் கைட்டி வுட்டுட்டு ஓடனது. அதுக்குள்ள இது ஒன்னுக்கு மட்டும் எங்கேர்ந்து திருடன் வந்துருப்பான். நானும் சுத்தி சுத்திப் பாத்துட்டு, சரி வெய்யத் தாழ வந்து பாப்பும்னு சொல் லிட்டு அடியெடுத்து வச்சா மூல வரப்புக்கிட மின்னாலேயே கவுத்துக்கிட்டு கெடக்குது. மண்ணு நெறத்திலேயே இருந்ததால, வெயில்ல பூத்த கண்ணுக்குத் தெரியாமப் பூட்டுது. மாளாவெட்டி பொம்பளைக்குக் கண்ணு மங்கன மாதிரி, நெனைச்சா அசிங்கமாப் பூட்டுது.

மரத்துல ஒரு எலகூட அசையில. ஒரே இறுக்கமா இருக்குது. சலசலன்னு வேர்க்குது. பக்கத்துல கெணறு, மொளாக் கொல்லலாம் காத்து அடிச்சா குளு குளுன்னு இருக்கும். எங்க அடிக்குது. காங்கதான் கணுக்காலு அளவுக்கு நெளிநெளியா எழும்புது. தலயில கட்டியிருந்த துண்ட எடுத்து மூஞ்சத் தொடச்சிக்கிட்டு விசிறிக்கறன். இந்தக் காத்துலாம் எங்கியோ போய்ட்டா மாதிரி ஒரே புழுக்கம், அணலு மாமரத்துங் கீழால ஒக்காந்துருக்கறதுக்கே அடுக்குப் பானைக்குள்ள இருக்கற மாதிரி கமுறுது.

அசதியா இருந்துது. பூட்டுக்குப் பூட்டு உட்டுப் போற மாதிரி வலி. வலிக்காம என்ன செய்யும், கால மடிச்சிக் கீழ ஒக்கார உடாம மாடுவோ வந்துக்கிட்டு இருந்தா காட்டுக்குள்ளேர்ந்து வெளியில வந்து உடும்பாட்டம் தலய தூக்கிப் பாத்தா, அதுவுளுக்கு கண்ணுல பச்சயா இந்த மொளாக் கொல்லதான் தெரியுது. அப்புறம் என்னா. ஒரே ஓட்டம் எக்கர்ணம் எடுத்துக்கிட்டு வருது இங்க. காட்ல முந்திரிப்பழத்தையும், முந்திரிச்சருவையும் அலம் பிக்கிட்டு இருந்ததுவுளுக்கு பச்சயக் கண்டா பாயாசத்தைக் கண்ட மாதிரிதான். கோடியில் மாட்டப் பாத்துட்டா, ஒடனே கொல்லையிலேர்ந்து ஒரு காணி தலமாட்டுக்குப் போயி எதுர்ல மறிச்சி ஓட்டிக்கணும். இல்லன்னா ஒரு பாக்கு கடிக்கிற நேரத்துல பனாலாப் பூடும் மொளா.

களத்துல மொளாப் பழம் காயுது. எப்பிடியும் ரெண்டு மூட்டைக்கு இழுத்துப்புடிச்சிக்கிட்டு வரும். வித்துட்டு மருந்தும் ஓரமும் வாங்கியாரணும். மொளாச் செடியில பழம் நெறயாத் தெரியுது. எடுக்கணும். பூவும் பிஞ்சுமா குலுங்கக் குலுங்க நிக்கிது செடி. எல்லாம் சித்தரா பருவத்துக்கு உட்ட பிஞ்சுவோ. மருந்தடிக்கலன்னா ஒன்னும் தேறாது. தண்ணிதான் ஒன்னும் எட்டிக்கில. ஒரு நாளக்கு ஒரு வாய்க்கா, ரெண்டு வாய்க்காதான் பாயுது. மோட்ருக்கு அரமணிநேரம் கூட தண்ணி இல்லை. கெணத்துல எத்தினி போரு போட்டும் என்னா புண்ணியம். எல்லாத்திலியும் கரிமண்ணுதான் கெடைச்சிது. அந்தக் கரிமண்ணு படு மோசம். மேல ஊர்றதக்கூட இழுத்துக்குது. அதனால் போட்ட போரையே மண்ணு கொட்டித் தூக்கறதாப் பூடுது. கெடைக்கற கரிமண்ணு ஒரேயடியா கரியாக் கெடைச்சாலும் பரவாயில்ல. நெய்வேலிக்காரங்கிட்ட உட்டுட்டு எங்கனாச்சும் தலமேலத் துணியப் போட்டுக்கிட்டுப் பூடலாம். தெனைக்கும் தண்ணி இல்லாம மாசுலு வச்சு செத்து செத்துப் பொழைக்கறதைவிட, ஒரேயடியா செத்துடறது மேலு. பின்ன என்னா, எம்மாம் பாடுபட்டுப் பாத்தாலும் கடைசியில கடங்குடிதான், மீந்து துங்கற கத இல்ல.

கண்ணுலாம் எரியிற மாதிரி இருக்குது. மாமரத்து நெழலு; கெணத்துல ரெண்டு வாளித் தண்ணி மொண்டுக் கிட்டு கீழ உழுந்தா போதும், போற எடந்தெரியாமப் போவலாம். என்னா பண்றது, தூங்கிட்டா கத கந்தல் தான். அய்யனாரு கொளத்துல தண்ணி குடிச்சிட்டுப் பின்பக்கமா வந்து பொசுக்குனு நொழஞ் சிடும். அப்பறம் சனகாடு பொணகாடுதான். தோண்டியில் இருக்கற தண்ணிய சாய்ச்சி மூஞ்சியக் கழுவறன். ராத்திரி சுத்தமா தூக்கம் இல்ல. மோசமா வந்துப்போச்சி மாடுவோ. நெலக்காலு மேல நின்னு, ஒக்காந்து, கெடந்து, விடியறவரைக்கும் வாதனையாப் பூட்டுது. எவங் கட்றான் மாட்ட. கேட்டுட்டாப் போதும்; "நீ சித்திர மாசத்துலலாம் பயிறு வச்சிருப்ப, அதுக்குலாம் நாங்க காவ இருக்கணுமா? காலாற மாடு வேசநாளுல நிக்காம எப்பதான் நிக்கும்?" வாய் மீண்டு வர முடியாது. ஒன்னு ரெண்டு வர்றதும் நி்ன்னு மேய்க்கறது இல்ல. எங்கனாச்சும் உட்டுட்டு முந்திரிக்கொட்ட பொறுக்கப் பூடுது. பகல்லியும் ராவிலியும் காவ. இதுல அந்தியிலும் காலயிலும் ஒழிஞ்ச நேரத்துல தோப்புக்குப் போயி முந்திரிக்கொட்ட பொறுக்கிட்டு, பெலா மரத்துக்குப் போயிட்டு வரணும். நாய்ப் பொழப்புதான். நெலச்சி நின்னது கெடயாது வாழ்க்கையில.
அதுக்குள்ள ரெண்டு கன்னுக்குட்டிவோ தெக்கேர்ந்து வந்தது. "இந்தா…. இந்தா… ஓய்.. ஓய்…"னு அதட்டனதும் அய்யனாரு கொளப் பக்கம் திரும்பிச்சி. சரி போவுட்டும். போனாலும் தண்ணி குடிச்சிட்டு இங்கதான் வரும். அப்பறமா அடிச்சிக் கெழக்க உட்டுடுவம். பாவம் கன்னுக்குட்டிவுளா இருக்குது, தண்ணி குடிக்கட்டும் போயி.

பசி வவுத்தக் கிள்ளுது. காலயில குடிச்சது. ஓடற ஓட்டத்துல எங்க தாங்கும். மாமரத்துக் கெளையில தூக்குவாளி தொங்குது. காலயில கரைச்சிக் குடிச்சது போவ மீதி கம்மங்கூழு இருக்கும். ஏந்திரிச்சி வாளிய எடுத்து தொறந்தன். குப்புன்னு புளிச்சவாட அடிக்குது. அதோட கூழ்ல பூரா செந்தல எறும்பு மெதக்குது. கீழே வச்சாதான் ஏறுதுன்னு கெளையில மாட்னன். அங்கியும் ஏறியிருக்கு. போற போக்கப் பாத்தா ஏட்டையே கெளப்பிடும் போல்ருக்கு. பசி தாங்குல. மாஞ் சருவு ஒன்ன எடுத்து ஒரு ஒரு எறும்பா எடுத்தன். எடுத்துட்டு, கடிச்சிக்கறதுக்கு ஒரு மொளாக் கிள்ளியாறும்னுட்டு பாத்தியில போயி எறங்கனன். மேற்க அய்யனாரு கோயிலப் பக்கம் சரசரன்னு எரச்ச சேக்குது. நிமுந்து பாத்தா ஒரே செவப்புப் புழுதியா இருக்குது வெளி பூரா. எம்மாம் ஒசரத்துக்குப் போவுது ஆலமரத்து சருவு! சுத்திச் சுத்தி அடிச்சிக்கிட்டு வருது சூரக்காத்து. மண் மேகமா மர மேகமா! நானும் பாத்துருக்கன் எம்மாம் காத்தையோ. இம்மாம் பெரிசா வந்ததே இல்ல. பயங்கரமா சொயிண்டு வருது மண்ணைப் பெரட்டிக்கிட்டு.

சின்ன வயசிலலாம் சூரக்காத்தக் கண்டா பயமா இருக்கும். ‘காத்து சாட்டா’தான் அது, அப்பிடி சுத்திக் கிட்டு வருதும்பாங்க. நடுவுல மாட்டிக்கிட்டா அவ்வளவு தான், காத்து சாட்டா’ புடிச்சிக்கும்பாங்க. மீறி தைரியமா, அண்ணாக்கவுத்தலாம் அவுத்துப் போட்டுட்டு அம்மணமா பொட்டுத் துணி ஒடம்புலெ இல்லாம, அந்தக் காத்து நடுவுல போயி நின்னு, அதுல சுத்தற சருவு ஒன்னப் புடிச்சி ஒடிச்சா, அதுல ரத்தம் வரும்பாங்க. அதாம் பேயி ரத்தமாம். கேக்கக்குள்ளியே அப்ப கொல நடுங்கும். அப்பிடி சொல்லுவாங்கனே தவிர கிட்ட நெருங்கனதா யாரும் இல்ல. நானே கூட அதுலாம் பொய்ங்கிறவன் போயி சருவு ஒடிச்சிப் பாத்ததில்லை. சின்ன வயசில பயம். இப்ப அம்மணமாப் போயி ஒடிச்சிப் பாத்து அதுலம் ஒண்ணும் இல்லன்னு மூஞ்சியில அடிக்கற மாதிரி சொல்றதுக்குக் கூச்சம். இந்தச் சிக்கலாலதான் இன்னம் இந்த சூரக்காத்து மேலே இருக்கற பயம் தொடர்ந்துக்கிட்டு இருக்கறது.

தொடரும்

About The Author