தானம் (1)

"ஆரு… என்ன வேணும்… தசமதினமா – பத்தாவது நாளா. நாங்க சும்மாத்தான் இருக்கோம். நாலு நாளா ஒன்னும் இல்லே. எங்கே வரனும். எத்தனை மணிக்கு வரனும்" ஒரு நாலைந்து பேர் அவசர அவசரமாக எழுந்து வந்தார்கள். கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தார்கள். ஒரே மாதிரி ஜாடை. பத்து நாள் தாடி – பரட்டைத்தலை. அழுக்கு வேஷ்டி – அழுக்குப் பூணூல். காலில் பிய்ந்து தேய்ந்துபோன செருப்பு – ஸ்லிப்பர். அய்யன் குளக்கரைப் படிக்கட்டிலிருந்து எழுந்து நேராக வந்தது ஆச்சரியம்தான். விசித்திரமான இயல்பிலிருந்து மாறுபட்டதாய் இருந்த முகங்கள் வித்யாசமாயிருந்தன. குழி விழுந்த கண்கள் நெற்றிச் சுருக்கம் – ஒட்டிய கன்னங்கள்.

"அண்ணா எங்கேன்னு சொல்லுங்க. எத்தனை மணிக்குன்னு சரியாச் சொல்லுங்க… இன்னிக்கு என் முறை. எம் பேரு வெங்கிட்டு" என்றவாறே ஒரு கொத்து மூக்குப் பொடியை உறிஞ்சி – சுற்று வட்டாரமே நெடியேறியது –
இங்கிருந்து பார்த்தால் பெரிய கோயிலின் உயர்ந்த கோபுரம் தெரிந்தது. காமாட்சியம்மன் கோயில் சாயங்கால பூஜை மணியோசை. பெண்கள் பளிச்சென்று அலங்காரம் பண்ணிக் கொண்டு மணக்க மணக்க ஆளுக்கொரு அர்ச்சனைக் கூடையோடு போய்க் கொண்டிருந்தனர். காமாட்சி யம்மனுக்கோ, கொங்கணேஸ்வரருக்கோ சங்கர நாராயணருக்கோ அங்காள பரமேஸ்வரிக்கோ இல்லே பிரகதீஸ்வரர் – பிரகன் நாயகி கோயிலுக்கோ? பெண்களுக்கு கோயிலுக்குப்போகும் நேரம் வரம் மாதிரி. புருஷன் இம்சையிலிருந்து கொஞ்சம் விடுபடற பொழுது, சுதந்திரம். தங்களுக்குத் தோதான உரையாடல்கள்… "யேய் தலைய பிளக்கறது. ஸ்ட்ராங்கா இன்னொரு காபி கொண்டுவா சீக்கிரம்" என்பன போன்ற அதட்டல்களிலிருந்து கொஞ்சம் விடுதலை.

மேல வீதி – தஞ்சாவூர் நகரத்தோடு ஒட்டாது. தனி உலகம். ஏகப்பட்ட சந்துகள் சாக்கடைகள், தமிழ் கன்னடம், தெலுங்கு குஜராத்தி, மராத்தி பேசும் கலவை. சதா மூத்திர நாற்றமடித்துக் கொண்டிருக்கும் ராணி வாய்க்கால் சந்து பெரிய பியாலு தெரு காகாவட்டாரம். மூலை அனுமார் கோயில் பிரசித்தம்.

"சொல்லுங்க" என்று முன்னால் வந்தான். முந்தி முப்பது ரூபாய் வாங்கிண்டிருந்தோம். கிராக்கி இல்லாதப்ப பதினைஞ்சுக்குக்கூட வந்திண்டிருந்தோம். இப்ப அறுபது ரூவா. அப்பா மூணு ரூவா, தாத்தா நாலணா வாங்கினாராம். விக்கற விலைவாசிக்கு அறுவது ரூவாகூட கட்டுபடியாகலே. கூட்டிக்கேட்டா யார் கொடுப்பா? என்ன ராஜாங்க உத்யோகமா. சம்பளக் கமிஷன் போட்டு முடிவு பண்ண?

முகத்தின் வித்தியாசம் புலப்பட்டது. ரத்த ஓட்டம் சுண்டிய வெளிரிய அழுக்கு முகம். அசல் பிரேதக்களை. சிரிப்பு காணோம்.

புரியறதுண்ணா… தினம் ரெண்டு பொணம் பார்க்கறோம். வாரத்திலே நாலு பொணம் தூக்கறோம். எல்லாம் பிராமணப் பொணம்தான். மத்தவா கூப்பிடமாட்டா. போகவும் மாட்டோம். ஜாதிப்ரஷ்டம் பண்ணிடுவா. பிரேதக்களைதான் நிரந்தரம். என் வயசிலே இதுவரை ஆயிரம் பொணத்துக்கு மேல் தூக்கியிருப்பேன். மூஞ்சியிலே சவக்களை வராம தேசஸ் வருமா? ஒரு சந்தனப் பொட்டவச்சு ஒரு முழு ரூவாய ஒட்டி, ஒரு ரோஜாப்பூ மாலையப் போட்டு உட்கார்ந்தா நிஜப் பொணம் கூட தோத்துப்போகும். கல்யாணம் கார்த்திக்கு சவுண்டி பிராமணனை ஆர் கூப்பிடுவா. சாவுதான் நிச்சியமானதுன்னா பெரியவா. அதுக்கு சுகம் கிடையாது. துக்கம் கிடையாது; கவலை கிடையாது; பொய் கிடையாது; பசி கிடையாது சரி சரி விடுங்கோ எங்கே வரனும்… ஆம்பிளையா பொம்மனாட்டியா வயசானவாளா சிறுசா… சொல்லுங்கோ பிண வீடு தான் எங்க உத்யோக ஸ்தலம் கம்பெனி ஆபீஸ் எல்லாம். அறுபது ரூவாய முன்னாடியே கொடுத்திடனும். அங்கே வந்து காரியம் முடிஞ்ச பின்னாடி என்னடா பெரிய வேலை செஞ்சே… சாப்பாடே அதிகம், இலுப்பச்சட்டி கூடுதல் சன்மானம். இப்படி ஆளாளுக்கு அதிகாரம் பண்ணுவா. எங்களுக்கும் குழந்தை குட்டிங்க குடும்பம்னு இருக்கு. தினமுமா பிணம் விழுறது? நாலு நாளா ஏதுமில்லே. குடும்பமே பட்டினி…

இரு சக்கர வாகனத்தில் குடுமி பறக்க ஒரு சாஸ்திரி பறந்து கொண்டிருந்தார். ஒரு காகம் படித்துறையில் இறைந்து கிடந்த பருக்கைகளைக் கொத்திக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் காகங்கள் உணவு தின்ன கூட்டு சேர்ப்பதில்லை.

"சரியா; அஞ்சு மணிக்கு வந்திடனும் பத்து ரூவா அட்வான்ஸ் வச்சுக்கோ. பாக்கிய அப்புறமா வாங்கிக்கலாம். உங்களையெல்லாம் நம்ப முடியாதுன்னு சொல்லியனுப்பிச்சா. காச வாங்கிண்டு தண்ணியடிச்சுட்டு கிடப்பான்கள் ஜாக்கிருதைன்னு சொன்னா. சகா நாயக்கன் தெரு ஒன்றின் கீழ் இருநூத்தி எட்டு நம்பரைக் குறிச்சுக்கோ. பக்கத்திலேயே புள்ளையார்கோயில். எதிரே பெரிய சாக்கடை. வீட்டிலே போர்டு இருக்கும் "ஹாலாஸ்யம் பிஏ." பந்தல் போட்டிருக்கும்."

"அறுவது போறும். கூடன்னா கோவிச்சுப்பா. வைத்தியத்துக்கு லட்சக் கணக்கா செலவழிப்பா. பந்தல் லைட்டுன்னு ஆயிரக் கணக்கிலே.சாஸ்திரி பத்து நாளைக்கு கறாராய் இருவத்தஞ்சாயிரம் பேசிருப்பார். சவுண்டி பிராமணனுக்குன்னா அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கு. பணத்தக் கொடுங்க. சரியா வந்துடுவேன். தொழில் தர்மம் பெரிசு. நாங்க நாலு பேர்தான் இந்தக் காரியத்துக்கு இருக்கோம். ரங்கன், பத்ரி, கோபால், நான். நேத்திக்கு பத்ரி போயிட்டு வந்துட்டான். இப்போ என் முறை. அடுத்தது ரங்கசாமி… டே… மறந்துட்டேன்… வக்கீல் பஞ்சு போயிட்டாராம்."

(தொடரும்)

About The Author