தாவரங்களின் தலைவன் (1)

நாழியாறு ஊரை மாளாக் காதலுடன் இடுப்பைத்தொட்டு வளைத்துக் கடக்கிறது. கரைகளைத் தொட்டாப்போல மரப்பாலம் ஏறிப்போக லிங்கேஸ்வரமூர்த்தி திருக்கோவில். கடந்தால் வயல்தான். டிரில்மாஸ்டரின் ஆணைக்குப் போல, சேர்ந்திசைக்குப் போல ஒருசேரத் தலையசைக்கும் நெற்பயிர். இளம்பச்சை கடும்பச்சை என வளர்ச்சிக்குத் தக்கபடி காற்றை கிரிக்கெட்டில் ஆறு அடித்தாப்போல அனுப்பி வைக்கும் பிரியமாய்.

டி.வி. பொட்டியில் இப்பல்லாம் பொழுதன்னிக்கும் கிரிக்கெட்தான். ராத்திரி பகல் கிடையாதா இவகளுக்கு. விளக்கைப் போட்டுக்கிட்டு விளையாடுகிறார்கள். தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு அதைப் பார்க்க பெருங் கும்பல். ஒரே கொண்டாட்ட கும்மாள அமக்களம் – கோயில் திருவிழா போலிருக்கிறது. விளையாடற ஆளுகளும் தீவாளிக்குப் போல ஆட்டத்துக்கு புதுத்துணி போடுகிறார்கள்… நம்மல்லாம் வீட்ல நல்ல துணி, விளையாட கிளையாட சுமார்த் துணி போடுவம்.

அந்த டிரில் உடற்பயிற்சியும் பார்த்திருக்கிறார். ஃபோர் த்ரீ நெக்ஸ்ட் சேன்ஜ்… தண்ணில கொத்தாய் மீன் திரும்புகிறாப்போல ஒரு விஷ். நல்லாத்தான் இருக்கு. அவங்கப்பன் அவரையும் படிக்க வைத்திருக்கலாம். இப்ப நினைச்சு என்ன புண்ணியம்… பயபுள்ள நல்லாப் படிக்கட்டும். எங்க படிக்கான் அவன், ஒரே ஓட்டமும் சாட்டமும் தான். ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசு! எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க அவர்மாத்திரம் கை தட்டினார். எல்லார் மீதும் ஆத்திரமாய் வந்தது. எடுபட்ட பயக ஊரு… என நினைத்துக் கொண்டார். அடுத்த பையன் பரிசு வாங்கும்போது அவர் கைதட்டவில்லை.

”எய்யா ப்ரைஸ்!…”

”எலேய் சங்கத்லேர்ந்து உரத்துக்குக் கடன் வாங்கி வெச்சிருக்கேன், எடுத்திட்டு ஓடிறாத, என்னால ஒன்னப் பிடிக்க முடியாது,” என்றார் வேடிக்கையாக.

ஊர்ல பாதிப்பேர் அப்டிதான் திர்றான்.

அவர் பேர் லிங்கமூர்த்தி. ஊரில் பாதிப்பேருக்கு அதே பேர்தான். சாமி பேர். தபால்காரன் திண்டாடிப் போவான். பெண்ணு பார்க்க வந்து தப்பான வீட்டுக்குள் நுழைந்து, கல்யாணமும் ஆகிப்போன கதைகள் ஊரில் உண்டு. அழகான பெண்ணுக்கு எப்படியும் கல்யாணம் ஆகிவிடுகிறது.

சுமாரான மாப்ளைக்கும் கூட!

மண்ராசிக்கு ஊரின் கிழக்காமல் போனால் தோப்புகள். போகாட்டாலும் அங்கே அதே தோப்புகள். குரங்குகள் கொட்டமடிக்கும் பூமி. மாந்தோப்பு, புளியந்தோப்பு என இருளடித்துக்குக் கிடக்கும். ஆப்பிள் முந்திரி என்றுகூடப் போட்டிருந்தார்கள். முந்திரி பணப்பயிர். பூவுதிராமல் பார்த்துக் கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்… வெளிச்சமும் திருடனும் உள்ளே வர அனுமதி இல்லை. கரண்ட் வயர் போட்டிருப்பார்கள். சாதா வேலி என்று தொட்டால் சிவலோகப் பிராப்தி நிச்சயம். லிங்கமூர்த்தி சிவலோகம் போனார், என உத்திரகிரியைப் பத்திரிகை. அவர் அவர்வீட்டுக்குத்தானே போயிருக்கிறார், என்றிருக்கும்!

அடிக்கடி குரங்குகள் அடிபட்டு இறந்து போகின்றன. யாரும் பத்திரிகை அடிப்பதில்லை அவற்றுக்கு. குரங்குகளைத் தோட்டத்துக்குள்ளேயே குழிதோண்டிப் புதைக்கிறார்கள். நல்ல உரம் அவை. மின்கம்பி வேலி உஷார், என்று பலகை உண்டு. படிக்கத் தெரியாவிட்டாலும் மண்டையோடும், தோள்த்துண்டு போல ரெண்டு பக்கமும் எலும்புகளும், அபாய அறிவிப்பு சிவப்பில். மனுசாள் பார்த்து ஒதுங்கிப் போவர். பாவம் குரங்குகள். நல்ல உரம் அவை. வெறும் மண்டையோடு படம், அது குரங்கின் ஓடாகவும் இருக்கலாம்!

மேற்கே கோவில் தாண்டி இறங்கினால் நேர்ரோடு புளியங்குளம் நோக்கிப் போகிறது. அது போகாது, நாமதான் போகணும்! நல்ல அகலமான ரஸ்தா. பஸ் டிரைவர் எல்லாவனுக்கும் அந்த ரஸ்தாவும் அதன் கருப்புக் கோவணமும் பார்க்கவே உற்சாகம் கிளம்பி முழுவேகத்தில் எடுப்பான்கள், ஒண்ணுக்குப் போக அவசரப் பட்டாப் போல! ரெண்டு பக்கமும் ஒரு மரம் கிடையாது. ஊர் கீர் எதுவும் கிடையாது, ஆறு கிலோ தாண்டினால்தான் பாலகிருஷ்ணாபுரம், சிற்றூர். அநேக வண்டிகள் அங்கே நிற்கா. எலேய் ஊராடா இது, என்கிறாப்போல தாண்டிப் போகும். மத்த மனுசாளைக் கேவலப் படுத்துவதில் ஒரு சந்தோசம்! வீடியோ கோச். படம் பார்த்தபடி ஆனந்தமாய் வடிவேலு உதை வாங்குவதைப் பார்த்துச் சிரித்தபடி போகையில் உலகம் தூசாகி விடுகிறது…

மரமற்ற ரஸ்தா. நீள வெறுமைக்கு இடையே தனி அடையாளமாய் அவரது வயல் துவக்கத்தில் மூக்கு முடியாய் வெளித் தெரியும் ஒற்றை வேப்பமரம், அவர் வயல் என்று எந்த தூரத்தில் இருந்தும் காட்டலாம். பணிந்த பூமியில் கிரிக்கெட்டில் ஒற்றை விரல் தூக்கி அவ்ட் கொடுத்தாப்போல நிற்கிறது மரம்.

அதைப் பள்ளிப்பிள்ளை வாத்தியாரைப் பார்த்துக் காட்டினால் ஒண்ணுக்கு வருது என அர்த்தம். அதைப் பார்க்க அநேக டிரைவருக்கு வந்தது!

கோவில்தாண்டி இறங்க ஐந்து நிமிஷ நடையில் அவரது வயல். நாலு ஏக்கரா பூமி. ஓரத்தில் கிணறு. லிங்கேஸ்வர மூர்த்தி புண்ணியத்தில் உள்ளே தண்ணி, கோடையில்கூட மட்டம் கீழிறங்கும், இல்லை என்று கைவிரிக்காது. ஊற ஊற எடுத்துக்கிற வேண்டிதான். கமலை இறவைதான். மின்சாரம் கிடையாது. அவரே இறைப்பார். கமலை இறைப்பு என்றால் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. முருகனைக் கிழே பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவர் கமலைத் தண்டில் ஏறி முன்னே பின்னே நடந்து போய் வருவார்.

ஊர்த் திருவிழா பட்டிமன்றத்தில் கேட்டிருக்கிறார் – ராமாயணக் கம்பருக்கே ஒரு ஏற்றம் இறைக்கிறவன் பாடிய பாட்டில் அடுத்த வரி யூகிக்க சவாலாய் இருந்ததாமே…

மூங்கிலிலை மேலே
தூங்கு பனிநீரே… (முதல் வரி)

தூங்கு பனி நீரை
வாங்கு கதிரோனே… (ரெண்டாவது)

உற்சாகமாய் அவர் ஒரு சினிமாப் பாடல் பாடினார். ஆனால் பாட்டின் அடுத்த வரி அவருக்கே மறந்திருந்தது.

அட அதை விடு. கமலைத் தண்டில் ஏறி இறங்குகையில் அந்த மேல்ப்பார்வையில், உலகம் கீழே என்று பார்க்க ஆனந்தம். அதான் பாட்டு கிளம்புகிறது. மூங்கிலிலை மேலே… என்று உலகத்தைப் பார்த்துத்தானே பாடியிருக்க வேணும் அவன்.

இவன்தான் மேலே. மூங்கிலிலை இவனுக்குக் கீழே அல்லவா!

நெல்லைப் பார்க்காமல் மூங்கில் புல்லை எப்படி நினைத்துக் கொண்டான் தெரியவில்லை.

உயரத்தில் இருந்து உலகைப் பார்த்தல், இந்தப் பறவைகள் எத்தனை அதிர்ஷ்டம் பண்ணியிருக்கின்றன…

(மீதி அடுத்த இதழில்)

About The Author

1 Comment

  1. akka

    ஆனந்தமாய் வடிவேலு உதை வாங்குவதைப் பார்த்துச் சிரித்தபடி போகையில் உலகம் தூசாகி விடுகிறது
    உயரத்தில் இருந்து உலகைப் பார்த்தல், இந்தப் பறவைகள் எத்தனை அதிர்ஷ்டம் பண்ணியிருக்கின்றன…

    மிகவும் அருமையக உள்ளது
    தொடரை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்

Comments are closed.