நிர்மலமான வானில் நட்சத்திரங்கள்

அவள் பேர் அன்னக்கிளி. அவன் அலுவலகத்தில் அவனுடன் வேலை பார்க்கிறாள். அவனைவிடக் கறுப்பாகவும், குட்டையாகவும், வேறு ஜாதியாகவும் இருந்தாள்.

அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது ஐயாவுக்குத் தெரிந்தபோது முதலில் அதிர்ச்சியாகவும், பிறகு கோபமாகவும் இருந்தது அவருக்கு. அவன்தான் குடும்பத்தின் மூத்த பிள்ளை. அவனுக்குப் பின் ஒரு தங்கை, ஒரு தம்பி. இருவரும் படிக்கிற வயசு. பெற்றுப் போட்டுவிட்டுப் பெற்றவள் கண்மூடி விட்டாள்.

"அதுல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது தம்பீ, அவள மறந்துருக" என்று ஐயா முதலில் அமைதியாகவும், பின் ஆத்திரமான பிடிவாதத்துடனும் எடுத்துச் சொன்னார்.

சங்கரலிங்கம் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அப்புறம் அவன் அவளை மணந்துகொண்டான். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட அவர்கள் திருமணம் பதிவாளர் முன்னிலையில் நடந்தேறியது.
ஐயா இதை எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தின் மூத்த பிள்ளை அவன். அவர் அவனை மலைபோல நம்பியிருந்தார். கடைசில இப்படிக் கழுத்தறுத்துட்டானே!

தம் உடல்நலக் குறைவால் வேலையிலிருந்து சுயமாய் ஓய்வு பெற்ற தம் நிலையை நொந்துகொண்டார் அவர்.

"தரதரன்னு அவபாட்டுக்கு உள்ள நொழையறாளே, யார்றா அவ?" என்று கத்தினார் அவர்.

"என் மனைவி… உங்க மருமக!"

"எலேய், அவ என்ன ஜாதிடா?"

"பாத்தாத் தெரிலயாப்பா?"

"தெரியல. சொல்லு!…"

"பாத்தாலே தெரியல, அப்புறம் சொல்றத எப்படிப்பா நம்புவீங்க? ஜாதில என்னப்பா இருக்கு?"

ஐயா ஒண்ணும் பேசவில்லை. அவர் கண்கள் பளபளத்தன. அழுகிறாற்போல.

வீட்டில் இருக்கப் பிடிக்காமல் ஐயா வெளியேறினார். ஆனால், அதற்கு முன் செய்தி வெளியேறியிருந்தது. தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அவரை விமரிசித்தனர், இரக்கப்பட்டனர். சிலர் அவரிடமே கேட்டார்கள்.

அந்த மூணு மணியிலும் வெயில் கடுமையாய் இருந்தது. ஐயா காலில் செருப்புக் கூடப் போட்டுக்கொள்ளவில்லை.

"ராமூ!"

"வாரும்வே! சாப்ட்டுட்டிருக்கேன். கொஞ்ச இரியும்!"

"ராமு, என் நிலைமையப் பாத்தியா ராமு? ஆனாலும் இந்தப் பய புள்ள இப்பிடிப் பண்ணுவானா? என் பரம்பர மானமே போச்சேடா! எவளோ ஒரு சனியம் புடிச்சவளக் கூட்டிட்டு வந்து கொலாவுறானே! எம் புள்ளைங்களுக்கு ஒரு நல்ல வளி பண்ணி விடுவான்னு இவனத்தான்டா நா மலைபோல நம்பீர்ந்தேன்…"

ஐயாவுக்கு மனசு ஆறவில்லை. அவர் அவன்மீது உயிரையே வைத்திருந்தார். அவனும் அப்படித்தான். அவர் உடம்பு சுகமில்லாமல் படுத்தபோது, பதினெட்டு வயசிலேயே அவன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனான்.

நல்ல பிள்ளைதான் அவன். அந்தப் படுபாவிப் பொம்பளதான் என்னமோ பண்ணிப்பிட்டா. இவனும் பாவம் சின்ன வயசுக்காரன். அது சரி, கல்யாண ஆசை வந்தா ஊர்ல ஒலகத்ல பொண்ணாய்யா இல்ல? என்ன ஜாதியோ என்ன எளவோ! இவதானா கெடச்சா?

கன்னங்கரேல்னு ஆளும் அவ மொகரையும்… நம்ப வம்சத்திலேயே கெடையாது அவ கறுப்பு. வீட்டயே இனி நாறடிக்கப் போறா…

தன் குடும்பம் தன் காரியம்னு எப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சிட்டானோ, இனி அவங் கைய நாம்ப எதிர்பார்க்கக் கூடாது. இனிமே நம்ப புள்ளைங்களுக்கு நாம்பதான் கஞ்சி ஊத்திக் கரையேத்தணும்.
ஐயா கண்ணைத் துடைத்துக் கொண்டார். ஒரு பெருமூச்சு விட்டவர், அப்படியே உறங்கிப் போனார்.
விழித்தபோது இருட்டியிருந்தது. நல்ல பசி வேறு. அவர் மதியமே சாப்பிட்டிருக்கவில்லை. பசித்தாலும் திரும்ப வீட்டுக்குப்போக அவருக்குப் பிடிக்கவில்லை.

உண்மையில், தம் பிள்ளை தம்மைத் தேடிக்கொண்டு வருவான் என அவர் எதிர்பார்த்தார். வராததில் அவருக்குப் பெரிய ஏமாற்றமாயும் கோபமாயும் வந்தது. அவனுக்கு என்ன நம்பளப் பத்தி? அவம் பாடு அவம் பொண்டாட்டி பாடு. நாம ஆத்லயோ கொளத்லயோ விழுந்து செத்தாலும் அவனுக்கு என்ன கவலை?

ஐயாவுக்கு இப்போது ரொம்பப் பசித்தது. அவர் பிடிவாதமாய் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

திடீரென்று ஐயா குழந்தைகளைப் பற்றி நினைத்துக் கொண்டார். பாவம், அதுங்கல்லா சாப்டுச்சோ இல்லியோ? இந்தப் பிடாரி போட்டாளோ இல்லியோ தெரிலயே?

ஐயா விறுவிறுவென்று வீட்டைப் பார்க்க நடந்தார். அவருக்குக் கவலையாய் இருந்தது. குழந்தைகள் பட்டினி கிடக்கும் என்ற நினைப்பே அவருக்கு அழுகையை வரவழைத்தது.

வீட்டில் செல்வகுமாருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அன்னக்கிளி. ரேவதி அவரைப் பார்த்ததும் எழுந்து வந்தாள். "சீக்கிரம் சாப்பிடுங்கப்பா, ஒனக்காக அண்ணனும் அண்ணியும் இன்னும் சாப்டாம ஒக்காந்திருக்காங்க."

"நீங்க?"

"நாங்க அப்பவே சாப்ட்டாச்சே! பாயசம் நல்லாருந்திச்சிப்பா!" என்றான் செல்வகுமார்.

"சரியான தின்னிமாடுங்க!" என்று திட்டினார் அவர். "இந்த வீடு கெடக்கற லெச்சணத்துக்குப் பாயசம் ஒண்ணுதான் கொறச்சல்."

ஐயா பெரிசாய்ச் சத்தம் போட்டார். சங்கரலிங்கம் எதிரில் வந்ததும் ஏனோ அவர் சுருதி குறைந்தது.

"சாப்ட வாங்கப்பா!"

"நா வர்ல."

"ஏன்?"

"இந்த பாரு, எப்பிடியோ நடந்தது நடந்து போச்சு. இனிம நா ஒம் மூஞ்சிலயே முழிக்க விரும்பல. எனக்கும் எம்புள்ளைங்களுக்குமா ஒரு வீடு பார்த்துக் குடுத்துரு. நாம்பாட்டுக்கு ஒழச்சித் தின்னுக்கறேன்."

"அத அப்பறம் பார்க்கலாம். மொதல்ல சாப்ட வாங்க!"

"எலேய் சிரிக்காதடா! என் வயிறு பத்தி எரியுது, சிரிக்கறியே?"

உண்மையில் ஐயாவுக்குப் பசி உச்சத்தில். அவர் மௌனமாகச் சாப்பிட்டார். "எப்பா, ஒம் பொண்டாட்டி ஒண்ணும் எனக்குப் போட வேணாம். அவ எம் மூஞ்சிலயே முழிக்கப்டாது, சொல்லிட்டேன். நானே சாப்பிட்டுக்குவேன்."

ஐயா சாப்பிடும்போது உள்ளிருந்து, "அவருக்குக் கொஞ்சம் கறி போடுங்க" என்று சத்தம் கேட்டது.
ஐயாவுக்கு ஏப்பம் வந்தது. மகன் முன்னால் ஏப்பம் விட ஏனோ அவருக்குக் கூச்சமாய் இருந்தது.
ரொம்ப நேரமாகி விட்டது. ஐயா வெளித் திண்ணையில் பாயை உதறி விரித்தார். அன்னக்கிளியும் குழந்தைகளும் உள்ளே படுத்துக் கொண்டார்கள்.

சங்கரலிங்கம் வந்து அவர் பக்கத்தில் படுத்துக் கொண்டான்.

ஏனோ ஐயாவுக்கு வருத்தமாய் இருந்தது. அவர் நெஞ்சு கனத்தது. ஐயா புரண்டு படுத்தார். பின் பொறுக்க முடியாமல் எழுந்து உட்கார்ந்தார். ஒரு விநாடி தயக்கத்துக்குப் பின் அவனைக் கூப்பிட்டார்.

"ஏன்டா, நீயும் அவளும் வேணா மொட்ட மாடிக்குப் போங்களேன்!"

"இல்ல, பரவால்ல" என்றபடி சங்கரலிங்கம் திரும்பிப் படுத்தான்.

ஐயாவுக்கு என்னவோ போலிருந்தது. தாங்க முடியாமல் அவர் "மாடிக்குப் போங்கடா" என்றார் திரும்பவும்.

"வேணாம்!"

ஐயாவுக்கு அழவேண்டும் போலப் படபடவென்று வந்தது.

பார் இவர்களை, சின்ன வயசில் பெரிய மனிதப் பொறுமையுடனும் விவேகத்துடனும் இவர்கள் நடந்து கொள்கிறார்கள். நான்… பெரிய மனிதன் என்றாலும் சின்னவர்களின் வறட்டு கௌரவத்துடனும் பிடிவாதத்துடனும்…

"சரி, கொழந்தைகளைக் கூட்டிட்டு நா மாடிக்குப் போறேன்" என்று முணுமுணுத்தபடி ஐயா மாடிக்குப் போனார்.

மாடியில் சுகமாய்க் காற்று வந்தது. ஐயா பனியனைக் கழற்றிப் போட்டு, கொட்டாவி விட்டபடியே வானத்தைப் பார்த்தார்.

சற்று முன் நிர்மலமாய் இருந்த வானில் இப்போது நட்சத்திரங்கள் பூத்திருந்தன.

About The Author