நீல நிற நிழல்கள் (1)

ரபிக்கடலுக்கு வடமேற்கே ஐந்நூறு கிலோ மீட்டர் தூரத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த புயல் சின்னம் அங்கிருந்தபடியே பம்பாயை மிரட்டிக்கொண்டிருந்தது. ஆகாயம் பூராவும் அழுக்கு மேகங்கள் திம்மென்று சூழ்ந்து கொண்டு ஒரு பெரிய அழுகைக்குத் தயாராயின.

அது ஒரு ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமை. சாயந்திர ஐந்து மணி. மேகங்கள், மேற்குத் திசை அஸ்தமனச் சூரியனை ‘கேரோ’ பண்ணியிருக்க… பம்பாயின் எல்லாத் திசைகளிலும் செயற்கை இருட்டு ஈஷியிருந்தது. காற்றில் செல்லமாய் ஊட்டிக் குளிர்.

விலேபார்லே ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளிப்பட்டாள் நிஷா. இருபத்து மூன்று வயது நிஷா, ஐஸ்வர்யா ராயின் ஐம்பது சதவிகிதச் சாயலில் தேன்நிறக் கண்களுக்குச் சொந்தக்காரி! எந்த நேரத்திலும், எந்தக் கோணத்திலும் எப்படிப் பார்த்தாலும் அழகாய் இருப்பாள் போல் தோன்றியது! மஞ்சள் புள்ளிகள் தெளித்திருந்த கருஞ்சிவப்பு மாக்ஸியில் கச்சிதமாய்ச் சிக்கியிருந்தாள். மழையை எதிர்பார்த்துக் கையில் ஒரு ஸிந்தெடிக் க்ளாத் குடை. இடது தோளில் வானிடி பேக்.

நிஷா ஸ்டேஷனுக்கு வெளியே வந்து, ஞாயிற்றுக்கிழமையின் காரணமாகக் களைந்துப் போயிருந்த பிளாட்பாரத்தில் இரண்டு நிமிட நடை நடந்து, ஆள் நடமாட்டம் இல்லாத ‘பார்க்-வ்யூ’ ரோட்டுக்கு வந்தாள்.

பங்களாக்கள் தள்ளித் தள்ளித் தெரிய, எல்லாத் திசைகளிலும் நிசப்தம் செதுக்கப்பட்டிருந்தது.

நிஷா தன் வெண்ணெய் நிற மணிக்கட்டில் அப்பியிருந்த பொன் நிற ஹெச்.எம்.டி-யைப் பார்த்துக்கொண்டே வேகமாய் நடைபோட்டாள்.

பத்து நிமிட நடை.

சாலையின் வளைவிலேயே ஏகப்பட்ட மரங்களுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்த அந்தச் செங்காவிக் கட்டடத்துக்கு முன்பாய் வந்து நின்றாள். பெயிண்ட் உதிர்ந்து போன காம்பெளண்ட் கேட் வெறுமனே சாத்தியிருந்தது.

கேட்டை மெள்ளத் தள்ள, அது ‘றீச்ச்’ சென்ற சின்ன அலறலோடு பின்வாங்கியது.

நிஷா தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். கேட்டில் இருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்வாங்கிப் பரவியிருந்த அந்த பங்களா சற்றே வயோதிகமாய்த் தெரிந்தது. ஆர்ச் ஜன்னல்களில் கட்டம் கட்டமாய்ப் பல நிறங்களில் கண்ணாடிகள். போர்டிகோவில் ஆஸ்டின் கார் ஒன்று கான்வாஸ் படுதாவுக்குள் ஒளிந்திருந்தது.

நிஷா முகப்பை நோக்கி நடந்தாள். சரியாய்ப் பராமரிக்கப்படாத புல்வெளியில் பார்த்தீனியம் முளைத்திருந்தது. தண்ணீர்த் தொட்டிக்கு நடுவே இருந்த பெண்ணின் சிலை தன் இரண்டு கைகளையும் இழந்திருந்தது. போர்டிகோ தூணோரம் வைக்கப்பட்டிருந்த ரோஜாத் தொட்டிகள் உடைந்துபோய்ச் சிதிலமாய்த் தெரிந்தன.

நிஷாவின் மனசில் வியப்பு ஓடியது.

‘ஒரு நியூரோ சர்ஜன் தன் வீட்டை இப்படியா வைத்துக் கொள்வார்…! பேட்டியை ஆரம்பிப்பதற்கு முன் இந்த வீட்டைப் பற்றி டாக்டரிடம் பேசவேண்டும்!’

நிஷா, ஆஸ்டின் காரைச் சுற்றிக் கொண்டு போர்டிகோ படிகளில் ஏறிக் கதவின் இடதுபக்க மூலையில் இருந்த அழைப்புமணியின் பொத்தானின் மேல் தன் கட்டை விரலை வைத்தாள்.

உள்ளே பத்து விநாடி இன்னிசை.காத்திருந்தாள் நிஷா.

அரை நிமிஷ அவகாசத்துக்குப் பின் உள்ளே காலடியோசை கேட்டு, பின் கதவு திறந்தது.

ஒரு பெண் நின்றிருந்தாள். முப்பது வயது இருக்கலாம். வளப்பமான உடம்பு. உயரத் தூக்கிக் கொண்டை போட்டிருந்தாள். உடுத்தியிருந்த சேலைக்கு மேல் காபித்தூள் நிறக் கவுன் அணிந்திருந்தாள். கையில் வெள்ளையாய் ஏதோ பவுடர் மாதிரி ஒட்டியிருந்தது.

கேட்டாள். 

"யார் வேணும்?"

"டாக்டர் சதுர்வேதி."

"நீங்க…?"

"என் பேர் நிஷா. நான் ஒரு ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டர். டாக்டர் சதுர்வேதி ஒரு நரம்பியல் நிபுணர், பயோடெக்னாலஜியில் டாக்டரேட் வாங்கியவர்… அவரைப் பார்த்துப் பேட்டி எடுக்கிறதுக்காக வந்திருக்கேன். பத்து நாளைக்கு முன்னாடியே அப்பாயின்ட்மெண்ட் வாங்கிட்டேன். இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சு மணிக்கு என்னை வரச் சொல்லியிருந்தார்.

"டாக்டர் யாருக்கும் பேட்டி தர மாட்டாரே…?"

"எனக்குத் தர்றதா சொன்னார்…"

"உள்ளே வந்து உட்கார்ங்க! நான் டாக்டரைக் கேட்டுட்டு வந்து சொல்றேன்."

நிஷா உள்ளே நுழைந்தாள். அவள் உட்கார சோபா ஒன்றைக் காட்டிய அந்தப் பெண், பக்கவாட்டு அறைக்குள் நுழைந்து சட்டென்று காணாமல் போனாள்.

பங்களா உடனே பாலைவன அமைதிக்குப் போயிற்று. நிஷா சுற்றும்முற்றும் பார்த்தாள். அந்த டிராயிங்ரூமைப் பாதி அடைத்துக்கொண்டு ஒரு கண்ணாடி பீரோ தெரிய, உள்ளே பச்சை நிறக் காலிகோவால் பைண்ட் செய்யப்பட்ட தடிமனான புத்தகங்கள். அதன்மேல் மக்கிப்போன பொன்னிற எழுத்துக்கள். நிஷா பார்வையைக் கூர்மையாக்கி அந்த எழுத்துக்களைப் படித்துப் பார்த்தாள்.

Experiments in Gene manipulation
Author : Dennis. E.Ohman
Genes V.Lewis
Genetic Engineering

பக்கவாட்டுச் சுவரில் இளவயதுச் சதுர்வேதி, தலை கொள்ளாத கிராப்போடு கான்வகேஷன் உடையில் காமிராக்காரரை முறைத்திருந்தார். பக்கத்திலேயே சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவருக்குக் கொடுத்திருந்த டாக்டரேட் பட்டங்களின் ‘சன்னத்’கள் கண்ணாடி ஃபிரேமுக்குள் சிக்கித் தொங்கின.

காலடிச் சத்தம் கேட்டது.

நிஷா நிமிர்ந்தாள்.

இடதுபக்கமாய்த் தெரிந்த ஓர் அறைக்கதவைத் திறந்து கொண்டு டாக்டர் சதுர்வேதி வெளிப்பட்டார்.

அசர வைக்கிற உயரம்! ஐம்பத்தைந்து வயது உடம்பு. முன்மண்டை இலையுதிர்காலப் பருவத்தில் இருந்தது. சற்றே அழுக்கான வெள்ளை ஜிப்பாவையும் பைஜாமாவையும் தரித்திருந்த சதுர்வேதி, கையில் பைப் வைத்திருந்தார்.

"குட் ஈவினிங் டாக்டர்!" நிஷா ஒரு பெரிய புன்னைகையோடு எழுந்து நிற்க… சதுர்வேதி முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல்

"என்ன?" என்றார்.

"பேட்டி..?"

"வரச் சொல்லியிருந்தேனா…?"

"ஆமா டாக்டர்!"

"எப்போ சொன்னேன்?

"கல்யாண் ஆஜாத் ஹாலில் பத்து நாளைக்கு முன்னாடி நடந்த ஒரு செமினாருக்காக நீங்க வந்தீங்க. செமினார் முடிஞ்சு நீங்க கார்ல ஏறும்போது உங்ககிட்ட நான் பேட்டிக்காக அப்பாயின்ட்மெண்ட் கேட்டேன். நீங்க இருபதாம் தேதி சாயந்திரம் அஞ்சு மணிக்கு உங்க பங்களாவில் வந்து பார்க்கச் சொன்னீங்க. இன்னிக்குத் தேதி இருபது."

சதுர்வேதி வாயில் பைப்பை வைத்துப் பதற்றமாய் ஓர் இழுப்பு இழுத்துப் புகைவிட்டார்.

"மறந்துட்டேன்."

"ஸாரி டாக்டர்! நான் மறுபடியும் உங்களுக்கு போன் பண்ணி பேட்டியைப் பத்தி ஞாபகப்படுத்தியிருக்கணும்."

"யெஸ்… யெஸ்…! பேட்டியை இன்னொரு நாளைக்கு வெச்சுக்கலாமா?"

நிஷா அப்போதுதான் கவனித்தாள். டாக்டர் சதுர்வேதி ஓர் அசாதாரணப் பதற்றத்தில் இருப்பதுபோல் தோன்றியது. அவருடைய பெரிய நெற்றிப்பரப்பு முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்ட தினுசில் வியர்த்து மினுமினுக்க… பைப்பைப் பிடித்திருந்த வலதுகை விரல்கள் ஒரு மெல்லிய நடுக்கத்துக்கு உட்பட்டிருந்தன.

‘சரி டாக்டர்! பேட்டியை உங்கள் விருப்பப்படியே இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம்’ என்று சொல்ல நினைத்து வாயைத் திறக்க முயன்ற நிஷாவின் பார்வை எதேச்சையாய்ச் சதுர்வேதியின் ஜிப்பா பாக்கெட்டுக்குப் போக… அவளுடைய விழிகள் சட்டென்று லேசர்க் கதிர்களாய் மாறின.

சதுர்வேதியின் ஜிப்பா பாக்கெட் அருகே நான்கைந்து ஈக்கள் வட்டமடித்துச் சட்டென்று உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தன.

**************

சென்னை.

பெசன்ட் நகரின் ஐந்தாவது மெயின் ரோட்டின் வால் பகுதியில் இருந்த ஒரு பெரிய பங்களாவின் படுக்கையறை.

ஹரிஹரன், தன் மனைவி கீதாம்பரியின் எட்டுமாதப் பம்மிய வயிற்றை மெள்ள முத்தமிட்டான்.

"டேய் ராஜா! அப்பா போயிட்டு வர்றேன்…"

கீதாம்பரி பொய்க் கோபத்தோடு கணவனின் முகத்தைத் தன் வயிற்றினின்றும் பிரித்தாள்.

"நீங்க ஒண்ணும் என் மகன்கிட்டே கொஞ்ச வேண்டாம்!"

"ஏனாம்?"

"நீங்கதான் எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ளே ஜெர்மனி புறப்பட்டுப் போகப் போறீங்களே?"

"பத்தே நாள்தானே?… ஃப்ராங்ஃபர்ட் போய் பிஸினஸ் பேசிட்டு ஓடி வந்துடமாட்டேனா?… உன்னோட டெலிவரி டேட்தான் இன்னும் இருபது நாள் தள்ளியிருக்கே?…"

"உங்களுக்குப் பத்து நாள்; எனக்கு அது பத்து வருஷம் மாதிரி. பொண்டாட்டி வாயும் வயிறுமா இருக்கிற இந்த நேரத்துல எந்தக் கணவனும் பிஸினஸ்தான் பெரிசுன்னு வெளிநாட்டுக்குப் பறக்க மாட்டான்."

ஹரிஹரன் சிரித்தான்.

"கிராமத்துப் பொண்ணு மாதிரி பாமரத்தனமா பேசாதே கீதாம்பரி! இது எவ்வளவு பெரிய முக்கியமான டீல் தெரியுமா?"

"ஏன், உங்க தம்பி ரமணி போகக் கூடாதாக்கும்?"

"அவனுக்கு இங்கிலீஷ் ஃப்ளுயன்ஸி கம்மி. பிஸினஸ் விவகாரத்தைச் சொதப்பிட்டான்னா நஷ்டம் லட்சக்கணக்கில் கையைக் கடிக்கும்."

"எதைக் கேட்டாலும் அதுக்கு ஒரு காரணத்தைத் தயாரா வெச்சிருப்பீங்களே!"

"இதோ பார் கீதாம்பரி! இங்கே உனக்கு என்ன குறைச்சல்? என்னோட அம்மாவும் அப்பாவும் உன் மேல உயிரையே வெச்சிருக்காங்க… இதே ஊர்ல உங்கம்மாவும் அண்ணனும் இருக்காங்க… நான் ஊர்ல இல்லாத குறை தெரியாதபடி அவங்க எல்லோருமே உன்னைப் பார்த்துக்குவாங்க."

கீதாம்பரி, கணவனின் இளஞ்சூடான கைகளைப் பற்றித் தன் கன்னத்தில் பதித்துக் கொண்டாள். கண்களில் கண்ணாடித் தாள் மாதிரி நீர் மினுமினுத்தது.

"உங்கப்பா, உங்கம்மா, எங்கம்மா, எங்கண்ணன் இப்படி எத்தனை பேர் என் பக்கத்துல இருந்தாலும் நீங்க பக்கத்துல உட்கார்ந்து ஒரு வார்த்தை பேசற மாதிரி இருக்குமா?"

"சரி, சரி! புறப்படற நேரத்துல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடாதே! எனக்கு என்னவோ போல் ஆயிடும்."

"ஜெர்மனியிலிருந்து பத்து நாள்ல வந்துடுவீங்கள்ல…?"

"ம்…"

"கண்டிப்பா…?"

"பூஜை ரூமுக்கு வா! கற்பூரம் ஏத்தி சத்தியம் பண்ணித் தர்றேன்."

"தினமும் என் கூட போன்ல பேசணும்!"

"பேசாமே இருப்பேனா?"

"ஒரு முத்தம் குடுங்க!"

"இச்…"

"உங்க மகனுக்கு…?"

"அவனுக்கு இல்லாத முத்தமா?"

கீதாம்பரியின் வயிற்றில் ஹரிஹரன் வெப்பமான உதட்டைப் பதித்த வினாடி…

"டொக்… டொக்…"

கதவு தட்டப்படும் சத்தம்.

ஹரிஹரன் எழுந்து போய்க் கதவை திறந்தான்.

வெளியே, அவனுடைய அப்பா மாசிலாமணியும் அம்மா திலகமும் அகலமான புன்னகைகளை உதட்டில் பொருத்திக்கொண்டு நின்றிருந்தார்கள்.

"ஏர்போர்ட்டுக்கு நேரமாச்சு ஹரி. மணி இப்போ நாலு."

"இதோ புறப்பட்டேன்ப்பா."

"லக்கேஜ் காருக்குப் போயாச்சு. ரமணி உன்னை ட்ராப் பண்ணக் காத்திட்டிருக்கான். என்னம்மா கீதாம்பரி, அழுதியா?"

"இல்ல மாமா!"

"பொய் சொல்லாதே! கண்ல மையெல்லாம் கரைஞ்சிருக்கு பார். சந்தோஷமா வழியனுப்பி வைம்மா! பத்து நாள்ல உன் வீட்டுக்காரன் வந்துடப் போறான்."

அம்மா திலகம் கேட்டாள்.

"ஹரி ஃப்ளைட் பம்பாய்க்கு எத்தனை மணிக்குப் போய்ச் சேரும்?"

"ஒன்பது மணிக்குள்ளே போயிடும்."

"பம்பாய் போய்ச் சேர்ந்து ஓட்டல்ல ரூம் எடுத்ததும் வீட்டுக்கு போன் பண்ணு!"

"இதையெல்லாம் நீ சொல்லவே வேண்டாம்மா! உன் மருமக நேத்து ராத்திரியிலிருந்தே அதைச் சொல்லிச் சொல்லி, என்னோட
மூளையை ரணமாக்கி வெச்சிருக்கா."

சிரித்தார்கள்.

ஹரிஹரன் தன் அப்பா, அம்மா கால்களில் விழுந்து வணங்கிவிட்டுக் கீதாம்பரியைக் கடைக்கண்ணால் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, போர்டிகோவில் நின்றிருந்த டாடா சியராவை நோக்கிப் போனான்.

ராத்திரி மணி பத்தரை.

ஹாலில் எல்லோரும் ஹரிஹரனின் பம்பாய் டெலிபோன் காலுக்காகக் காத்திருந்தார்கள். மாசிலாமணி பொருமினார்.

"ஃப்ளைட் ஒன்பது மணிக்கே பம்பாய் போய்ச் சேர்ந்திருக்கும். இப்போ மணி பத்தரை. இவன் ஏன் போன் பண்ணலை?!"

"ஃப்ளைட் லேட்டா போயிருந்தா…?" இது திலகம்.

"மெட்ராஸ் ஏர்போர்ட்டுக்கு போன் பண்ணிக் கேட்கலாமா?" இது ரமணி.

"மொதல்ல அதைப் பண்ணு ரமணி!" கீதாம்பரி தவிப்பாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே…

டீபாயில் உட்கார்ந்திருந்த டெலிபோன் முணுமுணுத்துக் கூப்பிட்டது.

"இது அண்ணன்தான்" ரமணி பாய்ந்து ரிஸீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

"ஹலோ…! "

"ஹலோ! கால் ஃப்ரம் பாம்பே. மிஸ்டர் ஹரிஹரனின் வீடுதானே?"

"ஆமாம்…"

"ஓட்டல் சில்வர் ஸாண்ட் ரிசப்ஷனிலிருந்து பேசுகிறோம். நீங்க ஹரிஹரனுக்கு என்ன உறவு வேண்டும்?"

"நான் அவருக்குத் தம்பி. ஏன், என்ன விஷயம்…?"

"மன்னிக்க வேண்டும்!… ஒரு அதிர்ச்சியான செய்தி…"

"என்ன…?"

"எங்கள் ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்த உங்கள் பிரதர், அரை மணிநேரத்துக்கு முன்பு ஓட்டலுக்கு முன்பு இருந்த சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது வேகமாய் வந்த ஒரு லாரி மோதி ஸ்பாட்டிலேயே மரணம். உடனே ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போகப்பட்டுள்ளது. நீங்கள் உடனே புறப்பட்டு வர முடியுமா?"

(தொடரும்)”

About The Author