நீல நிற நிழல்கள் (12)

னதுக்குள் உறுத்திக் கொண்டிருந்த அந்தச் சந்தேகத்தை இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவிடமே கேட்டான் ரமணி.

"சார்! என்னோட பிரதர் ஹரிஹரன் ஓட்டல் ரூமைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிருந்த சமயத்துலதான் துவாரகநாத் கள்ளச்சாவி போட்டு ரூமைத் திறந்து, பொருட்களை எடுத்துட்டுப் போனதா சொன்னீங்க… ஹரிஹரன் யாரையாவது பார்க்கிறதுக்காக வெளியே போயிருக்கிற பட்சத்தில் வாட்ச்சைக் கட்டிட்டுத்தானே போயிருக்கணும். இல்லையா?"

"ம்… இருக்கலாம்."

"அப்படி வாட்ச் கட்டிட்டுப் போயிருந்தா அந்த வாட்ச் துவாரகநாத் மணிக்கட்டுக்கு எப்படி வந்திருக்க முடியும்? லாரி மோதிச் செத்துப்போன துவாரகநாத் மணிக்கட்டில் ஹரிஹரனோட வாட்ச் இருந்ததே?"

மல்ஹோத்ரா புன்னகைத்தார். "ரெண்டு பேர்கிட்டேயும் ஒரே மாதிரியான வாட்ச்சஸ் இருக்கக்கூடாதா என்ன?"

"என்னால அந்தப் பாயிண்ட்டை யூகிக்க முடியலை சார்!"

திவாகர் குறுக்கிட்டான்: "இன்ஸ்பெக்டர்! என் மனசில் இருக்கிற எண்ணத்தை உங்ககிட்ட சொல்லலாமா?"

"தாராளமா!"

"துவாரகநாத்தும் சீட்டலும் நேத்து ராத்திரி இந்த ஓட்டலுக்குத் திருடற எண்ணத்துல வந்திருப்பாங்க. அந்த சமயத்துல ஹரிஹரன் தன்னோட ரூமைப் பூட்டிக்கிட்டு வெளியே போனதைப் பார்த்திருக்கணும். உடனே அந்த ரெண்டு பேரும் ஹரிஹரனை ஃபாலோ பண்ணிப் பின்னாலேயே போய், ஏதாவது ஒரு இடத்தில் வெச்சு ஹரிஹரனைத் தாக்கி உயிருக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்தி, அவர்கிட்டயிருந்த உடமைகளை கொள்ளையடிச்சிருக்கணும். அதுக்கப்புறம் ஓட்டல் ரூம் சாவியோடு வந்து அறையைத் திறந்து, மத்த பொருள்களை எடுத்துட்டுப் போயிருக்கணும்."

"இதுவும் பாஸிபிள்தான்! அந்த சீட்டல் இப்போ போலீஸ் கஸ்டடியில்தான் இருக்கான். மூணு பேருமே ஸ்டேஷனுக்குப் போவோம். சீட்டலை விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா எல்லா உண்மைகளும் வெளியே வந்துடும். ஹரிஹரனோட நிலைமை என்னாங்கிறதும் தெரிஞ்சுடும். வாங்க போகலாம்!"

மூவரும் ஓட்டல் போர்டிகோவில் நின்றிருந்த போலீஸ் ஜீப்புக்கு வந்தார்கள். உள்ளே நிரம்பினார்கள்.

ஜீப் காம்பெளண்ட் கேட்டைத் தாண்டிச் சாலையின் போக்குவரத்தில் கலந்தபோது இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவைத் திவாகர் ஏறிட்டான்.

"சார் ஒரு கேள்வி கேட்கலாமா?"

"என்ன?"

"துவாரகநாத்தையும் சீட்டலையும் எப்படி ட்ரேஸ் பண்ணி ஹரிஹரனோட ரூம்ல நுழைஞ்சது அவங்கதான்னு போலீஸ் கண்டுபிடிச்சாங்க?"

"அது ரொம்ப சிம்பிள். டாக்டர்ஸ் கொடுத்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல, செத்துப் போனவருக்கு முன் வரிசைப் பற்களில் நாலு பொய்ப் பற்கள் என்கிற விவரம் தெரிஞ்சதும், ஸ்டேஷன்ல இருந்த எஸ்.ஐ மோபட்லாலுக்கு ஒரு சந்தேகம் வந்தது. கிரிமினல் குற்றவாளிகளை லிஸ்ட் பண்ணி வெச்சிருக்கிற ரிப்போர்ட்ஸ்ல யாரோ ஒரு குற்றவாளிக்குப் பொய்ப் பற்கள் இருக்கிற விஷயம் அவர் மனசை உறுத்தவே ரெக்கார்ட்ஸைக் கிளற ஆரம்பிச்சார். அவர் அந்த வேலையை ஆரம்பிச்சதுமே நான் உங்களை விசாரிக்க வந்துட்டேன். கடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளே எஸ்.ஐ மோபட்லால் ரெக்கார்ட்ஸைத் துருவிப் பார்த்துப் பொய்ப்பல் ஆசாமி துவாரகநாத்துதான்னு கண்டுபிடிச்சிட்டார். உடனடியா கான்ஸ்டபிள்களைக் கூப்பிட்டுக்கிட்டு துவாரகநாத் இருந்த அட்ரஸுக்குப் போயிருக்கார். அந்த ஏரியாவுக்குள்ளே போலீஸ் ஜீப் நுழைஞ்சதுமே சீட்டல் ஒரு பான் கடைக்குப் பின்னாடி ஓடிப்போய் ஒளிஞ்சதை மோபட்லால் பார்த்து மடக்கி, ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து தலைகீழாத் தொங்கவிட்டு விசாரிக்க, உண்மைகள் வெளியே வந்திருக்கு."

ரமணி இடைமறித்துக் கேட்டான்: "சார்! எஸ்.ஐ மோபட்லால் சீட்டலை விசாரிக்கும்போது ஹரிஹரன் எங்கேன்னு கேட்கலையா?"

"கேட்டிருக்கார்… அந்தக் கேள்விக்கு அவன் தெரியாதுன்னு பதில் சொல்லியிருக்கான். பூட்டியிருந்த ஓட்டல் ரூமைக் கள்ளச்சாவி போட்டுத் திறந்து பொருள்களைக் கொள்ளையடிச்சதை மட்டும் ஒப்புக்கிட்டானாம்."

"திவாகர் சொன்னது மாதிரி துவாரகநாத், சீட்டல் இந்த ரெண்டு பேரால ஹரிஹரனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்னு என் மனசுக்குப்படுது சார்."

"கவலையேபடாதீங்க மிஸ்டர் ரமணி! என் கையில் இருக்கிற இந்த லட்டி அடுத்த அரைமணி நேரத்துல அவன்கிட்டேயிருந்து மிச்சம் மீதி உண்மைகளையும் வரவழைச்சிடும். இந்த மல்ஹோத்ரா, கையில லட்டியை எடுத்தா ஊமைக்கும் பேச்சு வந்துடும்."

லேசாய்த் தூறிக்கொண்டிருந்த மழை இப்போது காற்றின் துணையோடு வேகத்தை அதிகப்படுத்தியிருந்தது. ஜீப்பில் நிலவிய ஒரு நிமிஷ வேண்டாத நிசப்தத்துக்குப் பிறகு, திவாகர் பெருமூச்சோடு சொன்னான்:

"சார்! சம்பவம் நடந்து இருபத்து நாலு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. ஹரிஹரனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காத பட்சத்தில் அவர் ஓட்டலுக்குத் திரும்பியிருக்கணும் இல்லையா?"

மல்ஹோத்ரா மண்டையை ஆட்டினார். "அதுதான் எனக்கும் உறுத்தலாயிருந்த… பை த பை… உங்களுக்கு பம்பாய்ல ரிலேடிவ்ஸ் யாராவது உண்டா?"

"இல்லை."

"ஹரிஹரனுக்கு வேண்டப்பட்ட ஃப்ரெண்ட்ஸ்?"

ரமணி குறுக்கிட்டுச் சொன்னான்: "சார்! பம்பாய்ல எங்க குடும்பத்துக்கும் சரி… திவாகரோட குடும்பத்துக்கும் சரி… ரிலேடிவ்ஸ் சர்க்கிளோ ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளோ கிடையாது. வெளிநாட்டுப் பயணத்துக்காக அண்ணன் ஹரி அடிக்கடி இந்த பம்பாய் மண்ணை மிதிக்கிறதோட சரி."

ஜீப் போலீஸ் ஸ்டேஷனை நெருங்குவதற்குள் மழை பேய் மழையாக மாறி பம்பாயைத் துவம்சம் செய்து கொண்டிருந்தது.

மல்ஹோத்ரா மழையில் நனைந்து கொண்டே ஸ்டேஷனுக்குள் நுழைய, ரமணியும் திவாகரும் பின்தொடர்ந்தார்கள்.

எஸ்.ஐ மோபட்லால் தன் மெகா தொப்பையைத் தூக்கிக்கொண்டு எதிர்ப்பட்டார். சல்யூட்டோடு அட்டென்ஷனுக்கு வந்து உடனே தளர்ந்தார்.

ரமணியையும் திவாகரையும் மோபட்லாலுக்கு அறிமுகம் செய்துவைத்தார் மல்ஹோத்ரா.

"ஹரிஹரனோட உயிருக்குத் துவாரகநாத், சீட்டல் இந்த ரெண்டு பேராலே ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கும்னு அவங்க நினைக்கிறாங்க. இவங்க அப்படி நினைக்கிறதுல உண்மை இருக்குமோன்னு என் மனசுக்கும் படுது. சீட்டலை ரெட் செல்லுக்குக் கொண்டுபோய், விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா உண்மை வெளியே வரலாம்."

"ஸாரி சார்! சீட்டல் இப்போ விசாரிக்கக் கூடிய நிலைமையில் இல்லை."

"என்ன சொல்றீங்க?"

"ஹெட்கான்ஸ்டபிள் அன்வர், சீட்டல்கிட்டேயிருந்து உண்மையை வரவழைக்கிறதுக்காக பூட்ஸ் காலால அடிச்சு உதைச்சப்ப பிறப்புறுப்பில் அடிபட்டுச் செத்துட்டான் சார்!"

*******

"டாக்டர்!"

வாயில் சிகரெட் பைப்போடு விட்டலின் மல்லாந்த உடலுக்குப் பக்கத்தில் நடைபோட்டுக் கொண்டிருந்த சதுர்வேதி, ஆர்யாவின் குரலைக் கேட்டதும் நின்றார்.

"ஜோஷி கூட போன்ல பேசிட்டியா?"

"இல்ல டாக்டர்! அடிக்கிற மழைக்கு போன் டெட் ஆயிடுச்சு. ரிஸீவரை எடுத்துக் காதுல வெச்சா சத்தமேயில்லை. இவ்வளவு நேரம் பட்டனைத் தட்டித் தட்டிப் பார்த்துச் சலிச்சுட்டேன்."

"நேரம் காலம் தெரியாம இந்த மழை வேற. இந்த விட்டலோட பாடியை இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே?"

"இப்படிப் பண்ணலாம் டாக்டர்…"

"சொல்லு…"

"விட்டலோட டெட்பாடியை நம்ம கார்ல போட்டுக்கிட்டு ஜோஷிகிட்டே போயிடுவோம். பாடியை டிஸ்போஸ் பண்ற வேலையை அவர்கிட்ட ஒப்படைச்சுட்டுத் திரும்பிடுவோம்."

"டெட்பாடியை நம்ம கார்ல கொண்டுட்டுப் போறது ரிஸ்க் இல்லையா?"

"அதைவிட ரிஸ்க், பாடி இங்கே இருக்கிறது டாக்டர். நிஷாவைத் தேடிக்கிட்டு வேற யாராவது வரலாம் இல்லையா?"

சதுர்வேதி புகைவிட்டுக் கொண்டு சில விநாடிகளை யோசிப்பில் கரைத்துவிட்டுப் பின் ஆர்யாவிடம் நிமிர்ந்தார்.

"சரி. உள்ளே போய் ஸ்டோர் ரூம்ல போட்டு வெச்சிருக்கிற பால்யூர்தின் பைகள்ல கிழிசல் இல்லாத பையாப் பார்த்து ஒண்ணைக் கொண்டு வா!"

"கம்ப்யூட்டர்ஸை பேக் பண்ணி வந்த பால்யூர்தின் பேக்ஸ்தானே டாக்டர்?"

"ஆமா."

ஆர்யா டார்ச் வெளிச்சத்தோடு கட்டடத்தின் உட்பக்கமாக நகர்ந்து போய்ப் பத்து நிமிடங்கள் கழித்துக் கையில் ஒரு பெரிய பால்யூர்தின் பையோடு வந்தாள்.

மூன்றடி அகலமும் ஐந்தடி நீளமும் இருந்த அந்தப் பைக்குள் விட்டலின் உடம்பைத் திணித்து வாய்ப்புறத்தைக் கயிற்றால் கட்டி முடிப்பதற்குள் சதுர்வேதியும் ஆர்யாவும் வியர்த்து வழிந்தார்கள்.

"ஆர்யா!…"

"டாக்டர்!…" மூச்சிரைத்தாள் ஆர்யா.

"நீ போய் போர்டிகோவில் இருக்கிற நம்ம காரோட டிக்கியைத் திறந்து வை! கார் சாவி முன்பக்க ரூம் சுவர் ஆணியில் மாட்டியிருக்கும். எடுத்துக்கோ! நான் பாடியைக் கொண்டு வந்துடறேன்."

ஆர்யா தலையைசைத்துவிட்டு வேகமாக நடந்துபோக, விட்டலின் உடம்பு இருந்த பால்யூர்தின் பையைக் குனிந்து இழுத்தார் சதுர்வேதி. அந்த மொஸைக் தரைப்பரப்பில் பை சுலபமாக நீந்தியது.

பை இழுபட்டுப் போர்டிகோப் பரப்புக்கு வந்து சேர்ந்திருந்தபோது ஆர்யா காரின் டிக்கியைத் திறந்து வைத்திருந்தாள்.

இருட்டில் மழையின் வேகம் மூர்க்கமாய்த் தெரிந்தது. கரும்பலகையில் சாக்பீஸால் தாறுமாறாகக் கோடிழுத்த தினுசில் மின்னல்கள் ஜனித்து உடனே இறந்தன.

ஆர்யா கலக்கமாய்ச் சதுர்வேதியைப் பார்த்தாள். "டாக்டர்! மழை ஜாஸ்தியா இருக்கு. உங்களால காரை டிரைவ் பண்ண முடியுமா?"

"டிரைவ் பண்ணித்தான் ஆகணும்… வேற வழியில்லை ஆர்யா!"

"டாக்டர்!"

"சொல்லு!"

"ராகினியை மேஜைமேல அப்படியே போட்டுட்டு வந்திருக்கோம். இப்ப ஜோஷி வீட்டுக்குப் போயிட்டா, எக்ஸ்பரிமெண்ட் ஷெட்யூலை மறுபடியும் மாத்த வேண்டியிருக்கும். அப்படி மாத்தற பட்சத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய ஃபுரூட்ஃபுல் ரிசல்ட் கிடைக்காமே போகலாம்."

சதுர்வேதி கனமாய்ப் பெருமூச்சுவிட்டார். "அந்தப் பாயிண்ட்டை நானும் யோசிச்சுப் பார்த்துட்டேன். நாம போட்ட எக்ஸ்பரிமெண்ட் ஷெட்யூல் மாறாம இருக்கணும்னா, நம்ம ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இங்கேயிருந்து எக்ஸ்பரிமெண்டைக் கண்டினியூ பண்ணனும். நீ பண்றியா?"

"டா… டாக்… டர்…!"

"நான் காரை டிரைவ் பண்ணிட்டுப் போய் ஜோஷிகிட்ட பாடியை டிஸ்போஸ் பண்ற பொறுப்பைக் கொடுத்துட்டு உடனே வந்துடறேன்."

"டா… டாக்டர்… எனக்கு இந்த பங்களாவில… தனியா… இருக்க…"

"பயமாயிருக்கா?"

"ஆ… ஆமா…"

"என்ன பயம்? நான் ஜோஷி வீட்டுக்குப் போயிட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடுவேன். காம்பெளண்ட் கேட்டை உள்பக்கமாப் பூட்டிக்கிட்டு, லாபுக்குள்ளே ராகினி சம்பந்தப்பட்ட ஜீன் மேனிபுலேஷன் வொர்க்கை ஷெட்யூல்படி பண்ணிட்டிருக்கப்போறே… கேஜ் ரூமுக்குள்ள இருக்கிற நிஷா இன்னும் சில மணி நேரங்களுக்கு மரக்கட்டைதான்."

"இருந்தாலும் டாக்டர்… நடந்த சம்பவங்களை நினைச்சுப் பார்க்கும்போது அடிவயித்துல ஊசியைச் சொருகி இழுத்த மாதிரி ஒரு பயம்!"

"நீ பயப்படறதை இன்னிக்குத்தான் பார்க்கிறேன்! சரி, பங்களாவுக்குள்ளே நீ இருக்கவேண்டாம்; நான் இருந்து ராகினியோட எக்ஸ்பரிமெண்ட் ஷெட்யூலைப் பார்த்துக்கிறேன். நீ காரை டிரைவ் பண்ணிட்டுப் போய் ஜோஷி கிட்ட விட்டலோட பாடியைச் சேர்த்துடறியா?"

"வ… வந்து…"

"ரெண்டுல ஏதாவது ஒண்ணை நீ பண்ணித்தான் ஆகணும். லாப்ல இருக்கறியா? ஜோஷி வீட்டுக்குப் போறியா?"

"ஜோ… ஜோஷி வீட்டுக்குப் போறேன்!"

"தட்ஸ் குட்! பாடியை ஒரு கை பிடி, டிக்கிக்குள்ளே ஏத்திடுவோம்."

பால்யூர்தீன் பையில் திணிக்கப்பட்டிருந்த விட்டலின் உடலைச் சற்றே சிரமமாய்த் தூக்கி வாய் பிளந்திருந்த டிக்கிக்குள் திணித்தார்கள்.

"காரை நிதானமா ஓட்டணும் ஆர்யா!"

"ம்…"

டிக்கி அறைந்து சாத்தப்பட்டுப் பூட்டப்பட்டது.

"ஜோஷிகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டிருக்காதே! விஷயத்தைச் சுருக்கமா சொல்லி பாடியை ஒப்படைச்சுட்டு உடனே வந்துடு!"

"சரி டாக்டர்!"

"கிளம்பு! சிட்டி பூராவும் கரண்டு இல்லைன்னு நினைக்கிறேன். ஜாக்கிரதை!"

ஆர்யா டிரைவிங் ஸீட்டுக்கு வந்து இக்னீஷியனை இரும வைக்க, சதுர்வேதி காம்பெளண்ட் கேட்டைத் திறந்து வைத்தார்.

மின்னல் வேகமாய்க் கையெழுத்துப் போட்டது.

அட்டைக்கரி ஆகாயத்தில் இடி இடித்தது.

ஆர்யா காரை நகர்த்தி, பெய்கிற மழையில் காம்பெளண்ட் கேட்டைக் கடந்தாள்.

காரின் பின்பக்கச் சிவப்பு விளக்குகள் கண் பார்வையிலிருந்து மறைகிற வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்த சதுர்வேதி, பின் காம்பெளண்ட் கேட்டைச் சாத்தி உட்பக்கமாய்ப் பூட்டிவிட்டுப் பங்களாவுக்குள் போனார்.

(தொடரும்)

About The Author