பறவைகளும் துப்பாக்கி ரவைகளும் (3)

<<<சென்ற வாரம்

ஆங்காங்கே நிறைய வீடுகள் பராமரிப்பு இல்லாமல் பூட்டிக் கிடப்பதைக் கண்டான் அழகியநம்பி. தன்னிச்சையாய் வளர்ந்து கிடக்கும் பூ வளாகங்கள். இந்தப் பூங்காக்கள் ஒருகாலத்தில் எத்தனை அழகாய் மனிதர்களை மகிழ்வித்திருக்கும் என யூகித்தான் அவன். வெறித்துக் கிடந்தன கடைவீதிகள். கிழவியின் ஒழுங்கற்ற பற்கள் வரிசைபோல் பஜார் கடைகளின் வரிசை திகைத்துப் போயிருந்தது. இங்கொரு கடை, அங்கொரு கடை என்று திறந்து கிடந்தன. சில கடைகள் பூட்டிக் கிடந்தன. சில கடைகள் குண்டு விழுந்தோ எரியுண்டோ சூறையாடப் பட்டிருந்தன.

ஜனங்கள் அடிவயிற்றில் பயநெருப்புடன் நடமாடினார்கள்.அடடா, எல்லைக்கப்பாலும் இதே கதைதானே. மனிதர்கள் இப்படியே கவலை சுமந்து தளர்ந்து திரிவார்களே என்றிருந்தது. ஓய்வு நேரங்களில் வீதிகளில் திரிகிற அவனது தினவு இங்கே அடிபட்டாற் போல ஏமாற்றமாய் உணர்ந்தது. பயன்படுத்தாவிட்டாலும் பைத்துட்டில் சற்று சுவாசம் காணும் மனித சராசரி மனம். மெளனம் வழிமறிக்கப் படுகிற பதட்டத்துடன் எச்சரிக்கப் பட்டாற் போல நெடிதும் பாய் விரித்துக் கிடந்தது. அசுத்தப் பட்டிருந்தது மெளனம்.

ஏரிகளின் படகு வீடுகள் கிழ தம்பதிகளுடன் தள்ளாடிக் கொண்டிருந்தன. பெரும் தனிமை சூழ்ந்த முதுமை. நீண்ட கயிறில் முடிச்சு விழுந்தாற் போல அவர்கள் நெற்றியில் சிக்கலான வரிகள் ஆழமாய் வடுக்கள் போல கிடந்தன. காலத்தின் சுவடுகள் அல்ல, சுவடுக்கள். திகைப்பும் பெருமூச்சுமான அன்றாடம்.

படகுகளிலேயே தொட்டிச் செடிநிறைய மலர்கள். கூரைமேலும் கொடிகள் மலர் சுமந்து கொண்டு. அடடா கானகத்துப் பெளர்ணமி போல எல்லாம் வீணாய்க் கிடக்கிறது ரசிக்க ஆளின்றி. கிராமமே இளமையைத் தொலைத்திருந்தது. இளைஞர்கள் வேலை தேடி வெளியே போயிருக்கலாம். பாதுகாப்பு கருதி பெரியவர்கள் அவர்களை வெளியே அனுப்பி வைத்திருக்கலாம். அவர்களே பெரியவர்களைப் புறக்கணித்துப் போயிருக்கலாம். அவர்களில் சிலர் அமைதியான வாழ்க்கை என எதிர்காலம் அமையப் போவதில்லை என அதிர்ச்சியுடன் ‘தவறான’ வழியிலும் அகப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

வாழ்க்கை நியதிகள் தப்பி ஜவுளிக் கடையில் கலைத்துப் போட்ட சேலைகள் போல உருக்குலைந்து கிடந்தன. சின்னாபின்னப் பட்டுக் கிடந்தன. ஆமாம்! எல்லைக்கு அப்பாலும் இப்பாலும். எந்தப் பயணத்திலும் இப்படியோர் வருத்தம் அவனைச் சூழ்ந்ததேயில்லை. நள்ளிரவில் பெண் சுதந்திரமாக நடமாட வேண்டும் என காந்தி கனவு கண்டது போக, நண்பகலில் கூட ஆண்களே நடமாட முடியாத மிரளல். வெறும் மத அளவில் எதிர்ப்பு அலைகள். குறியற்ற வேசத் தினவு. திசை திருப்பப்பட்ட இளமை முறுக்க மூர்க்கங்கள்.

அவனுக்கு மகிழ்ச்சியான சேதியொன்றை மேலதிகாரி தெரிவித்தார். அந்தப் பகுதியில் சமீபத்திய குண்டுவீச்சு சம்பவத்தில் சிதிலமடைநத பாலம் ஒன்றை மறுசீரமைத்து பயிற்சிக்காலம் முடிவதற்குள் கட்டித் தர முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். அவர்கள் ஊரைவிட்டுப் போனபின்பும் அடையாளம் மிச்சமிருக்கும் வேலை. ஆகாவென்றிருந்தது எல்லாருக்கும்.

இரு எல்லைகளையும் இணைத்துப் பாலங்கட்ட முடிந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்.

அன்றைய ஓய்வுநேரத்தில் படகு ஒன்றில் உல்லாசப் பயணிபோல் ஏறிக் கொண்டான். ”வாருங்கள். எரியின் அழகுப் பகுதிகளைச் சுற்றிக் காட்டுகிறேன்” என்றார் கிழவர். வாய் பேசியது. அவரிடம் உற்சாகமோ சிரிப்போ இல்லை. அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

சிறு புன்னகையுடன் அவர் கரங்களை வாங்கிக் கொள்கிறான். ”படகுப் பூங்காவை அருமையாகப் பராமரித்து வருகிறீர்கள்.”

”இவைகள் பூச்செடிகள் அல்ல. என் குழந்தைகள்” என்கிறார் பெரியவர்.

”எத்தனை குழந்தைகள் உங்களுக்கு?” என சீண்டினான் அவன். ஒரு விநாடி அவனை ஆழமாய்ப் பார்த்தார். ”இனியும் பிறக்கும். எனக்கு வயதாகி விடவில்லை” என்றார் அவர் சிறு சிரிப்புடன். மேலும் கட்டுகளை இறுக்கந் தளர்த்த அவன் விரும்பினான். ”இந்தப் பூக்களை நல்வாழ்த்துப் பொதிவாக என் மனைவிக்கு அனுப்ப விரும்புகிறேன்… உங்கள் ஆசிகளுடன்” என்றான்.

”அச்சா” என்றார் அவர்.

சீட்டியடித்தபடி ஜாகைக்குத் திரும்பினான். அலர்மேல் வள்ளியின் கடிதம் காத்திருந்தது மேஜையில். உள்ளே அன்னையின் படம். கூடவே பிரசாதமலர். சிறு பொட்டலப் பொதிவில் போகன்வில்லா ஒற்றைப்பூ. பாதுகாப்பு மலர்! ”அன்னை உங்கள் அருகிருப்பாள். காப்பாள். நல்வாழ்த்துக்கள்” – வள்ளி.

*****

About The Author