பாபா பதில்கள் – தவம்

தவம்

தவம் என்றால் என்னவென்று அழகான விளக்கம் திருவள்ளுவரே சொல்லிட்டார். முதலில் தவத்தை ஏன் பிடிக்கணும் என்கிறார். தவத்தை ஏன் ஒருத்தன் முயற்சி செய்யணும் என்றால், "வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்". தவம் செய்துவிட்டால் நீ எதை நினைத்தாலும் அது நடக்கும். அதனால் அதை முயற்சி செய் என்கிறார். தவம் என்றால் என்னவென்று அவர் விளக்கம் சொல்கிற போது, "உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு" என்கிறார். தவத்திற்கு இரண்டு definition இருக்கு. ஒன்று, ‘உற்ற நோய் நோன்றல். சுகம், துக்கம் இரண்டையும் ஒரே மாதிரி பார்க்கிறது’. ஒருத்தன் மாலை போடுகிறபோது சந்தோஷப்படக்கூடாது. ஒருத்தன் திட்டினாலும் செருப்புல அடிச்சாலும் அழக்கூடாது. இந்த இரண்டும் வரக்கூடாது. எதனாலும் பாதிக்கப்படக்கூடாது. ராமரை அவங்கப்பா கூப்பிட்டு, "நீ தான் நாளையிலிருந்து ராஜா" என்றார். அவர் கண்டுக்கவே இல்லை. அன்றைக்கு ராத்திரியே கைகேயி தூபம் போட்டுட்டா. தசரதன் ராமரை மறுநாள் கூப்பிட்டு, "நீ 14 வருஷம் காட்டுக்குப் போ!" என்றார். அப்பவும் ராமருக்கு பாதிப்பேயில்லை. கம்பன் சொல்கிறான், "அன்றலர்ந்த தாமரையை வென்றதம்மா" என்றிருந் ததாம் முகம் அப்போது மலர்ந்த தாமரை எப்படி இருக்கும்? காட்டுக்கு போ என்றாலும் சிரிச்ச மூஞ்சியோட இருந்தாராம். எவனொருவன் சுகத்திலும், துக்கத்திலும் பாதிக்கப்படாமல் ஒரு equanimity of mind, ஏகாக்ரமா இருக்கானோ அவன் தபசி. அதுதான் உற்ற நோய் நோற்றல்.

தவம் என்பது சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஒருபோல பாதிப்பது. சினிமா கொட்டகையில் உட்கார்ந்து இருக்கே. ஸ்கிரீன் வெள்ளையாக தான் இருக்கு. ஆனால் மேலே projector-யை தட்டிவிட்டவுடனே அதில் ஒரு வீடு பத்தி எரியறா மாதிரி இருக்கு. நீ என்ன சொல்ற, பாரதிராஜா சூப்பராக கேமிராமேனை வெச்சு எடுத்திருக்கிறார் என்று சொல்றே. அந்த சீன் எப்படி இருக்கு தெரியுமா என்று சொல்றே. ஒரு திரையிலே ஒரு காட்சி வருகிறபோது நாம் அதனால் பாதிக்கப்படுவதில்லை. நமக்கு நல்லாத் தெரியும். அது சினிமாதான். நம்ம வாழ்க்கையை என்றைக்கு நாம் ரசிக்க, ருசிக்க தெரிந்து கொள்கிறோமோ சுகம் நடக்குதா? சோகம் நடக்குதா என்று கண்டுக்கவே கூடாது.

இப்ப கோர்ட்டில் உன் மேல கேஸ் என்று வெச்சுக்கோ. நீ கூண்டுல நிக்கறே. நீ நினைச்சுக்கணும். பராசக்தி சினிமாவில் சிவாஜி கணேசன் கூண்டுல நின்று தானே சிவாஜி கணேசன் ஆகி கை தட்டல் வாங்கி பத்ம பூஷன் அவார்டு வாங்கினார். எனக்கு அந்த சீனில் ஆக்டிங் கொடுத்து இருக்கிறார் கடவுள். நான் கோர்ட்டில் நிக்கற ராமசாமி, கோவிந்தசாமி அல்ல. அந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கிற சிவாஜி மாதிரி. ஒவ்வொன்றும் பாத்திரம்.

உன் வாழ்க்கையில் அழறா மாதிரி காட்சி வருது என்று வெச்சுக்கோ. நல்லா அழுதுவிடு. எவ்வளவு பேர் அழற நடிகைகள் எல்லாம் இருக்காங்க. கண்ணாம்பா, ஸ்ரீரஞ்சனி, விஜயகுமாரி. அவங்க எல்லாம் அழறதை பார்க்கவே நீ டிக்கெட் வாங்கிண்டு போய் இருக்கே. ஏன்னா நல்லா அழுதாங்க. So, நீ கூட கண்ணாம்பா, விஜயகுமாரி ஆகலாம். ஆனால் அழணும். உன் வாழ்க்கையில் அழற சீன் வந்தால் நல்லா அழு. எவ்வளவு பேர் இருக்காங்க. சந்திர பாபு மாதிரி. ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்’ என்று சிவாஜி கணேசன் பாடினார். ஆனால் ‘சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என்று ஒரு பாட்டு வந்தது. ‘நீ சிரித்தால் தீபாவளி’ என்று ஒரு பாட்டு வந்தது. சிரிப்பில் எத்தனை சிரிப்பு இருக்கு பார் உலகத்துலேயே. சினிமாவில் எத்தனை வகை சிரிப்பு வந்து இருக்கு. உன் வாழ்க்கையில் அந்த மாதிரி சிரி. சிரிக்க வேண்டிய சீன் வந்தால் வாய்விட்டு சிரி. எத்தனை விதமான சிரிப்பு இருந்தாலும் பார்த்துடு.

நாயகன் சினிமாவில் வேலு நாயக்கன் பிள்ளை அழுததுக்கே கமலஹாசனுக்கு கைதட்டல் வந்தது. சிலருக்கு நம்ம நெப்போலியன் மாதிரி அழுகையே வராது. மூஞ்சியை மூடிண்டு ‘அ’ என்பாங்க. சிரிப்பு வந்துடும். அழறதுனால ஒரு கிக். தளபதியில் ரஜினி எப்படி அழறாரு? நாயகன்ல கமல் அழறது எப்படி இருக்கு. அதுலேயும் கைதட்டல் வாங்கறவனும் இருக்கான். கோட்டை விடறவனும் இருக்கான்.

ஒரு சண்டைக் காட்சி வருகிறது. எவ்வளவு நல்லா சண்டை போட்டாங்க என்று அதைப் பார்க்க நீ போய் உட்கார்ந்துக்கறே. இல்லையா! இன்னும் சொல்லப்போனால் பி.எஸ். வீரப்பா துரத்தி நம்ம ஹீரோ ஒளிஞ்சிண்டு இருந்தா அவன் பார்த்துடக்கூடாது என்று நீ இங்கே சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு, பயந்துட்டே இருக்கே.

So, ஒவ்வொரு காட்சியும் எப்படி திரையில் பார்த்து ரசிக்கிறாயோ அந்த மாதிரி உன் வாழ்க்கையில் ஒவ்வொரு சீனையும் ரசிக்கணும். You should not be the part of the whole drama which is happening in your presence. அதுதான் உற்றநோய் நோன்றல்.

இரண்டாவது definition என்னவென்றால், உயிர்க்கு உறுகண் செய்யாமை. அப்படி என்றால் முடிஞ்சா நாலு பேர்க்கு ஒத்தாசை செய்வது அல்லது யாருக்கும் உபத்திரவம் வராம பார்த்துக்கறது. இது நம்மால் முடியும். ஒத்தாசை செய்ய மனசு வேணும், துட்டு வேணும். யார்க்கும் நம்மால் எந்த வம்பும் வராமல் வாழ முடியாதா? பிறர் வாட பல செயல்கள் செய்து மற்றவர்கள் கஷ்டப்படறா மாதிரி எவ்வளவு செயல் செய்யறோம். சின்னஞ்சிறு கதைகள் பேசி, அவன் இப்படி இவன் அப்படி என்று பேசிப் பேசி, டைமை வேஸ்ட் பண்றோம். நாம ஏன் இப்படி பேசணும்?

கடவுளே ஒரு மனிதனை அந்த ஆள் இறந்து போய் தன்கிட்ட வர்ற போதுதான் தீர்ப்பு வழங்கறாராம். அதை கயாமத் day, ஊழித் தீர்ப்பு நாள், judgement day என்கிறாங்க. நாம் வாழற காலத்துலயே அவன் இப்படி, இவன் அப்படி என்று தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதைவிட பைத்தியக் காரத்தனம் உண்டா? கடவுளே காத்திருக்கிறான். நாம் ஏன் குறை சொல்லணும்? இது இரண்டாவது.

நல்லது செய்வது அற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமீன் நல்லாற்றுப் படுவும் நெறியுமாறு அதுவே.

நல்லது செய்ய முடிஞ்சா செய். இல்லை என்றால் கெட்டது செய்யாமல் இரு. அதுதான் தர்மம். புறநானூறு சொல்கிறது. அதுதான் திருவள்ளுவர் சொல்கிறார், உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. இந்த இரண்டையும் என்றைக்கு நீ பண்ணிட்டியோ அன்றைக்கு நீ தபசி. நீ காட்டுக்குப் போக வேண்டாம். தாடி வெச்சுக்க வேண்டாம். ஓம் க்ரீம் சொல்ல வேண்டாம். ஒன்றும் பண்ண வேண்டாம். சுகம், துக்கம் இரண்டையும் கல்லு மாதிரி பார்த்துக்கோ. முடிஞ்சா நாலு பேருக்கு உதவி செய். இல்லைன்னா உபத்திரவம் கொடுக்காதே. இவ்வளவுதான். இந்த இரண்டையும் செய்தால் நீ தவசி என்று வள்ளுவர் சொல்கிறார்.

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    Very lucid explanation of tavam” as defined by tirukkuRaL But why cite so many movie scenes?
    Small correction:
    eqanimity of mind ————–> equanimity”

Comments are closed.