பித்ருக்கள்! (3)

"அக்கா!" என்று என்னையறியாமல் அழத் தொடங்கி விட்டேன். சீறி வெடித்துக் கொண்டு வந்தது அழுகை! யாருமில்லாத வீட்டில், தனியாகத் திணறித் திணறிச் சுகமாக அழுது கொண்டிருந்தேன்.

அக்காவை நினைத்து அப்படி அழுவது மனதிற்கு ஒரு வகையில் திருப்தியாகத்தான் இருந்தது. என் அக்காவிற்கு நான் செய்யும் நன்றிக் கடனோ என்று கூட இருந்தது. இதைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அப்பா இல்லையே என்று மனது ஏங்கித் தவித்தது. இதை இப்பொழுதே யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்று மனம் துடித்தது. நேரம் போவதே தெரியாமல் மேலும் மேலும் விம்மி விம்மி அழுதேன் நான். அந்தச் சமயத்தில் என் மனமெல்லாம் விரவி வியாபித்திருந்தது அக்கா மட்டுமே!

நாங்களெல்லாம் அம்மாவைக் கொண்டு குள்ளமாகப் பிறந்திருக்க, அக்கா மட்டும் எங்கள் அப்பாவைக் கொண்டு உயரமாகவும் உரமாகவும் பிறந்திருந்தாள். எந்த விதமான விசாரிப்பும் இல்லாமல், அவர்கள் சொல்வதை மட்டுமே நம்பி அக்காவைக் கொடுத்து விட்டார் அப்பா. எங்கள் வீட்டில் மகா ராணியைப் போல வளர்ந்தவள், எங்களையெல்லாம் விட்டு விட்டு வெகு தூரம் சென்றாள். அத்திம்பேரைப் பற்றி எதுவுமே எங்களுக்குத் தெரியாது. ஆனால், சம்பளம் ஏழாயிரம் என்று சொன்னது பொய் என்பது அடுத்த நாளே தெரிந்து விட்டது. அக்கா இதை என்னிடம் மட்டுமே சொன்னாள். அப்பா வருத்தப்படுவாரே என்று அவரிடம் கடைசி வரையில் இதைத் தெரிவிக்கவே இல்லை.

எனக்கு அதை நினைத்து இப்பொழுதும் அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அந்தப் புறா வினோதமாக என்னை, நான் பைத்தியக்காரி மாதிரி தனிமையில் அழுவதைக் கழுத்தைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டு இருந்தது.

குழந்தைகள் இரண்டு பிறந்த பிறகும் கூட அத்திம்பேரின் போக்கு மாறவே இல்லை. அவருடைய அண்ணன் தம்பிகளோ அதற்கு மேலே! நமக்குக் காசு செலவில்லாமல் ஒரு வேலைக்காரி கிடைத்திருக்கிறாள் என்றுதான் நினைத்தார்கள். அத்திம்பேரோடு சேர்ந்து அவர்களும் வெட்கமில்லாமல் வாடி, போடி என்றெல்லாம் பேசுவார்களாம். புருஷன் திட்டுவது மட்டுமில்லாமல் அவன் கூடப் பிறந்தவர்களும் சேர்ந்து கொள்வார்களாம். அந்தக் குளிரில், எல்லா வேலைகளையும் செய்து கொண்டு, திட்டுகளையும் வாங்கிக் கொண்டவள் மெல்ல மெல்ல ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டதில் என்ன ஆச்சரியம்?

பொங்கிப் பெருகிய கண்ணீர் என் புடவையை நனைத்தது. அக்காவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போனதில் கண்கள் குளமாயின. இனிமேல் எங்கள் ஆசை அக்காவிற்காக நான் என்னதான் செய்ய முடியும், கண்ணீர் வடிப்பதைத் தவிர?

எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டவளால் தன் மானத்திற்கே கேடு வந்தபொழுதுதான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பட்டப் பகலிலேயே பாயை உதறிப் போட்டவாறே அக்காவைப் பார்த்து, "வாடி!" என்றானாம் ஒரு அண்ணன்! அத்திம்பேரும் அருகிலேயே எதையோ படித்துக் கொண்டிருப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு அங்கேயேதான் இருந்தாரம். "சீ! மானம் கெட்டவனே!" என்று அக்கா பத்ரகாளியாய்ச் சீறியவுடன் எதுவுமே நடக்காதது மாதிரி சிரித்தபடியே படுத்துக் கொண்டானாம் சொரணை கெட்டவன்! அத்திம்பேரிடம் இருந்து எந்தவிதமான பதிலுமே இல்லையாம். அக்கா சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.

இப்போது நினைத்தாலும் மனசும் உடம்பும் திடுக்கிடுகிறது! எப்படிப்பட்ட கோரமான சம்பவம்! எப்படித்தான் அக்கா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாளோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவளுக்கு அங்கே எந்த ஆதரவும் இல்லை, கடவுளைத் தவிர! தமிழ்ப் பத்திரிக்கைகள் கூடப் படிக்கக் கிடைக்கவில்லையாம். அப்பொழுதெல்லாம் இந்த மாதிரி செல்போனும் இன்டர்நெட்டும் கிடையாதே! ரேடியோ மட்டும்தான் இருந்தது.

பெருமூச்சு விட்டபடி அந்த ஒற்றைப் புறாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அக்காவைப் பற்றிய நினைவுகள் அப்படியே மளமளவென வெள்ளமாய்ப் பெருகி அப்படியே ஒரு கனமான பாறையைப் போல என்னை அழுத்திக் கொண்டிருந்தன. எந்தவிதமான சமாதானமும் சொல்ல முடியாமல் முடிந்து போனாள் அக்கா. இதை விட ஒரு சோகம் பெற்றவர்களுக்கு வேண்டுமா? மனதை இறுக்கிப் பிடித்த சோகத்துடன் மிச்ச வாழ்க்கையை வாழ்ந்து முடித்தார் அப்பா. அப்பாவுக்காகவும் அக்காவுக்காகவும் பெருமூச்சுக்களை மட்டுமே சமர்ப்பிக்க முடிந்தது எங்களால்.

இறந்து போனவர்கள் காக்கை ரூபத்தில் வீட்டிற்கு வருவார்கள் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருவேளை, அக்காவைப் போலப் புகுந்த வீட்டின் கொடுமை தாங்காமல் அல்பாயுசாகச் சிறிய வயதிலேயே உயிரை விட்ட பெண்கள் மட்டும் புறாக்களாகத்தான் வருவார்களோ?! அந்தச் சோகத்தைத்தான், புகுந்த வீட்டு அவலங்களைத்தான் இப்படி ஓலமிட்டு ஓலமிட்டுப் புறாக்கள் ஆற்றிக் கொள்கின்றனவோ?!…

பொங்கிப் பொங்கிப் பார்வையை மறைத்த கண்ணீர்த் துளிகளின் ஊடே அந்தப் புறா என்னையே வினோதமாகப் பார்ப்பது மட்டும் சன்னமாகத் தெரிந்தது!

(முடிந்தது)

About The Author