மனிதரில் எத்தனை நிறங்கள்! (51)

"The evil of the world is made possible by nothing but the sanction [that] you give it."
-Ayn Rand

பஞ்சவர்ணம் சொல்லி முடித்த போது மூர்த்திக்கு என்ன நினைப்பது என்று ஒரு நிமிடம் தெரியவில்லை. மனதில் வெறுமையே மிஞ்சி நின்றது. பஞ்சவர்ணம் பொய் எதுவும் பேரனிடம் சொல்லவில்லை என்றாலும் சாமர்த்தியமாக சில விஷயங்களை சொல்லாமல் விட்டாள். அதைக் கவனித்து பேரன் தர்மசங்கடமான கேள்விகளைத் தன்னிடம் கேட்டால் என்ன செய்வது என்ற படபடப்பு அவளிடம் இருந்தது. மூர்த்தியும் சில இடைவெளிகளை அவள் சொன்னதில் கண்டுபிடித்தாலும் காரணத்தை சுலபமாக ஊகித்தான். பாட்டி வாயால் அதைச் சொல்ல வைக்க அவனும் விரும்பவில்லை.

அவன் மனதில் நின்ற வெறுமையை நீக்க மனதில் எதை வேண்டுமானாலும் நிரப்பி இருக்கலாம். ஆனால் அவன் சிவகாமி மேல் இருந்த ஆத்திரத்தை மனதில் நிரப்பினான். அந்த ஒன்றில் தான் அர்த்தம் இருப்பதாய் தோன்றியது.

"சிவகாமி தான் அவங்களைக் கொன்னிருப்பாள்னு சந்தேகத்துக்கே இடமில்லாமல் தெரியுதே. அப்புறம் அதில் என்ன பாட்டி? சிவகாமி தன் கையால் கொன்னிருப்பாளா இல்லை அந்த நேபாளத்தை விட்டுக் கொன்னுருப்பாளான்னா?"

"எப்படி செய்தாள் என்ன நடந்ததுன்னு சரியா தெரியற வரைக்கும் சந்தேகம் ஒரு மூலையில் இருந்துகிட்டே இருக்கும் அல்லவா" என்று சொன்ன பஞ்சவர்ணம் மனதில் பெரிய நிம்மதி இருந்தது. ‘நல்ல வேளையா வேண்டாத கேள்வி எதுவும் கேக்கலை’

"இனி என்ன செய்யலாம் பாட்டி"

"முதல்ல அந்த விஜயா பத்தி விசாரி. அப்புறம் ஆர்த்திக்கு எந்த டாக்டரை தேர்ந்தெடுத்துருக்கறாங்கன்னு கண்டு பிடி…"

மூர்த்தி தலையாட்டினான். பஞ்சவர்ணம் பேரனைக் கூர்ந்து பார்த்து விட்டுக் குரல் கரகரக்கச் சொன்னாள். "மூர்த்தி. இனிமேல் வர்ற நாட்கள் நமக்கு ரொம்ப முக்கியம். நாம கவனமாய் இல்லாட்டி சிவகாமியை வீழ்த்த முடியாது. உங்கம்மா அப்பா இறந்துட்டாங்கன்னு தெரிஞ்சவுடனே, பவானிக்கும் இனி குழந்தை இல்லைன்னு ஆனவுடனே நான் நியாயமா பவானி கிட்ட தான் உன்னை வளர்த்த தந்திருக்கணும். ஆனா நான் செய்யாததுக்குக் காரணம் அவள் உன்னை பலவீனமா வளர்த்திடுவாங்கறது தான். தயக்கம், செண்டிமெண்ட் எல்லாம் சிவகாமி மாதிரி ஆள்களை எதிர்க்க உதவாது. பவானியால சந்திரசேகரைக் கல்யாணம் செய்துகிட்டும் இந்த வீட்டுல சிவகாமிய எதிர்த்து ஒரு துரும்பையும் நகர்த்த முடியலை…"

"பாட்டி நீங்க அத்தை மேல கோபப்படறதுல அர்த்தமில்லை. அவங்க பலவீனமானவங்கங்கறதை ஒத்துக்கறேன். ஆனா ரொம்பவும் ஸ்ட்ராங்கானவங்கன்னு நான் கேள்விப்பட்ட ஆர்த்தியோட அம்மானால கூட சிவகாமி பொசிஷனை அசைக்க முடியலைங்கறப்ப அத்தையால என்ன செஞ்சிருக்க முடியும்…."

"முடியாததையும் முடிச்சுக் காட்டறது தாண்டா சாமர்த்தியம். சரி விடு. பவானியைப் பத்தி இப்ப பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. நடக்க வேண்டியதைப் பார்ப்போம். ஆர்த்தி தான் நமக்கு இப்ப முக்கியமான துருப்புச் சீட்டு. நீ தலை கீழா நின்னாவது அவள் மனசுல இடம் பிடிக்கணும். இப்ப ஆகாஷுக்கு அவள் மேல கோபம் இருந்தால் கூட அவள் மனசுல அவனுக்கு இடம் இருக்கற மாதிரி தான் தோணுது. அதை நீக்கணும், புரியுதா. அந்த டேவிட்டோட மகளுக்கும் ஆகாஷுக்கும் இருந்த உறவை அவள் காதுல போடு. அது ஒண்ணு போதும் அவளுக்கு அவன் மேல் இருக்கற காதல் போக…"

மூர்த்திக்கு பாட்டியின் அறிவுக் கூர்மையை மனதினுள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. "சரி பாட்டி"

"அப்படி ஆகாஷ் நம்ம ரூட்டுல இருந்து போனாலும் பார்த்திபன் இருக்கான். ஆகாஷ் விஷயம் ஆகலைன்னா சந்திரசேகர் எப்பாடு பட்டாவது மகளுக்கு அவனைக் கல்யாணம் செய்து குடுக்கத் தான் பார்ப்பான். அதனால் நீ அவன் விஷயத்துலயும் கவனமாய் இருக்கணும். புரியுதா?"

மூர்த்திக்கு பார்த்திபன் ஒரு குறுக்கீடாகத் தோன்றவில்லை. ஆனாலும் பாட்டியிடம் தலையாட்டி விட்டு எழுந்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் காந்தலில் வீரையன் விலாசத்தைக் கண்டு பிடித்து விட்டான். அந்தப் பழைய, சிறிய, நன்றாக பராமரிக்கப்படாத வீடு வீரையனின் நிதி நிலைமையை பறைசாற்றியது. கதவைத் தட்டினான்.

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத் தாண்டிய ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள்.

"வீரையன் இருக்காரா?"

அவன் யார் என்று அவள் கேட்கவில்லை. அவள் கண்களில் லேசாகப் பயம் எட்டிப் பார்த்தது. "என்னங்க யாரோ உங்களைக் கேட்கறாங்க" என்று சொல்லியபடி உள்ளே போனாள்.

அடுத்த நிமிடம் வீரையன் வெளியே வந்தான். கிட்டத்தட்ட அறுபது வயதை எட்டியிருந்தாலும் வீரையன் திடகாத்திரமாகவும், முறுக்கு மீசையுடனும் இருந்தான். "நான் தான் வீரையன். உங்களுக்கு வீடு ஏதாவது வாடகைக்கு வேணுமா? எந்த ரேஞ்சுல வேணும்"

அவன் வீட்டு புரோக்கர் தொழில் பார்க்கிறான் என்பது கேள்வியில் தெரிந்தது.

"எனக்கு வீடு எதுவும் வாடகைக்கு வேண்டாம். எனக்கு விஜயாவைப் பார்க்கணும்"

அவன் கண்களிலும் பயத்தின் அறிகுறி தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒன்றும் அறியாதது போல வந்தது. "இங்க விஜயான்னு யாரும் இல்லைங்களே"

"உங்க தங்கச்சி பேரு விஜயா தானே"

"ஓ அவளைக் கேட்கறீங்களா? அவ செத்து ரொம்ப வருஷமாயிடுச்சுங்களே. ஒரு நிலச்சரிவுல போயிட்டா"

"இல்லை. எங்க வீட்டாள் ஒருத்தர் அவங்களை நேத்து சிவன் கோயில்ல பார்த்திருக்காங்க. அதான்…."

"செத்துப் போனவங்களை எப்படிங்க பார்த்திருக்க முடியும்? அவங்களுக்கு ஆள் மாறிப் போயிருக்கணும்"

மூர்த்தி ஒரு நூறு ரூபாய்க் கட்டை வெளியே எடுத்தான். "எனக்கு அவங்களைக் கண்டிப்பா பார்த்து கொஞ்சம் பேச வேண்டி இருக்கு வீரையன். நீங்க எனக்கு உதவுனா நானும் உங்களைக் கவனிச்சுக்குவேன்"

"பத்தாயிரம் இல்லை பத்து கோடியே கொடுத்தாலும் செத்தவங்களைக் கூட்டிகிட்டு வர முடியுங்களா தம்பி."

"அவங்க சாகலைங்கறதுலயும் அவங்களை எங்க வீட்டாள் பார்த்தது நிஜம் தான்ங்கிறதுலயும் எங்களுக்கு சந்தேகமேயில்லை வீரையன்"

"அப்படி ஒருவேளை இருந்து அடுத்த தடவை நீங்க யாராவது பார்த்தீங்கன்னா தயவு செய்து என் கிட்ட தெரிவிங்க தம்பி. நானும் பார்த்து பேசறேன். ஏன்னா எனக்கும் அவளை விட்டா கூடப் பிறந்தவங்கன்னு வேற யாரும் இல்லை"

வீரையன் வார்த்தைகளில் ஏளனம் இருந்தாலும் அவன் கண்களில் பயம் பிரத்தியேகமாக தெரிந்தது. ஒரு வேளை சிவகாமி நமக்கு முன்னால் இங்கே வந்து விட்டாளோ என்ற சந்தேகம் மூர்த்திக்கு வந்தது. ஆனால் இந்தப் பயத்திற்குக் காரணம் சிவகாமி தான் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. நீங்கள் யார், எதற்காக விஜயாவிடம் பேச வேண்டும் என்கிறீர்கள் என்ற இயல்பான கேள்விகள் வராதது, அதற்கான விடைகள் வீரையனுக்கு முன்பே தெரிந்திருந்ததினால் தான் என்பதையும் மூர்த்தியால் ஊகிக்க முடிந்தது. மேற்கொண்டு பேசாமல் அங்கிருந்து கிளம்பினான்.

மூர்த்தி போனவுடன் வீரையன் மனைவி வெளியே வந்தாள். "என்னங்க ஏதாவது பிரச்சினையா?"

"அந்த சனியனால எப்பவுமே பிரச்சினை தான். பெரிய இடத்துக்கு வேலைக்குப் போனா வேலையப் பாத்தமா வந்தமான்னு இருந்திருக்கணும். அதை விட்டுட்டு ……"

(தொடரும்)

About The Author