மனிதரில் எத்தனை நிறங்கள்! (37)

Everything is vague to a degree you do not realize till you have tried to make it precise.
– Bertrand Russell

பார்வதியின் முகபாவனையில் இருந்தே பஞ்சவர்ணம் இந்த தகவலை அவர்களிடம் சொல்லவில்லை என்று ஊகித்த அமிர்தம் புன்னகையுடன் சொன்னாள். "கிழவி உங்க கிட்ட சொல்லாதது பெரிய விஷயம் இல்லை. பாட்டியும் பேரனும் அடுத்தவங்க விஷயம்னா துருவித் துருவிக் கேப்பாங்க. ஒட்டுக் கேப்பாங்க. ஆனா தங்கள் விஷயம்னா அது உப்பு சப்பில்லாத சின்ன விஷயம்னாலும் சொல்ல மாட்டாங்க. எல்லாத்தையும் மூடி மறைப்பாங்க. அதுக்குப் பெருசா காரணம் வேணும்னு இல்லை…."

பார்வதிக்கு ஏனோ அப்படித் தோன்றவில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் தான் பஞ்சவர்ணம் மறைத்தாள் என்று தோன்றியது. ஆகாஷுக்கும் அப்படியே தோன்றியது. ஆர்த்திக்கோ குழப்பம் அதிகமாகி தலை சுற்றியது.

பிறகு பேச்சு பொது விஷயங்களுக்குத் திரும்பியது. ஆகாஷ் அந்தப் பேச்சில் கலந்து கொள்ளாமல் அமைதியாகச் சாப்பிட்டான். அவன் பார்வை தப்பித் தவறி கூட ஆர்த்தி பக்கம் திரும்பவில்லை. ஆர்த்தியால் மட்டும் அவனை அடிக்கடி பார்க்காமல் இருக்கமுடியவில்லை. காந்தமாக அவள் கண்களை அவன் தன் பக்கம் இழுப்பது போல் இருந்தது. அவன் சாப்பிடும் விதம் கூட அழகாக இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. அவன் அமைதியாக சாப்பிட்டு விட்டு அங்கிருந்து போனான். ஆர்த்திக்கு அவன் உதாசீனப்படுத்துவது சகிக்க முடியவில்லை. மனம் வலித்தது……

ஆகாஷ் மாடியேறும் போது மூர்த்தி மாடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான். ஆகாஷ் மூர்த்தியின் எதிரே வந்து வழிமறித்தான்.

"என்ன?" என்று மூர்த்தி சந்தேகத்துடன் ஆகாஷைக் கேட்டான்.

"ஆர்த்தியோட அம்மா இறந்த அதே விபத்துல தான் உங்கம்மாவும் அப்பாவும் இறந்ததா கேள்விப்பட்டேன். அவ்வளவு விவரமா அவங்கம்மா இறந்ததை விசாரிச்ச நீங்க ஏன் அதை அவங்க கிட்ட சொல்லாம இருந்துட்டீங்க?"

மூர்த்தி பதில் சொல்லாமல் ஆகாஷை எரித்து விடுவது போல பார்த்தான்.

"அவங்க பிணம் கூட கிடைக்கலை, கண்டுபிடிக்க முடியலைன்னு நான் கேள்விப்பட்டேன்……"

மூர்த்தி முகத்தில் அதிர்ச்சி பலமாகத் தெரிந்தது. உண்மையில் அது அவனுக்குக் கூடத் தெரியாது. அந்த நிலச்சரிவு விபத்தில் தான் தன் பெற்றோர் இறந்தார்கள் என்கிற வரையில் தான் அவனுக்குத் தெரியும். அதில் தன் பெற்றோரின் பிணம் கூட கிடைக்கவில்லை என்பது அவனுக்கே புதுத் தகவலாக இருந்தது.

அவனுடைய அதிர்ச்சி ஆகாஷையே குழப்பியது. இந்தத் தகவல் அவனுக்கே இப்போது தான் தெரியும் என்பது புரிந்த போது அவனுக்குள் பல கேள்விகள் எழுந்தன. பஞ்சவர்ணமும், பவானியும் இதை ஏன் மூர்த்தியிடம் இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருந்தார்கள்?

"என்ன மூர்த்தி உனக்கே தெரியாதா? இனிமே அடுத்தவங்களப் பத்தி தெரிஞ்சுக்கக் கஷ்டப்படறத விட்டுட்டு உன் சம்பந்தப்பட்டதைப் பத்தி முதல்ல தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு…. அப்புறம் இன்னொரு விஷயம். எங்கம்மா சிங்கப்பூர்ல ரெண்டு மாசம் இருந்துட்டு ஆர்த்தியோட அம்மா இறந்த தினம் தான் இந்தியாவுக்கே வந்துருக்காங்க….வரட்டுமா"

மூர்த்தி மாடிப்படியிலேயே சிறிது நேரம் சிலையாக நின்றான். கிட்டத்தட்ட ஆர்த்தியின் நிலையில் தான் தானும் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது. தன் பெற்றோர் மரணத்திலும் ஏதோ புதிர் இருப்பதாக அவனுக்கு ஊகிக்க முடிந்தது. பாட்டி எதையோ மறைக்கிறாள் என்று தெரிந்திருந்தாலும் அதில் ஆகாஷ் சொன்ன இந்தத் தகவலும் இருக்கும் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

அவன் பெற்றோர் அந்த விபத்தில் இறந்த போது அவனுக்கு வயது ஆறு. அவனுக்கு அவர்கள் ஓரிரு சம்பவங்களில் தான் நினைவுக்கு வந்தார்கள். அவன் தாய் சிவப்பு சட்டை ஒன்றை அவனுக்கு அணிவித்து முத்தமிட்ட நினைவு இருக்கிறது. தந்தை பைக்கில் அவனை உட்கார வைத்து அழைத்துப் போய் பட்டம் வாங்கித் தந்தது நினைவு இருக்கிறது. மற்றபடி இருவர் பற்றியும் வேறு நினைவுகள் எவ்வளவு முயற்சி செய்தும் அவனுக்கு வந்ததில்லை. அவன் பெற்றோரைப் பற்றி பஞ்சவர்ணமும் பவானியும் பேசியதை எழுதினால் ஒரு பாராவில் அடக்கி விடலாம். காரணம் அந்த விபத்து அவர்கள் மனதைப் பெரிதும் பாதித்தது தான் என்றும் அதைப் பற்றிப் பேசி மனம் வருந்த அவர்கள் தயக்கம் காட்டினார்கள் என்றும் தான் அவன் இவ்வளவு நாள் எண்ணியிருந்தான்.

மூர்த்தி கீழே இறங்குவதற்குப் பதிலாகத் திரும்பவும் மேலே போனான். பஞ்சவர்ணத்தின் அறையில் அவன் நுழைந்த போது அவள் கண்களை மூடிக் கொண்டு ஈசி சேரில் அமர்ந்திருந்தாள்.

"என்னடா?"

"பாட்டி எங்கம்மா அப்பாவோட பிணம் கூட அந்த விபத்தில் கிடைக்கலையா?"

பஞ்சவர்ணம் பதில் சொல்லாமல் சிலை போல் சில வினாடிகள் அமர்ந்திருந்தாள். கடைசியில் பேசிய போது அவள் குரல் ஈனசுரத்தில் இருந்தது. "யாருடா சொன்னாங்க?"

"ஆகாஷ்"

"அந்த அமிர்தம் சொல்லியிருப்பாள்…."

"அது உண்மையா பாட்டி"

பஞ்சவர்ணம் தன் மகன் மருமகள் போட்டோவைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி தலையசைத்தாள்.

"அதை ஏன் பாட்டி என் கிட்ட இது வரைக்கும் சொன்னதில்லை?"

"அந்த விபத்துல எனக்கு இப்பவும் நிறைய சந்தேகங்கள் இருக்குடா மூர்த்தி. அவங்க அதில் சிக்கி இறந்திருக்க வாய்ப்பே இல்லைன்னு என் உள்மனசு சொல்லிகிட்டே இருக்கு. எனக்கே முழுசா தெரியாத ஒரு விஷயத்தை உன் கிட்டே என்னன்னு சொல்லுவேன்?"

மூர்த்தி குழப்பத்துடன் பாட்டியைப் பார்த்தான். அவன் மனம் பல கோணங்களில் நிலைமையை ஆராய்ந்தது. கடைசியில் ஒரு முடிவு பளிச்சிட்டது. ஏன் எப்படி என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கா விட்டாலும் பாட்டிக்கு சிவகாமி மேல் உள்ள தீராத வெறுப்புக்கும், அடிக்கடி கொலைகாரி என்று அவளை அழைப்பதற்கும் இது தான் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தான். வாய் விட்டு சொன்ன போது அவன் குரல் லேசாக நடுங்கியது. "அப்படின்னா எங்கம்மா அப்பாவையும் சிவகாமி கொன்னிருக்கலாம்னு சந்தேகப்படுறீங்களா பாட்டி"

பஞ்சவர்ணம் ஈசி சேரில் இருந்து எழுந்து குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள். "அந்த சந்தேகம் என் மனசுல இல்லாமல் இல்லை"

"சிவகாமி அவங்களை ஏன் கொல்லணும் பாட்டி?"

பஞ்சவர்ணம் பேரனிடம் எல்லாவற்றையும் விளக்கும் மனநிலையில் இல்லை. இதெல்லாம் சொல்லாமல் மறைக்கக் கூடிய விஷயம் இல்லை என்றாலும் இப்போதைக்கு சொல்லாமல் இருப்பது தான் நல்லது என்று தீர்மானித்தாள். "மூர்த்தி, கொஞ்ச நாள் பொறு. எல்லாத்தையும் சொல்கிறேன். இப்ப என்னை எதையும் கேட்காதே"

"பாட்டி ஆகாஷ் அவங்கம்மா அன்றைக்குத் தான் ஊட்டிக்கு வந்தாள்னு சொல்றான். அப்புறம் எப்படி…?"

"சிவகாமிக்கு எதையும் திட்டம் போடவும் அதை நடைமுறைப்படுத்தவும் எத்தனை நேரம் வேணும்னு
நீ நினைக்கிறாய் மூர்த்தி?"

(தொடரும்)

About The Author