சுதேசி ஐயர் – நாடக விமரிசனம்

ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான நகைச்சுவை நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. கோர்வையில்லாமல் துணுக்குத் தோரணமாக வரும் நாடகங்களுக்கு மத்தியில் சரவெடிச் சிரிப்புகளுடன் கூட ஒரு மையக் கருத்து இழையோடும் நாடகம் ஒய்.ஜீ. மகேந்திராவின் சுதேசி ஐயர். மூலக்கதை சித்ராலயா ஸ்ரீராம் எழுதியது. கதைக் கரு கொஞ்சம் ஆபத்தானது. சரியாகக் கையாளாவிட்டால், காதிலே பூ வைக்கிறார்களே என்பதற்காகவே சிரிக்க வேண்டியதிருக்கும். ஆனால், லாவகமாகக் கையாண்டிருக்கும் விதத்தினால், பார்வையாளர்கள் விருப்பத்தோடு நம்பிக்கையின்மையை ஒதுக்கி வைக்கிறார்கள். (Willing suspension of disbelief என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அப்படி.)

கதை இதுதான்.

பழைய காலத்து மதிப்பீடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் சுதேசி ஐயர் எனப்படும் சங்கர ஐயர். அவர் மனைவி, இரண்டு மகன்கள், மகள் இவர்களோ நேர்மாறு. அல்ட்ரா மாடர்ன் ஐயர். அவர்களின் எகத்தாளத்துக்கும் ஏன் வெறுப்புக்குமே ஆளாகிறார். ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவாகக் கிடைக்கும் கால இயந்திரத்தில் இவர்களை ஏற்றிக்கொண்டு, ஐயர் மயிலாப்பூரில் நடுத்தர சூழ்நிலையுள்ள வீட்டுக்கு, 1945 காலகட்டத்தில் கொண்டு விடுகிறார். இதில் ஏற்படும் குழப்பங்களே நகைச்சுவையாகின்றன.

1945ல் நல்ல மதிப்பீடுகள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன, இப்போது அவை எதுவும் இல்லை என்று உணர்ந்து, பழையவையே மேல் என்று உணர்ந்து குடும்பத்தினர் திருந்துவதே கதை. கலைவாணர் 1950ல் 1950-60 நாடகம் என்று ஒன்று போட்டார். அதில் 1960ல் எல்லாமே முன்னேறி விடும் என்ற கருத்தைச் சொன்னார். அதாவது, எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. இந்த நாடகத்தில் கடந்த காலம் நன்றாக இருந்திருக்கிறதே என்ற பார்வை. (1945 கூட அப்படி ஒன்றும் ஒசத்தியாக இல்லை என்று சில பெரிசுகள் புலம்பக்கூடும்!!)

ஒரு நிகழ்ச்சி :

1945ல் வாழும் மயிலாப்பூர் பக்கத்து வீட்டுக்காரர் ஐயரிடம் சொல்கிறார், எனக்குத் தெரிந்த பையன் ஒருவன். தஞ்சாவூர்ப் பக்கம் இருக்கான். அவங்க அப்பா மளிகைக்கடை வெச்சுத் தரேங்கிறார். கேட்காம சினிமா, டிராமான்னு சுத்தறான். நீங்க அவனுக்கு அட்வைஸ் பண்ணணும் என்கிறார்.

பையன் பேரைக் கேட்டதும் அதிர்கிறார் ஐயர். விசி. கணேசன்!

அடப்பாவி மனுஷா! நடிகர் திலகமா வரப்போற அவனை மளிகைக்கடையில் பொட்டலம் கட்ட வைக்கப் பார்க்கிறீரே! 

1945 காந்தி ஐயர் வீட்டுக்கு வருகிறார். அவர் நுழையும்போது உள்ளபடியே மயிர்க்கூச்செறிகிறது. அரங்கமே கை தட்டுகிறது. 2008 நாட்டு நிலைமையைப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள் ஐயர் குடும்பத்தினர். மகாத்மா காந்தி ரோடு என்று பெயர் வைத்து விட்டு எங்கே காந்தி பெயர் நினைவில் இருந்து விடப் போகிறதே என்பதற்காக சுருக்கி எம்.ஜி..ரோடு, என்று அழைக்கிறோம்! திருட்டுக் கணக்கை காந்தி கணக்கு என்கிறோம்; ரூபாய் நோட்டில் காந்தி படம், நல்ல நோட்டை விடக் கள்ள நோட்டில் படம் இன்னும் தெளிவாய் இருக்கிறது,

இத்தனையும் கேட்ட காந்தி மனம் தளராமல், காலச்சக்கரச் சுழற்சியில் இப்படி எல்லாம் நடக்கும். ஆனால் என்னைப்போல ஒருவர் உங்களில் இருந்தே வருவீர்கள். நிலைமை மாறும் என்று காந்தி சொல்லும்போது கரகோஷம் எழுகிறது. ரொம்ப பாஸிட்டிவ் நோட். ஆனால் உடனே ஐயர் இடைமறித்து, எனக்கு நம்பிக்கை இல்லை என்பது ஆண்ட்டி க்ளைமாக்ஸ் ஆகி விடுகிறது.

நல்ல நாடகம்தான். சந்தேகம் இல்லை. என்றாலும் சிசில நெருடல்களைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ரொம்பக் கொச்சையான வசனங்கள் அங்கங்கே இடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர்த்திருந்தால் நாடகம் Total Quality நாடகமாக இருந்திருக்கும்.

குறிப்பாக ஒரு காட்சியைச் சொல்ல வேண்டும். நேரில் பார்க்காமல், நெட்டில் கருத்துப் பரிமாறிக்கொண்டே காதல் புரிகிறார்கள் என்பதைக் கிண்டல் புரிய வரும் நாடகாசிரியர், காதலிக்கப்படுபவரை ஒரு திருநங்கையாகக் காட்டி கேவலப் படுத்துவது, எந்த விதத்திலும் நகைச்சுவையில் சேர்த்தியில்லை. இது ஆபாசம் அருவருக்கத் தக்கது என்பது மட்டுமல்லாமல், கண்டனத்துக்குரியது. மனித கவுரவமும் உரிமைகளும் வெகுவாக மதிக்கப்படும் இந்தக் காலத்தில் எப்படி இப்படி ஒரு காட்சியைப் புகுத்தத் தோன்றிற்று?

காட்சி அமைப்புகள் நன்றாக இருந்தன. குறிப்பாக கால இயந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

சின்னக் கவலைகளை மறந்து இருக்க, கொஞ்ச நேரம் சுதேசி ஐயருடன் உறவாடி மகிழலாம்.

About The Author