மனிதரில் எத்தனை நிறங்கள்!-69

"There’s a door."
"Where does it go?"
"It stays where it is, I think." — Terry Pratchett

"ஆகாஷ், டாக்டர் ப்ரசன்னா என்ன சொன்னதா சொன்னான்?" சந்திரசேகர் சிவகாமியிடம் ஆவலாகக் கேட்டார்.

"புதன்கிழமையில் இருந்து ஆரம்பிச்சுடலாம்னு பொதுவாகத் தான் சொன்னானாம். அதுக்கு மேல் எதுவும் சொல்லலைன்னான்." என்ற சிவகாமி தேசிகாச்சாரி ஆர்த்தியிடம் நாளை பேச விரும்புகிறார் என்பதையும் தெரிவித்தாள். கேட்டு விட்டு அவர் சிறிது நேரம் மௌனம் சாதித்தார். பின் கேட்டார். "என்ன பேசணுமாம்"

"அதை அவர் சொல்லலை"

"என்ன திடீர்னு?"

"உன் பொண்ணுக்கு 21 வயசு முடிஞ்சுடுச்சு இல்லையா. அதான்…."

சந்திரசேகர் ஒரு நிமிடம் யோசித்து விட்டு கண்கலங்கச் சொன்னார், "போன வாரமே அவ பிறந்த நாள் வந்துட்டுப் போயிடுச்சு இல்லையா. யாருமே ஞாபகம் வைக்கலை. வாழ்த்தலை. கஞ்சனான நம்ம அப்பா கூட நம்ம பிறந்தநாளை தாம் தூம்னு கொண்டாடுவார். நான்… நான்…."

தம்பியின் மன உறுத்தல் சிவகாமியையும் அசைத்தது போலத் தெரிந்தது. "சரி விடு. தேதிப்படி தான் பிறந்த நாள் முடிஞ்சுடுச்சு. நட்சத்திரப்படி ஞாயிற்றுக் கிழமை வருது. கொண்டாடிடுவோம்"

சந்திரசேகர் முகம் மலர்ந்தது. சரியெனத் தலையசைத்தார். ஆனால் முகமலர்ச்சி வக்கீல் தேசிகாச்சாரி தயவில் நிறைய நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் அக்காவிடம் கேட்டார். "அவருக்குத் தான் உடம்புக்கு அதிகம் முடியறதில்லையே. இப்ப எல்லாத்தையும் அவர் மகன் வேங்கடாச்சாரி தானே பார்த்துக்கறார். அப்புறம் இவர் ஏன் வர்றார்?"

"ஆர்த்தியை நேரில் பார்த்து அந்த உயிலைப் படிச்சுக் காண்பிக்கணும்னு நினைக்கிறார் போல இருக்கு"

சொல்லி விட்டு சிவகாமி எழுந்து தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். இனி நீ போகலாம் என்று பொருள் உணர்ந்த சந்திரசேகர் அறையில் இருந்து வெளியேறினார். ‘அக்கா தேவைக்கதிகமாக எதைப் பற்றியும் நினைப்பதுமில்லை, பேசுவதுமில்லை. ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றுக்கு எவ்வளவு சுலபமாக நகர்ந்து விடுகிறாள். இது ஏன் என்னால் முடிவதில்லை?’ என்ற எண்ணம் பிரதானமாக அவர் மனதில் எழுந்தது.

அன்று காலை ஆபிசிற்குக் கிளம்பும் முன் சிவகாமி ஆர்த்தியிடம் சொன்னாள். "ஆர்த்தி நம்ம குடும்ப வக்கீல் தேசிகாச்சாரி உன்னைப் பார்த்துப் பேசணும்னார். நாளை காலை பதினோரு மணிக்கு வர்றாராம். அந்த நேரம் எங்கேயும் போயிடாதே. இங்கேயே இரு".

அவள் மருமகளிடம் ஹாலில் சொன்ன போது பார்வதியும், நீலகண்டனும் ஆர்த்தியுடன் இருந்தார்கள். திடீரென்று சிவகாமி இதைச் சொன்னவுடன் அவர் ஏன் என்னைப் பார்க்க வருகிறார் என்று கேட்க நினைத்த ஆர்த்தி கேட்க வாய் திறக்கும் முன் சிவகாமி போய் விட்டாள். அவள் பின்னால் சென்ற சந்திரசேகரும் மகளைப் பார்த்து தலையசைத்தாரே ஒழிய அவள் அருகே நிற்கக் கூட இல்லை.

"எனக்கென்னவோ அன்னைக்கு உயில் பத்தி மூர்த்தி சொன்னது நிஜம்னு படுது. உயில் பத்திப் பேச தான் அவர் வர்றார்னு நினைக்கிறேன்" என்று நீலகண்டன் சொன்னார்.

ஆர்த்திக்கு இதுபற்றி என்ன நினைப்பது என்றே தெரியவில்லை. திடீரென்று பாண்டிச்சேரியில் அந்த மிகச்சிறிய வீட்டில் ஏழையாக வாழ்ந்த வாழ்க்கை மேல் என்று தோன்றியது. அங்கு பணம் குறைவாகவும் சந்தோஷம் நிறைவாகவும் இருந்தது. இங்கு பணம் நிறைய இருந்தாலும் ஏனோ நிம்மதி இல்லை என்று தோன்றியது.

"சரி ட்ரீட்மெண்டை டேப் எடுக்கற விஷயத்தைப் பத்தி உன் பெரியத்தை என்ன முடிவு செஞ்சா?" நீலகண்டன் பேத்தியைக் கேட்டார்.

"எனக்கு எது நல்லதுன்னு தோணுதோ அப்படியே செய்யச் சொல்லிட்டாங்க"

"அப்படி சொன்னாத் தானே சந்தேகப்பட மாட்டாங்க. அதனால் தான் அப்படிச் சொல்லியிருக்கா"

பார்வதி கணவனைப் பார்த்து ஏளனமாய் சொன்னாள். "நரம்பில்லாத நாக்குடா சாமி. அவ என்ன சொன்னாலும் உங்களுக்குக் குற்றம் தானா?’

நீலகண்டன் மனைவியை முறைத்தார். பின் பேத்தியிடம் திட்டவட்டமாகச் சொன்னார். "ஆர்த்தி என்னவானாலும் சரி டேப் எடுக்கணும்னு அந்த டாக்டர் கிட்ட சொல்லிடு"

ஆர்த்தி சம்மதித்தாள்.
++++++++++++++++++++

"எனக்கு அஞ்சு லட்ச ரூபாய் வேணும் பவானி"

பவானி தாயைத் திகைப்புடன் பார்த்தாள். "எதுக்கும்மா?"

"அது உனக்கென்னத்துக்கு. வேணும். அவ்வளவு தான்"

"என்கிட்ட அவ்வளவு பணம் ஏதும்மா. இந்த வீட்டுல பணம் அக்கா தம்பி கைல தானே இருக்கு. இவர் கிட்ட கேட்டாலும் எதுக்குன்னு கேட்பார்"

"பணமா அவங்க உனக்குத் தந்து வைக்க மாட்டாங்கன்னு எனக்கும் தெரியும். உன்னோட நகைகள் கொஞ்சம் கொடு"

"அம்மா இது அவருக்குத் தெரிஞ்சா நான் இங்கே இருக்க முடியாது"

"ஏண்டி பயந்து சாகறே. அவன் என்ன உன் நகைகளை தினமும் ஸ்டாக் எடுக்கவா போறான்"

பவானி முகம் வெளுக்க தாயைப் பார்த்தாள். பஞ்சவர்ணம் சிறிதும் தயங்காமல் மகளிடம் சொன்னாள். "சீக்கிரம் கொண்டு வா. எனக்கு இப்பவே வேணும்."

பவானி சென்றவுடன் மூர்த்தி வந்தான். "பாட்டி! ஹிப்னாடிசம் செஷனை டேப் எடுக்கறதுன்னு முடிவு செஞ்சுட்டா ஆர்த்தி"

"நல்லது. அந்த அசோக் போன் செஞ்சா நமக்கு அந்த டேப் அப்பப்பவே வேணும்னு சொல்லிடு. பணத்துக்கு பவானி கிட்ட நகை கொண்டு வரச் சொல்லியிருக்கேன்."

"பாட்டி. ஆர்த்தி கையிலிருந்தே அந்த டேப்பை நாம் எடுத்துக்க முடியாதா?"

"ஆர்த்திக்கே அந்த டாக்டர் அப்பப்ப தருவானான்னு சந்தேகம். அப்படியே கொடுத்தாலும் அந்த சிவகாமி கைக்குத் தான் அது முதல்ல போகும். கனவையே சொல்ல விடாத அந்த சண்டாளி இதை மட்டும் நம்ம கைக்குக் கிடைக்க விடுவாளா என்ன. அதனால மூர்த்தி அந்த அசோக் போன் செஞ்சா நான் சொன்ன மாதிரியே சொல்லிடு. பணம் செலவாவதைப் பார்க்காதே"

தலையசைத்து விட்டு மூர்த்தி சொன்னான். "பாட்டி, ஆர்த்தியைப் பார்க்க குடும்ப வக்கீல் தேசிகாச்சாரி நாளைக்கு வர்றாராம்"

பஞ்சவர்ணம் நிமிர்ந்து உட்கார்ந்தாள். "சபாஷ். எல்லாமே சரியா ஒத்து வருதுடா…."

மகள் உள்ளே நுழைவதைப் பார்த்த பஞ்சவர்ணம் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. உள்ளே வந்த பவானி சில நகைகளை தாயிடம் கொடுத்தாள். "அம்மா, என்ன செஞ்சாலும் அவர் காதுக்கோ, பெரியக்கா காதுக்கோ விழாத மாதிரி செய், ப்ளீஸ்".

மகள் கிட்டத்தட்ட அழும் நிலையில் பேசியதை எரிச்சலுடன் கேட்டுக் கொண்ட பஞ்சவர்ணம் "சரிடி சும்மா பாடம் நடத்தாதே. எல்லாம் எனக்குத் தெரியும்" என்றாள்.

அந்த நேரமாக மூர்த்தியின் செல் இசைத்தது. போனில் பேசிய மூர்த்தி "ஹலோ அசோக்கா, ஒரு நிமிஷம்" என்றவன் பஞ்சவர்ணத்தின் கண்ஜாடையைப் படித்து விட்டு அங்கிருந்து அவசரமாக நகர்ந்தான்.

பவானிக்கு தாயின் கண்ஜாடையும், மூர்த்தியிடம் தெரிந்த பரபரப்பும் வயிற்றைக் கலக்கியது. என்னவோ நடக்கிறது என்பது புரிந்தாலும் என்னவென்று தீர்மானமாக ஊகிக்க முடியவில்லை. ஆனால் எதிரணியில் சிவகாமி இருக்கிறாள் என்ற நினைவே அவளுக்கு திகிலைக் கிளப்பியது.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. antony

    தொடர் சுவாரசியமாக பொகுது. அதிலும் பாட்டி தாத்தா கெரக்டரொட சன்டை ரொம்ப யதார்த்தம்.

Comments are closed.