மீகாமன் – இசை விமர்சனம்

படம்: மீகாமன்.
இயக்கம்: மகிழ் திருமேனி.
இசை: தமன்.

ஏன் இங்கு வந்தான்

சிக்மெண்ட் ஃபிராய்டின் ரேப் தியரியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பாடல். அதாவது, ஒரு பெண் தனக்குப் பிடிக்காதவன் தன்னைக் கனவிலும் கற்பனையிலும் நெருங்குவதாக நினைத்துக் கோபம் கொண்டு, பின்பு அதே நெருக்கம் பிடித்துப் போய் அவனையும் அவளுக்குப் பிடித்துவிடுவது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இசை உடனே ஈர்க்கிறது. பூஜா வைத்தியனாத்தின் குரலும் அதைத் தக்க வைத்துக் கொள்கிறது.

பாடலிலிருந்து:

ன் கோபத்தை மதுவாய்ச் சுவைத்தான்!
என் கண்களின் சிவப்பை
அலகினில் ஏந்தி
கன்னத்தில் பூசுகின்றான்!

மீகாமன்

நீளம் குறைவான பாடல். மீகாமன் புகழ் பாடுகிறது. தமிழ் சினிமாவின் வழக்கமான நாயக அறிமுகப் பாடல் போல எழுதப்பட்டிருக்கிறது. மானசியும் மோனிஷாவும் இதைப் பாடியிருக்கிறார்கள். இசைச் சேர்ப்பு தமனின் பழகிய – பழைய பாணியில் அமைந்திருந்தாலும் ரசிக்க முடிகிறது. அது நேரம், வழக்கம் போன்ற அறிமுகப் பாடலாக மகிழ் திருமேனி இதை வைத்திருக்க மாட்டார் என நம்பலாம்.

பாடலிலிருந்து:

நிழலே இல்லான் எங்கும் புகுவான்
பயமே இல்லான் தீயை அணிவான்
கரையே இல்லான் காற்றாய்ப் புகுவான்

யாரோ

முந்தைய பாடலின் நீளமான வடிவமாக இதை எடுத்துக் கொள்ளலாம். இசையில் முன்னதை விட இதில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மீகாமனைச் சீண்டும் பாடலாக மேகாவின் குரலில் ஒலிக்கிறது.


மீகாமன் – தீம்

படம் திரில்லர் வகையைச் சார்ந்தது என்று இதன் மூலம் தெரியப்படுத்துகிறார் இசையமைப்பாளர். அதுவும் அவரின் வழக்கமான சாயல் கொண்ட இசையில்.

முதல் இரண்டு பாடல்களையும் எழுதியவர் மதன் கார்க்கி. மூன்றாவதை எழுதி, பாடவும் செய்திருக்கிறார் ஏக்னாத்.

‘மீகாமன்’ என்றால் மாலுமி (கப்பல் தலைவன்) என்று அர்த்தமாம்.

மீகாமன் – கடலில் மட்டும் அல்ல, காற்றிலும் வெல்வான்!

About The Author