முகங்கள் (7)

உண்மை தான் என்று தோன்றியது எனக்கு. சுகாதார அமைச்சு சார்ஸ் விழிப்புணர்வுக்கு மட்டும் எத்தனை மில்லியன் செலவு செய்கிறது. பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வெப்பமானி என்று ஐந்து மில்லியன் செலவாம். தினமும் இருமுறை காய்ச்சலிருக்கிறதா என்று பரிசோதித்தறிய வேண்டியே இத்தகைய ஏற்பாடு. இருந்தும் எதிலும் கவர்ச்சியை விரும்பும் பொதுமக்கள் நிச்சயம் நடிகைகளிடமிருந்து விழிப்புணர்வு பெறுவர்.

ஞாயிறன்று ஜூன்ரோங் மெள்ள எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினான். என்னவென்று கேட்டதும், "ஆண்டி, அம்மா கடைக்கிப் போறாங்க. என்னை உங்க வீட்டுல கொஞ்ச நேரம் இருக்கச் சொன்னாங்க." என்றான். உள்ளே அழைத்ததுமே இருக்கையில் வசதியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கத் தொடங்கினான்.

சிறிது நேரத்திலேயே யீபிங் வந்து, "செல்வி, நான் கொஞ்சம் ‘என் டீ யூ சி’ வரைக்கும் போயிட்டு வரேன். சின்னவ உள்ளே தூங்கறா. இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டா. நான் இதோ, அரை மணியில வந்துடறேன். இந்தா, எதுக்கும் சாவி வெச்சுக்கோ." என்று மிக இயல்பாகச் சொன்னார். சரியென்று வாங்கிக் கொண்ட நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த யீபிங், "என்ன அப்பிடிப் பாக்கற, வரேன். வந்து உங்ககூட நிறைய பேசணும். உன்னோடப் பேசி எவ்வளவு நாளாச்சு. உங்கூட பேசாமத் தான் எனக்கு மூச்சுத் திணறுது. சார்ஸ் வந்தாக் கூட நான் பிழைச்சுப்பேன். பேசாதன்னா, அவ்வளவுதான் என்னால முடியாதுப்பா," பகபகவென்று சிரித்தபடி விடுவிடுவென்று நடையைக் கட்டினார்.

உள்ளிருந்து அண்ணி, "செல்வி, நல்லா வசமா மாட்டிக்கிட்டையா? எங்க கிட்டயெல்லாம் அவங்க நின்னு பேசரதில்ல. கேக்கறவங்க பொறுமையாக் கேக்கணுமே. அதுக்கு நீ தான் லாயக்கு. அன்புத் தொல்லையாக நினைத்து அவர் செய்யும் வம்புத் தொல்லைய நீ தான் சகிச்சுப்ப. இத்தன நாள் உன்னோட பேசாம இருந்ததே ரொம்ப பெரிய விஷயம். யீபிங்கின் மனமாற்றத்துக்கு காரணம் என்னன்னு தெரியுமா?" என்றதும் நானும் குழப்பத்துடன் அவரது பேச்சையும் ரசித்தபடி தெரியவில்லையென்று தலையாட்டியதும், "ஹூம், ஸ்கூல் ஆரம்பிச்சதுமே, சார்ஸ் பற்றிய எல்லா விதமான சந்தேகங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்னு பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஜூன்ரோங் உனக்கு ஒரு வாழ்த்து அட்டை வேற செஞ்சிருக்கான். தெரியுமா?" அண்ணி கூறியதுமே ஜூன்ரோங் கையிலிருந்த அட்டையை என் முகத்தைப் பார்த்தபடி என்னிடம் நீட்டினான். நன்றி கூறி வாங்கிக் கொண்டேன். அட்டை சிறுவனின் குழந்தைத்தனமான வண்ணக் கையெழுத்தில் ‘செல்வி ஆண்டிக்கும் மற்ற எல்லா மருத்துவ ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்’ என்றது. "செல்வி, இந்தச் சின்னப்பய தான் அவங்கம்மாவுக்கு புரிய வச்சிருக்கான். சுத்தமா, கவனமா, இருந்தா சார்ஸ் வராது. பயப்பட வேண்டாம். இந்த இக்கட்டில் தாதிகள் சேவை மிகவும் போற்றத்தக்கதுன்னும் அவங்க டீச்சர் சொல்லிக் கொடுத்தத அவங்கம்மா கிட்ட சொல்லி அவங்க மனச மாத்தியிருக்கான். இந்தச் சின்னப் பொடியன் சொல்லித்தான் யீபிங் சார்ஸைப் பற்றி மேலும் தெரிஞ்சிக்கிட்டாங்களாம். ஒரு வாரமா இதைப் பற்றிய தகவல் சேகரிப்பு தான் யீபிங்கின் வேலை. இப்போ உனக்கே ஏதும் சந்தேகம் இருந்தா நீ அவங்ககிட்ட கேட்டுக்கலாம்."

அண்ணி கூறியதில் எனக்கு துளியும் வியப்பிருக்கவில்லை. அது தானே யீபிங். சேகரித்த செய்திகளை இறக்க வேண்டியேனும் யீபிங் என்னிடம் பேசுவார். அவருடைய அபிமான நடிகை ஜோடேயைப் பற்றிப் பேசவே அவருக்கு நேரம் போதாதே. தீவிரவாதம், விட்டால் போர், பிறகு இருக்கவே இருக்கிறது சார்ஸ். பாவம் யீபிங்கிற்கு ஒரு மாறுதல் வேண்டுமே. மாறுதலுக்கு அவரும் தான் எங்கே போவார்? பாராமுகமானாலும் சரி, தோழமையானாலும் சரி, பெரிய உள் நோக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசும் குணம் அவருடன் பிறந்தது.

அடுத்த வாரம் திங்கள் மதியம் மெய்ஃபெங், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் விதியை மீறினால் ஆறு மாதம் வரை சிறைவாசமும், பத்தாயிரம் வெள்ளி வரை அபராதமும் என்பது இன்று தான் தீர்மானத்திற்கு வந்துள்ளது என்று சுடச்சுட காலையில் கூறினாள். செய்தித் தாளையும் காண்பித்தாள்.

"செல்வி, இதுனால சார்ஸ் பரவாமக் கட்டுப்படுத்த முடியும். நம்ம ஜனங்க தான் ஃபைன் (fine) போட்டாத் தான் கட்டுப்படறேன்றாங்க. என்னதான் செய்யும் அரசாங்கமும் சரி, இந்தா, பிடி அபராதம் போடறேன், இப்பவாவது ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இருன்னுது அரசாங்கம். என்ன, ஒண்ணே ஒண்ணு, குப்பை போடறதுக்கும் அபராதம், சார்ஸ் தனிமையை மீறரதுக்கும் அபராதம் அப்படின்னு வெளினாட்டுல சிங்கப்பூரப் பரிகசிப்பாங்க. அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது. உலகிலேயே ஆக அதிக குற்றங்களுக்கு அபராதம் என்ற பெருமையும் நமக்கு வரும்." துளியும் சிரிக்காமல் இவளால் எப்படித் தான் நையாண்டி செய்ய முடிகிறதோ.

(தொடரும்)

(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)

To buy the EBook, Please click here

About The Author