முகமூடி – இசை விமர்சனம்

தமிழ் சினிமாவுக்கு முதல் சூப்பர் ஹீரோ படம்! கதாநாயகனாக ஜீவா சூப்பர் ஹீரோ உடையில் அழகாக இருக்கிறார்! இயக்கம் மிஷ்கின். இவரும் நிறைய மெனக்கெட்டு இருப்பது ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது.

இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கும் கே (Kay) மிஷ்கினின் முந்தைய படமான ‘யுத்தம் செய்’ படத்திற்கு இசையமைத்தவர். அதில் கவனம் ஈர்த்தவர் இதில் ரசிக்க வைக்கிறார்.

வாயமூடி சும்மா இருடா!

இது நாயகனின் காதல் விவரிப்புகளை நண்பர்கள் நையாண்டி செய்வது போல் அமைந்திருக்கும் பாடல். காதல் விவரிப்புகளை அருமையாக எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி. எளிமையான வார்த்தைகளை அழகாகக் கவிதையாக்கி இருக்கிறார். பாடியிருக்கும் ஆலாப் ராஜூவின் குரல் பாடலுக்குக் கூடுதல் இதம் சேர்க்கிறது.

இரண்டு வெர்ஸன்களில் இடம்பெறும் இந்தப் பாடலுக்கு ஒன்றில் ஸ்ருதி சேர்க்க வயலினும் மற்றொன்றில் கிடாரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டுமே ரசிக்க வைக்கின்றன.

நாளை என் காலைக் கீற்றே நீதானே,
கையில் தேனீரும் நீதானடி,
வாசல் பூவொடு பேசும் நம் பிள்ளை,
கொள்ளும் இன்பங்கள் நீதானடி – இது போல் ரசனையான வரிகள் பாடலில் ஏராளம்!

மாயாவி

இது, நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் பெண் பாடும், காதல் ஏக்கம் சொல்லும் பாடல். கார்க்கியின் இந்த வரிகளைப் பாடியிருப்பவர் சின்மயி. இதில் இசைச் சேர்ப்பும் வருடும் ரகம். இந்தப் பாடலுக்கும் இரண்டு வெர்ஸன்கள். ஒன்று சின்மயி குரலில் குழைய மற்றொன்று புல்லாங்குழல் இசையில் இழைகிறது. சின்மயியின் குரல் இதில் வித்தியாசமான பரிமாணத்தில் சோகம் சொல்கிறது.

‘அவனோடு இவள் இதயம் தொலையும்
தனிமை தெருவில்
இவளோடு இவள் நிழலும் அலையும்’ போன்ற வரிகள் வியந்து ரசிக்க வைக்கின்றன!

குடி வாழ்த்து

‘குடி மக்களின்’ பெருமை, வருத்தம் இரண்டையும் பேசும் பாடல். இதை மிஷ்கினே எழுதிப் பாடியும்இருக்கிறார். முந்தைய படத்தை விட இதில் நன்றாகப் பாடியிருக்கிறார். இடையில் வரும் வசனங்கள் செல்வராகவனது குரலை நினைவுபடுத்துகின்றன. இன்ஸ்டண்ட் ஹிட்டாக வாய்ப்புள்ள பாடல்.

‘போதையில்லாத சந்தோஷமா? இராஜா இல்லாத சங்கீதமா?’ என்று வரிகளிலும் கவனம் ஈர்க்கிறார் மிஷ்கின்.

இந்த மூன்று பாடல்கள் தவிர மற்ற அனைத்தும் வார்த்தைகள் இல்லாமல் இன்ஸ்ட்ரூமெண்ட்டல் வகையில் அமைந்துள்ளன.

Blue panther on the Prowl theme சூப்பர் ஹீரோ படத்துக்கு ஏற்ற தீம் இசை. கேட்கும்போதே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
Come lets fall in love. மாயாவி பாடலை வார்த்தைகள் இல்லாமல் மிதமான ட்ரம்ஸ், கீபோர்ட் மற்றும் கிடாருடன் கேட்டால் எவ்வளவு அருமையாக இருக்குமோ அதுதான் இது. பின்னிரவு மெலடியாக மனதை வருடுகிறது.

Don’t drive Your with this Music on. தலைப்புக்கு ஏற்றாற்போல் இதைக் கேட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட முடியாது. மீறினால் விபத்து ஏற்படலாம். அந்த அளவுக்கு மனதைக் கட்டிப் போடுகிறது. இதைக் கேட்டால்தான் உணர முடியும். வார்த்தைகளால் புரிய வைக்க இயலாது.

Lullaby for the loss. ஆறுதல் சொல்வது போல் அழகாக அமைதியடைய வைக்கும் பாடல். இடையில் வரும் கோரஸ் குரல் மேலும் இதம்.

மொத்த ஆல்பத்தில் வயலினின் ஆதிக்கம் அதிகம். இதுவரை வெறும் சோகத்தைக் காட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்ட வயலின் இதில் பல்வேறு பரிமாணத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காகவே கே(மயல)வைப் பாராட்டலாம். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

‘முகமூடி’ சூப்பர் ஹீரோவுக்கு ஏற்ற இசை ஆல்பம்.

About The Author