முதல் தரம் (2)

"அதனால …நான் சொல்றமாதிரி செய்யுங்க. நாளைக்கு அப்பாகிட்டே, விசாரிச்சேன்…அரவிந்தன் அப்படி ஒண்ணும் நல்லவன் மாதிரி தெரியலேன்னு சொல்லிருங்க…"

"பொய் சொல்லச் சொல்றியா.."

"ஆயிரம் பொய் சொல்லலாங்க ஒரு கல்யாண விஷயத்துலே.."

"அது கல்யாணம் நடக்க…இது நிறுத்த இல்லே சொல்றே…"

"இதுவும் நன்மைக்குத்தான். நம்ம நன்மைக்கு புரிஞ்சுதா…சும்மா…வேற ஏதாவது உளறி வைக்காதீங்க. நான் சொல்றபடி பேசுங்க.."

கண்டிப்பான குரலில் சொன்னாள். திவாகர் எதுவும் பேசத் தோன்றாமல் படுத்துக் கொண்டான். அவள் சொல்வதும் ஒரு விதத்தில் நியாயம்தான். நாளைக்கு இரண்டு மாப்பிள்ளைகளும் போனால், மரியாதை ஆபீசருக்குத்தானே…முதல்
மாப்பிள்ளை சாதாரண போஸ்ட் என்றுதானே சொல்வார்கள். அவ்வளவு ஏன்…கல்யாண விஷயத்திலேயே பாரபட்சம் ஆரம்பித்துவிடுமே…பெரிய மண்டபம்…வீடியோ…எனக்கு வெறும் போட்டோ மட்டும்தான். சாயங்காலம் ரிசப்ஷன்… கச்சேரி என்று அமர்க்களம் செய்வார்கள்….மாமனாரே சொன்னாரே…நம்ம வீட்டுல இதுதான் கடைசி ஃபங்ஷன்…சிறப்பா செய்யப் போறேன்னு…

அப்படியே தூங்கிப் போனான். காலையில் கிளம்பும்போது ராமனாதன் நினைவுபடுத்தினார்.

"மறக்காம… விசாரிச்சுக்கிட்டு வாங்க…நான் நாளைக்கு ஊருக்குப் போகணும்…அப்புறம் கல்யாண விஷயமா மத்த ஏற்பாடுகள் எல்லாம் இருக்கே" என்றார் கவலை அப்பிய குரலில்.

சுகந்தி ஜாடை காட்டினாள். ‘நான் சொன்னதை மறந்துராதீங்க’ என்பதுபோல.

மாலையில் வீட்டு வாசலிலேயே இருவரும் பரபரப்புடன் காத்திருந்தார்கள். அவன் உள்ளே நுழைவதற்கு முன்னமே…’என்ன…என்ன’ என்று விசாரித்தார்கள்.

"என்னங்க…நல்லா விசாரிச்சீங்களா…" என்றாள் சுகந்தி, ‘நல்லா’வில் அழுத்தம் கொடுத்து.

"என்ன மாப்பிள்ளை, பையன் எப்படி…நல்ல ரிசல்ட்தானே" என்றார் ராமனாதன்.

"அடடா…ஏன் இப்படி அவசரப்படறீங்க…உள்ளே வராம எங்கே போகப் போறேன்…முதல்லே உள்ளே வாங்க" என்றான்.

"எப்படியோங்க…மாலதி நல்ல எடத்துல வாழ்க்கைப்படணும்…வசதி இருக்கிற வீடுன்னு கொடுத்துட்டு…பின்னால அவ கண்ணைக் கசக்கக் கூடாது…மாப்பிள்ளை நல்ல குணமா இருக்கணும்…அதுதான் முக்கியம்…பணம் வரும் போகும்…
குணம் அமையறதுதான் கஷ்டம்…அதுக்குத்தான் முதல் மரியாதை…நல்லாதானே விசாரிச்சீங்க…ஒருத்தருக்கு நாலு பேரா…" என்றாள் சுகந்தி.

"சொல்லுங்க மாப்பிள்ளை எனக்கு பயங்கர டென்ஷனா இருக்கு…" என்றார் ராமனாதன்.

‘ஓக்கே’ என்றான் புன்சிரிப்புடன்.

"எ…என்ன சொல்லறீங்க" என்றார் இருவரும் கோரசாய்.

"கிளீன் ரிசல்ட்…நீங்க மத்த ஏற்பாடுகளைக் கவனிக்கலாம். அரவிந்தன் நம்ம மாலதிக்கு எல்லா வகையிலும் ரொம்பப் பொருத்தமானவன். ஒரு அப்பழுக்கு சொல்ல முடியாது…குணத்துல தங்கம்…இருபத்து நாலு காரட்…" என்றான்
உற்சாகமான குரலில்.

‘கடவுளே’ என்று கைகூப்பினார்.

"நான் இப்பவே போய் தெருமுனை பிள்ளையாருக்கு செதறுகாய் போட்டுட்டு வரேன். நீங்க நல்ல சேதி கொண்டு வரணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன். என் பிரார்த்தனை வீண் போகலே…" என்றபடி கிளம்பிப் போனார்.

சுகந்தி முகம் ‘உர்’ரென்று ஆனது.

"என்ன சுகந்தி…கோபமா…என்மேலே…"

"இல்லே…ரொம்ப சந்தோஷம்…படிச்சுப் படிச்சு சொன்னேன்ல…இப்படியா என்னை அவமானப்படுத்தறது…" என்றாள்.

"இல்லே சுகந்தி…நான் செஞ்சது சரின்னு நீயே ஒப்புத்துக்குவே…கொஞ்சம் பொறுமையாத்தான் கேளேன்…"

"ஒண்ணும் வேணாம்.." என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டவளை இழுத்து சோபாவில் அமர வைத்தான்.

அருகில் அமர்ந்து தோளை அணைத்தபடி பேசினான்.

"என்மேலே எவ்வளவு நம்பிக்கை வச்சு உங்கப்பா இங்கே வந்திருக்கார். ஏதோ ஒருவித சுயநல நினைப்போட… நான் அரவிந்தனைப் பத்தி அவதூறாப் பேசினா…அது நியாயமா…அதுவும் இல்லாம…மாலதி யாரு…உன் தங்கை தானே..
அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா…நமக்கும் சந்தோஷம் தானே…"

‘இந்தக் கதையை யார் கேட்டார்கள்’ என்கிற பாவனையில் சுகந்தி அமர்ந்திருந்தாள்.

"நீயே சொன்ன மாதிரி…பணம் வரும் போகும்…குணம் அமையறதுதான் கஷ்டம்னு…நான் நல்ல குணத்தோட இருக்கிறது அவசியம் இல்லையா…இன்னைக்கு உனக்காக ஒரு பொய் சொல்றேன்னு வச்சுக்க…அதுலயே ஒரு டேஸ்ட் வந்து…பின்னால..நம்ம வாழ்க்கையையே பாதிக்கிற மாதிரி…பொய் சொல்ல ஆரம்பிச்சா…அப்ப…அதுல உனக்கு விருப்பம்தானா…சொல்லு…"

அவன் எடுத்துக் காட்டிய விதம் அவள் மனதில் சுள்ளென்று உறைத்தது.

நியாயம்தானே…பொய் சொல்வதில் சுகம் கண்டுவிட்டால் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாமே…

தன் கணவன் குடும்பத்தின் முதல் மாப்பிள்ளை மட்டுமல்ல, முதல் தர மாப்பிள்ளையுங்கூட என்று மனதில்பட்டது அவளுக்கு.

"நியாயம்தாங்க நீங்க செஞ்சது" என்றாள் மனப்பூர்வமாய்.

திவாகர் பெரூமூச்சு விட்டான். மனதில் பாரம் இறங்கிய மாதிரி இருந்தது.

About The Author