யான் – இசை விமர்சனம்

படம்: யான்
இயக்கம்: ரவி.கே. சந்திரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

நெஞ்சே நெஞ்சே

உன்னிகிருஷ்ன்னின் இதமான உச்சரிப்பில் பாடல் மெல்ல ஆரம்பமாகி, மிக மிக மெல்லிய வருடும் இசையுடன் தொடங்குகிறது. காதலின் தவிப்பை அழகாக வரிகளாக்கியிருக்கிறார் கபிலன். பின் பாதியில் வரும் சின்மயியின் குரலும் கவர்ந்திழுக்கவே செய்கிறது.

துளிப்பா :

"கண்ணை மூடி தூங்க வேண்டும் பாடு
பெண்ணே அழகியலாலே
காதல் கண்கள் தூங்கும் பொது, பூவே உந்தன்
புடவையே தோழி"

நீ வந்து போனது

அரேபிய உச்சரிப்பில் ஆரம்பிக்கும் பாடல், வழக்கமான ஹாரிஸ் பாணி இசையில் தொடர்கிறது. இசை கலவையாக ஒலித்து ரசிக்க வைக்கிறது. மற்றுமொரு குறிப்பிட வேண்டிய விஷயம் பாம்பே ஜெயஸ்ரீயின் குரல். நிறைய பேர் பாடியிருந்தாலும் இவரின் குரல் மட்டும் தனித்து ஒலிக்கிறது. காதலின் ஏக்கத்தை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் தாமரை.

துளிப்பா :

"கடல் கண்ணாலே நீ பார்த்த பார்வைகள் போதாமல் ஏங்கினேன்
சிறு ஓசைகள் கேட்டாலே நீதானோ என்றே நான் தேங்கினேன்
வெறும் பிம்பத்தை நீ என்று கை நீட்டி ஏமாந்து போகிறேன்
கள்ளம் இல்லா வெள்ளை நிலா நீ தானடி"

லட்சம் கலோரி

மீண்டும் ஓர் அழகான மென் டூயட் பாடல். இம்முறை பா.விஜய் அறிவியலுடன் காதலைக் குழைத்து கவிதையாக்க, அர்ஜூன் மேனன் மற்றும் சின்மயி பாடியிருக்கிறார்கள். முதல் முறையே கவனத்தினை ஈர்க்கிறது. எலக்ட்ரானிக் ஒலிகளுடன் வாத்தியங்களும் அங்கங்கே ஒலித்து ரசிக்க வைக்கின்றன.

துளிப்பா :

"ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்கள்
ஒன்றாகவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே"

ஹே லம்பா லம்பா

முழுக்க முழுக்க மேற்கத்திய இசை. சில வெற்றிப் பாடல்களின் சாயல்களுடன் தெரிந்தாலும் வாலியின் வரிகள் பாடலுடன் ஒன்ற வைக்கிறது. கிருஷ்ணனின் வித்தியாசமான குரல் பாடலுக்குப் பெரும் பலம். இடையில் வரும் ஆங்கில வரிகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

துளிப்பா :

"அவள் அழகால் என்னை ஈர்த்தாள்
செவ்வனலை என்னுள் வார்த்தாள்
ஒரு மாலைப் பொழுதும் காஃபி கப்பும் சேர்ந்தது போலே"

ஆத்தங்கர ஓரத்தில

ஹாரிஸின் இசையில் கானா பாலாவின் குரல். வித்தியாசமான கூட்டணியில் ஹைடெக் கானா பாடலாக உருவாகியிருக்கிறது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். ஒலி சேர்ப்பும் பாடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலாவின் குரலையும் வித்தியாசமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். முதல்முறை கேட்கும்போது நிச்சயமாக சிரிக்காமல் இருக்க முடியாது (ரசித்துக் கேட்டால்!). இந்த கானாவும் கபிலனே எழுதியிருக்கிறார்.

துளிப்பா :

"மங்காத்தா ராணிய பாத்தேனே,
கைமாத்தா காதல கேட்டேனே
இந்த கோமளவள்ளி என்ன தொட்டா
குளிக்கவே மாட்டேனே"

மொத்தத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு மேலும் ஒரு வெற்றி பாடம்!

யான் – எங்கும் ஒலிப்பான்.

About The Author