விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (28)

6.கர்ம யோகத்தின் நிறைநிலை

6.2.சமநிலை அடைந்தவர் எப்படி இருப்பார்?

சமநிலை அடைந்தவர் எப்படி இருப்பார் என்பதை விளக்க சுவாமி ஓர் எடுத்துக்காட்டைச் சொல்கிறார்.

மகரிஷி வியாசர் வேதாந்த சூத்திரங்களை இயற்றியவர். அவர் புதல்வர் சுகர். பிறவியிலேயே நிறைநிலை அடைந்தவர். வியாசர் தமது மகனுக்குத் தாமே தத்துவ உபதேசம் செய்தார். பிறகு, ஜனக மாமன்னரின் அரசவைக்கு ‘மேல்படிப்பு’க்காக அனுப்பினார்.

ஜனகர், மன்னராக இருந்து ஆட்சிப்பொறுப்பைச் சிறப்பாக நிர்வகித்து நடத்தி வந்தபோதிலும், தான் உடல் என்னும் உணர்வை விட்டு விலகி, ஆத்மா என்னும் பிரக்ஞையுடன் வாழ்ந்த நிறைநிலையாளர். பிரம்மஞானம் கற்க சுகர் தம்மிடம் வரப்போகிறார் என்றறிந்த ஜனகர் முன்கூட்டியே சில ஏற்பாடுகளைச் செய்து வைத்தார். அதன்படி, சுகர் மன்னரின் அரண்மனை வாயிலை அடைந்தபோது, அவர் மாமுனிவர் வேதவியாசரின் புதல்வர் என்று தெரிந்தும் வாயிற்காவலர்கள் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் ஓர் இருக்கை மட்டும் அளித்தனர். இவ்வாறு மூன்று பகல் இரவுகள் அப்படியே அமர்ந்திருந்தார். "யார்?… என்ன விஷயம்?" என்று யாரும் அவரைக் கேட்கக்கூட இல்லை. அதற்குப் பின் மந்திரிகளும், அரசவையில் உயர்பதவியில் உள்ளவர்கள் பலரும் வாயிலுக்கே வந்து அவரை வரவேற்று அரண்மனைக்குள் இட்டுச் சென்றனர். அழகான இடங்களை எல்லாம் சுட்டிக்காட்டி, வாசனைத் திரவியங்கள் நிறைந்த நீரில் குளிப்பாட்டி, நேர்த்தியான ஆடைகளைப் புனைவித்து, சிறப்புச் செய்தனர். எட்டு நாட்கள் இப்படி ஆடம்பரத்தில் கழிந்தன. ஆனாலும் இப்படி மாறுபட்ட உபசரிப்புகளால் அவர் முகத்தில் எந்தவித மாறுதலும் காணப்படவில்லை. அமைதியும் ஆழ்ந்த கம்பீரமும் அப்படியே இருந்தன!

பின்னர், அவரை மன்னரின் அரசவைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு இசை, நடனம் என்று பலவிதக் கேளிக்கைகள் நடந்து கொண்டிருந்தன. மன்னர், சுகரிடம் ஒரு கிண்ணத்தைக் கொடுத்தார். அதில் விளிம்புவரை பால் இருந்தது. அதில் துளிக் கூடச் சிந்தாமல் அரசவையை ஏழுமுறை சுற்றிவர வேண்டுமென்று கூறினார். பலத்த இசை! ஆனால், எதனாலும் சுகரின் சிந்தை சிதறவில்லை. ஒரு துளிப் பால் கூடச் சிந்தாமல் பணியை நிறைவு செய்து விட்டார். அந்த அளவு ‘ஸ்திதப் பிரக்ஞர்’ அவர்! அவரது அனுமதி இல்லாமல் உலகின் எந்த விஷயமும் அவரைப் பாதிக்க முடியாது. ஜனகர் அவரிடம் நிறைவாகச் சொன்னது, "தந்தையிடமும், நீயாகவும் நீ எதைக் கற்றுக் கொண்டிருக்கிறாயோ, அதைத் திருப்பிச் சொல்லத்தான் என்னால் முடியும். நீ சத்தியத்தை உணர்ந்துவிட்டாய்! வீடு செல்லலாம்".

சுகப் பிரம்மம் எனக் குறிப்பிடப்படும் இந்த சுகர் பற்றி ஒரு சுவாரஸ்யமான உபரிக்கதை.

அவர் காட்டு வழியே நிர்வாணமாக ஓடிக் கொண்டிருக்கிறார். வழியில் ஒரு நீர்நிலை. அங்கே அழகு மகளிர் ஆடையின்றி நீராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர் போவதை அவர்கள் இலட்சியமே செய்யவில்லை. பின்னால் அவரைத் துரத்திக் கொண்டு வியாசர், "மகனே!" என்று குரல் எழுப்பியபடி ஓடுகிறார். அப்போது அந்த மங்கையர், அவசரம் அவசரமாகத் தங்கள் மேனியை இழுத்துப் போர்த்திக் கொள்கின்றனர். வியப்பாயிற்று வியாசருக்கு. "என் மகன் இளைஞன். நிர்வாணமாக ஓடுகிறான்; அவனைக் கண்டு நீங்கள் யாரும் வெட்கமே படவில்லை. ஆனால், என்னைப் பார்த்ததும் நாணம் ஏன் வந்தது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் சொன்ன பதில், "இப்படி நீங்கள் நின்று கவனித்துக் கேட்கிறீர்கள் அல்லவா? அதுதான் வித்தியாசம்!"

(தொடரும்)

About The Author