வேதக்கோயில் – 3

தொலைக்காட்சிப் பெட்டியில் தேவாலயக் காட்சியை வெறித்துப் பார்த்தேன். இதை எப்படி வர்ணிப்பது, எப்படி ஆரம்பிப்பது? ஆனா என் ஆயுளே அந்தக் கணத்தில்தான் இருக்கிறாப் போல உணர்ந்தேன். ‘ரோட்ல போற எலியைப் பிடிச்சி மடில நானே கட்டிக்கிட்டேன். அந்த முட்டாத் … சொல்றான்னுட்டான், சொல்லாட்டி நான் அம்பேல்’.

காட்சி கிராமப்புறத்துக்கு நழுவுமுன் இன்னும் நன்றாக தேவாலயத்தைப் பார்த்துக் கொண்டேன். ”தேவாலயம்னா நல்ல உயரம், உயரமோ உயரம் வானத்தைப் பார்க்க எழுகிற உயரம். அவற்றுக்குப் பிடிமானம் வேணும். அவற்றைத் தாங்கி தூக்கி நிறுத்த. அவற்றை உத்திரம் என்று சொல்கிறோம். பார்க்க தண்டவாளத்து அடிக்கட்டைகள் முட்டுக் குடுத்துருப்பாங்கள்ல, அதைப் போலன்னு சொல்லலாம். ஆனால் அடிக்கட்டைகள், அதுவே உனக்குத் தெரியாது இல்லையா? ‘நீ என்ன ஆத்தக் கண்டியா அழகரச் சேவிச்சியா…’ தேவாலய முகப்புகளில் பிசாசு உருவங்கள் செதுக்கப் பட்டிருக்கும், சிலதில். சிலதுல பிரபுக்களும், சீமாட்டிகளும், ஏன்னு என்னைக் கேட்காதே.”

அவன் தலையாட்டினான். உடம்பின் மேல்பாகமே முன்னும் பின்னும் ஆடியது.

”சரியாச் சொல்லல போலிருக்கே, சரியா விளங்குதா?” என்று கேட்டேன்.

தலையசைப்பதை நிறுத்தி சோபா விளிம்பு வரை முன்குனிந்தான். கவனித்தபடியே தாடியை நீவி விட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு விளங்கவில்லை போலத்தான் இருந்தது. என்றாலும் நான் தொடர்ந்து பேச அவன் காத்திருந்தான். ‘ம், சொல்,’ என்கிறாப் போல அவன் தலையாட்டினான். அவன் விடறாப்ல இல்லை. மாட்னேடா தம்பி. ”அவை எல்லாமே ரொம்பப் பெருசு. பிரம்மாண்டம்! சிலது பளிங்குக் கல்லினால் கட்டப் படுகின்றன. அந்தக் காலத்துல தேவாலயம் கட்டியபோது மனிதர்கள் கடவுளுக்குக் கிட்டத்தில் இருக்க விரும்பினார்கள். அப்ப எல்லார் வாழ்க்கையிலும் கடவுள் ஒரு முக்கிய அம்சமாயிருந்தார். தேவாலயக் கட்டுமானத்தில் இருந்தே அதை நாம சொல்லலாம்… மன்னிக்கணும்…” என்றேன் நான். ”அத்தனை கோர்வையாச் சொல்ல நான் லாயக் இல்லை.”

”அதுனால என்ன சகல” என்றான் அவன். ”உன்னாண்ட ஒரு கேள்வி கேட்கலாம்னிருக்கு, நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்கப்டாது… ஒரு சின்னக் கேள்வி, பதில், ஆம், இல்லை, அவ்ளதான். நீ மத நம்பிக்கை கொண்டவனா?”

நான் தலையசைத்தேன், அவனால் ம், அதைப் பார்க்க முடியாது. ஒரு கண்சிமிட்டலும் தலையசைத்தலும் அவனுக்கு ஒண்ணுதான். ”இல்லன்னுதான் படுது. எதிலயுமே இல்லன்னு வையி. சில சமயம் அதுவே பிரச்னையாயிருது,”

”ஆமா.”

அந்த ஆங்கில வர்ணனையாளன் இன்னும் பேசிக் கொண்டிருந்தான். தூக்கத்தில் என் மனைவியின் மூச்சு போக்குமாறியது. ஒரு நீண்ட உள்மூச்சுடன் அப்படியே தொடரந்தாள்.

”என்ன மன்னிச்சிக்க. உனக்கு தேவாலயம் எப்படி இருக்கும்னு என்னால சொல்ல முடியல. எல்லாம் மனசுல இருக்கு. ஆனாலும் இதுக்கு மேல சொல்லத் தெரியல…”

தலையைக் குனிந்தவாக்கில் என்னைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் அசைவில்லை.

”வாஸ்தவத்தில்…” என்றேன் நான். ”தேவாலயங்களை நான் பெரிய விஷயமா நினைக்கல. அதுல என்னா இருக்கு, ஒரு குசுவும் இல்லை. அர்த்தராத்திரில தொலைக்காட்சில பாக்கலாம். அம்புடுதேன்!”

சட்டென்று அவன் தொண்டையைச் செருமிக்கொண்டான். எதோ மேலேறி வந்தது. கால்சாராய்ப் பையில் இருந்து கைக்குட்டை எடுத்தான். ”எனக்குப் புரியுது சகல. பரவால்ல. விட்ரு சகல” என்றான் அவன். ”ஏ இங்க பார், எனக்கு ஒரு உதவி செய்யறியா? ஒரு யோசனை. ஒரு வெள்ளை அட்டை, ஒரு பேனா கிடைக்குமா?”

நான் மாடியேறினேன். காலில் வலுவே இல்லை. ஓடியாடி ஓஞ்சிட்டாப்ல துவண்டன. இவள் அறையில் மேஜையில் சிறு கூடையில் சில பால்பாயிண்ட் பேனாக்கள். அட்டை… கீழே சமையல் அறையில் காய்கறிப் பை, வெங்காயத் தாள்களைத் தட்டி உதறினேன். கூடத்துக்கு அதை எடுத்து வந்தபடியே அவன் கால்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். டீபாயில் சாமான்களை நகர்த்திவிட்டு தாளை ஓரங்களை நீவி விரித்துக் கொண்டேன்.

அவனும் சோபாவிலிருந்து இறங்கிக் கம்பளத்தில் என்னருகே உட்கார்ந்து கொண்டான். காகிதத்தில் கையோட்டிப் பார்த்தான். ஓரங்களையும் பார்த்துக் கொண்டான். ”சரி, நாம ஆரம்பிக்கலாம்…” என் கையில் பேனா. மேல் அவன் கையைப் பொத்தினாப் போல வைத்துக் கொண்டான். ”ஆரம்பி சகல. வரைஞ்சு காட்டு” என்றான். ”நீ வரைஞ்சிக்கிட்டே வா, நான் கூடவே வர்றேன். சரியாயிருக்கும். நான் சொல்றாப்ல ஆரம்பி. ம்…”

நான் ஆரம்பித்தேன். ஒரு வீடு போல, செவ்வகப் பெட்டி வரைந்தேன். நான் இருக்கிற வீடு. அதன் மேல் கூரை. ரெண்டு பக்கமும் மேலே போகப் போகக் குறுகும் ஸ்தூபிகள். பார்க்கவே வேடிக்கை. ”அருமை” என்றான் அவன். ”நல்லாப் பண்ற சகல. உன் ஆயுசுல இந்த மாதிரி சம்பவம் நடக்கும்னு நினைச்சிருக்க மாட்டே, ஒரு குருடனுக்கு வரைஞ்சி காட்டறது… இல்லியா? வாழ்க்கையே விசித்திரமானது, நம்ம எல்லாருக்கும் தெரியும். ம், மேல போகலாம் சகல…”

மேல் வளைவு மழைமறைப்புகளுடன் ஜன்னல்கள். மேல் உத்திரங்கள். நெடுங் கதவங்கள். கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டம்ளர் கவிழ்த்தி ஜோசியம் பார்க்கிற மாதிரி யிருந்தது. கை இழுத்துக்கொண்டு போனது. தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிந்து அலையலையாய் ஓடிக் கொண்டிருந்தது. பேனாவைக் கீழே வைத்துவிட்டு கை விரல்களைச் சொடக்கெடுத்தேன். அவன் காகிதத்தை வருடிக் கொண்டிருந்தான். விரல் நுனிகளால் நான் வரைந்த பகுதிகளைத் தொட்டுக்கொண்டே வந்தான். தலையசைத்துக் கொண்டான்.

”நல்லாருக்கு” என்றான்.

மீண்டும் பேனாவை எடுத்தேன். அவன் என்னைப் பிடித்துக் கொண்டான். நான் ஓவியன் அல்ல. அதையே திரும்ப வரைந்தேன் நான்.

இவள் கண்விழித்தாள். அரைகவனமாய்ப் பார்த்தாள். சோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்தாள், உடை நெகிழ்ந்தது. ”என்ன பண்றீங்க? எனக்கும் சொல்லுங்க.”

அவன் சொன்னான். ”நாங்க ரெண்டு பேருமா தேவாலயத்தை வரையறோம், இன்னும் அழுத்தமா வரையலாம் சகல. அப்டிதான் சகல, அவ்ளதான்.” அவன் சொன்னான். ”வந்திட்டது. உன்னால முடியாதுன்னு நினைச்சேல்ல. நல்ல காஸ் சயைமல் இது, புரியுதா?… அத்தனை சுளுவா வேலை செய்யிறேன்றேன். ஒரு நிமிஷத்ல, நாம பெரிசா எதாவது செய்யப் போறோம். இப்ப பழகின கை, தூள் கிளப்பு… இப்ப உள்ள சில மனுசாளை வரை. மனுசாள் இல்லாமல் என்ன தேவாலயம்?”

இவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. ”என்ன பண்றீங்க? என்ன நடக்குது இங்க?”

”இருக்கட்டும்” என்றான் அவன் என்னைப் பார்த்து. ”கண்ணை மூடிக்க.” நான் அப்படியே செய்தேன். ”கண்ணை மூடியாச்சா? டபாய்க்கலியே?” – ”இல்ல, கண் மூடிருக்கு” என்றேன் நான். ”அப்டியே இருக்கட்டும். இப்ப நிறுத்தாம அப்டியே வரை சகல…”

ஆக நாங்கள் வேலையைத் தொடர்ந்தோம். என் விரல்கள் மேல் அவன் விரல்கள் சவாரிசெய்தன. என் வாழ்க்கை… அந்தக் கணத்தில் எல்லாமே அதுதான் என் வாழ்க்கை போலிருந்தது. அவன் சொன்னான். ”சரிதான்னு தோணுது. உனக்குத் தெரிஞ்சிட்டுதுன்னு நினைக்கிறேன். இப்ப பாரு, பாத்துச் சொல்லு.”

கண்ணைத் திறக்க மனசேயில்லை. இப்டியே இன்னுங் கொஞ்சநேரம் இருக்கலாம். யப்பா, என்ன அருமையான அனுபவம். ”ஏய், கண்ணைத் திறந்தாயா?” நான் கண்ணைத் திறக்கவில்லை. இப்போது நான் என் வீட்டில் இருக்கிறேன். அது தெரியுது, ஆனால் நான் எதற்கும் உள்ளே இருக்கிற நினைப்பே இல்லை.

”ஆகா!” என்றேன் நான்.

About The Author