அமானுஷ்யன்-(24)

அந்தக் காவல் நிலையத்தில் நுழைந்த அந்தக் கிராமத்தானைப் பார்த்து "யார் நீ, என்ன வேண்டும்" என்று ஒருவரும் கேட்கவில்லை. இத்தனைக்கும் யாரும் எந்த முக்கியமான வேலையிலும் இருக்கவில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் திருதிருவென்று விழித்தபடி உள்ளே நுழைந்த அந்த கிராமத்தான் யாராவது தன்னைப் பார்ப்பார்களா என்று பொறுத்துப் பார்த்தான். ஆனால் அவனைக் கவனித்தாலும் பெரிய முக்கியத்துவம் எதுவும் தர வேண்டியதில்லை என்பது போல முன் மேசையில் இருந்த ஒரு போலீஸ்காரன் தன்னருகே நின்றிருந்த இன்னொருவனிடம் சொந்தக் கதை ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

அந்தக் கிராமத்தான் வெற்றிலையால் காவி நிறமாயிருந்த பற்களைக் காட்டி முன்னால் இருந்த அந்த இரண்டு போலீஸ்காரர்களிடமும் வணக்கம் தெரிவித்தான்.

"என்ன?" என்று உட்கார்ந்திருந்த போலீஸ்காரர் எரிச்சலுடன் கேட்டான்.

"ப்யாரிலால் சாரைப் பார்க்க வேண்டும்"

"வீட்டுக்குப் போய் விட்டார். நாளைக்கு காலையில் தான் வருவார்"

என்ன செய்வது என்று யோசித்தபடி அந்த கிராமத்தான் தன் கையிலிருந்த பையிலிருந்து சில கட்டுப் பணத்தை எடுத்து ஆலோசனையுடன் பார்த்தான். அந்தக் கட்டில் முன்னும் பின்னும் இருப்பது மட்டும் தான் ரூபாய் நோட்டுகள், நடுவே இருப்பதெல்லாம் காகிதத்தாள்கள் என்பதை அறியாத அந்தப் போலீஸ்காரர் ஆர்வத்துடன் கேட்டார். "என்ன விஷயம்?"

"கிஷோர் சார் இந்தப் பணத்தை சார் கையில் கொடுத்து விட்டு வரச் சொன்னார். மற்ற விஷயத்தைப் போனில் சொல்லிக் கொள்கிறேன் என்றார். ஆனால் அவர் இல்லையே என்ன செய்வது?"

"என்னிடம் கொடுத்தால் நான் நாளை காலையில் கொடுத்து விடுகிறேன்"

கிராமத்தான் விவரமாக மறுத்தான். "என் பணமாய் இருந்தால் உங்களிடம் கொடுத்து விட்டுப் போவேன். கிஷோர் சார் பணத்தை அப்படித் தர முடியாது. அவர் கோபித்துக் கொள்வார்"

யார் அந்த கிஷோர் சார் என்று கேட்கும் சிரமத்தை அந்தப் போலீஸ்காரன் எடுத்துக் கொள்ளவில்லை.

"ப்யாரிலால் சார் வீடு பக்கமா தூரமா?" கிராமத்தான் கேட்டான்.

"பக்கம் தான். ஆனால் அவர் வீட்டுக்கு யாரும் போய் பேசுவதை விரும்ப மாட்டார்"

"அப்படியானால் இந்தப் பணத்தை கிஷோர் சாரிடமே திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நான் இரவு 12 மணி ரயிலுக்குப் போயாக வேண்டும்" என்று சொன்ன கிராமத்தான் கிளம்பத் திரும்பினான்.

போலீஸ் ஸ்டேஷன் வரை வந்த கட்டு கட்டான பணத்தைத் திரும்ப அனுப்புவது ப்யாரிலாலுக்குக் கோபத்தை உண்டாக்கும் என்று முடிவு செய்த அந்த போலீஸ்காரன் "ஒரு நிமிஷம் பொறு" என்று அவசரமாக அந்த கிராமத்தானை நிறுத்தி ப்யாரிலால் செல்லுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

ப்யாரிலாலுக்கு கிஷோர் என்ற பெயரில் இரண்டு மூன்று நபர்களைத் தெரியும் என்றாலும் எவனும் பணம் கொடுத்து அனுப்புபவன் அல்ல. குடிபோதையில் இருந்த ப்யாரிலாலுக்கு கட்டு கட்டாய் பணம் என்று சொன்ன பிறகு அனுப்பியது யார் என்பதில் அக்கறை இருக்கவில்லை. "அந்த ஆளை வீட்டுக்கு அனுப்பு" என்று கட்டளையிட்டான்.

அந்தப் போலீஸ்காரன் ப்யாரிலாலின் வீட்டு அடையாளத்தைச் சொல்லிக் கிராமத்தானை அனுப்பினான்.

ப்யாரிலால் வீட்டில் தனியாகத் தான் இருந்தான். குடித்துக் கண்கள் சிவந்திருந்தன. அந்தக் கிராமத்தானின் வணக்கத்தை அலட்சியத்துடன் ஏற்றுக் கொண்டான்.

கிராமத்தான் பையிலிருந்து பணத்தை எடுத்தபடியே சொன்னான். "கிஷோர் சார் கொடுக்கச் சொன்னார். அவர் உங்களிடம் போன் செய்து மற்ற விவரத்தை எல்லாம் சொல்கிறாராம்"

அவன் ஏதோ யோசனை செய்பவன் போல பணத்தை மறுபடி பையிலேயே போட்டு கையைப் பையிலிருந்து எடுத்தது மட்டும் தான் ப்யாரிலாலுக்குத் தெரியும். அடுத்த கணம் அவன் கை ப்யாரிலாலின் நெற்றிப் பொட்டில் தட்ட ப்யாரிலால் சுயநினைவை இழந்தவனாய் கீழே சரிந்தான். அவனுக்கு சுயநினைவு வந்த போது அவனுடைய கைகளும், கால்களும் கட்டப்பட்டிருந்தன. ப்யாரிலாலுக்கு நடப்பது கனவா நனவா என்று ஒரு கணம் விளங்கவில்லை. விளங்கிய போதோ வந்த கோபத்திற்கு அளவேயில்லை.

"டேய் யார் நீ? போலீஸ் அதிகாரியைத் தாக்கினால் என்ன ஆகும் தெரியுமா?"

அக்ஷய் அமைதியாகச் சொன்னான். "கோபப்படுவதற்கு முன் உன் நிலைமையைப் புரிந்து கொள்"

"என்னடா என் நிலைமை?"

அக்ஷய் தரையில் அவனருகில் அமர்ந்தான். "மனித உடலில் எத்தனையோ மர்ம ஸ்தானங்கள் இருக்கின்றன. அந்த இடங்களில் தேவையான அளவு வேகத்துடன் மிகச்சரியாக அடித்தால் எந்த ஆயுதமும் இல்லாமலேயே எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தி விட முடியும். மரணம், பக்கவாதம், மூளையை செயலிழக்க வைப்பது, கோமா என்ற மயக்க நிலைக்குப் போக வைப்பது எல்லாம் மிக சாதாரணம். இப்போது பாரேன்…" கையை ஏதோ முத்திரை நிலைக்குக் கொண்டு வந்து ப்யாரிலாலின் மூக்கிற்குக் கீழே ஒரு அடி அடித்தான். அடுத்த கணம் ப்யாரிலால் தாங்க முடியாத வலியுடன் அலறினான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

"உன்னை மயக்கமடைய வைத்த முதல் அடி, இப்போது தந்த இந்த சின்ன அடி எல்லாம் உனக்கு எந்த நிரந்தர பாதிப்பும் ஏற்படுத்தாது. ஆனால் இப்போது அடித்த அடியையே முத்திரையை மாற்றி உன் தாடையில் அடித்திருந்தால் உனக்கு பக்க வாதம் வந்து விடும். நெற்றிப் பொட்டில் அடித்தால் கோமாவுக்குப் போய் விடுவாய். நம்பிக்கை இல்லா விட்டால் செய்து காட்டட்டுமா?"

ப்யாரிலாலுக்கு அவனுடைய அமைதியான முகமும், சலனமே இல்லாமல் சொன்ன விதமும் பெரும் கிலியை ஏற்படுத்தியது. இவனால் எதுவும் முடியும் என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை. அனுபவித்துக் கொண்டிருந்த வலியுடன் கத்தினான். "வேண்டாம். வேண்டாம். உனக்கு என்ன வேண்டும்? அதைச் சொல்"

"யாரோ ஒரு தீவிரவாதி குண்டு வைத்ததாக ஒரு சிறுவனை சொல்லச் சொன்னாயே அந்த தீவிரவாதிக்கும் உனக்கும் எதாவது முன்பகை இருக்கிறதா?"

ப்யாரிலால் சொன்னான். "இல்லை."

"பின் ஏன் சொல்லச் சொன்னாய்"

அவன் சற்றுத் தயங்க அக்ஷய் தன் வலது கை விரல்களைக் கூராக்க ஆரம்பித்தான். ப்யாரிலால் அவசரமாகச் சொன்னான். "அப்படி சொல்லச் சொல்லி மேலிடத்து உத்தரவு."

"யாரந்த மேலிடம்"

"டிஐஜி கேசவதாஸ்"

"அந்த டிஐஜிக்கும் அவனுக்கும் ஏதாவது பகையா?"

"இல்லை….தெரியவில்லை…. அவருக்கு அவருக்கும் மேலே இருந்து வந்த உத்தரவு என்றார். சத்தியமாக அதற்கு மேல் ஒன்றும் எனக்குத் தெரியாது"

"சரி. நீ செய்தது சட்டப்படியான நியாயமான செயலா?"

"இல்லை"

"அப்படியானால் அது தண்டனைக்குரிய செயல் தான். இல்லையா?"

ப்யாரிலாலின் முகம் வெளிறியது. "தயவு செய்து எதுவும் செய்து விடாதே. உனக்கு பணம் வேண்டுமானால் தருகிறேன்"

"எவ்வளவு?"

"இருபதாயிரம் தருகிறேன்"

அக்ஷய் முகத்தில் புன்னகை வந்தது. "என் தீர்ப்பில் நீ ஐந்து லட்சமாவது தர வேண்டும்"

"அவ்வளவு என்னிடம் இல்லை"

"அப்படியானால் நீ தண்டனையை அனுபவித்தாக வேண்டும். துரதிர்ஷ்டசாலி நீ. சொல். பக்கவாதம் பரவாயில்லையா, கோமா பரவாயில்லையா?"

ப்யாரிலால் அவனை முழுவதும் நம்பினான். அவன் வெற்று வாய் சவடால் அடிப்பவன் அல்ல என்பது புரிந்தது. எந்த அடிக்கும் அவன் அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் கச்சிதமாக செய்ய வேண்டியதை செய்ய முடிந்தவனாக அவன் இருந்தான். படுத்த படுக்கையாக இருந்து விட்டால் சேர்த்த செல்வமெல்லாம் என்ன சுகம் தர முடியும்?

"சரி கட்டவிழ்த்து விடு. தருகிறேன்"

"எங்கிருக்கிறது என்று சொல். நான் எடுத்துக் கொள்கிறேன்."

ப்யாரிலால் முதலில் தயங்கினான். கடைசியில் பணம் இருக்கும் பீரோவையும், சாவி வைத்திருக்கும் இடத்தையும் சொன்னான்.

அக்ஷய் தன் கைகளுக்கு உறையை மாட்டிக் கொண்டான். பீரோவைத் திறந்து பார்த்த போது பணக்கட்டுகளும், நகைகளும் கொட்டிக் கிடந்தன. எண்ணி ஐந்து லட்சம் பணத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு பீரோவைப் பூட்டி சாவியை எடுத்த இடத்திலேயே வைத்தான்.

ப்யாரிலாலில் அருகில் வந்த அக்ஷய் அவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான். வலியில் உயிரே போவது போல இருந்தது. ப்யாரிலால் சுயநினைவை இழந்தான். சிறிது நேரம் கழித்து சுயநினைவு திரும்பிய போது அவன் கை கால் கட்டுகள் அவிழ்க்கப் பட்டு இருந்தன. ஆனால் வலி மட்டும் அப்படியே இருந்தது. நிறைய நேரம் அப்படியே படுத்திருந்த ப்யாரிலால் தன்னை இப்படியொரு நிலையில் மாட்டி விட்ட கேசவதாஸை மனதார சபித்தான்.

************

ஆனந்திற்கு இரவு உறக்கம் வரவில்லை. அவன் நினைவெல்லாம் தம்பியாகவே இருந்தான். ஆச்சார்யாவின் நண்பன் என்று சொல்லப்பட்ட அந்த நாக மச்சமுள்ள இளைஞன் தன் தம்பியாகவே இருப்பான் என்று தோன்ற ஆரம்பித்த பின் அவன் உயிருடன் இருப்பானா, இல்லையா என்ற சந்தேகம் அவன் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. எங்கிருந்தாலும் மகன் நன்றாய் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதையே வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளாக வைத்துக் கொண்டு வாழும் அம்மாவை நினைக்கையில் மனம் ரணமானது.

மூன்று வருடங்களுக்கு முன் ஞான திருஷ்டியில் பார்த்துச் சொன்ன அந்தச் சாதுவின் நினைவு வந்தது. அவர் அன்று ‘எதிர்காலத்தில் அவன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று சொன்னது எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். திடீரென்று ஒரு யோசனை வர கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்தரை. அம்மா தூங்கியிருக்க மாட்டாள். அம்மாவிற்குப் போன் செய்து நலம் விசாரித்து, அவள் கேள்விகளுக்கு சிறிது நேரம் பதில் சொல்லி விட்டு கேட்டான்.

"அம்மா மூன்று வருஷங்களுக்கு முன் உங்கள் தோழி ஒருத்தி ஒரு சாதுவைப் பற்றி சொன்னாள் ஞாபகமிருக்கிறதா? நான் கூட தம்பியைப் பற்றிக் கேட்டேன். அந்த ஆள் இப்போது எங்கே இருக்கிறார்?"

"தெரியவில்லையே. அவளிடம் கேட்டால் தான் தெரியும். எதற்கு கேட்கிறாய்?"

"இங்கே ஒருவருக்கு அவரைப் பார்க்க வேண்டுமாம். அது தான் கேட்டேன்"

"சரி நான் காலையில் கேட்டுச் சொல்கிறேன்"

"மறக்காமல் கேளம்மா. நான் காலையில் போன் செய்கிறேன்"

போனை வைத்த ஆனந்த் மறுநாள் காலைக்காகக் காத்திருந்தான். இப்போது அவனுக்குத் தெரிந்த ஒரே வழி அந்த சாது தான்!

(தொடரும்)

About The Author

2 Comments

  1. ponee

    நீங்க ரொம்ப நன்றாகவே எழுதுறீங்க
    சில விசயங்களை திரும்ப திரும்ப எழுதுற மாதிரி இருக்கு
    அதை கவனிச்சா இன்னும் interesting ஆக இருக்கும்

Comments are closed.