அ க தி (4)

”ஓ இளவரசி டல்சீனியா. என் இதயத்தில் குடியேறியவளே. உன் பாராமுகத்தால் என் நெஞ்சை துக்கத்தில் பரிதவிக்க விட்டவளே. உன் அழகின் சந்நிதியில் இருந்து என்னை வெளியே நிறுத்துகிறாய். ஓ பெருமாட்டி. உன் இதயத்தில் என் நினைவுகளை அழித்துவிடாதே. இந்த அடிமை இத்தனை துயரத்திலும் உன் நேசத்தையே எண்ணி ஏங்கிக் கிடக்கிறான்.”

என்ன இதெல்லாம், என அவள் கலவரப்பட்டாள். அதேநேரம் பேராசிரியர் அயர்ந்து போனார்.

இந்த மேற்கோள் எல்லாம் உனக்கு எப்படித் தெரியும், அவர் கேட்டார்.

இளைஞன் பேசவில்லை. ஆனால் இனிய நினைவுகள் உள்ளே கவிந்தாப் போல அவன் முகம் பரவசமாகி யிருந்தது.
நான் வளர்ந்ததே டான் க்விக்ஸாட் கதைகேட்டுதான்… என்றான் அவன்.

அதெப்பிடி? – என அவர் ஆச்சர்யம் காட்டினார்.

நிறுத்துங்கப்பா, நமக்கு ஒரு பிரச்னை, முதல்வேலை அதைத் தீர்க்கிறது… அவள் பொறுமை யிழந்திருந்தாள்.
அவன் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டிருக்கவில்லை. அப்படியே தரைக்கம்பளத்தில் கூனி உட்கார்ந்தான். எதுவும் பேசவில்லை.

பிறகு, பயம்மா இருக்கு, பயம்… ம்ம்ம், என்றான்.

பயப்படாதே, என்றார் பேராசிரியர். நாங்க என்ன செய்யலாம்னு பாத்திட்டிருக்கம், சரியா? என் பேர் ஏனெஸ்ட். இவள் என் மனைவி அமாலியா. கை நீட்டினார். நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறாப் போல, பாய்ந்து அதைப் பற்றினான்.

மிகேல், என்று தன் பெயரைச் சொன்னான். (டான் க்விக்சாட் நாவலாசிரியர் பெயர் மிகேல் டி லா செர்வான்டெஸ்.)
நாற்காலிக்குக் குனிந்து தயங்கினான். அவள் கையைப்பற்றி மரியாதையாய் முத்தமிட்டான்.

அதிரடியாய் உள்ள பூந்திட்டேன், என்றான். பெருமாட்டி மன்னிக்கணும்.

அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள், என்றாலும் கையை உருவிக்கொள்ள வில்லை.

இது ஏதோ கனவு போலிருக்கு, என்றாள். நமக்கு பைத்தியம் பிடிச்சிட்டது. அவள் கணவர் கையில் ரிமோட்டை எடுத்து டி.வி. சத்தத்தை அதிகப்படுத்தினார்.

அமைதியாயிருடி, கலவரப்படாதே, அவர் வேண்டிக்கொண்டார். ஆனால் அவரே பதட்டமாய்த்தான் இருந்தார். அந்த கியூபாக்காரன் வானத்தைப் பார்த்து கைதூக்கியிருந்தான்.

”துக்க சந்தர்ப்பங்களில் அதிர்ஷ்டம் கதவைத் திறந்து விடுகிறது, ஆறுதல் அளிக்குமுகமாக…” என அவன் சங்கீத எடுப்பாய் மேற்கோள் காட்டினான்.

ஆகா, என ஆனந்தப்பட்டார் பேராசிரியர். பதினைந்தாவது அத்தியாயத்தில் வருகிறது. ”சில யாங்சுசன்களுடே டான் க்விக்ஸாட் சிக்கிக் கொள்கிற சாகசப் பகுதி தொடர்பான அத்தியாயம்…”

நீ இலக்கியம் பயிலும் மாணவனா, என்று கேட்டார்.

என்னால நம்பவே முடியல, என்றாள் அவள். இது கனவா நனவா?

இளைஞன் சுருளான கேசத்தை அளைந்தபடி சிரித்தபோது பற்கள் பளபளவென்று பொலிந்தன.

தாம்பா இல்ல? அதில் ஈபோர் நகரத்தில் இருந்த சிகரெட் தொழிற்சாலையில் என் தாத்தா வேலை பாத்திட்டிருந்தாரு. ரொம்ப காலம் மின்ன, 1920ல். மூத்த தொழிலாளி. சுருட்டு சுத்தறதில் சூரன். நல்ல மரியாதை அங்க அவருக்கு… அங்க ஒராள் இருந்தாப்ல, எல் லெக்தார். (லெக்தார் – சர்ச்சில், பொது இடங்களில் சனங்களுக்கு உரக்க வாசித்துக் காட்டுகிறவர். எல் லெக்தார் – திருவாளர் லெக்தார் என்கிற மரியாதை த்வனி) மேடைல லெக்தார் உக்காந்துகிட்டு செய்தித்தாள் எல்லாம் தினசரி வாசிப்பார். பாடல்கள் பாடுவார். நாவல்களும் உரக்க வாசிப்பார்… எங்க தாத்தாவுக்கு குறிப்பா டான் க்விக்சாட்னா ரொம்ப இஷ்டம். அவர் சொல்லியிருக்காரு. இந்த லெக்தாரோட சாரீரம் ஒரு ஓபரா பாடகனைப் போல அத்தனை அருமையா இருக்குமாம். ஆனந்தமான, இடியிடிச்சாப் போன்ற முழக்கம். எங்க தாத்தா மூத்த தொழிலாளின்றதால லெக்தாரோட கிட்டத்லியே உட்கார்ந்திருப்பார். டான் க்விக்சாட் நாவலின் ஒவ்வொரு வார்த்தையும் எங்க தாத்தாவுக்கு அத்துப்படி…. எங்க பாட்டியும் சிகெரெட் அடைக்கும்…. அவங்க பொண்ணு, அதான் எங்கம்மா பேரே டல்சீனியா தான்! பிற்பாடு ரொம்ப கஷ்டம். அவங்க கியூபாவுக்குத் திரும்ப வந்திட்டாங்க… எங்க தாத்தாவுக்குதான் லெக்தாரை விட்டு வந்தது பெரிய இழப்பாப் பட்டுது. எப்பவும் லெக்தாரைப் பத்தியே சொல்லிட்டிருப்பாரு. எங்க தாத்தாவுக்கு எழுத படிக்க தெரியாது. அவர் எங்க அம்மாவைக் கூப்பிட்டு சென்வான்டஸ் எழுத்தை சத்தமா வாசிக்கச் சொல்லுவாரு. அவ எதாவது வாசிக்கறப்ப தப்பு விட்டால், டக்னு நிறுத்தி தன் ஞாபகத்திலிருந்து அதை சரியாச் சொல்லி அவளைத் திருத்துவாரு! அவர் காட்டிய அந்த பிடிப்பு, அதனால்தான் நானும் எங்க சகோதரர்களும் முழு டான் க்விக்சாட்டையும் மனனப் பாடமா அறிவோம்…

அதிசயமா யிருக்கே, என்றார் பேராசிரியர். ஏய், பாத்தியா, நீ என்ன சொல்றே… என்கிறதாய் மனைவியைப் பார்த்தார். ம் சொல்லு சொல்லு, என்று பையனை மேலும் பேச ஊக்கம் கொடுத்தார்.

அவள் எழுந்துகொள்ள நினைத்தும் அப்படியே நாற்காலியில் சமைந்து போனாப் போலிருந்தது. தொலைக்காட்சியில் ரிப்பன் ஓட்டமாய் செய்தி – கியூபாவில் இருந்து அகதிகளை ஏற்றிவந்த தோணி ஒன்று இஸ்லமொராதா கரைப்பகுதியில் கவிழ்ந்து விபத்து. கடற்படைக் காவலர்கள் சடலங்களை மீட்டுவருகிறார்கள்.

இளைஞன் முகத்தைப் பொத்திக் கொண்டான்.

நாம எதாவது செய்யலாம், என்றார் பேராசிரியர். கடுமையான கனவு கண்டு பதறியெழுந்தாப் போலிருந்தான் அவன். மெத்தைமேல் விரித்திருந்த பூவேலைப்பாடு செய்த போர்வையை எடுத்து தரைக் கம்பளத்தில் குளியலறை அருகே ஒரமாக விரித்தார். வா இப்டி படு சித்த நேரம், என அவனுக்குப் போர்த்திவிட்டார்.

பேசாம தூங்கு, நாங்க உன்னைப் பாத்துக்கறோம், மிகேல்.

அவன் நன்றியில் அழுது நெகிழ்ந்தான்.

நான் தாம்பா போயிட்டா நல்லது, என்றான். தாத்தா பொழுதன்னிக்கும் பேசிட்டே இருப்பாரே, அந்த இடத்தைப் பாக்கணும். கியூபாக்கார ஒரு பெரியவரின் முகவரி என்னாண்ட இருக்கு. தாத்தாவோட சிநேகிதர், அவர் அங்கதான் இருக்கார், தாம்பாவில்…
இடுப்பு டிரௌசரைக் கீழ்ப்பக்கமாக மடித்து, சிரமப்பட்டு வயிற்றில் ஒட்டிய ஒரு பொதிவை சர்ரக்கென பிரித்தான். கசங்கிய ஒரு துண்டுக் காகிதம்.

இதோ, என்றான் அவன்.

பேராசிரியர் அதை வாங்கி வாசித்துப் பார்த்தார்.

ம்… என்றார். சரி, நீ தூங்கு. நாம எதாவது பண்ணுவம்.

தாம்பா எங்கருக்கு, ரொம்பத் தொலைவா?… என்று கேட்டான் அவன். பொடிநடையாப் போய்ச் சேர்ந்துறலாமா?
நடந்து போகேலாது. டான் க்விக்சாட் போல, குதிரைல கூட போகக் கொள்ளாது. அவள் கேலியாய்ப் புன்னகைத்தாள்.
பையன் பேராசிரியரை பணிவுடன் பார்த்தான்.

(தொடரும்)

About The Author