அ க தி (6)

இரவுப்பனியை காலைக்கதிர் துடைத்தெறிய ஆரம்பித்தது. ஒரே கோடு போட்ட தெரு, சாலையாக விரிந்தது. போக்குவரத்து அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. லாரிகளின் கடாபுடா சத்தங்கள் காதை அடைத்தன. ஒரு சிக்னலில் நின்றார்கள்.
இளைஞன் எழுந்து உட்கார்ந்தான். எதோ கனவு வெருட்டி எழுந்துகொண்டிருக்கலாம். தலையை உதறிக்கொண்டான். நெற்றியில் ரேகைகள் உழுதிருந்தன. தீபகர்ப்பத்தின் மேல்கரையை எட்டிப் பயணப்பட்ட இந்தச் சில மணிநேரத்தில் முதுமையடைந்து விட்டாப் போல.
விடிஞ்சிட்டது, என்றார் பேராசிரியர். கூடிய சீக்கிரம் நாம அங்க இருப்பம். மெக்சிகோ வளைகுடாவையும், அதன் போக்குவரத்து நெரிசலையும் அவன் விக்கித்துப் பார்த்தான். ஊரின் உட்பகுதி. வானளாவிய கட்டடங்கள் மிளிர்ந்தன. குறுக்கே நெடுக்கே வழிகள். நடைபாதைகள் என்று மக்கள் முட்டி மோதினர்.

சட்டென ஒருபக்கமாக பேராசரியர் ஒதுங்கினார். ஈபோர் நகரத்து எட்டாவது அவின்யூவில் சிறு தெருவை அடையாளங் கண்டார். காரை மெதுவே விட்டார். சிவப்புவண்ணந் தீட்டிய செங்கல் கட்டடங்கள் பக்கத்திலேயே ஓட்டிப்போனார். ஒரு காலத்தில் பரபரப்பான இடம் அது. சிகரெட் தொழிற்சாலைகள் நிறைய இருந்தன. தற்போது இங்கே உணவுவிடுதிகள், கலைப்பொருள் அங்காடிகள், இரவுக் கேளிக்கை விடுதிகள் என வந்துவிட்டன. ஒளி கொப்பளிக்கும் பூ அலங்கார உப்பரிகைகள்.
ஒருகாலத்தில் இங்கே தபாகுரோக்கள், புகையிலை வணிகர்கள், வாழ்ந்து வந்தார்கள்… என்றார் பேராசிரியர். சின்ன முடுக்குக்குள் நுழைந்தார். பச்சை வண்ணந் தீட்டிய சிறு வீட்டின்முன் நின்றது கார்.

இதான், என்றார் பேராசிரியர். கதவிலக்கம் ஒன்பது. பின்இருக்கைக்குத் திரும்பிப் பார்த்தார். ஆனால் பேசவில்லை.
இளைஞன் கண்ணைத் தேய்த்துக் கொண்டான். மூளைக்குள் பரபரப்பாய் ஓடிய நினைவுகளில் மூடிவிட்டிருந்தன கண்கள்.
நீ உள்ளாற போற வரை நாங்க இருக்கிறோம், என்றார் பேராசிரியர். எங்களைப் பத்தி ஒருத்தர்கிட்டயும் மூச்சுவிடக் கூடாது. யாராவது எப்பிடி இங்க வந்தேன்னு கேட்டால், சொல்லு, என் குதிரை ரோசினான்டே மேலேறி வந்தேன்னு சொல்லு.
தன் கைப்பையில் இருந்து ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அவள் இளைஞனிடம் நீட்டினாள்.

பத்திரம். அந்தப்பக்கம் வனாந்திரம், அவள் சொன்னாள். இது அமெரிக்கா, கியூபா இல்லை…

இளைஞன் காரைவிட்டு வெளியே இறங்கினான். அந்த ஆப்பிளை நெஞ்சுக்குநேரே வைத்துக்கொண்டான்.

போ, என்றார் பேராசிரியர்.

வேலிக் கதவு தாண்டி அவன் உள்ளே நுழையும் வரை அவரும் அவர் மனைவியும் அவனையே பார்த்தபடியிருந்தார்கள். ஆச்சர்யம் தாளாத முதியவர் ஒருவர் வெளிவந்து அவனைத் தழுவிக்கொள்வதைப் பார்த்தார்கள். பேராசிரியர் கார்க் கண்ணாடிகளை இறக்கி விட்டார். பட்சிகள் காலையில் விழித்தெழுந்து ஜெபம் எழுப்புவதைக் கேட்டார்.

நான் என்ன நினைக்கிறேனோ, நீங்களும் அதையேதான் நினைக்கறீங்க, என்றாள் அவள்

ஆமாண்டி, என்றார் அவர்.

உங்க மாமா தியோ, ஓபரா பாடகர்…

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பு, என்றார் அவர். பாடறேன்னு வீட்டைவிட்டு ஓடினாரு. ஆனால் அதில்
வயித்துப்பாட்டைப் பாத்துக்க முடியல அவரால.

திருவாளர் லெக்தார், என்றாள் அவள். தாம்பாவின் ஆகப் பிரபலமான லெக்தாரா ஆயிட்டார். பாட்டு பேச்சா ஆயிட்டது.
எல்லாத்தையும் விட அவருக்குப் பிடிச்ச புத்தகம் செர்வான்டெஸ் எழுதியது… என்றார் பேராசிரியர்.

உங்க ஆதர்சம் யார்னு இப்ப தெளிவாயிட்டது!

பேராசிரியர் புன்னகை செய்துகொண்டார். கார் வேகமெடுத்தது.

நாம இப்ப எங்க போறோம், அவள் கேட்டாள்.

எனக்கே தெரியாது, என்றார் பேராசிரியர். நீ எங்க சொல்றியோ அங்க போவம், அமாலியா…

********************

டான் க்விக்சாட் டி லா மன்ச்சா, உலகின் முதல் நாவல் என்கிறார்கள். ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டது அதன் ஆசிரியர் மிகேல் டி செர்வான்டெஸ்.. இந்த மேற்கோள்கள் 1883ல் அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜான் ஓர்ம்ஸ்பையின் வரிகள்.

ரிவ்கா கேரன் ஹங்கேரியில் பிறந்து 1957ல் இஸ்ரேலுக்கு வந்தவர். கலை, இலக்கிய, தத்துவ, மருத்துவ மனோதத்துவ இயல்களில் முறையான பயிற்சி கண்டவர். பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்குமாய் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மொழிபெயர்ப்புகள் பங்களிக்கிறார். பல நாடுகளில் அவரது ஓவியக் கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு இலக்கியப் பரிசுகள் பெற்றவர். இவர் படைப்புகள் ஹிப்ரு மொழியில் இருந்து ஜெர்மேனிய, ஆங்கில, ஸ்பானிய, ருஷ்ய, ஹங்கேரிய மொழிகளில் மாற்றம் கண்டுள்ளன. (இதோ தமிழிலும்!)

டான் க்விக்சாட் நாவலுக்கான ஒரு வீரவணக்கம் போலவே நெகிழ்ந்து படைக்கப்பட்ட கதை இது. மிகை நவிற்சி காலம் முடிந்தும் திரும்பத் தலைநீட்ட வைத்திருக்கிறார் ஆசிரியர். டான் க்விக்சாட் பெருமளவு அடைத்துக் கொண்டதில் பிற விவரங்களை அதிகம் தர முடியவில்லை. வெறிச்சிட்ட மோட்டல் என்று சொல்லிவிட்டு, கடல்காவல் படை வரும்போது பரபரப்பு என்று சொல்வது என்னவோ போலிருந்தது. துண்டு ஈரத்தைக் காட்டி அவர்களிடம் நீச்சல் குளத்தில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் குளித்த மிருதுவான அடையாளங்கள் இருக்குமா, கண்டுபிடித்துவிட முடியாதா, என்று தோன்றியது. மோட்டலில் கணக்கு முடிக்காமல் அப்படியே காரில் ஏறி கிளம்பிவிட முடியுமா, என்ற கேள்விக்கு என் அமெரிக்க நண்பர் எழுத்தாளர் அமர்நாத், நாள்வாடகையை முன்பே கொடுத்துவிட்டு பாதி ராத்திரியில் கிளம்புவது அங்கே சகஜம்தான், என விளக்கம் அளிக்கிறார்.

************** 

About The Author