ஆண்டவனின் கருவறையில் அனைவரும் சமம்” – ‘வாரமொரு ஒரு ஆலயம்’ நடராஜ் பிரகாஷ்”

 
 
 


முன்னுரை:

வாழ்க்கையே வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது கலாசாரமும், பண்பாடும் மறந்துபோகக் கூடாதென்கிற நல்லெண்ணத்தில் அவற்றை நினைவுபடுத்துகிற சேவைகளைச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தனது லட்சியமே தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தைப் பற்றியும் இந்த உலகத்துக்கு விளக்கிக் கூறுவதுதான் என்று கூறும் நடராஜ் பிரகாஷ், வாரமொரு ஆலயம் என்ற இணையச் சேவையை நடத்திவருகிறார். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலீஸுக்கு அருகில் வசிக்கிறார். தனது முழுநேரப் பணிக்கு நடுவே, பல்வேறு எதிர்ப்புகளுக்கும், ஏளனங்களுக்கிமிடையில் விடாமுயற்சியோடு தன் சேவையைத் தொடர்கிறாரென்றால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் அருள்மிகு மலிபு வெங்கடேஸ்வரா திருக்கோவிலில், வாரக் கடைசி நாட்களில் தன்னார்வத் தொண்டராக, அங்கு வரும் பக்தகோடிகளுக்குச் சேவையும் செய்து வருகிறார். துளியும் சுயவிளம்பரத்தை விரும்பாத இந்த வித்தியாசமான துருதுரு இளைஞர், நீண்ட யோசனைக்குப் பிறகு நிலாச்சாரல் வாசகர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார். நண்பருடனான செவ்விக்குச் செல்வோம்.

வித்தியாசமான இந்த “வாரமொரு ஆலயம்” செய்ய எப்படி எண்ணம் வந்தது?

நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பது ஆலயம். ஓவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு ஸ்தலபுராணம் உண்டு. அவை ஆலயத்தின் பெருமையை, ஸ்தலம் (இடம்), விருக்ஷ்ம் (மரம்), தீர்த்தம் (புண்ணிய நீர்), மூர்த்தி (இறைவனின் வடிவம்) ஆகிய பரிமாணங்களால் விளங்குகின்றன. வலைப் பதிவுகளை (Blogs) விட பாட்காஸ்டிங் (podcasting) நான்கு மடங்கு வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இணைய நுட்பமாகும். அதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான பாட்காஸ்டை எந்த நேரத்திலும் கேட்கலாம். நமது ஆலயங்களின் பெருமையை பாட்காஸ்டிங் மூலமாக பரப்ப நினைத்தில் உருவானதுதான் "வாரமொரு ஆலயம்".

பாரம்பரியம் மிக்க இந்துக் கோவில்களைப் பற்றிய விபரங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?

பெரும்பாலும் நான் அல்லது எனது குடும்பத்தினர் சென்று தரிசித்த கோவில்களைப் பற்றி பாட்காஸ்ட் செய்கிறேன். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. நமது முன்னோர்கள் மற்றும் அறிஞர்கள் அளித்துள்ள களஞ்சியமான நூல்கள், ஆய்வுகள், கட்டுரைகள், தலபுராணங்கள் என என்னால் முடிந்த அளவு தொகுத்து வழங்குகிறேன். "வாரமொரு ஆலயம்" சிறப்பாக வர எனக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கும், ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த நன்றி.

அமெரிக்காவில் நமது பக்தர்களின் ஈடுபாடு எப்படி உள்ளது?

ஆன்மீக வாழ்வில்தான் நிம்மதி அதிகமென்பதால் அமெரிக்காவில் தற்பொழுது கோவில்களில் நமது பக்தர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. ஆன்மீகம் என்ற பெயரில் ஆண்டவனின் முன் நமது ஆசையை முன்வைத்து வேண்டுகிறோம். ஆன்மீகம் என்பது அன்பு. மற்றவர்களுக்கு உதவுவதும் கூட. அமெரிக்காவில் கோவில்களில் தொண்டு செய்வதையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

இந்தியாவில் இருந்திருந்தால் இதைச் செய்திருப்பீர்களா?

"அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்". கோபத்தைக் குறைத்து அன்புணர்வைப் பெருக்கும் ஆன்மீக இறையுணர்வைப் பரப்புவதற்கு இடம் ஒரு பொருட்டேயல்ல. எங்கிருந்தாலும் கண்டிப்பாகச் செய்திருப்பேன்.

பாட்காஸ்ட் தவிர வேறு ஏதாவது எதிர்காலத் திட்டம்?

இந்த பாட்காஸ்ட் தவிர, "அதிகாலை.காம்" என்ற பெயரில் புதிய தமிழ் இணையதளம் ஒன்று நண்பர்களுடன் இணைந்து தொடங்குகிறேன். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களும் அதில் இடம் பெறும். தமிழ் தளங்கள் தொடாத பகுதிகள் எல்லாம் இதில் பதிவு செய்யப்படும். இது சம்பந்தமாக உலகளவில் நிபுணத்துவம் பெற்ற நம் சமூக முன்னோடிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் அத்தளம் நம் சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்படும்.

பக்திப் படங்கள் முன்புபோல் தமிழில் வருவதில்லையே, இது எதனைக் காட்டுகிறது?

பக்திப் படங்கள் குறைந்துவிட்டால் மக்களிடம் பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தமல்ல. திரையில் பக்தியின் முழுப்பரிமாணத்தைக் காட்ட எந்தத் தயாரிப்பாளரும் முன் வருவதில்லை. தற்பொழுது ரசிகனும் பக்தியைத் திரையில் தேடிக் கொண்டிருக்கவில்லை.

ஆன்மீகம் வியாபாரமாக்கப் படுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

உண்மைதான். எல்லாத் துறைகளிலும் சேவை மனப்பான்மை குறைந்துவிட்டது. இதற்கு ஆன்மீகமும் விதி விலக்கல்ல. ஆன்மீகத்தில் தேடல் அதிகரித்து இருக்கிறது. ஆன்மீகப் பசியுடனும், தாகத்துடனும் ஒரு பெரும் கூட்டம் அலைந்து கொண்டு இருக்கிறது. இங்கு சரியான வழிகாட்டல் இல்லாமல் ஆன்மீகத் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தட்டுப்பாட்டை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள்.

போலி ஆன்மீகம் பெருகிவிட்டதைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

போலி ஆன்மீகம் தவறான திசை நோக்கிய பயணம். இது தடுக்கப்பட வேண்டும். இதனால் கால விரயமும், பொருள் விரயமும்தான் ஏற்படும். ஆன்மீகமும், நுகர்வு கலாசாரம் ஆகிவிட்டது. எனவே, தரம் பார்த்து வாங்க வேண்டியது பயனீட்டாளரின் கடமை ஆகிவிட்டது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதில் தங்களின் கருத்து?

ஆண்டவனின் கருவறையில் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது சமத்துவத்துக்கான பாதை.

இராமர் பாலம் சர்ச்சை குறித்த உங்கள் கருத்தென்ன?

நம் இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான விவகாரங்களில் மதம், இனம், சாதீயம் ஆகியவைதான் முன்னிறுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியமற்ற சூழல். அதே வேளையில், இந்த ராமர் பாலம் என்பது ஒரு மதத்தின் அடையாளமாகப் பன்னெடுங்காலமாகக் கருதப்படுகிறது. மத விவகாரங்களில் கைவைக்கும்போது எல்லா நிலைகளிலும் கொதிநிலை ஏற்படத்தான் செய்யும். அதேபோல்தான் இந்த விவாகாரமும். இது பற்றிய சாதக, பாதகங்களை மக்கள் மன்றத்தில் முன்வைக்க வேண்டும். இது ஒன்றும் அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கை இல்லை, ரகசியமாய் நடத்துவதற்கு. பெரும்பாலான பிரச்சினைகளில் சரியான தகவல்கள் நம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

எதிர்காலத்தில் ஆன்மீகத்தின் தாக்கம் எப்படி இருக்கும்?

இந்த பூமி இருக்கும் வரை, ஆன்மீகத்தின் தேடல் வற்றிப்போகாது. இது மனம் சார்ந்த விஷயம். அறிவியலுக்கு அப்பாற்பட்டு உள்ளம் சார்ந்த துறை. ஒவ்வொரு மனித உயிருக்கும் நிம்மதி தேவை. அது ஆன்மீகத்தில்தான் சாத்தியம். எனவே அந்தப் புள்ளியை நோக்கிய நகர்தல் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்.

நிலாச்சாரலின் மனம் நிறைந்த பாராட்டுக்களையும், எதிர்வரும் அவருடைய இணையதளத்திற்கு வாழ்த்துக்களையும் கூறி விடைபெற்றோம். “

About The Author

6 Comments

  1. Raja

    மிகவும் வயது
    குறைண்Tஅவராக காணப்படுகிறார்
    பாராட்டுக்கள்

  2. meenakshisundaram

    சின்ன்ன வயதில் மிகுந்த பக்குவம் வால்ழ்க வல்லமுடன்

  3. Girijamanaalan

    ஆன்மீகத்தைப் பரப்ப பாட்காஸ்ட்டிங் முயற்சியில் இறங்கியுள்ள நடராஜ் பிரகாஷை பேட்டி கண்டு வெளியிட்ட தங்களுக்கு எனது நன்றி!
    – கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, இந்தியா.

  4. jayalakshmi.B

    ஆலயதரிசனம் என்பது சிர்ரன்த சேவை.கோவில் அமைப்பு ச்தல புரானம் சொல்வது நல்லது.ஆனால் கர்ப்கக்ரிகம் உல்ல் செல்வது பொன்ட்ர சச்திரஙல் ஏன் ஏர்ர்பட்டது என்ரு அரியவென்தும்.சாவ்தன்.வாழதுக்கல்

Comments are closed.