ஆழ்வார்களும் நாயன்மார்களும் (1)

கலை இறைவன் சத்தியப்பிரியன் எங்கள் ஆருயிர் அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்! ஆற்றங்கரையில் வண்ணான் காயப்போட்ட புடவையை விட மகா நீளமாய் ஒரு போஸ்டர். மூங்கில் கழியில் நிறுத்தி வண்ணமயமாய். தலையில் மஞ்சள் தாள் ஜிகினா ஒட்டிய கிரீடம். அட்டைக் கத்தி. அவசரமாய்க் குதிரையேறி எங்கோ புறப்படும் சத்தியப்பிரியன். அவன் கீழே விழநேர்ந்தால் பாய்ந்தோடிக் காப்பாற்றக் காவலர் காமெரா பக்கமாய் இருக்கக்கூடும்.

சுந்தரமூர்த்தி நல்ல சிவ பக்தர். இன்ன நாள் என்றெல்லாம் இல்லை. ஓய்வு வாய்த்தால் கோவில் பக்கம் அவரைப் பார்க்கலாம். பொம்பளையாள் கிணத்தடியில் குளிக்க இறங்கினாப் போல, நெஞ்சுவரை ஏத்திக்கட்டிய துண்டு. மகா பக்தி. வெத்தலை போட்ட
செவ செவ வாயில் சிவ சிவ. குருக்கள் திருநீறு தருகையில் உடம்பு வில்லாய்க் குழியும். ஓளவையார் சொன்ன ஙப்போல் வளை. கெட்ட வார்த்தை அப்பப்பப் பேசுவாரானாலும் சுந்தரமூர்த்திக்குத் தமிழில் பற்று உண்டு. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், விநாயகர் அகவல், கந்தசஷ்டி கவசம் என அவ்வப்போது திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்.

பிள்ளைக்குத்தான் பக்தியே இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள், என்கிற சித்தாந்தவாதி. அழகான பேர் முருகம்பெருமாள் என வைத்திருந்தார். அதை எழில்வேந்தன் என மாற்றிக்கொண்டிருந்தான். பேர் மாறியதுமே அவனுக்கு ஜிவ்வென்று ஆகியிருந்தது. அவனிடம் பேசவே முடியாது. போகிற வருகிற அப்பிராணி சுப்பிரமணிகளையெல்லாம் கேலியடித்தான். நாட்ல அத்தனை அநியாயம் நடக்குது. தட்டிக்கேட்க துணிவில்லாத கபோதிங்களா, என ஆவேசப்பட்டான். எத்தனையை அவன் தட்டிக்கேட்டானோ, அவனைப் பார்த்து எதிர்க் கேள்வி போட ஆள் இல்லாமலாச்சு. நீங்கல்லாம் ஐயரு குசுவைக் குடிச்சி, குண்டியத் தாங்கித் திரிறீங்க… என அவன் ஆரம்பித்தால் அவரது வசைச் சொற்கள் என்ன பயனும் இல. அவருக்குப் புரியவேயில்லை. சில பிள்ளைங்களுக்கு அப்பனைக் கண்டாலே எகத்தாளம், கேலி. யார் சொன்னாலும் கேட்டுக்கிறான்கள். அப்பா சொன்னால் மாத்திரம் கடிக்க வருகிறான். அதற்குத் தூபம் போட ஊரில் நாலு பேர்.

சிவன் கோவில் எல்லை தாண்டி நெடுஞ்சாலையை அணைத்தாப்போல அவரது பூமி. நல்லா பத்திருபது ஏக்கர். எதுபோட்டாலும் விளையும். பரம்பரை பரம்பரையாக விவசாயம் பார்த்த குடும்பம். கடுங்கோடையிலும் வற்றாத கிணற்றுப் பாசனம். முதலாளி வாழ்க்கை… ஏழைகளைச் சுரண்டி வாழ்கிறதாக இவனுக்கு அபிப்ராயம். ஏல யார் சொல்றா அப்பிடி? அவனுக்குக் கோமணத்தளவு கூடப் பூமி இல்லை. அட, அவனுக்குக் கோமணத்துக்குள்ள கூட ஒண்ணும் பெரிசா இல்லை. வெள்ளரிப் பிஞ்சு. வயித்தெரிச்சல், அதான் அப்பிடிச் சொல்றான்… என்பார். இந்த மூதிக்குக் காதில் ஏறினால்தானே?

அப்பப்ப எதிலாவது கிறுக்கு வந்து கண்சிவந்து திரிவான். சத்தியப்பிரியனை முதல் தடவையாக எதோ படத்தில் பார்த்ததும் அவனிடம் என்னவோ பரவச மாற்றம். அந்தப் படத்தின் முழுப்பக்க விளம்பரம் தினத்தந்தியில் வந்தபோது அப்படியே தன் அறைச் சுவரில் ஒட்டிவைத்தான். சுவரில் எதும் ஓட்டை கீட்டை தெரியாதபடி அடைக்கிறானோ என்று நினைத்தார். எல்லாவனும் தலையை வாரிக்கொண்டால் இந்தக் கம்னாட்டி அதை நெட்டுக்குத்தலாக நிற்க வைத்திருந்தான். அது ஒரு மோஸ்தராம். முள்ளம்பன்னி. அதைவிட அதிர்ச்சி, இந்த மாப்பிள்ளை மறுநாள் பட்டணம் வரை போய் எதோ ஏ/சி சலூனில் (சத்யா ஹேர் ஸ்டைலிஸ்ட்) காசை அள்ளிக்கொடுத்து அதே மோஸ்தரில் தலையைக் கோலம் பண்ணிக்கொண்டு வந்து சேர்ந்தான். வாசலில் வந்து நின்றவனை அவருக்கு அடையாளமே தெரியவில்லை. தெரிந்தபோது தூக்கிவாரிப்போட்டது.

சரியா முடிவெட்டத் தெரியாதவனிடம் மாட்டிக் கொண்டானோ என்றிருந்தது.

சத்தியப்பிரியன் அவன் மனசில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டது எப்படி என்று தெரியவில்லை. உடல் மண்ணுக்கு, உயிர் எங்கள் சத்யாவுக்கு… எனப் பரவசத்துடன் சொல்ல ஆரம்பித்திருந்தான் எழில்வேந்தன். திரையில் அவன் பேசும் ஒவ்வொரு பன்ச் டயலாக்கும் இவனுக்கு வெறியேற்றியது. கலை இறைவா… என மனம் பரவசப்பட்டது. சத்தியப்பிரியனின் பட ரிலீஸ் அன்று சைக்கிளில் முன்னால் அவன் படத்தைக் கட்டி, தெருவில் அவனோடு கூட பத்துப்பேருடன் ஊர்வலம் வந்தான். சத்தியப்பிரியனின் பிறந்த நாளன்று தெருவைக் கூட்டி அன்னதானம், ரத்த தானம் என ஆரம்பித்திருந்தான்.

அன்னதானத்துக்கும் ரத்ததானத்துக்கும் என்ன வித்தியாசம்? அன்னதானம் நாம தருவோம், அடுத்தாள் பெறுவார்கள். ரத்ததானம் அவர்கள் தர நாம் பெறுவோம்.

சுந்தரமூர்த்திக்கு அவன் போக்கு புரியவில்லை. ஆனால் என்ன, தண்ணி கஞ்சா என்று கெட்ட பழக்கம் எதுவும் கத்துக்கொள்ளவில்லை. படிப்பு பிளஸ் ட்டூ. அத்தோடு படிப்புக்கு டூ. என்றாலும் கவிதையாய் எழுதவும் பேசவும் கிறுக்கு உண்டு. தினத்தந்தி, தினமலர் ஞாயிறு மலர் கவிதைகளை ரசிப்பான். அவனிடம் பேசவும் முடியவில்லை அவரால். சத்தியப்பிரியனின் புதுப்பட ரிலீஸ் அன்று ஒரு மகா அன்னதானம். அவர் கையால் ஆரம்பித்து வைக்கச் சொன்னபோது ஒருமாதிரி கிர்ரென்றிருந்தது. பரவால்ல, பயபிள்ளை நம்மை மதிக்கிறான், என நினைத்தார். அப்புறம் பார்த்தால், அவர் போய் வாங்கிவரச் சொல்லியிருந்த குத்தகைப் பணத்தில் ஐயாயிரம் குறைத்துத் தந்தான்.

இதாவது கழுதை துட்டோடு போனது. அதைவிட ஒரு அதிர்ச்சியான நிகழ்ச்சி நடந்தது. அதற்கு ஒரு முன் கதையும் உண்டு. இருபது முப்பது அடி விட்ட வாய் எடுத்த கிணற்றுப் பாசனம் அவர்களுடையது. அந்த வயலில் களையெடுக்க வந்த சாமந்தி. அவளே களையாய் இருப்பாள் பார்க்க. தினத்தந்தி ஞாயிறு மலரில் இதையே கவிதையாய் எழுதிப்போடலாம். 25 ரூபாய் அனுப்புவார்கள். மதியம் வெயிலுக்கு மோட்டார் ரூம்பில் படுத்துக் கிடந்தான் எழில்வேந்தன். அவளுக்கு அது தெரியாது. இருந்த வெயிலுக்கு இருட்டில் அவன் உருவம் தெரியவில்லை. கைகால் கழுவிக்கொண்டு ரூம்புக்குள்ளே வந்த சாமந்தி சட்டெனப் புடவையை உதறி…

-தொடரும்…
(நன்றி : தளம் இதழ்)

About The Author