உனக்கான இடம்

அபிராமிக்கு தினமும் பதினெட்டாவது மாடியிலிருக்கும் தன் அலுவலகத்துக்கு லிஃப்டில் போவது ஒரு பெரிய சாதனையாக இருக்கிறது. பதினைந்தாவது மாடிவரை ஒன்றும் பிரச்சினை இல்லை. பதினைந்திலிருந்து பதினெட்டை அடைவதுதான் அவஸ்தையாய்ப் போகிறது.

லிஃப்டை இயக்கும் ஜேம்ஸ் அபியைவிட இரண்டு வயது சின்னவனாகத்தானிருப்பான். ஆனால் அபியென்றால் அப்படியரு விருப்பம் அவனுக்கு. அதனைக் காதலென்று அவளிடமே சொல்லிக் கொள்வதில்தான் அவளுக்கு தர்ம சங்கடம்.

பதினைந்தாவது மாடிவரை லிஃப்டில் கூட யாரேனும் இருப்பார்கள் – அத்தனையும் பரபரப்பான அலுவலகங்கள். அபி வேலை செய்யும் நிறுவனமே அதில் ஐந்து மாடிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பதினாறு, பதினேழில் அதே நிறுவனத்துக்குச் சொந்தமான ஜிம், தியான அறைகள் இருந்ததால் காலையில் அவள் அலுவலகம் வருகிற நேரம் அநேகமாய் அவை காலியாகத்தானிருக்கும். பதினெட்டில் நிர்வாக இயக்குநரின் அறை. அபி அவருக்கு செயலராக இருப்பதால் அவருக்கு முன் வந்து அவரது நாளை ஒழுங்கு படுத்த மெனக்கெடுவதில்தான் ஜேம்ஸிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட வேண்டியதாக இருக்கிறது.

தனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணமாகப் போவது தெரிந்தும் ஏன் இந்த ஜேம்ஸ் இப்படி நடந்து கொள்கிறான் என்பது அபிக்கு என்றைக்கும் புரிந்ததில்லை. நாலைந்து மாதத்துக்கு முன் சட்டென்று ஒருநாள் லிஃபிடில் தனியாக இருக்கிற நேரத்தில், "நான் உங்களை ரொம்ப லவ் பண்றேன், மேடம்" என்றான்

அபி அதிர்ந்து அவன் ஏடாகூடமாய் ஏதோ செய்யப் போகிறான் என மிரளலாய்ப் பார்க்க, "என்ன மேடம், ஏதோ கத்தி எடுத்துக் குத்த வர்ற மாதிரி இப்படிப் பயப்படறீங்க?" என்று சாவகாசமாய்க் கேட்டான். அதற்குள் பதினெட்டாவது மாடி வந்துவிட, தாமதமேதும் செய்யாமல் கதவைத் திறந்துவிட்டான்.

அன்று முழுவதும் அபிக்கு ஜேம்ஸை எப்படிக் கையாள்வதென்ற குழப்பம். நிர்வாகத்தில் புகார் செய்து நீக்கச் சொல்லிவிடலாம். ஆனால் திடுமென அப்படிச் செய்து அவன் வாழ்க்கையைக் கெடுக்கத் தயக்கமாயிருந்தது. இத்தனை நாளாக இல்லாமல் இப்படித் திடீரென இன்று சொன்னதால் ஒருவேளை மனநிலை ஏதும் பிசகி இருக்குமோ என்று கூடத் தோன்றிற்று. மீண்டும் அப்படி ஏதாவது உளறினால் யோசித்துக் கொள்ளலாம் என தீர்மானம் செய்து கொண்டு வேலையில் கவனம் செலுத்த முற்பட்டாலும் பின்புலத்தில் ஜேம்ஸ் வாய் ஓயாமல் பேசிக் கொண்டேதானிருந்தான்.

அடுத்தடுத்து வந்த நாட்களிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம், "ஒரு நாள் உங்களைப் பார்க்காட்டாலும் என்னவோ போல இருக்கு, மேடம்"

"இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு, மேடம்"

"ஆண்டவன் எனக்கு ஒரு வரம் கொடுத்தா நாளெல்லாம் உங்க முகத்தை மட்டும் பார்த்துக்கிட்டே இருக்கணும்னுதான் கேட்பேன்"

இப்படி ஏதாவதொரு உளறல் தினமும். ஆனால் பார்க்கிற பார்வையிலோ நடந்து கொள்ளும் விதத்திலோ துளியும் கல்மிஷம் இருக்காது. அவனின் வெகுளித்தனமும் ஏழ்மையும் அவளை அவன் மேல் புகார் செய்ய விடாமல் தடுத்தன.

அபி சில நாட்கள் அவன் பிதற்றலுக்கு பதிலாய் முறைத்துப் பார்த்தாள்; சிலநாட்கள் அலட்சியப்படுத்திப் பார்த்தாள்; சில நாட்கள் தவிர்த்துப் பார்த்தாள். ஆனால் எதுவுமே வேலை செய்யாதாதால் ஒரு நாள், "எதுக்கு இப்படி தத்துப் பித்துன்னு உளறிட்டிருக்கீங்க? எனக்குக் கல்யாணமாகப் போகுது" என்றாள் எரிச்சலோடு

"அதனால என்ன மேடம்? நான் உங்களை எப்பவும் லவ் பண்ணுவேன். நீங்க கல்யாணம் ஆகி, பிள்ளை பெத்து, ஏன் கூன் விழுந்த கிழவியா ஆனா கூட லவ் பண்ணுவேங்க, மேடம்" அவன் துளியும் வருத்தமோ தயக்கமோ இல்லாமல் சிர்த்துக் கொண்டே சொல்ல,

"இப்படிப் பேத்தறதை விட்டுட்டு சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கங்க. புத்தி தெளியும்" சற்று கடுமையாகவே அபி சொல்லிவிட்டுப் போனாள். ஆனால் ஒன்றும் பிரயோசனமில்லை.

இதோ இன்றைக்குக் கூட,

"மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காரு, மேடம்? ஃபோட்டோ கொண்டு வர்றீங்களா?"

"கல்யாணப் புடவை ஆரஞ்சுக் கலர்ல எடுங்க, மேடம். உங்களுக்கு அந்தக் கலர் சூப்பரா இருக்கும்"

அவள் முகத்தைக் கல்லாய் வைத்துக் கொண்டு காதில் விழாதது போல இருந்தாள்.

அடுத்தவாரம் கல்யாணப் புடவை எடுக்கச் செல்கையில், ஆரஞ்சு வண்ணப் புடவையையே தேர்ந்தெடுத்தாள் அபி. திருமணத்துக்கு வாட்ச்மேன் உட்பட எல்லோரையும் அழைத்தவளுக்கு ஜேம்ஸை மட்டும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதற்கும் அவனே ஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான், "மேடம், உங்க கல்யாணப் பத்திரிக்கையை, வாட்ச்மேன் கிட்டருந்து வாங்கிப் பாத்தேன், மேடம். நல்லாருக்குது. என்ன, நீங்களும் அவரும் என்ன படிச்சிருக்கீங்கன்னு போட்ருக்கலாம்" என்று மேதாவித்தனமாய்த் தன் கருத்தைச் சொல்லிவிட்டு, "நான் கல்யாணத்துக்கு முந்தின நாளே ஊருக்கு வந்திரட்டுங்களா, மேடம்? ஒத்தாசையா இருக்குமில்லே?" என்றான்

அபிக்கு அவனைப் புரிந்து கொள்ளச் சிரமமாயிருந்தது. தன்னைக் காதலிப்பதாய்ச் சொல்பவன் துளியும் சுணக்கமில்லாமல் திருமணத்துக்கு எடுபிடி வேலை செய்ய வருகிறேன் என்கிறானே என்ற ஆச்சர்யம்.

மனசு கேட்காமல், "அதெல்லாம் தேவையில்லை. வேலை செய்ய ஊர்ல ஆள் இருக்காங்க" என்று முதன் முதலா அவனுக்கு பதில் சொன்னாள்

"மேடம், நான் வந்து எதுனா யார்கிட்டேயும் உளறிருவேனோன்னுதானே பயப்படறீங்க? அதான் எனக்கு பத்திரிக்கை கூட குடுக்கலை. பரவாயில்லை, மேடம். ஆனா எங்க என்ன பேசணும்னு எனக்குத் தெரியுங்க, மேடம். கல்யாணத்துக்கு வந்தா வாயே தொறக்க மாட்டேன். வரட்டுங்களா? மாப்பிள்ளையைப் பாக்க ஆசையா இருக்கு" அவன் தொனியிலிருந்த ஏக்கத்தில் அபிக்கு மனம் இளகிற்று

திருமண விடுமுறை முடிந்து வந்த போது, "உங்களைப் பாக்காம பைத்தியம் பிடிச்சது போல ஆச்சு, மேடம். வீட்ல சார் சௌக்கியங்களா?" என்று விசாரித்தான்

கர்ப்பம் தரித்து வயிறு தெரிய ஆரம்பித்த போது, "ஓமியோபதில ஈஸியா பிரசவம் ஆகறதுக்கு ஏதோ மருந்து இருக்குங்களாம். அஞ்சாவது மாசத்திலருந்து சாப்பிடணுமாம். வாங்கியாறட்டுங்களா?" என்று அக்கறையாய்க் கேட்டான்

"சார் கூட வண்டில வறதப் பாத்தேங்க. ரோடெல்லாம் ஒரே புகையா இருக்கு. ஒரு கார் வாங்கிக்குங்க, மேடம்"

"மாசாமாசம் செக்கப்புக்கெல்லாம் போறீங்கதானே மேடம்?"

"வயிறு இவ்வளவு பெரிசா இருக்கு. ரெட்டைப் புள்ளையா, மேடம்?"

"பொம்பளைப் புள்ளைதான் மேடம் வேணும். உங்களை மாதிரியே லட்சுமிகரமா இருக்குமில்லே?"

அவனின் அத்தனை பேச்சுக்கும் அபி முகத்தில் உணர்ச்சியன்றும் காட்டாமல் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்பாள். பிரசவ விடுமுறையில் செல்லும்போது ஏனோ அவனிடம் சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் அது வேறேதேனும் சிக்கலை ஏற்படுத்தி விடுமோவென்ற அச்சத்தில் பேசாமலிருந்து விட்டாள்.

தலைப் பிரசவத்தை ஊரில் முடித்துக் கொண்டு, மூன்று மாதம் கழித்து அன்றுதான் முதன் முதலாய் அலுவலகம் வருகிறாள். லிஃப்டுக்குக் காத்திருக்கையில் ஜேம்ஸ் தொண தொணவெனக் கேள்வி கேட்பானென அலுப்பாய் இருந்தது. லிஃப்டில் அவன் இல்லாததைக் கண்டு அவன் விடுமுறையில் இருப்பானென எண்ணிக் கொண்டாள். அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் கூட அவன் வராததைக் கண்டு வாட்ச் மேனிடம் விசாரித்த போது, "அவங்க மாமா கடை வச்சுக் கொடுத்தாருன்னு வேலையை விட்டுட்டான், மேடம்" என்றார்.

அபிக்கு ஊசி முனையளவு மனசுக்குள் வெற்றிடம் விழுந்ததை உணர்ந்து கொள்ள முடிந்தது.

About The Author

2 Comments

  1. Balasundar Senthilvel

    இந்த கதைக்கு ஏன் யாரும் கருத்து தெரிவிக்கல (நானே அதிக தடவ படிச்சு கருத்து தெரிவிக்கல)? மிக அருமை. உறவின் அருமை பிரிவில் தெரியும்.

  2. ss

    என்ன கருத்து சொல்லரது,சில நெரத்துல சில மக்களை மறகவும் முடியாது,
    ணெருங்கவும் முடியாது.

Comments are closed.