உள்ளம் என்பது

பூா்வீக வீட்டை விற்பது என்று முடிவான பின் கடைசியாக அதில் ஒரு நாள் இருக்க வேண்டும் என்ற ஆசையில் தில்லியிலிருந்து கிளம்பிச் சென்னை வழியாகத் தஞ்சாவூா் வந்து எனது கிராமத்திற்கு வந்து சேர்ந்தபோது வெயில் இறங்கத் தொடங்கியிருந்தது. இருபது வயது வரை நான் வாழ்ந்த கிராமம் பெரிதாக எவ்வித மாற்றங்களுமில்லாமல் அமைதியாய் என்னை வரவேற்றது.
ஒரு வருடமாய்க் குடக் கூலிக்கு விடாததால் வீடு பூட்டியிருந்தது. திண்ணையில் கூட யாரும் படுப்பதில்லை போலும். தூசு படர்ந்திருந்தது. பேண்டு பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்துக் கதவைத் திறந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்தது.

"யாரது வாகீசனா?" என்றபடி சற்றே ஸ்தூல சரீரத்தோடு மடிசார்கட்டைச் சரியாக இழுத்து விட்டவாறு வந்தது கௌரி எனப் புரிய எனக்குச் சில நிமிடங்களாயிற்று.

"என்னடி இப்டி பெருத்துப் போய்ட்ட? அடையாளமே தெரியல போ."

"அங்க மட்டும் என்ன வாழறதாம்? முன் தலை மைதானமாட்டமிருக்கு. தொந்தி தள்ளிண்டிருக்கு. வரப் போறதா ஒரு கடுதாசி போட மாட்டியோ?"

"நீ இங்க இருப்பன்னு எந்த ஜோசியனும் சொல்லலையே."

கௌரி சிரித்தாள்.

"சரி சரி. போய்க் குளிச்சுட்டு வா. சாப்ட ஏதானும் தயார் பண்றேன்."

அவள் சென்றதும் நான் உள்ளே வந்தேன். வீடு முழுக்கத் தூசும் ஒட்டடையும் குடக் கூலியின்றிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தன.

குளிப்பதற்கு முன் நானே கூடத்தைப் பெருக்கி ஒட்டடைகளைத் தட்டி, கழுவி விட்டு மின் விசிறியைச் சுழல விட்டேன்.

"வீட்டை விக்கணுமாடா?" கிளம்புற நிமிடம் கூட அம்மா துக்கத்தோடுதான் கேட்டாள்.

"வெச்சுண்டு என்ன செய்யப் போறோம்? இனிமே யாரும் அங்க போய் இருக்கப் போறதில்லையே."

"இருந்தாலும் பெரியவா வாழ்ந்த வீடாச்சே."

"சென்டிமென்ட்ஸ் வேண்டாம்மா."

அம்மாவிடம் இப்படிச் சொல்லிவிட்டாலும் கூட வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கிற போது ஒவ்வொரு காட்சி தெரியத்தான் செய்தது.

நானும் கௌரியும் படிக்கிறோம் போ்வழி என்று படு சீரியசாக அட்டை போட்டு லேபிள் ஒட்டிய பொன்னியின் செல்வனை விழுந்து விழுந்து படித்தது மாடிப்படியிலதான்.

"நாம இதை சினிமாவா எடுக்கணும்டி கௌரி."

"எடுத்துட்டா போச்சு. நீதான் பெரிய பழுவேட்டரையா். நாந்தான் குந்தவை."

"உன் கழுத்தை நெரிப்பேன். நான்தான் வந்தியத்தேவன். உன் மூஞ்சிக்கு ஏதானும் பணிப் பெண் பாத்திரம் தரேன். தலையைக் காட்டிட்டுப் போ."

"ஆஹாஹா… வந்தியத்தேவன் முகரைக் கட்டையைப் பாரேன்! எலும்புக் கூடாட்டம் இருந்துண்டு ஆசையைப் பார்."

"நீயே குந்தவையாகும்போது நா வந்தியத்தேவனாகக் கூடாதா என்ன?"

"கதைப்படி அவங்க ரெண்டு பேரும் காதலிக்கணும்டா மடையா. என்னால அப்படி நடிக்கக் கூட முடியாது. நீ வேணா சேந்தன் அமுதனா கொஞ்ச நாழி வந்துட்டுப் போ."

"இந்த முகரையை நா மட்டும் காதலிப்பேனாக்கும். அதுக்காக நா ஏன் வேற ரோல்ல நடிக்கணும். நீ வேணா ரோல் மாறிக்கோ. நாந்தான் வந்தியத்தேவன்."

எங்களது இந்தச் சண்டையால் கடைசி வரை பொன்னியில் செல்வனைச் சினிமாவாக எடுக்க முடியாமலே போயிற்று.

நான் மாடிப் படியில் அமா்ந்தபோது, குதிரைக் குளம்பொலி காதுக்குள் கேட்க சிரித்துக் கொண்டேன்.

"வந்தியத்தேவன் எதுக்குச் சிரிக்கிறார்?" குரல் கேட்டுத் திரும்பினேன். கௌரி கையில் பாத்திரங்களோடு நின்றிருந்தாள். ஒன்பது முழப் புடவையிலிருந்து ஆறு முழத்திற்கு மாறியிருந்தாள். அப்படி ஒன்றும் பருமனில்லை. பூசினாற் போல் அழகாகவே இருந்தாள்.

"என்ன விசேஷம் மடிசார்ல போஸ் கொடுத்த?"

"அதை அப்பறமா சொல்றேன். முதல்ல சாப்டு."

அவள் வாழையிலை விரித்துப் பரிமாறினாள்.

"எள்ளுருண்டையும் சுகியனும் கூட இருக்கு."

அவள் சொல்ல முகம் சுருக்கிப் பார்த்தேன்.

“தெவசமா? யாருக்கு?”

“சொல்றேன். சாப்டு. அம்மா எப்டி இருக்கா? பொண்டாட்டி குழந்தைகளைக் கூட்டிண்டு வந்திருக்கலாமே!”

“கல்யாணமானாத்தானே?”

கௌரி திகைப்புடன் என்னைப் பார்த்தாள். “கல்யாணமே பண்ணிக்கலையா நீ?”

நான் பதில் சொல்லவில்லை.

"பண்ணிக்கணும்னு தோணல. அதை விடு. உன்னவா் எங்க இருக்கார்? என்ன செய்யறார்? குழந்தைகள் எத்தனை? அவரோட எப்பவும் சண்டைதான் போடுவியா? பாவம்தான் உன் புருஷன். வீட்ல இருக்காரா? நா பார்க்கணுமே உன் வந்தியத் தேவனை."
நான் சொல்ல கௌரி தலை குனிந்து கொண்டாள்.

"வேலை நிறையக் கிடக்கு. நீ சீக்கிரம் சாப்டு. நா ராத்திரி டிபனோட வரேன். மிச்ச வம்பைப் பேசுவோம்."

கௌரி காலி பாத்திரங்களோடு கிளம்பினாள். கதவருகில் நின்று என்னைப் பார்த்தாள்.

"உன்னைப் பார்த்ததுல சந்தோஷம் வாகீசா."

"எனக்கும்தான். உன்னை இ்ங்க பார்ப்பேன்னு நானும் நினைக்கல. நீ போ. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்த பிறகு நா வரேன். உங்கம்மா அப்பாவைப் பார்க்கணும்."

"அம்மா போய்ச் சோ்ந்தாச்சு. அப்பா படுத்த படுக்கை. பக்கவாதம். பேசக் கூட முடியாது."

"அடடா.. யார் பார்த்துப்பா. நீ போயிட்டா?"

கௌரி பதில் சொல்லாமல் ஒரு புன்னகையைச் சிந்தி விட்டு வெளியேறினாள்.

உண்ட களைப்பில் நியாயமாய் உறங்கியிருக்க வேண்டும். எனக்கு உறக்கம் வரவில்லை.

"கௌரிக்கென்னடா குறைச்சல்? அவளைக் கல்யாணம் பண்ணின்டா என்னவாம்! பழகின பெண். நல்ல குடும்பம். ஏன் பிடிவாதம் பிடிக்கறே?"

ஒருநாள் அம்மா சலித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது.

"நீங்கள்ளாம் இப்டி சம்பந்தம் பேசறது அவளுக்குத் தெரியுமா?"

"அவகிட்ட என்ன கேள்வி? நீ சரின்னா அடுத்தாப்போல கல்யாணம்தான். அவம்மா அப்பா சம்மதிச்சாச்சு."

(தொடரும்)

About The Author