ஊர் மாப்பிள்ளை (2)

மேலத்தெருவில் எதோ கல்யாணம். தெருவையே அடைத்துப் பந்தல் கிந்தல் அமர்க்களப்பட்டது. பொழுதுகள் வீங்கிக் கொந்தளித்தன. சத்தம் மேலே மேலே உச்சத்துக்குப் போனது. ரிகார்டு போட்டுத் தெருவே கலகலத்தது. காதோடுதான் நான் பேசுவேன், பாட்டையே சத்தமாய் வைத்தார்கள். ரெண்டாம் நாள் அத்தனையும் அடங்கி, நிகழ்வுகளுக்கே தொண்டை கட்டிக்கொண்டாப் போல மௌனம். அலுத்துக் களைத்த மௌனம்…

கல்யாண வீட்டு வாசல் குப்பைத் தொட்டியில் பாதி பூ உதிர்ந்த, வாடிய மாலை ஒன்று கிடந்தது. நம்மாள் அந்தப் பக்கம் ஏன் போனான் தெரியவில்லை. போனவன் அந்தக் குப்பைத் தொட்டியை ஏன் எட்டிப் பார்த்தான் தெரியவில்லை. திடீரென்று என்ன தோணியதோ, அந்த மாலையை எடுத்து அப்படியே மாட்டிக்கொண்டான். எதிர்வீட்டில் இருந்த சின்னப் பையனுக்கு அதைப் பார்க்க உற்சாகமாகி விட்டது. டும் டும் டடடும்… என மேளச் சத்தம் கொடுத்தான். அதைக் கேட்கவே இவனுக்குச் சிரிப்பு. அங்கிருந்து ஓட்டமெடுத்தான். "ஏய் மாப்ளை ஓடறாரு டோய்!" என்று பெரிதாய்ச் சத்தம் கொடுத்தான் அந்தப் பையன்.

ஒருநாள் பூராவும் அவன் அந்த மாலையைக் கழற்றவேயில்லை. மாப்பிள்ளை என்ற பேர் அவனுக்குப் பிடித்திருந்தது போலும். அவனது நடையில் இப்போது இன்னும் கம்பீரம், அழகு வந்தது. மைதீட்டாமலேயே கரிய விழிகள் இன்னுமாய்ப் பிரகாசித்தன. இப்போது மாலைகள் கிடைக்காதா என அவன் தேட ஆரம்பித்திருந்தான். வடக்குத் தெருப் பிள்ளையார் கோவில் வாசலோரம் பழைய மாலைகள் கிடந்தன என்று கண்டுகொண்டான். அழுக்கு டவுசர். கிழிசல் சட்டை. வாடிய மாலை… ஊருக்கே மாப்பிள்ளையாய் ஆகியிருந்தான்.

எந்தக் குழந்தையும் அவனைப் பார்த்துப் பயப்படவில்லை என்பது ஆச்சர்யம். பஸ் டிரைவர், கண்டக்டர்களே கூட அவனை மாப்பிள்ளை என அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். அவனைப் பார்த்ததும் அவர்கள் புதுசாய் ஒரு சல்யூட் வைத்தார்கள். அவனும் அப்படியே நின்று ஒரு சல்யூட் வைத்தான். பேச உள்ளே முட்டிமோதும் வார்த்தைகளுடன், ஆனால் அவன் ஒரு உள் திகைப்புடன் நடமாடினான்.

ஜனங்கள் ரசிக்கிறாப் போல இன்னொரு சம்பவம் ஊரில் நடந்தது. சுதந்திரத் தினம் என்று பஞ்சாயத்து ஆபிசில் கொடியேற்ற ஏற்பாடாகியிருந்தது. வெளிச்சம் வர, தேசபக்திப் பாடல்கள் போட்டு ஒரே சத்தக்காடு. பாரதியாரின் "விடுதலை, விடுதலை, விடுதலை" பாட்டைக் கேட்டுப் பிள்ளைகள் கிறுகிறுத்துத் திரிந்தார்கள். அவனுக்கும் உள்ளே என்னவோ செய்தாப் போலிருந்தது. காலை எட்டு மணிக்குத் தலைவர் கொடியேற்ற வந்தார். எல்லாப் பிள்ளைகளும் வரிசையொழுங்கில் நின்றன. கொடியை அவிழ்த்து மேலேற்ற, அதன் முடியவிழ்ந்து ரோஜா இதழ்கள் சிதறின. பெண்ணொருத்தி கூந்தலை அவிழ்த்து விட்டாப் போலிருந்தது. பிள்ளைகள் கை தட்டினார்கள். அவனுக்கும் கை பரபரத்தது. சிரித்தபடிப் பார்த்துக் கொண்டிருந்தான் மாப்பிள்ளை. தலைவர் பேச வந்தபோது ஒரு சால்வை போர்த்தினார்கள்.

தலைவர் கையை அசைத்து ஆட்டி உற்சாகமாய் உரையாற்றியதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று திரும்பி அவனைப் பார்த்துவிட்டுத் தலைவர் அவனைக் கூப்பிட்டார். தயங்கியபடிப் போனான். புது மாலை ஒன்றை அவனுக்குப் போட்டார். பையன்கள் கைதட்டினார்கள். அப்படியே தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வையை அவனுக்குப் போர்த்தினார். அவனுக்கு அபாரமாய்ச் சிரிப்பு வந்தது. அப்படியே சல்யூட் வைத்தான் அவருக்கு. "மைக்ல எதும் பேசறியா?" என்று அவர் கேட்டபோது பையன்கள் அத்தனை பேரும் கொல்லென்று சிரித்தார்கள். அவன் மறுத்தாப் போலத் தலையை ஆட்டியாட்டி அங்கிருந்து ஓட்டமெடுத்தான்.

அவன் எப்பவுமே பரபரப்பாய்த் திரிந்தான். என்ன வேலை இருக்கிறது, என்ன அவசரம் தெரியாது. நாய்க்கு வேலை இல்லை, நிற்க நேரமில்லை என்பார்கள். அவனுக்கு அது பொருந்தியது. அட, அவனுக்கு ஊரில் ஒரு வேலை கிடைத்ததே அதைச் சொல்ல வேண்டும்! ஒரு தடவை, ரெண்டு பஸ்கள் ஒரே சமயம் ஸ்டாண்டில் வந்து நின்றன. பின்னால் நின்ற பஸ் கிளம்ப வேண்டியிருந்தது. டிரைவர் "ஏ மாப்ள…" என்று அவனைக் கூப்பிட்டார். "வண்டி ரிவர்ஸ் எடுக்கறேன்… பின்னால் ஆள் இல்லாமல் பார்த்துக்க!" என்றார். சந்தோஷமாகி விட்டது. பின்பக்க ஜனத்திரளைக் கையாட்டி ஒதுக்கி வழி தர, வண்டி பின்னால் வந்து வசம் பார்த்து முன்னால் ஒடித்துக் கிளம்பியது.

மாப்பிள்ளை ரொம்ப உற்சாகமாய் உணர்ந்தான். இனி அந்த பஸ்கள் அவன் சொல் கேட்கும். அது உள்ளே நுழைகையில் அவன் கூட்டத்தை ஒதுக்கி அதற்கு இடம் அளிப்பான். இந்த ஜனங்களுக்கு அவன் பாதுகாப்பு. ரட்சகன்.

"ஒதுங்குங்க, ஒதுங்குங்க…" என வார்த்தைகள் அவனில் பொங்கித் தொண்டையில் சிக்கி அப்படியே வெட்கத்தில் திரும்பின. பஸ்கள் வருவதும் போவதுமாக இருந்த சமயங்களில் அவன் பரபரத்தான். பள்ளிக்கூட, அலுவலக வேளைகள்… காலை எட்டு, எட்டரை முதல் ஒன்பது, ஒன்பதரை வரை பஸ் போக்குவரத்தும் அதிகம், அதில் ஏறும் இறங்கும் ஜனமும் அதிகம். அப்போது அவனுக்கு நிறைய வேலை இருந்தது. கூட்டத்தை ஒதுக்குவது, வண்டிக்கு வழியமைப்பது என அவன் பம்பரமாய் அலைந்தான். எங்கிருந்தோ சிறு குச்சி ஒன்றை எடுத்து வைத்திருந்தான். அதை நீட்டி நீட்டிக் கூட்டத்தை ஓரத்துக்கு ஒதுக்கினான். ஹ்ரும்… என்கிற உறுமல்தான். மேல் சால்வையை அவன் கழற்றுவதே இல்லை.

சால்வை வந்த பின், மாலைக்கு அவன் அலைவது நின்று போனது!

அவன் பரபரப்பு ஜனங்களுக்கு வேடிக்கையாய் இருந்தது. வேலைக்கும் வெளியூருக்குமாய்க் கிளம்புகிற நாமே நிதானமாய் இருக்கிறோம். மாப்பிள்ளைக்கு இத்தனை பரபரப்பு என அவர்களுக்கு ஆச்சர்யம். என்றாலும் அவனை அவர்கள் மதித்து ஒதுங்கி, வரும் பஸ்சுக்கு இடம் தந்தார்கள். இவன் ஆர்வத்தைப் பார்த்ததில் கண்டக்டர்களுக்கும் திருப்தி. ஒருத்தன், "ஏ மாப்ளை இங்கே வா!" என்று கூப்பிட்டான் அவனை. "இதை வெச்சிக்க!" என்று கொடுத்தான்.

ஒரு விசில்!

ஆகாவென மாப்பிள்ளை எழுச்சி கண்ட கணம் அது. அப்படியே பரவசமாகி மாப்பிள்ளை ஒரு சல்யூட் வைத்தான்.

அந்த பஸ் ஸ்டாண்டே சத்தக்காடாகி விட்டது. செயற்கைத் தொண்டையாய் அதை அவன் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். நிறுத்தத்தில் பஸ் நுழையும்போதே அவன் விசிலால் பீய்ங்கென ஊளை ஆரம்பித்தான். குச்சியை நீட்டி ஆட்டியாட்டிக் கூட்டத்தை அவன் ஒதுக்கியபோது விசில், கூட ஒத்துழைத்தது. பஸ் நின்றதும் முதலில் இறங்குகிற நபர்கள் இறங்க வழி ஒதுக்கிக் கொடுத்தான். அதற்குள் பஸ்சுக்குள் இடம் பிடிக்க வெளியேயிருந்து கைப்பையையோ கர்ச்சீப்பையோ உள்ளே எறிந்தார்கள்.

இன்னொரு வேடிக்கை கூட நடந்தது. மழையில் கிழையில் நனைந்தானோ, சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லையோ தெரியவில்லை. மாப்பிள்ளைக்குக் கடும் ஜுரம் கண்டது. காலை நாலு, நாலரை மணி முதல் பஸ் வரும்போதே அவன் விழித்துக் கொண்டு காத்திருப்பான். எழுந்துகொள்ளவேயில்லை. சிவசண்முகம் கண்டக்டர் அதே ஊர்தான். அவன் வீடு பூங்கா பக்கம். பஸ் வர அவன் காத்திருந்தான். டிப்போவில் இருந்து டிரைவர் மாத்திரம் போய் எடுத்து வருவான். காலையில் பஸ் ஸ்டாண்டு டீக்கடையில் முதல் தேநீர் அவனும் மாப்பிள்ளையுமாய் அருந்துவார்கள். 

சிவசண்முகம் மாப்பிள்ளையைத் தேடினான்.

–தொடரும்

About The Author