எனது விழியில் உனது பார்வை (2)

"ஸாரி பத்ரி. சட்டுனு இதான் ஞாபகத்தில வந்தது. அதனாலதான் சொல்ல மாட்டேன்னு…

பரவாயில்லே மன்னி. கவிதைதானே"

கண்ணில்லாத ஒருத்தரைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். சட்டுனு மனசுல வந்த வரிகள். கவிதையோ… என்னவோ… சின்ன வயசுல… எழுதின.. முதல் கவிதை… என்னவோ சின்ன வயசுல… எழுதின.. முதல் கவிதை… இப்பவும் மறக்கலே…"

"வத்சலா" அண்ணாவின் குரல் உரத்திக் கேட்டது.

"இதோ வரேன்" எழுந்து போனாள் என்பது புரிந்தது.

"என் பார்வை மட்டும்… பழுதடைந்து…"

பத்ரிக்கு சிரிப்புதான் வந்தது. இந்தக் கவிதையை நான் எழுதியிருக்க வேண்டும். ரொம்பப் பொருத்தமாய் இருந்திருக்கும்.

******

"பத்ரி… சாப்பிட வரியா."

அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது.

தூக்கி வாரிப் போட்டது. நினைவுகளில் அமிழ்ந்தவனைக் கரை சேர்க்கிற மாதிரி.

"மன்னி வரலியா."

"வருவாடா"

"குழந்தை நன்னாயிருக்கா…"

"ஆமா"

"என்ன பேரு"

"ஆதித்யா"

"நல்ல பேரு."

"சாப்பிட வா"

"மன்னி வரட்டுமே"

எப்போ வராளோ. கார்லதான் கொண்டு வந்து விடறதாய் பேச்சு. இன்னும் காணோம்."

"அண்ணாவும் போயிருக்கானா.."

"ஆமா… நீ சாப்பிட வா. எனக்கும் காரிய ஆனாப்ல இருக்கும்

"பசிக்கலேம்மா"

"பொய் சொல்லாதே. வா, மோர் சாதமாவது ஒரு வாய் சாப்பிடு…"

"வே..ணாம்…"

*****

ஃபோன் ஒலித்தது. அம்மா வேகாமாய்ப் போனது புரிந்தது.

"என்ன… நாதான் பேசறேன்.."

பத்ரிக்கு அம்மா பேசியது சிரிப்பாக இருந்தது. "ஹலோ சொல்லேன். இதென்ன மொட்டையா ஒரு ஆரம்பம்."

"எ.ன்னுது.. அட.. ஈஸ்வரா… எப்படி" அம்மாவின் அலறல் நிசப்தமான ஹாலில் எதிரொலித்து திடுக்கிடச் செய்தது.

"தெய்வமே… இதென்ன சோதனை…"

"அம்மா…" பத்ரி தடுமாறி எழுந்தான்…

"இப்பவே கிளம்பி வரோம்… சரி… சரி… எனக்கு முடியும்… பத்ரியும் தான்… அவன் வேணாமா. எங்கே விடறது…"

"அம்மா… அம்மா"

"சரி. வச்சிருங்கோ."

"டோக்" என்றது. பத்ரி உத்தேசமாய் நடந்து அம்மாவைப் பற்றி விட்டான். உலுக்கினான்.

"எ.ன்னாம்மா.."

"மன்னி நம்மை மோசம் பண்ணிட்டாடா"

"என்ன"

"திடீர்னு ஃபிட்ஸ் மாதிரி வந்து நம்மை விட்டுப் போயிட்டாடா. அய்யோ கைக் குழந்தையை வச்சுண்டு அல்லாடப் போறோமே!"

அம்மாவின் அழுகை பிடிக்கவில்லை. மன்னி, உனக்கு என்ன ஆச்சு? போயிட்டு வரேன்னு தானே சொல்லிட்டுப் போனே. ஏன் சொன்னபடி வரலே.

"நீ எதிர் வீட்டுல இருக்கியா"

"நானும் வரேம்மா"

"நீ"

"இல்லேம்மா. நானும் வரேன். பிளீஸ் என்னை விட்டு விட்டு போகாதேம்மா."

அம்மாவுக்கு அரை மானசுதான். ஆனாலும் மறுக்கவில்லை.

*****

"மன்னி"

இம்முறை அனுமதி கேட்காமலேயே தொட்டான். கை ஜில்லிட்டு… இதுவா மன்னி.

அழுகை வரவில்லை. திமிறியதே தவிர கண்கள் ஒத்துழைக்க மறுத்தன. மன்னி… மன்னி. ஜபம் மாதிரி சொல்லிக் கொண்டேயிருந்தான்.

"ஆச்சு. நேரம் ஆகிறது. மற்ற வேலையைக் கவனிக்கணும்" யாரோ குரல் கொடுத்தார்கள்.

இவனை நகர்த்தினார்கள்.

"ஹாஸ்பிடல்லேர்ந்து வந்தாச்சா"

"எதுக்கு"

"அப்பவே எடுத்தாச்சு, சாகறதுக்கு முன்னால அடிச்சுப் பேசிட்டா"

"என்ன மாதிரி மனசு!"

"அய்யோ… தங்கமாச்சே. தங்கமாச்சே. இப்படி பரிதவிக்க விட்டுட்டாளே"

"பத்ரி மேல அலாதிப் பிரியம். என் புள்ளை மாதிரிம்பா"

"கடைசீல இப்படி ஆகணும்னு விதி"

என்ன சொல்கிறார்கள். பத்ரிக்கு என்ன? மன்னி என்ன சொன்னா? என்ன செய்தாள்.

அம்மா அருகில் வந்து அழுதாள்.

"அவளோட கண்ணை உனக்குப் பொருத்தணும்னு சொன்னாளாம்டா. பாவி.. இந்த நல்ல மனசுக்கு இப்படி அற்ப ஆயுசா போயிட்டாளே."

மன்னீ..

பத்ரிக்கு அழுகை சுதந்திரமாய் பீறிட்டது.

About The Author

6 Comments

  1. potkody

    கதை என்பது ஏதாவது ஒரு ஆழமான உணர்வை மனசில உண்டு பண்ணனும் என்று நினைப்பவ நான்.
    உங்க கதைகள் ஒவ்வொன்றும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

  2. senbakavally

    வணக்கம். மிகவும் உணர்வு பூர்வமான கதை. வாழ்த்துகள்! கே.எஸ். செண்பகவள்ளி, மலேசியா

  3. Bala

    எனது கண்களிலும் கண்ணீர். மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  4. BS

    உங்கள் கதை குழப்பமாகவே உள்ளது. குழப்புவது கவிதைக்கு அழகு கதைக்கு அல்ல.

Comments are closed.