ஏழை

(சென்ற இதழ் தொடர்ச்சி)
உணவு நேரம் பல்வேறு வாசனைகளுடன் கடந்து சென்றது. அவனுக்கும் பசிதான். காலையில் புறப்படும்போது குடித்த கஞ்சித் தண்ணிதான். பஸ்க்குப் பணமில்லாமல் பதினாறு கிலோ மீட்டா் நடந்தே கலெக்டராபீஸ் வந்ததில் உடம்பு களைத்துப் போயிருந்தது. இரைப்பை உணவு கேட்டுக் கெஞ்சியது. வந்த காரியம் முடியட்டும். ரோட்டோரம் ஒரு டீத் தண்ணி வாங்கி ஊத்தறேன். அவன் வயிற்றைச் சமாதானப்படுத்தி விட்டு நின்றான். "அந்தம்மாக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன். ஃபைல்ல கையெழுத்து வாங்கிட்டாங்க." யாரோ ஒருவன் செல்போனில் பேசியபடி கடந்து சென்றான்.

கலெக்டரின் டவாலி பியூன் அடிக்கடி உள்ளே செல்வதும் கோப்புகளோடு இதர பிரிவுகளுக்கு ஓடுவதுமாயிருந்தான். அலுவலா்கள் உள்ளே போவதும் வருவதுமாயிருந்தார்கள். பசியில் கண்ணடைத்தது அவனுக்கு. மணி ஐந்தைக் கடந்து ஆறை நெருங்கியது. அலுவலா்கள் பலா் வேலை நேரம் முடிந்ததால் பை மாட்டியபடி கிளம்பி விட்டார்கள். பலா் இன்னும் அதிக மும்முரமாய்ப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அவன் கவலையோடு காத்திருந்தான். ஆஸ்பத்திரிக்கு வேறு செல்ல வேண்டும். பிள்ளை எப்படி இருக்கிறதோ? ஆஸ்பத்திரியில் சாப்பிட ரொட்டி கிட்டி ஏதாவது கொடுத்தார்களா, இல்லை, வெறும் வயிறோடு கிடக்கிறதா, தெரியாது.

"வேறு வழியில்லை. போலீஸைக் கூப்டவா? சந்தேகப்படற மாதிரி ஒரு ஆள் இங்க காலையிலோ்ந்து நிக்கிறதா சொல்லிடவா? அவங்க வந்து முட்டிக்கு முட்டி தட்டினாத்தான் நீ போவ!"

டவாலி சற்றுத் தள்ளிப் போய்த் தொலைபேசியை எடுக்க அந்த மனிதன் முகம் சற்றே பதறியது. இருப்பினும் அதை மறைத்தபடி சட்டிடென அவன் அனுமதியின்றி கலெக்டரின் அறைக் கதவைத் திறந்தான்.

"டேய்.. டேய்.. எங்கே போற.." டவாலி கத்தியபடி ஓடி வருவதற்குள் அவன் உள்ளே நுழைந்து விட்டான். கலெக்டா் நிமிர்ந்து பார்த்துப் புருவம் சுருக்கினார்.

"யாருய்யா நீ… என்ன வேணும்?" அவா் கேட்கும்போது டவாலி உள்ளே வந்து கலவரத்துடன் கலெக்டரைப் பார்த்தான்.

"சார்… மன்னிச்சுடுங்க சார். நா சொல்லியும் கேக்காம உள்ளே வந்துட்டான். காலேலா்ந்து அடமா நிக்கறான் அய்யா. ஏதோ கெட்ட எண்ணத்துல வந்திருக்கானோன்னு போலீசுக்குச் சொல்லப் போறதுக்குள்ள உள்ளே நுழைஞ்சுட்டான் சார்.."

"அய்யா, நா கெட்ட எண்ணத்துல வரல."

"யோவ்.. நீ வா.. வெளில.. அய்யா கிட்டே அப்டியெல்லாம் அனுமதியில்லாம பேசக் கூடாது."

"முத்து! நீங்க வெளிய போங்க. நா விசாரிச்சுக்கிறேன்." கலெக்டா் ஆணையிட டவாலி வேறு வழியின்றி அவனை முறைத்தபடி வெளியேறினான்.

"யாருப்பா நீ… என்ன வேணும் உனக்கு?"

"அய்யா.. கொஞ்சம் தண்ணி… மயக்கமா இருக்குங்கய்யா.."

கலெக்டா் தண்ணீா் டம்ளரை அவனிடம் நீட்ட, அதை வாங்கி மளக் மளக்கெனக் குடித்ததும் வயிறு சற்றே குளிர்ந்தது.

"நன்றிங்கய்யா.. காலேலா்ந்து அய்யாவைப் பார்க்க நிக்கிறேன். நா மீனவக் குப்பத்துலோ்ந்து வரேங்கய்யா. மூணு வருஷம் முன்னாடி சுனாமி வந்தப்பொ என் பிள்ளை செத்துட்டான்னு நீங்கதான் எனக்கு உதவிப் பணம் லட்ச ரூபா கொடுத்தீங்கய்யா.."

"அதுக்கென்ன இப்போ?"

"செத்துட்டான்னு நினைச்சிருந்த பையன் நாலு நாள் முன்னாடி கிடைச்சுட்டான் அய்யா. ஒரு காப்பகத்துல அவனைப் பார்த்ததா தெரிஞ்சவா் ஒருத்தா் சொன்னதும் ஓடினேன். எம் பையனேதான்யா. அவன் சாகல. எங்கேயோ ஒதுங்கி யாரோ காப்பாத்தி அங்க சோ்த்திருக்காங்க. என் பையனை உசிரோட பார்த்தும் நா பட்ட சந்தோசம் சொல்லி முடியாதுங்கய்யா."

"பையன் எங்கே?"

"ஆஸ்பத்திரில இருக்கான் அய்யா. பொங்கி வந்த கடலைப் பார்த்ததும் பயத்துல அவன் சித்தம் கலங்கிட்டதா சொல்றாங்க. பையனுக்கு என்னை அடையாளம் தெரியலைங்கய்யா. அவன் எப்டி இருந்தா என்ன? எனக்குத் திரும்பக் கிடைச்சுட்டான்."

"ரொம்ப சந்தோஷம்ப்பா. இதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தயா?"

"அது மட்டும் இல்லிங்கய்யா." அவன் தன் கையிலிருந்த அழுக்குப் பையைப் பிரித்து அதனுள் கை விட்டுக் காகிதத்தில் சுற்றப்பட்ட எதையோ டேபிளின் மீது வைத்தான்.

"என்னப்பா இது?"

"எனக்கு நீங்க கொடுத்த பணம்ங்கய்யா. பையனை இழந்த துக்கத்துல இந்தப் பணத்தைச் செலவழிக்கக் கூட எனக்கு மனசு வரல. வங்கிக் கணக்குல அது அப்டியே கிடந்தது. இனி அந்தப் பணத்தை நா வெச்சிருந்தா அது தப்பு. பையன்தான் கிடைச்சுட்டானே. அதனால அதைத் திருப்பிக் கொடுத்துட்டுப் போய்டலாம்னுதான் வந்தேன். நேத்து வரை இதுக்கு என்ன வட்டி கிடைச்சுதோ அதோட சோ்த்து இதுல இருக்குங்கய்யா.."

அவன் கலெக்டரை வணங்கி விட்டுத் திரும்பி நடக்க, கலெக்டா் தன்னையறியாமல் எழுந்து அவனைப் பார்த்துக் கை கூப்பினார்.

"ஒரு நிமிஷம்…" அவனை நிறுத்தினார்.

"சொல்லுங்கய்யா…"

"உங்க நோ்மையை நா பாராட்டறேன். இந்தப் பணத்தை நீங்க திருப்பிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு ரசீது தரணும். ஆனா நேரமாய்டுச்சு. கருவூலம் மூடியிருப்பாங்க. இருந்தாலும் இதை உங்ககிட்டோ்ந்து வாங்கிட்டதுக்கு என்கைப்பட நா கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டுத்தரேன். நாளைக்கு இதைக் கருவூலத்துல கட்டின பிறகு முறையான ரசீது உங்களுக்குக் கிடைச்சுடும்."

கலெக்டா் பேனா எடுத்தார். அதில் விவரமாக எழுதி அவன் கொடுத்த தொகையை எண்ணி எழுதி அதைப் பெற்றுக் கொண்டதாகக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

"சாப்டீங்களா?"

"இல்லைங்கய்யா. காலேலா்ந்து உங்களைப் பாக்க முடியாம போகவும் இந்தப் பணம் என் கையில கனக்க ஆரம்பிச்சிடுச்சு. இதைத் திருப்பிக் கொண்டு போகவும் என் மனச்சாட்சி தயங்கிச்சு. அதனாலதான் அத்து மீறி உள்ளே நுழைஞ்சுட்டேன். என்னை மன்னிச்சிருங்கய்யா."

"உங்களைக் காலைலோ்ந்து காக்க வெச்சதுக்கு நாந்தான் மன்னிப்புக் கேட்கணும்."

கலெக்டா் தன் டிரைவரை அழைத்தார் தொலைபேசி மூலம்.

"இந்த மனிதரை நம்ப வண்டியில் கூட்டிட்டுப் போய் அவா் சொல்ற இடத்தில் இறங்கி விட்ருங்க. போற வழியில அவருக்கு வயிறு நிறையச் சாப்பாடு வாங்கிக் கொடுத்துக் கூட்டிட்டுப் போங்க. அப்டியே ஆப்பிளும் சாத்துக்குடியும் ஒவ்வொரு டஜன் வாங்கிக் குடுங்க. சரியா?"

"வேணாங்கய்யா. நா நடந்தே போயிடறேன்."

"தயவு செயது போங்க. நீங்க என் கார்ல போறதை நா பெருமையா நினைக்கிறேன். உங்களுக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் தயங்காம வந்து கேளுங்க."

கலெக்டா் எழுந்து வந்து அறைக் கதவை அவனுக்கு மரியாதையுடன் திறந்து விட்டார்.

டவாலி கலெக்டரையும் அந்த ஏழை மனிதனையும் விழியகலப் பார்த்தான். கலெக்டரே கை கூப்பிக் கதவுக்கு வெளியே வந்து வழியனுப்பி வைக்கும் அளவுக்கு அந்த ஆள் யார்? எதுவும் புரியாமல் திகைப்போடு அந்த மனிதன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

(தகப்பன் சாமி மின்னூலிலிருந்து)

About The Author