ஒரு மிகை யதார்த்தக் காலக்கட்டம் (4)

ஜுலை மாத வானம் வெளியே நிர்மலமாய்க் கிடந்தது. சூரியன் உதிக்க இன்னும் நேரம் இருந்தது. அவர்கள் மலையை நோக்கிக் கிளம்பினார்கள்.

"அப்ப, ரொம்ப காலம் முன்னால…" என்றான் அவன். "சில ஜெர்மன் படங்கள் பார்த்திருக்கிறேன். என்ன அழகான தலைப்புகள் அவை! ‘ஃபியர் ஈட்ஸ் தி ஸோல்’ (புலி அடிக்குமுன்னே கிலி அடிக்கும்) – ‘லவ் இஸ் கோல்டர் தேன் டெத்’ (காதலுக்கு மரணமே தேவலை) இப்படியெல்லாம்… அந்தக் கதைகளே மறந்துட்டது; ஆனாலும் தலைப்புகள் மனசில் நிக்குது!"

"அப்பா!"

"ம்?"

"உங்களைப் பார்த்த கணத்தில் இருந்து, எனக்கு என் பலமும் தன்னம்பிக்கையும் திரும்ப ஊற ஆரம்பிச்சிட்டது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களோட கிளம்பி வந்திட்டேன் அப்பா!"

"உனக்குப் பலம் வந்திருக்கிறாப் போலவே, நானும் இதயத்தில் என் சுமைகள் கரைந்துபோனதாக உணர்கிறேன்…" அவன் புன்னகைத்தான்.

"எப்பிடி அப்பா அது?…"

"உன்னை ஒரு கேள்வி கேட்கவா?"

"தாராளமா!"

"நீ எதும், சமுதாயப் பணின்றா மாதிரி வெச்சிக்கிட்டிருக்கிறாயா?"

"ஓ! வடகிழக்கு சமாதானக் குழுவில் நான் உறுப்பினர்."

"அமைதி என்பது ரொம்பச் சிக்கலாகவே இருந்து வருகிறது. எல்லாரும் உன்னை நம்புகிறார்களா?"

"ச்! நாங்கள் எப்பவும் கண்காணிக்கப்படுகிறோம். புரட்சிப்படைகள், நாங்கள் அரசு சார்ந்து செயல்படுகிறதாக நினைக்கின்றன. அரசாங்கமோ, நாங்கள் புரட்சிக்காரர்கள் பக்கம் என்று நினைக்கிறது…"

"உங்கள் அடுத்த செயல்திட்டம் என்ன?"

"இந்த நெருக்கடியில் இறந்து போனவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைப் பற்றிய குறிப்புகளோடு அவர்கள் புகைப்படமும் தொகுத்து ஒரு ஆவண நூலாகக் கொணர நினைக்கிறோம் அப்பா!"

"நல்ல முயற்சி! பொது மக்களிடம் இவர்களை ஞாபகப்படுத்துவது என்பது முக்கியம்!"

அதிகாலையின் ஜில்லிப்பான காற்று. அந்த அழகிய மலைச் சூழல். மரங்களின், பூக்களின் கோலம். வண்ணப் பறவைகளின் ஓலம். உடலையும் மனதையும் ஆத்மாவையும் புத்துணர்ச்சி கொள்ளச் செய்தன.

"அப்பா?"

"சொல்லு!"

"நீங்க வேட்டையாடியிருக்கீங்களா?"

"இல்லை. கொல்லுவது எனக்குப் பிடிக்காது!"

வழியில் ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்த்ததும் ஓய்வுக்காகத் தங்கினார்கள். அவன் மடியில் அவள் படுத்துக்கொண்டாள். அவள் தலையை அவன் வருடிவிட்டான்.

"என் வாழ்க்கையிலேயே, இப்ப மாதிரி நான் சந்தோஷமா இருந்ததே இல்லை அப்பா!" கண்களை மூடிக்கொண்டாள். பிரின்ஸ் அவர்களைப் பார்த்துவிட்டுத் தானும் அவன் மடியில் இடம் பிடிக்க அடம் பிடித்தது.

"அப்பா ஒரு கதை சொல்லுங்க!" வாயில் விரல் போட்டுச் சப்பியபடியே அவள் சிரிக்கிறாள்.

புன்னகைத்தான் அவன். மனசில் யோசனை. காலையில் அவனை அவன் அம்மா எழுப்புகையில் பாடும் ஒரு பாடல் நினைவுக்கு வர, மெல்லப் பாடினான். படபடவென அவள் கைதட்டினாள். திடீர்ச் சத்தத்தில் பிரின்ஸ் உதறி எழுந்துகொண்டது.

"அருமையான குரல் உங்களுக்கு"

காய்ந்த இலைகளும், குச்சிகளும் கூடு கட்டப் பறவைகள் அலகில் எடுத்துச் செல்வதை அவள் பார்த்தாள்.

"நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க அப்பா!"

"நீ நிறைய செய்ய வேண்டியிருக்கு! இந்த உள்நாட்டுப் போரில் நிராதரவாய் விடப்பட்ட பெண்களுக்காக நான் ஒரு என் ஜி ஓ (அரசு சாரா அமைப்பு) நடத்திக் கொண்டிருக்கிறேன். கைவினைப் பொருட்கள் செய்தல், முடைதல், பின்னுதல் வேலைகளுக்குப் பயிற்சி தந்து அவர்கள் சுயமாய்ச் சம்பாதிக்க, வாழ வழிவகை செய்கிறேன். அந்தச் சாமான்கள் எல்லாம் நம் நாட்டிலும் வெளிநாட்டிலுமாக விலை போகின்றன. அநாதைக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கவும் எனக்கு யோசனை இருக்கிறது."

"நான் உங்கள் பள்ளியில் வேலை பார்க்கலாமா?"

"நிச்சயமா!"

"அப்பா!"

"சொல்லு!"

"நாம இன்னும் எவ்வளவு நேரம் இப்பிடிக் கண்ணாமூச்சி ஆடணும் அப்பா?"

"என்ன சொல்றே?"

"நீங்கதான் என்னோட நிசமான அப்பா. உங்களை முதலில் பார்த்தபோதே என் உள்ளுணர்வு சட்னு சொல்லிவிட்டது அதை. இத்தனை வருஷமா உங்க முகம் எனக்கு ஞாபகம் இருந்திட்டேதான் இருக்கு. வலது புருவத்தின் மேல் உள்ள வெட்டு, அதுகூட ஒத்துப்போகிறது. ஒரு பெண்ணின் நோட்டத்தில் இருந்து உங்களால் எப்படித் தப்பித்துக்கொள்ள முடியும்? உங்க அன்றாட வாழ்க்கை பத்தியும் பழக்க வழக்கம் பத்தியும் அம்மா எல்லாம் சொல்லியிருக்கிறாள். என்ன, இப்ப தாடி வெச்சி, சிறு பின்முடி போட்டிருக்கீங்க. அது உங்க அடையாளத்தை மறைக்கப் பத்துமா என்ன?"

புன்னகை செய்ய முயன்றான் அவன். ஆனால் அவன் முகத்தைத் திருப்பிக் கொள்வதை அவள் பார்த்தாள். அழுகிறானா என்ன?

"அழுவாச்சி அப்பா எனக்கும் வேண்டாம்!" புன்னகைத்தபடி அவன் கண்களைத் துடைத்துவிட்டாள்.

அப்படியே நிற்கவைத்து அவனது ரெண்டு கைகளையும் விரிக்கச் செய்தாள். பிரேசில் மலை உச்சியில் இயேசு கிறிஸ்து அவன். "கீழே சமவெளி பாருங்கள் அப்பா! மேலே வானம் பாருங்கள்!… இப்ப, நாடக பாணியில் நெஞ்சு நிமிர்த்திச் சொல்லுங்கள்! நானே உங்கள் பெண்… இந்த உலகம் அதை நிரந்தரமாக அறிந்துகொள்ளட்டும்!"

வசனத்தை மறந்துபோன புதிய நடிகன் போலப் பேச்சற்று அப்படியே நின்றான் அவன். அவள் அவனை அரவணைத்துக் கொண்டாள்.

"உன் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் நானேதான் காரணம் என் பெண்ணே!…"

"இல்ல அப்பா! விதியின் முன் நாம் செய்ய ஏதும் இல்லை. ஆனால், உங்களுக்கு ஒரு பெண்பிள்ளை இருக்கிறது என்று உங்களுக்கு எப்பவாவது தெரிய வந்ததா?"

"புகைப்படம்! அதைப் பார்க்கிற வரை தெரியாது. பார்த்தபோதுதான்…"

"தெரிந்த பின்… இப்ப எப்பிடி இருக்கு?"

"பெருமிதமாய் இருக்கிறது…" அவன் நெஞ்சு விம்மியது.

"இது என் வார்த்தைக்கும் ஆனந்தத்துக்கும் மேலான பெரிய விஷயம்! இனி நான் தனியன் அல்ல. ஆனால் தனியான… அம்மா இல்லாத அப்பா."

மனசில், பொங்கி அலைநுரைக்கும் சிந்தனைகள். இந்த நீர்வீழ்ச்சியைப் போல. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டபடி அவர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"உங்க பெண்ணா நான் எப்பிடித் தெரியறேன் அப்பா? எல்லாரும் நான் உங்க ஜாடையா இருக்கிறதாச் சொல்வார்கள்…" – அவளைக் கிட்டத்தில் ஊடுருவிப் பார்த்தான். முகத்தில் விரவியிருந்த முடிகளைப் பிரித்துவிட்டான். நெற்றியில் முத்தம் ஒன்றை ஈந்தான்.

மலையில் மீண்டும் குண்டுவெடிப்புகள் அதிர்ந்தன. கிளம்பினார்கள்.

"இந்தத் துப்பாக்கிச் சூடுகள்… இன்னும் எவ்வளவு காலம்தான் இப்பிடியே போயிட்டிருக்கும் அப்பா?"

"நாம உயிரோட இருக்கிற வரைக்கும்" என அவன் புன்னகைத்தான்.

"25 வருஷம் முந்தைய உங்கள் நம்பிக்கைகள்… இன்னமும் அவற்றை நம்பறீங்களா அப்பா?"

"ஆமாம்! குரலற்றவர்கள் சார்பாகக் குரல் கொடுத்தல். எப்பவுமே அது தேவையாகவே இருக்கிறது."

"எதிர்காலம் பத்தி என்ன சொல்றீங்க அப்பா?"

"த பாரும்மா! மனித வரலாறு என்பது என்ன? தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுதல். மத்தவன் கலகம் பண்ணறான். அவனுக்கும் தேவை அடையாளம். இவனுக்கும் தேவை அதே! நீயும் நானும் காலத்தின் காயங்களுக்கான களிம்புகள்தானே!"

"அப்பா!"

"சொல்லு!"

"நீங்க பார்க்க வந்தீங்களே, அந்த நபர், உங்க பழைய சிநேகிதரா?" – சிரித்தான்.

"ஆமாம்!. ஆனால் இறந்தவர்களைப் பற்றி நான் ஏதும் பகிர்ந்துகொள்வது சரியில்லை."

******

பின்குறிப்பு – அன்றிரவு அப்பா சுடப்பட்டார். பிரின்ஸ், அப்பாவைச் சுட்டவனைக் கொன்றுவிட்டது. சில நாட்களுக்குப் பிறகு, என் ஜீ ஓ-வை டோலி பொறுப்பெடுத்துக் கொண்டாள். தன் பெற்றோர்களின் நினைவாக அவள் ஒரு பள்ளிக்கூடமும் துவங்கினாள். அத்தோடு “அன்பே அனைத்தும்” என்கிற நாடகத் தொகுதி ஒன்றையும் அவள், புதிதாய் முன்னுரை எழுதி வெளியிட்டாள்.

A Surreal Time Frame
Satadal S. Bhattacharya
Courtesy – Indian Literature May/June 2010 – issue No 257

ஆங்கில மூலம்: சடாதல் எஸ். பட்டாச்சாரியா

(முடிந்தது) 

About The Author