கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நம்பினால் நம்புங்கள்!

கனவில் தெரிந்த எதிர்காலம்

புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கனுக்கு அடிக்கடி கனவுகள் வருவதோடு மட்டுமல்லாமல், அவர் கனவுகளின்படியே உண்மையில் நடந்திருக்கிறதாம்! அவருக்கு தனது மரணத்தைப் பற்றிக் கூட கனவுகள் வந்திருக்கின்றன; அத‎ன்படி நடந்திருக்கிறது. ‏

1865ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் நினைவுகளால் வருந்தி அவர் உறங்கிக் கொண்டிருக்கையில், வெள்ளை மாளிகையின் ஓர் அறையில் ஒரு சடலம் கிடப்பதையும், அதைச் சுற்றி போர் வீரர்கள் மரியாதை செலுத்துவதையும் அந்தக் கனவில் பார்த்தார். அதில் இறந்து கிடந்தவரின் முகம் மட்டும் தெரியவில்லை.

போர்வீரன் ஒருவனிடம் இறந்தது யாரெ‎ன்று கேட்க, அவன் "இது அமெரிக்க ஜனாதிபதி, அவரை யாரோ சுட்டுக் கொன்று விட்டார்கள்" என்று கனவில் பதில் சொன்னான். அந்தக் கனவிலிருந்து விழித்துக்கொண்ட அவர், இதைத் தன் மனைவிகளிடமும் நண்பர்களிடமும் கூறியிருக்கிறார்.

இதே போல ஒரு கனவு கடைசியாக ஏப்ரல் 13ந்தேதி வந்தது. அதைப் பற்றி தன் அமைச்சரிடம் தான் சுட்டுக் கொல்லப்படுவதற்கு ஐந்து மணி நேரம் முன்பு கூறியிருக்கிறார். 14ந்தேதி ஃபோர்ட் அரங்கத்தில் ஜான் விகி பூத் என்பவனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மூன்றும் முதல்!

ஆஸ்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் நகரத்தில், 1903 ம் ஆண்டு நடந்த ஒரு குதிரைப் பந்தயத்தில் ஹைஃப்ளையர், லாக்லோச்சி, பார்தினி என்ற மூன்று குதிரைகள் ஒரே சமயத்தில் வெற்றிக் கம்பத்தை எட்டின. ‘அந்த மூன்றில் எது முதல்’ என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, மீண்டும் அந்தப் போட்டியை நடத்தி‎னார்கள். ஆனால், அதே மூன்று குதிரைகள் ஒரே சமயத்தில் மீண்டும் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தன. இது போ‎ன்று நடந்திருப்பது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாம். இது எப்படி இருக்கு?

நான் செத்துப் பிழைத்தவ‎ன்டா!

ஆப்ரிக்கா, நைரோபி அருகே நிவிங்கி என்னும் கிராமத்தைச் சேர்ந்த மூட்டாட்டா என்பவர் இறந்துவிட்டதாகக் கருதி உறவினர்கள் வருவதற்காக அவரது உடலை வைத்துக் கொண்டிருந்தனர். இரண்டாவது நாள், சவப்பெட்டியிலிருந்து அவருடைய குரல் வருகிறது, "எனக்குப் பசிக்கிறது, கஞ்சி கொடுங்கள்" என்று. அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கு முன் அவரது மூன்றாவது வயதில், குழந்தை மூச்சுப் பேச்சில்லாமல் இருந்தது. அதனால், இறந்து விட்டதாகக் கருதி சவக்குழியில் போடும்போது விழித்து அழ ஆரம்பித்தது குழந்தை மூட்டாட்டா.

இரண்டாவது முறையாக, அவருக்கு இருபது வயதானபோது அவரின் உடல் ஒரு புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இப்படி மூன்று முறையாக செத்துப் பிழைத்திருக்கிறார் மூட்டாட்டா! அடாடா!

லீப்புக்கு லீப் தாலேலோ!

நார்வேயில் ஆட்டென்னஸ் என்னுமிடத்தில் ஹென்றி-சென் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அவை மூன்றும் லீப் ஆண்டிலேயே பிறந்தன என்பது ஆச்சரியமான விஷயம்! மேலும், நா‎ன்கு நா‎ன்கு ஆண்டுகள் இடைவெளியில் அடுத்தடுத்த குழந்தைகள் பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் குழந்தை ஹெய்டி – 1960ம் ஆண்டு ஃபிப்ரவரி 29
இரண்டாவது குழந்தை ஓலாவ் – 1964ம் ஆண்டு ஃபிப்ரவரி 29
மூன்றாவது குழந்தை லிஃப் மார்டின் – 1968ம் ஆண்டு ஃபிப்ரவரி 29.

‘ஈ’யது விலக்கேல்!

ருமேனியக் கவிஞர் செல்லமாக வளர்த்த பிராணி ஒரு ஈ. அந்த ஈ இறந்த பிறகு அவர் தனித்து விடப்பட்டதுபோல் உணர்ந்தார். கண்ணீர் விட்டு அழுத அவர், தனது செல்ல ஈக்கு இறுதி ஊர்வலத்திற்காக லட்சக்கணக்கில் செலவழித்து, அதற்கு ஒரு கல்லறையும் கட்டினார்.

(செய்திகளுக்கு நன்றி : "நம்ப முடியாத உண்மைகள்" ஸ்ரீநிவாசன்)”

About The Author

1 Comment

  1. mano

    அட இது நல்லாயிருக்கே………………..வாழ்த்துக்கள்……

Comments are closed.