கண்ணகி

பேர் வீரபத்திரன். என்றாலும் பெரிய சத்தமாய் எதுவும் கேட்டால் சட்டெனப் பதுங்கத்தான் யோசனை வந்ததே தவிர, என்ன சத்தம் என்று அவன் பார்ப்பதே அடுத்த கட்டம்தான். இரவில் நாய் ஊளையிட்டால் அந்தத் தெருவில் சாவு விழப்போகிறது என்று ஒரு நம்பிக்கை ஊரில் உண்டு. எங்கோ நாய் ஊளையிட்டாலே அவனுக்குத் தானே பாடையேறப் போகிறதாய் ஒரு சிலிர்ப்பு தோலில் ஊரும். நாய் போன்ற, மனுசாளை நம்பி வாழும் ஜென்மங்கள் கூட, அவனை மனுசனாக மதிப்பதில்லையோ என்னமோ, அவனைப் பார்த்ததும் பார்வையைக் கூர்மையாக்கி, தாடையை இறுக்கி, வாய்ப் பற்களை வெளியே நீட்டி, உர்ர்ர்… நினைக்கவே படபடக்கிறது.

அவன் தெரு நாய்கள் ஏனோ அவனை எதிரியாகவே பார்த்தன.

அலுவலகத்தில் எடுபிடி. அதிகாரி அறை வாசலில் ஸ்டூல் போட்டு சர்க்கஸ் மிருகம் போல உட்கார்ந்திருப்பான். உள்ளேயிருப்பவர் ரிங் மாஸ்டர். வீரா!… என்கிற அவரது வாய்ச்சாட்டைக்குத் துள்ளி எழுந்து, எஸ் சார்… என ஓடுவான். வீரா என்ற குரலெடுப்புக்கு இப்படி வீரமில்லாமல் பயந்தோடுவான். உடம்பு ஏன் நடுங்குகிறது குளிர்ஜுரம் வந்தாப்போல? அதன் சுபாவமே அப்படி. எப்பவுமே எதாவது தனக்குக் கெடுதல் நடக்கும், நடந்துவிடும் என்று பதறியபடியிருந்தான் அவன். அப்ப மற்றவர்கள்? அவர்கள் இவனுக்கு என்ன கெடுதல் செய்யலாம் என்று ஒருவேளை காத்திருக்கலாம்…

இந்த அவன் பயம் மத்தவருக்குச் சௌகர்யம். அலுவலகத்தில் ஆளாளுக்கு அவனை வேலையேவினார்கள். அங்கே வேறு பியூன்கள் இல்லையா? இருந்தார்கள். அவர்களின் அதிகாரிகள் அவர்களை வேலை வாங்கவில்லையா? – வில்லை. காது கேட்காத மாதிரி அவர்கள் அப்படியே ஸ்டூலில் நித்திரை கொள்வர். அல்லது அப்படிப் பாவனை. ஸ்வாமி சந்நிதிக்கு வெளியே வாகனம் போல அவர்கள். மூலவர் கூப்பிட்டால் வாகனங்கள் எழுந்து உள்ளே போகா. அர்ச்சகர்தான் போய்வருவார்… காசு கீசு எதுவும் கொடுத்து அவர்களை, மத்த பியூன்களை வேலை வாங்க வேண்டியிருந்தது. அப்படிக் காசு தேறாத நபர்கள் கூப்பிட்டால், அவர்கள் முடிந்தவரை சண்டிகேஸ்வரர் ஸ்டைல் கடைப்பிடிப்பார்கள். அல்லது, அவர்கள் பதிலுக்கு ஒரு சத்தங் கொடுப்பார்கள். என்ன சத்தம்?

வீரா! சார் உன்னைத்தான் கூப்பிடறாரு… காது கேக்கலியா?

வீரபத்திரன் மத்த பியூன்களுக்கும் எடுபிடியாக இருந்தான். அவனுக்கும் தன்னை இப்படி வேலை வாங்குகிறாட்களிடம் காசு கீசு தேத்தலாம் என்கிற ஆசை உண்டு. கேட்க வாய்வரை வரும் வார்த்தைகள் அப்படியே ஏனோ உட்திரும்பி விடுகின்றன. இப்படி ஏகதேசம் அப்படியே ஆகிறது. அவன் வாய் என்பதே சாப்பிட மாத்திரமே என்று நினைத்தானோ என்னமோ. பஸ்சில் எவனாவது குடித்துவிட்டு ஏறினால் உடனே போய் அவன் சட்டையைப் பிடித்திழுத்து வெளியே தள்…ள ஆவேசம் வருகிறது. ஆனால், அவன் நம்மை வெளியே தள்ளிருவானோ, என உடனே பயம். உடம்பு உடனே தன்னைப்போல நடுக்கம். எங்காவது விவகாரம் என்றால் அவன் அந்த இடத்தைவிட்டு நகரவே முயல்கிறான். அந்தத் தெருவில் சாவு என்றாலே பக்கத்துத் தெரு வழியே வீடு திரும்பினான் வீரா.

இப்படியே அவனுக்கு அந்தப் பகுதியின் எல்லாத் தெருக்களும் பழகிவிட்டன… பழகாதவை அந்தந்தத் தெரு நாய்கள்.

பொதுவாக அலுவலகம் விட்டு வீடுவர ஏழு ஏழரை ஆகிவிடும். நேர்வழி என்றால் ஏழு. சுத்திவர நேர்ந்தால் ஏழரை! பஸ் நிறுத்தத்தில் இருந்து நாலு தெரு தள்ளி வீடு. வழியில் ஒரு கோவில். உள்ளே மூலவர். வாசல் பிள்ளையார் அவனுக்குப் பிடித்த தெய்வம். அவரைப் பார்க்கும்போதே அவனுக்கு ஒரு பிரியம். உள்ளே மூலவருக்கு இவர்தான் பியூன், என்கிறாப்போல ஒரு நினைப்பு. அவரை அமர்த்தியிருக்கிற பீடமே ஸ்டூலாகத் தெரிந்தது. என்ன பிள்ளையாரப்பா சௌக்கியமா?… என்பது போல, தன்னைப்போலப் பேச்செடுக்கும் மனசு. உள்ளே மூலவரைப் பார்க்க அனுமதிக்க நீயும் காசு கேப்பியா, என்றுகூட வேடிக்கையாய்க் கேள்வி போடும்.

அர்ச்சகர் கேட்பார் என்பது தனிக்கதை!

கோவிலைப்போலவே அலுவலகத்திலும், மூலவரைக் காட்டிலும் பியூன்கள் கொழுக் மொழுக்கென்று வளமாய் இருந்தார்கள். அவனைத் தவிர. மத்தவர்கள் ஸ்டூல் கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிறபோது அவன்மாத்திரம் ஒடுக்கமாய் அமர்ந்திருந்தான். ஷேர் ஆட்டோ டிரைவர் போல.

‘ஸ்டூல்களும் நாற்காலிகளும்’ என்பதே இந்தக் கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கலாமோ? வீரா தன் வீட்டிலேயே நாற்காலி வாங்கவில்லை. ஸ்டூல்தான் நமக்குச் சவுகரியம் என்பான். அப்பா சாவுக்குக் கூடப் பக்கத்து வீட்டில் இருந்து நாற்காலி அல்ல, பெஞ்சு வாங்கி வந்துதான் அதில் கிடத்திக் காரியம் எல்லாம் நடந்தது. சாவுக்கு அவன் முதலாளி வந்திருந்தபோது, ஐயா என்ன இப்பிடி மரியாதையில்லாம படுத்திருக்காரு என்று இருந்தது.

ஒருநாள் ஞாயித்துக்கிழமை. வீட்டில் சும்மா எத்தனை நேரம்தான் படுத்து உருண்டுகிட்டுக் கிடப்பது! தொலைக்காட்சிப் பெட்டியில் இளைஞர்கள் கைதட்டிச் சிரித்து மகிழ்கிறாப்போல நிகழ்ச்சிகள். என்னத்துக்கு இத்தனை சிரிப்பு தெரியவில்லை! வாழ்க்கையில் சிரிக்க இத்தனை இருக்கிறதா என்ன? அவன் அலுவலகத்தில் கூடச் சில பெண்கள் இப்படித்தான் ஒரே சிரிப்பு. நின்னாச் சிரிப்பு. உட்கார்ந்தாச் சிரிப்பு. அந்தா, அன்னிக்கு ஒரு பெண், அலுவலகத்துக்கு வரும்போதே வாய் நிறையச் சிரிப்பு. என்ன எழவுடா இது என்றே புரியவில்லை! அப்புறம் கேட்டால், புதுப்புடவை. இன்னொருத்தி இதைவிட மோசம். தலையில் பூ வைத்ததற்கெல்லாம் அவர்களுக்குச் சிரிப்பு பொங்கினால் என்ன செய்வது? லூசுப் பிறவிகள்!

சிரிப்பு என்பதே ஸ்டூல்களின் அல்ல, நாற்காலிகளின் சொத்து என்று நினைத்தான் அவன்.

கோவில் வாசல் பக்கம். ”வீரா!”

எஸ் சார், என்று தன்னைப்போல வாயில் வந்துவிட்டது. யாராவது தெரிந்த நண்பனாகவோ உறவினனாகவோ இருக்கலாம் என்று அப்புறந்தான் தோன்றியது.

பார்த்தால் அவன் மேனேஜர்தான். ”என்ன இங்க நிக்கிறே?” என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு அவனுக்குப் பதில் தெரியவில்லை. அப்படியே நின்றான்.

இதே கேள்வியை அவரைப் பார்த்து அவன் கேட்கவா முடியும்?

”எங்கயாச்சும் அவசரமாப் போறியா?”

எதும் வேலை வைக்கப் போகிறார் என்று அவனது திறமையான மூளை யூகித்துவிட்டது. ஆனால் ஆமா சார் என்று சொல்ல நினைத்து, உள்ளே சிலிர்த்த பயத்துடன் ”இல்ல சார்” என்றான்.

”இந்தக் காய்கறிக் கூடையை வீட்ல குடுத்துரு” என்று நீட்டினார். வீட்டில் அம்மா கிளம்பும்போதே சொன்னாள். எடா! வர்ற வழில காய்கறி எதும் வாங்கிட்டு வரியா? வீடாச்சே? அவன் காது கேளாத மாதிரி தைரியப் புலியாய் வெளியே வந்திருந்தான். வேட்டைக்குக் கிளம்பும் புலி!

மௌனமாய் அவன் பையை வாங்கிக்கொள்ள, மேனேஜர் கோவிலுக்குள், பிள்ளையாரை அலட்சித்து நுழைந்தார். பிள்ளையார் முன் ஒரு தோப்புக்கரணம் போட்டிருந்தால் சந்தோஷமாய் இருந்திருக்கும்.

வீரபத்திரனுக்குப் பார்த்த பெண் வேலூர்ப் பக்கம். அதில் ஒரு நிம்மதி அவனுக்கு. உள்ளூர்ப் பெண் என்றால் அவனைப் பற்றித் தெரிந்தவளாய் இருந்து வேணான்னுரும். இவளைப் பெண் பார்க்கப் போனபோதே கொஞ்சம் இதுவாகத்தான் இருந்தது.

பெண்ணோ ஒடிசலாய், மாநிறமாய் இருந்தாள். குனிந்த தலை நிமிரவில்லை. அப்படி அடக்கமாய் வளர்த்திருந்தார்கள். ஒருவேளை தெத்துப்பல்லை மறைக்கிறார்களோ என்று ஒரு சந்தேகம். சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட பலகாரம் என்று போடுவார்களே, அதைப்போல மாசு மருவற்று இருந்தாள். பேரே கண்ணகிதான். கேட்கவே திகட்டியது. சுத்த நெய் இனிப்புல்லா!

அடியே! இனிமே உன் பேரு கண்ணகி வீரபத்திரன்.

பெண்ணைப் பிடிச்சிருக்கா என்று கேட்டபோது ஒரு சிரிப்பு சிரிச்சான். அதுவரை அவன் சிரித்ததே இல்லை. லேசாய் வாய் உதறியது. அது எப்போது உதறாமல் இருந்தது? பெண்ணிடமும் ஒரு வார்த்தை கேட்டிருங்க, என்று சொல்ல வாய் வந்தது.

வழக்கம்போல அது உட்சுருண்டது. எபௌட் டர்ன். யாரோ பெரியவர் அந்தக் கேள்வியைச் சபையில் வைத்தே கேட்க, அவள் குனிந்தவாக்கில் தலையை ஆகா, சம்மதமாய் அசைத்தபோது உடம்பெல்லாம் கிச்சி கிச்சி மூட்டிய பரவசம்!

இப்பவெல்லாம் மேனேஜரை விடப் பியூன்கள் நிறையச் சம்பாதிக்கிறார்கள் என அவளுக்குக் கனவுகள் இருக்கலாம்.

பிள்ளையாரிடம் மானசிகமாக அந்த நல்ல சேதியைப் பகிர்ந்துகொண்டான். அவனைப் பொறுத்தவரை அவர்தான் பியூன்கள் சங்கத் தலைவர். அப்பவே மலையளவு பலம் வந்தாப்போலிருந்தது. இனி நான் ஆம்பளை, என்று திடீரென்று தோன்றியது. ஒரு குடும்பத்துக்குத் தலைவன் ஆகப் போகிறவன் என்கிற மோக மயக்கம். மீசையை இன்னும் அழுத்தமாய் வைத்துக்கொண்டான்.

அலுவலகப் பெண்களைப் பார்த்து, அவர்கள் சிரிக்கும்போது சந்தோஷப்பட்டான். ஒவ்வொரு நாள் காலண்டரைக் கிழிக்கையிலும் மனசில் ஒரு துள்ளல். வெளியே கிளம்பினால், ”அம்மா, கடைல எதும் வாங்கியாரவா?”… என்று கேட்டுக்கொண்டான். அரைக்கை சட்டை போடக் கூசி, முழுக்கை போட்டான். வெளியே கிளம்புகையில் தலையை வாரிக்கொண்டான். வேலூர்ல இருக்கறவ இதையெல்லாம் பார்க்கவா போறா, என அம்மா நினைத்துக்கொண்டாள்.

கோவிலைத் தாண்டும்போது, பாவம் இந்தப் பிள்ளையார்! கடைசிவரை கல்யாணமே அவர் பண்ணிக்கல, என்று வருத்தம் வந்தது. ஆமா, இப்பிடித் தொந்தியும் தொப்பையுமா இருந்தால் யார் அவரைப் பண்ணிக்குவா? இப்பவெல்லாம் லேசாய் அடிக்கடிச் சிரித்தான். உடனே அது தப்பு போலச் சுத்துமுத்தும் பார்த்துக்கொண்டான்.

தாலி கட்டிய அந்த மகத்தான நிமிடம்! பெண்ணைப் பெத்தவர்கள் அழுகிறார்கள். அவனுக்கும் அழுகை வந்தது. கண்ணகியோ சிரித்த முகமாய் இருக்கிறாள். சிரி, சிரி! துட்டுச்செலவு ஒண்ணும் இல்லை. சிரிச்சால் நல்லாதான் இருக்கு, என நினைத்துக்கொண்டான். அவர்கள் அலுவலகத்தில் இருந்து நிறையப்பேர் வந்திருந்தார்கள். அதிகாரி வந்தபோது யாரோ அவருக்கு நாற்காலி எடுத்துவர ஓடினார்கள்.

அதைவிட வேடிக்கை, கணவன் முன் உட்கார கண்ணகி காட்டிய வெட்கம். சும்மா உட்காரு பரவால்ல, நான் என்ன உன் மேனேஜரா?… என்கிறான். அவள் கேட்டால்தானே? அவன் உள்ளங்கையில் அவள் ஒரு பூ என உணர்ந்தாளோ என்னமோ? அப்படி நினைக்கவே வீராவுக்கு லேசான போதை. தோள் பூரித்தாப்போல ஒரு கிறுகிறு. அடேய் மயங்கி பொத்னு விழுந்துறாதே!

முதலிரவிலும், ஊர்கிளம்பி வரும் வரையிலும் அவள் காட்டிய பணிவும் பணிவிடையும் மரியாதையும் அவனுக்கு உச்சத்தில் ஏறியது. நீ கவலையேபடாதே, உனக்கு ஒரு கவலையும் இல்லாமல் நான் பார்த்துப்பேன், என்றெல்லாம் வாய்வரை வந்த வார்த்தைகள் உட்திரும்பி விட்டன. எபௌட் டர்ன்.

பஸ் இறங்கி, மாப்பிள்ளை ஊருக்குள் கம்பீரமாய் நுழைந்தான். பவானி ஜமுக்காளம், பாய் என வகையறாக்களை அம்மா, கூடப் பெண் வீட்டுக்காரர்கள் எடுத்து வருகிறார்கள். அவன் தாத்தா அந்தக் காலத்தில் பண்ணுகிற வேடிக்கை அவனுக்கு அவளிடம் சொல்ல ஆசையாய் இருந்தது. வெத்தலையும் பாக்குமா?- என்று அவர் கேட்பார். பார்க்காது, என நாம் பதில் சொல்கிறோமா என்று பார்ப்பார். அடுத்து, தலையணையும் பாயுமா?

புதிய ஊர் பார்த்த சந்தோஷம் கண்ணகிக்கு. அதைவிடப் புதுப்புடவையின் சரசரப்பு. கால் கொலுசு. தலை நிறையக் கனகாம்பரப் பந்து… என அவள் சந்தோஷ அடுக்கில் இருந்தாள். இருக்கட்டும். இருக்கட்டும்… அவளை உரசியபடி அவன் நடந்தபோது ரெண்டு பேருக்குமே சிரிப்பு.

தெரு திரும்புகையில்தான் அந்த அசம்பாவிதம். கொஞ்சம் சுத்து வழியானாலும் பொதுவாய் பக்கத்துத் தெரு வழியேதான் அவன் வீடு திரும்புவான். இந்த வழியில் ஒரு தெருநாய் இருக்கிறது. அவனைப் பார்த்ததுமே உரத்து உருமிக் குரைத்தபடி…

புது வேட்டி. சில்க் சட்டை. மாப்பிள்ளை தோரணை. நாய் அதைச் சட்டை செய்யவில்லை. இவனும் நாய் பற்றிய ஞாபகமே இல்லாத மயக்கத்தில் இருந்தான். திடீரென்று உர்ர்ர். பதறி அவன் விலகியதில் வேட்டியை மிதித்துத் தடுமாறி அவள் மீது சரிய, 

அவளுக்கு வந்தது ஆவேசம்.

சட்டெனக் குனிந்து கல் ஒன்றை எடுத்து… உயர்த்தி… நீதி கேட்டபோது…

நாய் பதறி விலகி ஓட்டமெடுத்தது.

”பயப்படாம வாங்க!”

தொடர்ந்து நடந்துபோனார்கள்.

About The Author