கல்யாண விருந்து (1)

(‘பூஞ்சிறகு’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

"இதுதான் உன்னோட ரூம்" என்று பாலா அடையாளம் காட்டினான்.

கதவைத் திறந்ததும் நெடி குப்பென்று அடித்தது. காற்றுப் போக வசதி இல்லை.

ஸ்டோர் ரூம் இன்-சார்ஜ் தலையில் கிரீடம் வைக்கப்பட்டது.

"டேய் பாலா.."

அவனது மாமா பின்னாலேயே வந்துவிட்டார்.

"என்னடா இது…முதல்லே அவருக்கு டிபன் காப்பி தருவியா. வந்த உடனே பொறுப்பைத் தலையில கட்டிக்கிட்டு.."

இடைமறித்தேன். "நான்தான் விசாரிச்சேன். ஸ்டோர் ரூம் எதுன்னு…"

"வாங்கோ. மூணு நாளும் இங்கேதான் நிக்கப்போறேள். மத்தியானம்தான் சாமான் வேன்ல வருது. ராஜப்பா வந்திருவார்… என்ன மெனுன்னு ஒரு தடவை பார்த்திரலாம்"

கல்யாணம் ஒரு பெரிய வீட்டிலும், வந்து இறங்கிய நாங்கள் இன்னொரு வீட்டிலுமாக ஏற்பாடு. எதிர்வீடே மாமாவினுடையதாம்.

டிபன் சாப்பிடும்போது சொன்னேன்.

"இதுதான் என்னுடைய பர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ்.. வில்லேஜ்ல மேரேஜ் அட்டெண்ட் பண்றது."

"எனக்கும் தலை சுத்தறது. எது வேணும்னாலும் மூணு கி.மீ போகணும் டவுனுக்கு. எங்கப்பாவோட பெரிய பிரச்னை. நல்ல வேளை தங்கை கல்யாணம் கிராமத்துலன்னு முடிவாச்சு. எவரெஸ்ட்ல வையின்னு சொல்லாம போனாரே…"

"கவலைப்படாதே…"என்றேன்.

"எனக்கென்ன.. நீதான் பிராமிஸ் பண்ண மாதிரி கூடவே வந்துட்டியே. கண்ணன், சக்தி எல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்கே வரதாச் சொன்னாங்க. அவங்களும் வந்தாச்சுன்னா உனக்கும் ஒரு சேஞ்ஜ் கிடைக்கும்."

"ஒண்ணும் வேணாம். ஐ கேன் மானேஜ் ரெண்டு நாள் கூத்து."

பாலா தணிந்த குரலில் சொன்னான்.

"இங்கே பாரு… சட்டுனு கேட்ட உடனே எடுத்து கொடுத்துராதே. ஒரு கிலோ கேட்டா முக்கா கிலோ கொடு. அதையும் ஏன்… எதுக்குன்னு விசாரிச்சிட்டுக் கொடு. முழுசா மாமாவையும் நம்பிர முடியாது."

இதுவரை தெளிவாய் இருந்தவன் இப்போதுதான் குழம்பினேன்.

"என்ன…சொல்ற?"

"பயந்துராதே.எப்படியும் போட்ட லிஸ்ட்படிதான் சாமான் வாங்கியிருக்கு. இருந்தாலும் கொஞ்சம் ‘கெத்’தா இருந்தாத்தான் ஏமாத்தாம இருப்பாங்க. அதுக்குச் சொன்னேன்."

கை கழுவியபோது குளிர்ந்த நீர் பட்டு உடம்பு ஜிலீரென்றது.

                                                                                        *****

வேன் நான்கு மணிக்குத்தான் வந்தது.

"எப்ப பட்சணம் பண்றது?" என்று யாரோ பொருமிக்கொண்டிருந்தார்கள்.

இதற்காகவே சுமாரான வேட்டி, சட்டை கொண்டு வந்திருந்தேன். இறங்கிய பொருட்களை எடுத்து அடுக்கவே அரைமணியானது.

"காய்கறி வருமே… அதை எங்கே வைக்கிறது?"

"ஏகப்பட்ட இடம் இருக்கு. பின்கட்டுல போட்டுக்கோ. நறுக்கி வைக்கிறவாளுக்கும் வசதி."

பின்கட்டு, எடுத்துக்கட்டி, முற்றம், கேமரா ரூம், சம்புடம் என்று தனி அகராதி தேவைப்படுகிற அளவு புதுப்புது வார்த்தைகள்.

இதுதான் முந்திரி, திராட்சை… சர்க்கரை மூட்டை அதோ மூலைல…

எனக்கு சூழல் புரிபடுவதற்குள் கல்யாணம் முடிந்துவிடுமென்று தோன்றியது.

ராஜப்பாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.தளர்ந்துபோன உடம்பு. இடது கால் சற்று வீக்கம். பொடி மட்டை சொல்லி வைத்த மாதிரி கீழே விழுந்து கொண்டிருந்தது. மறுபடி எடுத்து ஒரு வசவுடன் இடுப்பில் சொருகிக் கொண்டார்.

மழமழவென்ற மரத்தூணில் சாய்ந்து கொண்டார்.

எட்டடி நீளக் குழிதான் அடுப்பு. கிட்ட நெருங்கும்போதே அனலடித்தது. நிரந்தரமாய் இரண்டு பெரிய அடுக்குகளில் கலங்கலாய் வெந்நீர். ஒன்றில் காப்பி பாத்திரம் கூட மிதந்தது.

"எத்தனை பேர் சாப்பிட வருவா..கரெக்டா சொல்லிட்டா.. எனக்கும் வசதி…"

"நம்ம உறவுக்காரா.. அப்புறம் இவங்க ஆபிஸ்காரான்னு எப்படியும் இருநூறு பேர் தேறலாம். கிராமத்து டிக்கெட் இருக்கே. ஒரு பய அடுப்பு மூட்ட மாட்டான்" என்றார் மாமா.

"ப்ச்.. என்ன மாமா இது.. நாமதானே இன்வைட் பண்ணியிருக்கோம்" என்றான் பாலா.

"போடா.. இங்கே எவனுக்கும் சொரணையே இல்லே. திட்டினாக்கூட ஈன்னு இளிச்சுண்டு நிப்பான்…"

பாலா மாமாவைப் பற்றி அதிருப்தி தெரிவித்ததன் காரணம் புரிந்தது. மனிதருக்கு எதிலுமே சீரியஸ்னஸ் இல்லை.

(மீதி அடுத்த இதழில்)

About The Author