கைக்கு எட்டினது….

"சாமி நெனைச்சா என்ன கேட்டாலும் தருவாராப்பா?"

அசோகனின் கால்களைப் பற்றிக் கொண்டு கேட்டது சிந்துஜா. இரண்டரை வயது.

"ம்…"

"நெஜம்மாவா…". குழந்தையின் பார்வையில் கொஞ்சம் சந்தேகம், கொஞ்சம் எதிர்பார்ப்பு.

"ஆமாம்மா….சாக்லேட்…..பிஸ்கட்….பொம்மை….யானை…எது கேட்டாலும் தருவார்."

சில வினாடிகள் யோசனைக்குப் பின் கேட்டாள் சிந்துஜா.

"அம்மாவை?"

எதிரில் அமர்ந்திருந்தாள் நந்தினி. அசோகன் முகத்தில் கவலைக் கோடுகள். வார்த்தைகள் திணறின.

"ஒரு நிமிஷம் எதுவும் பேச முடியலே என்னாலே….குழந்தை மனசுல இவ்வுளவு ஏக்கம் இருக்குன்னு இன்னைக்குத்தான் புரிஞ்சுது….நல்ல வேளை…..எங்கம்மா வந்து…."அப்பா ஆபிஸ் போகணும்…லேட்டாச்சு…சாயங்காலம் பேசலாம்’னு சொல்லி கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க."

நந்தினி மெல்ல நிமிர்ந்தாள்.

"அசோக்….இப்பவாவது உங்க தீர்மானத்தை மறுபரிசீலனை பண்ணுங்க.. அட்லீஸ்ட்…உங்க குழந்தையோட ஆசைக்காவது…"

"இல்லே நந்து…..என்னால செத்துப் போன என் மனைவியை மறக்க முடியலே….வீட்டில ஒவ்வொரு மூலையும்….ஒவ்வொரு பொருளும் எனக்கு அவளைத்தான் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கு…..அவ செத்துப் போனதாகவே
என்னால நினைக்க முடியலே….இன்னமும்…..இப்பவும் உயிரோடதான்…என்கூடவே இருக்கிற மாதிரி பிரமை…"

"அப்புறம் உங்க இஷ்டம் அசோக்" என்றாள் நந்தினி.

அம்மா வாசலில் கவலையுடன் காத்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததுமே பதறினாள்.

"திடீர்னு குழந்தைக்கு ஜூரம்டா…..ஒரேயடியா உளறாரம்பிச்சுட்டா… ‘அம்மா….அம்மா’னு புலம்பல் வேற…."

"டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டு போகலையா?" என்றான் பதட்டத்துடன்.

"வந்தார்…..இன்ஜக்ஷன் போட்டுட்டு போயிருக்காரு…. மறுபடி கிளீனிக் மூடற நேரத்துக்கு வரதா சொன்னாரு…"

சிந்துஜாவின் உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது, லேசான முனகலில், "அம்மா.."

அசோக் தீர்மானித்து விட்டான்.

நந்தினி அவன் கையைப் பற்றிக் குலுக்கினாள் பரவசமாக.

"வாழ்த்துக்கள் அசோக்….நல்ல முடிவை எடுத்திருக்கீங்க…."

"இத்தனை நாள் நீ வாதாடியதும்…..குழந்தை ஏக்கமும் என்னை மனசு மாற வச்சிருச்சு…"

"ஹூம்….நான் …நீன்னு க்யூவுல நிப்பாங்க….யார் அந்த அதிர்ஷ்டசாலி….அசோக்?"

"நீ…..நீ தான் நந்து….உனக்கு சம்மதம் என்றால்…"

நந்தினி சட்டென்று மவுனமானாள். ‘நான்….நானா…’

மனசுக்குள் தவிப்புடன் அவள் பதிலுக்காகக் காத்திருந்தான் அசோக்.

உமா உயிருடன் இருந்தபோதே நந்தினி பழக்கம். மெல்ல மெல்ல தன் குணங்களால் அவனை ஆகர்ஷித்து மனசுக்குள் இடம்பிடித்து இருந்தாள். ஆனால், வெளியில்தான் அவன் காட்டிக் கொள்ளவில்லை.

உமா இடம் வெறுமையானதும், நந்தினியின் நினைவுகள் முழுமையாகவே பற்றிக் கொண்டன.

அவள் என்ன நினைப்பாளோ என்ற தயக்கம் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தது. அவள் மறுமணத்திற்கு விடாமல் வற்புறுத்திய போதும்…தன் மீதுள்ள அக்கறைதானே காரணம் என்றே நினைத்தான். அன்பில்லாமலா அக்கறை வரும்?

என்ன சொல்லப் போகிறாள்?

"ப்ளீஸ்…..நாளைக்கு சொல்றேனே…." என்றாள்.

"சரி…" என்றான் அரைமனதாக.

சிந்துஜாவிற்கு உடம்பு சயாகி விட்டிருந்தது.

"அப்பா…..இன்னைக்கு பீச்சுக்கு போகலாமா?"

"இல்லேம்மா…நாளைக்கு போகலாம்"

"போப்பா….எவரி சாட்டர்டே பீச்சுனு…. நீதானே….சொன்னே"

ஆமாம். ஆனால், இன்று நந்தினி வரப்போகிறாள். தன் பதிலைச் சொல்லப் போகிறாளே…அவள் வருகிற நேரத்தில் கிளம்பிப் போய் விட்டால்… என்ன நினைப்பாள்?

"போய் விளையாடு.." என்றான் அழுத்தமாக.

"ஊஹூம்…மாட்டேன்….பீச்சுக்குப் போகலாம், வா" என்று அலற ஆரம்பித்தாள்.

"சொன்னா கேட்கணும்….பிடிவாதம் பிடிக்கக் கூடாது…."

"முடியாது…..பீச்சுக்குப் போகணும்"

"உள்ளே போ…..பாட்டிகூட விளையாடு"

"பீச்…."

"சனியனே…..எதுக்கும் ஒரு நேரம்….காலம் கிடையாதா?"

குழந்தை முதல் முறையாக அறை வாங்கிய அதிர்ச்சியில் மிரண்டு….அவனை முறைத்துப் பார்த்தது. மெல்லப் பின்வாங்கி சமையலறைக்குள் ஓடிப் போனது.

அசோக் டென்ஷனாகி நந்தினியின் வரவுக்காகக் காத்திருந்தான். உள்ளே பாட்டியின் அணைப்பில் குழந்தையின் விசும்பல் கேட்டது. நந்தினி……வரவேயில்லை.

மறுநாள்-

ஒரு கடிதம் வந்தது அசோக்கிற்கு.

நந்தினியிடமிருந்துதான்.

‘மன்னிக்கவும். வீடு வரை வந்து ….சொல்லாமல்….கொள்ளாமல் திரும்பிப் போனதற்கு. எந்தக் குழந்தைக்காக…மறுமணத்தை வற்புறுத்தினேனோ….அந்தக் குழந்தையின் சந்தோஷம் பறித்து. …எனக்கு பூவிரிப்பா? சாரி…எனக்கு இதில் விருப்பமில்லை. நீங்கள் வேறு பெண் தேடலாம். மறுபடி சந்திக்க முயற்சிக்க வேண்டாம்.’

About The Author

3 Comments

  1. Manoj Ramasamy

    ரிஷபன், உயிர் ஓட்டமுள்ள மற்றும் ஒரு கதைக்கு என் வாழ்த்துக்கள் … உங்கள் கதைகள் அனைத்தையும் படித்தேன் … படித்தேன் என்பதை விட புரிந்து கொண்டேன் என்பது பொறுத்தமாக இருக்கும் … உங்களின் படைப்புகள் அனைத்துமே என்னை மிகவும் கவர்ந்தவை, குறிப்பாக ஐ லவ் யூ”, “மெட்டி”, “புரிதல்”, “எதற்கும் ஒரு நேரம்” … உங்களின் அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன் …

    இவண்,

    மனோஜ் இராமசாமி”

  2. கே.எஸ்.செண்பகவள்ளி

    அழகான கதை ஓட்டத்தை எதிர்பாராத முடிவில் நிறுத்தியுள்ளீர்கள். மிகவும் நன்று. திரு.மனோஜ் ராமசாமி குறிப்பிட்டது போல், நானும் உங்கள் படைப்புகளின்பால் ஈர்க்கப்பட்டவள். தொடர்ந்து சிறப்பான கதைகளை வழங்க வாழ்த்துகள்!!! கே.எஸ்.செண்பகவள்ளி, மலேசி

Comments are closed.