சிபி (23)

சர்வர் சுந்தரம் படத்தில், நாகேஷ் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருப்பார்.

Long long ago
So long ago
Nobody can say
How long ago

சர்வர் சுந்தரம் படத்தை இப்போது ரீமேக் செய்தால், அந்தப் பாடம் இப்படி இருக்கலாம்:

Too many crores
So many crores
Noboday can say
How many crores

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியக் கோடீஸ்வரர்கள் ஒதுக்கி வைத்திருக்கிற கள்ளப்பணம் பற்றி இப்படித்தான் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கோடிகளெல்லாமே கொள்ளையடித்த பணம்தான்.

நடுத்தர வர்க்க அப்பாவிகளிடம் அபேஸ் பண்ணியது, சோற்றுக்கு வழியில்லாத வறியவர்களின் வயிற்றிலடித்து சுருட்டியது.

கொள்ளையடித்த கோடிகளில், ராட்சசத் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்தது, ஆடம்பர வாழ்க்கைக்கு செலவு செய்தது, சொத்துக்கள் வாங்கிக் குவித்தது, வாரிசுகளுக்கு வழங்கியது, தோழிகளுக்குத் தந்தது, நாலஞ்சு தலைமுறைகளின் தேவைக்கு அபரிதமாய் ஒதுக்கியது, பதுக்கியது, இந்திய வங்கிகளில் டெப்பாசிட் செய்தது, லாக்கர்களில் வைத்துப் பூட்டியது எல்லாம் போக, இந்தியாவுக்குள்ளே ஒளித்து வைக்க இடமே இல்லாமல் போன உபரிக் கோடிகளைத்தான் ஸ்விட்ஸர்லாந்தில் கொண்டு போய்க் கொட்டுகிறார்கள்.

இவர்களெல்லாம் மேலோகத்துக்கோ, அல்லது கீழ் லோகத்துக்கோ போகிறபோது எத்தனைக் கள்ளக் கோடிகளை வெறுங்கைகளில் அள்ளிக்கொண்டு போவார்கள்?

ஸ்விஸ் வங்கிக் கோடீஸ்வரர்களின் முதல் பட்டிய லொன்று வெளியே வந்தது. அடுத்தடுத்துப் பட்டியல்கள் கசிந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் பட்டியலே மாயமாய் மறைந்து விட்டது.

கள்ளக் கோடீஸ்வரர்களில் முதன்மையானவர்கள் அரசியல்வாதிகள். ஆளுங்கட்சிலிருக்கிறவர்கள், எதிர்க் கட்சிகளிலிருக்கிறவர்கள், பிராந்தியக் கட்சிகளில் இருக்கிறவர்கள், எம் பிக்கள், அமைச்சர்கள்.

எல்லோருமே மக்கள் சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பது இந்த அனைவருக்கு முள்ள ஒற்றுமை. இன்னொரு ஒற்றுமை, பட்டியல் வெளிவந்து விடக்கூடாது, தங்களுடைய பெயர்கள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒற்றுமையாயிருக்கிறார்கள் என்பது.

பட்டியலை வெளியிட வேண்டும் என்று அவையில் குரலெழுப்புவதை சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருடாந்திரப் பொழுதுபோக்காய் வைத்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு அப்படியொரு குரல் எழுந்த போது, ஸ்விஸ் வங்கியொன்று, இந்திய அரசு அதிகார பூர்வமாய் எழுதிக் கேட்டால் பட்டியலை தரத் தயார் என்று அறிவித்ததும் எல்லாத் தரப்பும் கப்சிப் ஆகிவிட்டதாய் ஒரு தகவல் உண்டு.

ஆளும் கட்சியினரும் பிரதான எதிர்க் கட்சியினரும் எதிரும் புதிருமாயிருப்பார்கள். ஆனால், இந்தப் பக்கத்திலிருந்து

திடீரென்று ஒரு டைவ் அடித்து அந்தப் பக்கம் போய் விடுவார்கள்.

வைஜயந்தி மாலா இ கா விலிருந்து பா ஜ க வுக்குத் தாவினார், திருநாவுக்கரசர் பா ஜ க விலிருந்து இ கா வுக்குத் தாவினார்.

பா ஜ க வுக்கு முன்னால், தி.மு.க., அ.தி.மு.க., தனிக் கட்சி.

அவர் ஒவ்வொரு கட்சியாய்ப் போகிற போது, அவருடைய பரிவாரங்களும் பின்னாலேயே போவார்கள், பெட்டி படுக்கைகளோடும் எம் ஜி ஆரின் உருவப் படங்களோடும்.

திமுக விலிருந்து அ.தி.மு.க. வுக்கும் அ.தி.மு.க. விலிருந்து திமுக வுக்கும் போய்த் தங்கியிருப்பதும், தாய்க் கழகத்துக்குத் திரும்பி வருவதும் தமிழ் நாட்டில் சர்வ சாதாரணமாய் நிகழ்கிற சர்க்கஸ் நிகழ்ச்சிகள்.

திமுக விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேறியபோது, அவரோடு முதல் ஆளாய் வெளியேறியவர் நாஞ்சில் மனோகரன். அ.தி.மு.க. தொண்டர்களெல்லாம் கையில் ரெட்டை இலையைப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டபோது முதல் ஆளாய்ப் போய்ப் பச்சை குத்திக் கொண்டவரும் அவர் தான். மேடையில் பேசுகிற போது அவர் முழுக்கைச் சட்டையை மஸ்ல்ஸ் வரைக்கும் மடித்து விட்டிருப்பார். கையில் ஒரு பிரம்பு வைத்துக் கொண்டு அதை உருட்டியபடியே மேடையில் பேசுவார். பிற்காலத்தில் திரும்பவும் அவர் தாய்க் கழகத்துக்குத் திரும்பி வந்த போது, பச்சை குத்திய கையை ஒளித்துவைக்க வேண்டிய கட்டாயம். சட்டைக் கையை மடித்து விடவே முடியாமற் போனது. ஆனால், பிரம்பு மட்டும் இருந்தது.

ஆரம்ப காலத்தில், தி.மு.க. வில் இருந்த போது அவர் நாஞ்சிலார். அ.தி.மு.க. வுக்குப் போன பின்னால், மந்திரக்கோல் மைனர். திரும்ப தி.மு.க. வுக்கு வந்த பின்னால், திரும்பவும் நாஞ்சிலார்.

பாளையங்கோட்டையில், நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தி.மு.க. வக்கீல் இருந்தார். அவர் வீட்டு மொட்டை மாடியில் கருப்பு சிகப்புக் கொடி கம்பீரமாய்ப் பறந்து கொண்டிருக்கும்.

இருந்திருந்தாற் போல ஒரு நாள் கொடியைக் காணவில்லை. ஆளுங் கட்சியான அ.தி.மு.க. வுக்கு அவர் மாறிவிட்டார்.

(எப்போதுமே கட்சித் தாவுகிறவர்கள் எதிர்க் கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்குத் தான் தாவுவார்கள். ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவுகிற தப்பைச் செய்யவே மாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. விலிருந்து தி.மு.க. வுக்கு. அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. விலிருந்து அ.தி.மு.க. வுக்கு.)

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நம்மப் பேனா சும்மாயிருக்குமோ? வீட்டுக்கு வந்ததும், இடைக்கால நிவாரணம் என்று தலைப்பிட்டு ஒரு கவிதையைக் கிறுக்கித் தள்ளிவிட்டது.

தன் உயிர் மூச்சான
மக்கள் சேவையைத் தொடர்வதற்கு
சமூகப் பணியைத் துரிதப்படுத்துவதற்கு
அடுத்தபடியாய் எந்தக் கட்சியில்
போய் ஐக்கியமாகலாம்
என்று முடிவெடுக்க
அவகாசந் தேவைப் படுவதால்
எக்ஸ் எம் எல் ஏ மொட்டை மாடியில்
கொடி பறந்த கம்பத்தில் இப்போ
கொடி கட்டித் துணி காயுது

நமக்குத் தெரிந்து, அமஞ்சிக்கரைப் பள்ளிவாசலில், செக்கச்செவேலென்று ஒரு நிர்வாகி இருந்தார்.

கரைவேஷ்டி கட்டிய நிர்வாகி.

இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், மூணு கலர் கரை வேஷ்டி கட்டியிருந்தார். கருப்பு, சிகப்பு, நடுவிலே வெள்ளைக் கோடு. அ.தி.மு.க. ஆட்சி போய், தி.மு.க. ஆட்சி வந்த போது, நடுவிலிருந்த வெள்ளைக்கோடு தலைமறைவாகி விட்டது. கவலையேப் படாமல் கருப்பு – சிகப்புக்கு மாறிவிட்டார்.

இப்போது திரும்பவும் அ.தி.மு.க. ஆட்சி.

பாவம், ஓர் ஐந்து நேரத் தொழுகையாளி எத்தனை முறை தான் கட்சி மாற முடியும்!
ஆனாலும் அவர் மாறியிருப்பார்.

அவரைப் பார்க்க வேண்டும், அதை விட, அவருடைய வேஷ்டியின் இன்றைய கலரைக் கண் குளிரக் காண வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால் மனிதர் கண்ணில் தட்டுப்படவே இல்லை.

யாராவது பார்த்தால், ப்ளீஸ், சொல்லுங்கள்.

"உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்"

"அரசியலில் நிரந்தர உறவுமில்லை நிரந்தரப் பகையுமில்லை"

‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ போன்ற சுலோகங்களெல்லாம் திராவிடக் கட்சிகளின் பரண்மேல் கிடக்கின்றன. தேவையான போது தேவையானதை எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், ரொம்ப வருஷமாய் பயன்படுத்தப்படாததால் இந்த வாசகங்களெல்லாம் இப்போது துருப்பிடித்துப் போயிருக்கும்.

மேற்கண்டவாசகங்களோடு, வேடிக்கையான வாசகமொன்றையும் பரணில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

‘தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி’

இதையே தான் பெருந்தலைவர் காமராஜர் நல்ல தமிழில் மக்கள் முன் வைத்தார்:

‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.’

அந்த மட்டைகளிலும் விதிவிலக்குகள் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. தி.மு.க. வில், ஒருவர் இருந்தார், ஒருவர் இருக்கிறார்.

இருந்தவர், சாதிக் பாஷா.

பொருளாளராக இருந்தவர். புறங்கையை நக்கக்கூடத் தெரியாத தூய்மையானவர். இருக்கிறவர், பேராசிரியர் அன்பழகன்.

"மெடிக்கல் காலேஜ்ல ஒன்னோட தங்கச்சியோட க்லாஸ்மேட்டோட அப்பாங்கறதுக்காக சொல்ற."

சத்தியமாக இல்லை. ஹைஸ்கூல் காலத்திலேயே பேராசிரியரைப் பார்த்திருக்கிறேன், அவர் பேச்சைக் கேட்டுக் கிளர்ச்சியடைந்திருக்கிறேன்.

பரமக்குடி செட்டியார் ஸ்கூல்.

களத்தூர் கண்ணம்மா கமலஹாசன் அஞ்சாவது அத்தியாயத்தில் விஸிட் கொடுத்தாரே அந்த செட்டியார் ஸ்கூல்.

ஹெட் மாஸ்டர் சங்கர நாராயணன், மாணவ மாணவியர் முன்னே சொற்பெருக்காற்றப் பல பெரியவர்களை அழைத்து வருவார்.

மஹாத்மா காந்தியின் சீடர் வினோபா பாவேயை நமக்குத் தெரியும். வினோபாவின் சீடர் குட்டியைத் தெரியுமோ?

வினோபாவைப் போலவே, இடுப்பில் மட்டும் ஒரு கதர்த் துண்டை சுற்றிக் கொண்டு வந்து, எளிமையான ஆங்கிலத்தில், இனிமையாய்ப் பேசினார் குட்டி.

அதன்பிறகு, ம பொ சி வந்தார். மெட்ராஸ் மேயர் அப்துல் காதர் வந்தார்.

பிறகு, பேராசிரியர் அன்பழகன்.

"சென்னையிலிருந்து கிளம்புகிறபோது, எந்த ஊருக்குப் போகிறீர்கள் என்று என் மனைவி கேட்டாள். பரமக்குடிக்குப் போகிறேன்" என்றேன். பரமக்குடியைத் தாண்டி, எமனேஸ்வரத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசவேண்டும், எமனேஸ்வரத்துக்கும் போய் வருவேன் என்று நான் சொன்னதும் என் மனைவி, "எமனேஸ்வரத்துக்கா!" என்று கண்களை அகலமாய்த் திறந்து கவலை கொண்டாள். கவலைப்படாதே, முடிந்தால் அப்படியே ராமேஸ்வரத்துக்கும் போய் வந்து விடுகிறேன், என்றதும் என் மனைவி கவலையை மறந்து சிரித்து விட்டாள்.

மாணவர்கள் நாங்களும் சிரித்தோம், கை தட்டியபடியே.

அன்றைக்கே பேராசிரியர் மேல் பேரன்பு ஏற்பட்டு விட்டது.

பல வருஷங்கள் அமைச்சராயிருந்தும் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நல்ல மனிதர். தொண்ணூறு வயதில் ஒருவர் கம்பீரமாய் வாழ்கிறாரென்றால் நல்ல மனிதராய்த் தானிருக்க வேண்டும்.

இதைப்போல் நல்லவர்கள் அதிமுகவில் இருக்கிறார்களோ?

ஒரு நல்ல மனிதர் கண்ணில் தட்டுப்படுகிறார்.

(தொடர்வேன்)

About The Author