நிறைவு

ஏனோ அந்தப் பெண்மணியைப் பார்க்கும் போது செத்துப் போன அம்மா ஞாபகம்தான் வந்தது. வருஷம் தவறாமல் ஆனி மாசம் அம்மா செத்துப் போன நாள் வரும். கூடவே சர்ச்சையும்.

"என்றைக்கு?"

"பதிமூணாந்தேதி. லீவுக்குச் சொல்லிட்டீங்களா?"

"சொல்லணும். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை. நடுவுல இது வேறே. ம்ம்.பேசாமே ஒண்ணு செஞ்சா என்ன?" என்றேன்.

"வேணாம்.பேசாதீங்க.." என்று தடுக்கும் நளினியின் குரலில் பதற்றம் தெரியும்.

"எல்லாம் மூட நம்பிக்கை."

"அப்படிச் சொல்லாதீங்க. நாலு வருஷங்களுக்கு முன்னால செய்ய முடியாமே போயி, கோவில்லே வச்சு செஞ்சோம். அடுத்த வாரமே உங்களுக்கு ஸ்கூட்டர் ஆக்சிடெண்ட். பிழைச்சதே அதிர்ஷ்டம்."

"ஸ்கூட்டர்ல ஏதோ ரிப்பேர். அதைப் போயி."

"சரி.. போன வருஷம்.. அதே மாதிரி நீங்க டில்லிக்கு டூர் போகணும்னு கோவில்ல செஞ்சீங்க என்ன ஆச்சு. பிரபுக்கு ஜுரம். ஸ்கூலுக்கு இரண்டு வாரம் லீவு. சீரியஸா போயி…புள்ளை.. பிழைப்பானான்னு இருந்தான்."

"இப்ப என்னதான் சொல்றே?" என்றேன் எரிச்சலாக.

"விளையாட்டே வேணாம். இந்த வருஷம் வீட்டுலதான் திவசம்"

"உன்னால அவ்வளவு காரியமும் செய்ய முடியாது. அப்புறம் உடம்பு வலி அது இதுன்னு படுத்திட்டு, செஞ்சதுல ஏதோ குறை அப்படீன்னு அடுத்த புராணம் ஆரம்பிப்பே"

"எனக்கு தெரிஞ்ச மாமி ஒருத்தி இருக்கா. நமக்கு கூட ஏதோ தூரத்து உறவாம். சமையலுக்கு அவளை வச்சுக்கலாம். நம்ம சாஸ்திரிகளுக்கு நீங்க ஃபோன் பண்ணிடுங்கோ. சிம்பிளாப் பண்ணிணாலும் வீட்டோட பண்ணிடலாம்" என்றாள்.

தலையசைத்து வைத்தேன்.

*****

மாமி சொன்னபடியே வந்து விட்டாள். மடியாகச் சமையலும் ஆரம்பித்து விட்டது. ரொம்பவும் இயல்பாகச் செய்தாள். சர்வீஸ்தான்.

மாமி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இறுக்கம்தான். சற்று மேடான நெற்றி; முகச்சுருக்கம்; சின்னக் கண்கள்தான். அம்மாவும் இதே ஜாடைதான். அதனால்தானோ என்னமோ மாமியைப் பார்க்கும் போது… அம்மா ஞாபகம் வந்தது.

கூடையில் இருந்த சின்னச் சின்னக் கத்திரிக்காய்களைப் பார்க்கும் போதும் அம்மா ஞாபகம்தான். கத்திரிக்காய் போட்டு ரசம் வைப்பாள். மசாலாப் பொடி திணித்த பிஞ்சுக் காய்கள். அம்மாவுடன் போய் விட்டது அந்த ரசமும். இவளிடம் கேட்டால் சிரிப்பாள்.

"கத்திரிக்காயை என்ன பண்ணப் போறீங்க" என்றேன்.

"ஏதாவது உளறாதீங்க.. திவசத்துக்குக் கத்திரிக்காயெல்லாம் பண்ண மாட்டா."

என்ன அசட்டுத்தனம். அம்மாவுக்கு அதுதானே பிடிக்கும். இன்று அதைச் செய்யாமல் வேறேதோ காய்கறிகளைச் செய்து வைத்து என்ன பயன்?

சாஸ்திரிகளும் இன்னொருவரும் வரவே பதினொரு மணியாகி விட்டது. வாய் இயந்திரமாய் மந்திரங்களை முணுமுணுக்க, மனசுக்குள் அம்மா நினைவுகள்தான்.

அடம் பிடிக்கிற பிரபுவைச் சமாளிக்கிற விதமே தனி.

"தோசை சாப்பிட வாடா."

"எப்ப பார் அதே தோசை! வேணாம்.. போ." என்பான்.

"இங்கே பார். யானை தோசை, குருவி தோசை" என்பாள். மாவை வெவ்வேறு ஷேப்பில் கொட்டித் தோசை வார்த்துச் சாப்பிடச் செய்து விடுவாள். “உங்க அப்பனையும் இப்படித்தான் தாஜா பண்ணணும்” என்று கூடவே கமெண்ட் வேறு.

கொஞ்சம் கொஞ்சமாய் வியாதிகள் ஆரம்பித்தன. சாப்பாடு குறைந்து கொண்டே வந்து மோர் சாதத்தில் நின்று விட்டது. எது அதிகப்படியாய்ச் சாப்பிட்டாலும் வாந்தி, பேதிதான். நல்லவேளை. அம்மா ரொம்பவும் கஷ்டப்படாமல் போய்விட்டாள்.

"சுபிட்சமா, தீர்க்காயுசா இருக்கணும்" என்றார் சாஸ்திரிகள். சாப்பாடு முடிந்து விட்டது. தட்சணையும் கொடுத்தாகி விட்டது. கிளம்ப வேண்டியதுதான்.

"ரொம்ப திருப்தி சார். வரட்டுமா.." போய்விட்டார்கள்.

ஊஹூம். எனக்கு ஏனோ திருப்தியாகவில்லை. மனசுக்குள் ஏதோ குறை நெருடியது. புரிந்தும் புரியாமலும் மந்திரங்களைச் சொன்னதில் திருப்தி ஏற்படவில்லை.

மனசு அலைபாய, பார்வை தன்னிச்சையாய் மாமி மேல் பதிந்தது. அருகே போனேன்.

"மாமி.. நீங்க சாப்பிடுங்கோ. நான் பரிமாறட்டுமா?"

நளினி ஏதோ சொல்ல முயல்வது புரிந்தது. ‘நம் அந்தஸ்து என்ன?போயும் போயும் சமையல்கார மாமிக்கு நீங்க ஏன் பரிமாறணும்’ என்கிற தொனி புரிந்தது.

ஊஹூம்.. நான் கவனிக்காதவன் போல அதே கேள்வியைத் திரும்பக் கேட்டேன், ரொம்ப ஆர்வமாய்.

மாமி சோகையாய்ச் சிரித்தாள்.

"எனக்கு எதுவுமே இப்ப ஒத்துக்கிறதில்லே. ஏதோ ருசியாச் சமைப்பேனே ஒழிய நான் சாப்பிடறது மோர் சாதம் மட்டும்தான். வேறெதாவது சாப்பிட்டா வாந்தி வந்திடும். முடியறதில்லே."

மெல்ல மோர் சாதம் கலந்து தொட்டுக் கொள்ள ஏதுமின்றி ஒவ்வொரு கவளமாய் விழுங்கினாள்.

அம்மா..

மனசு உடைத்துக் கொள்ள கண்ணீர் தானாகக் கொட்ட… அடக்க இயலாமல்… விம்ம ஆரம்பித்தேன்.

About The Author

3 Comments

  1. Dr. S. Subramanian

    The last sentence. That is the clincher. I did the same thing when I finished reading the story. If only there is a way to reverse certain events…..

Comments are closed.