நீர்ப் பறவை – இசை விமர்சனம்

முந்தைய படத்தில் தேசிய விருது பெற்ற என்.ஆர்.ரகுநந்தன் – சீனு ராமசாமி கூட்டணி மீண்டும் இறக்கை கோர்த்திருக்கும் படம் ‘நீர்ப் பறவை’.

மொத்தம் ஏழு பாடல்கள். அனைத்தையும் எழுதியிருப்பவவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். கடலோரக் கிறித்துவ மக்களின் வாழ்க்கையே கதை எனப் பாடல்கள் சொல்லுகின்றன.

பற பற பறவை ஒன்று

பிடிலின் இசையுடன் தொடங்கும் இந்த அழகான மெல்லிசைப் பாடல், இருவேறு வடிவங்களில் இடம்பெற்றிருக்கிறது. முதல் பாடலை இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷும், இரண்டாவது பாடலை ஸ்ரேயா கோஷலும் பாடியுள்ளனர். முதலாவது, நாயகனின் காதல் சொல்வது, மற்றது நாயகியின் பிரிவு சொல்கிறது. வெவ்வேறு வரிகளால், அழகாக வித்யாசப்படுத்திக் காட்டியிருக்கிறார் கவிப்பேரரசு அவர்கள். காதலைச் சொல்ல விவிலியத்தைத் துணைக்கு அழைத்து வந்திருக்கிறார்.

முதலாவது,

"மழையில் கழுவிய மணலிலே தொலைந்த காலடி நானடி
முகத்தைத் தொலைத்த என் வாழ்வுக்கு, நிலைத்த முகவரி நீயடி" – எனக் காதல் அழைப்பு விடுக்கிறது.

அடுத்தது,

"காற்றுக்குத் தமிழும் தெரியும்,
கண்ணாளன் திசையும் தெரியும்
கட்டாயம் துன்பம் சொல்லும்" எனக் காற்றைத் தூது அனுப்புகிறது.

மீனுக்கு சிறு மீனுக்கு

படத்தின் ஒரே டூயட் பாடல் இதுதான். விஜய் பிரகாஷும் ஹரிணியும் பாடியுள்ளனர். இசைக்கு அவ்வளவு முயற்சிக்கவில்லை. இருந்தும் வரிகளும், குரலும் அதை ஈடு செய்கின்றன. விஜய் பிரகாஷின் குரல் கூடுதல் வசீகரம்! கடலையும், கடல் சார்ந்த இடத்தையும் உவமைகளாகக் கொண்டு ஒலிக்கிறது பாடல்.

யார் வீட்டு மகனோ!

பாடியிருப்பவர் ஆனந்த். பாடலைக் கேட்கும்பொழுது மெட்டு மற்றொரு பாடலை நினைவுபடுத்தினாலும், கேட்க வைக்கிறது. மென்சோக வகைப் பாடல்.

ரத்தக் கண்ணீர்

இதுவும் சோகம் சொல்லும் ஒரு பாடல்தான். நீண்ட நாட்கள் கழித்து ஹரீஷ் ராகவேந்திரா பாடியிருக்கிறார். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லாமல், பாடல் ஐந்தோடு ஆறாகக் காற்றில் கரைகிறது.

நீர்ப் பறவை உயரப் பறக்கும்!

About The Author