மது-2

பெரியப்பா மறந்து போனார்.

பெட்ரோல் ஆவியாகிப் போனது.

பசி கூட கொஞ்ச நேரத்துக்குப் பம்மிக் கொண்டது.

ரெஸ்ட்டாரன்டில் ரெண்டு பேரும் எதிரெதிரே அமர்ந்தார்கள். கல்லூரி நாட்களில் கூட இவளை இத்தனை க்ளோஸ் அப்பில் பார்க்கவோ வேறே மாணவ மாணவிகளுடைய ஊடுருவில் இல்லாமல் தனிமையில் இருக்கவோ சந்தர்ப்பம் கிட்டிய தில்லை என்கிற நினைப்பு இவன் முகத்தில் ஒரு மலர்ச்சியைக் கொடுத்தது.

‘என்ன சிரிப்பு?’ என்றாள் மதுபாலா, முழங்கைகளை மேஜையில் ஊன்றி, முகத்தைக் கைகளில் ஏந்தியபடி.

"திடீர்னு சோகமாயிர்ற, திடீர்னு சிரிக்கிற?"

"நீ தான மது சொன்ன, சந்தோஷத்த மொகத்ல காட்டு, கொரல்ல காட்டுன்னு."

"அதான் மொகத்துல காட்றியாக்கும்? சரி, இப்ப கொரல்ல காட்டு?"

"மது, ஒனக்கு மதுபாலாங்கற பேர விட ரம்பாங்கற பேர் பொருத்தமாயிருக்கும் தெரியுமா?"

"என் கட்டழக வச்சுச் சொல்றியா?"

"நீ ரம்பம் போடறத வச்சுச் சொல்றேன்."

மது சிரித்தாள். கண்களில் நீர் முட்டச் சிரித்தாள்.

"இப்படி நா ஒம் முன்னால ஒக்காந்து சிரிச்சிட்ருப்பேன்னு முந்தா நாள் வரக்யும் நெனக்யவேயில்ல ஹசீன். நா எவ்வளவு பெரிய கண்டத்துலயிருந்து தப்பிச்சி வந்திருக்கேன் தெரியுமா?"

"கண்டமா?"

"ஆமா. சொன்னேன்ல. பேப்பர்ல ந்யூஸ் வந்ததுன்னு. நீ பேப்பர்ல்லாம் பாக்கறதில்லயா? ஒடனே அறுக்காத, நா இங்லீஷ் பேப்பர்தான் படிப்பேன்னு."

"எங்க மது, காசு குடுத்துப் பேப்பர் வாங்க மனசில்ல; ஓசிப் பேப்பருக்கும் வழியில்ல. எங்கதைய வுடு. ஒங்கதை என்ன, என்ன பேப்பர், என்ன ந்யூஸ்?"

"சொல்றேன் கேளு. நா எக்ஸாம் எழுதிட்டு எங்க சித்தப்பா ஃபேமிலியோட டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் சுத்திட்டு ரிஸல்ட் வந்தப்புறம் ஊருக்குப் போனேனா? ஊருக்குப் போனா, அங்க ஒரு பயங்கர ஷாக். எங்கப்பா எனக்கு ஒரு மாப்ள பாத்து வச்சிருக்கார். எல்லாம் எங்க அண்ணனோட தூண்டுதல். சட்டுபுட்டுன்னு என்னத் தள்ளி விட்டாத்தானே அவனுக்கு லைன் க்ளீயர் ஆகும்! மாப்ள எப்டீங்கற? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல மாடு புடிக்கிறவன் மாதிரி ஒரு அம்சமான ஆசாமி. மொதல்ல மொரண்டு புடிச்சேன். அப்புறம் எங்கம்மாவோட ஒப்பாரி ஒத்துக்காம, துணிஞ்சவளுக்குத் தூக்கு மேடை பஞ்சு மெத்தைன்னு சரின்னுட்டேன். அப்புறம் வந்தது அடுத்த ஷாக், வரதட்சணை ரூபத்துல. ஒரு கார், ஒரு பைக். ஒரு பெரிய ஃப்ரிட்ஜ், ஒரு குட்டி ஃப்ரிட்ஜ். ஒரு ஹோம் த்யேட்டர், ஒரு கலர் டிவி. ஒரு மூணு பெட்ரூம் வீடு, ஒரு ரெண்டு பெட்ரூம் ஃப்ளாட்& எல்லாமே கல்யாணமான கையோட ஒரு சின்னவீடும் செட்அப் பண்ற அளவுக்குத் தேவையான ஐட்டங்கள். பத்தாததுக்குக் கரன்ஸி வேற. அது கருப்புப் பணமோ, கள்ள நோட்டோ, காசு குடுத்து வெலக்கி வாங்கின ஒரு விலை மகனுக்குக் கழுத்த நீட்டணும்னு எனக்குத் தலையெழுத்தா என்ன? இதெல்லாம் இந்த ஆண் ஜென்மங்களுக்கு, எங்கப்பாவுக்கும் எங்க அண்ணனுக்கும் ஒறக்யவேயில்ல. என்னக் கரையேத்தி விட்டுட்டுக் கைகழுவுறதிலேயே குறியா இருக்காங்க. நா பாத்தேன். முகூர்த்தத்தண்ணிக்கிக் காலங்காத்தால போலீஸ் ஸ்டேஷனுக்கு சின்னதா ஒரு ஃபோன். புது மாப்ளய மாமியார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. போலீஸ் முன்னால அப்பாவும் அண்ணனும் கப்சிப்னு இருந்தாங்க. அப்புறம் குதிக்க ஆரம்பிச்சாங்க. நீ என்னடி பெரிய புரட்சித் தலைவின்னு நெனப்பா அது இதுன்னு கத்தினாங்க. கத்திக்கிட்டே கெடங்கன்னு எல்லோருக்கும் டூ விட்டுட்டு நா மெட்ராஸ்க்கு ரயிலேறிட்டேன்."

"வெல்டன் மது. ஸூப்பர்ப். ஊருக்கு ரெண்டு பொண்ணுங்க ஒன்னப் போல புரட்சி செஞ்சா வரதட்சணை இந்த நாட்ட விட்டுப் புறமுதுகு காட்டி ஓடியே போயிரும்."

சாப்பாடு வந்தது. ரெண்டு பேருக்கும் செமப் பசியானதால் அதிகம் பேசிக் கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தார்கள். அடுத்து என்ன செய்வது என்று பேச்சு வந்த போது ஒரு சின்ன தயக்கத்தோடு இவன் கேட்டான், தன்னுடைய அறைக்குப் போய் இருட்டுகிறவரை பேசிக் கொண்டிருக்கலாமா என்று. கொஞ்சங்கூட சங்கடமோ சங்கோஜமோ இல்லாமல் ‘ஓ’ என்றாள் மதுபாலா.

பொழுது சாய்ந்ததும் இவன் மதுவைக் கொண்டு போய் மைலாப்பூரில் அவளுடைய சித்தப்பா வீட்டில் விட்டு விடுவது என்று முடிவாயிற்று.

பெட்ரோல் நிரப்பிக் கொண்டு ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருந்தபோது, அவனுடைய முகத்தை எதிர்கொள்ள வேண்டிய சங்கடத்தைத் தவிர்க்கிற சௌகரியத்தில் மதுபாலா கேட்டாள், ‘ஹசீன், நா ஒரு விஷயம் கேட்டா சங்கடப்பட மாட்டியே?’

அவள் என்ன கேட்கப் போகிறாள் என்று கிட்டதட்ட ஊகித்துவிட்ட இவன், ‘நீ என்ன கேட்டாலும் நா சங்கடமே பட மாட்டேன் கேளு’ என்றான்.

"நா கேள்விப்பட்டது நெஜந்தானா ஹசீன்?"

"என்ன கேள்விப்பட்ட?"

"நம்ம க்லாஸ்லயே நீ ஒருத்தன்தானே ஃபெயிலாம்?"

"கும்பலோட கோவிந்தா போடாம என்னோட தனித்தன்மைய நிலை நாட்டிட்டேன் பாத்தியா!"

"ஸீரியஸ்னஸ்ஸே இல்லாமப் பேசறியே ஹசீன். நீ ஆம்பள. ஒன்னோட எதிர்காலத்த நீ ப்ளான் பண்ண வேண்டாமா? அத்து மீறி அட்வைஸ் பண்றேன்னு நெனக்யாதே. ஒம்மேல அக்கறயிருக்கறதனால தான் சொல்றேன்."

"நெஜம்மாவா சொல்ற மது? எம்மேல ஒனக்கு அக்கறயிருக்கா?"

"இருக்காதா பின்ன? க்லாஸ்லயே நீ சாந்தமான பையன். யார் வம்புக்கும் போகமாட்ட. சிகரெட் குடிக்கமாட்ட. தண்ணி கிண்ணி அடிக்கமாட்ட. பொண்ணுங்களப் பாத்து ஜொள்ஸ் விடமாட்ட."

‘பூலோகப் பெண்களைப் பார்த்து ஜொள்ஸ் விட்டதில்லையென்பது வாஸ்தவந்தான். ஆனால் ஒரேயொரு தேவதையிடத்தில் நான் மயக்கமாயிருந்ததையோ, அந்த மது மயக்கமே நான் ஃபெயிலாய்ப் போனதற்கு ஒரு காரணமாயிருக்கலாமென்பதையோ நீ அறிய மாட்டாயே மதுபாலா’ என்று இவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

இவனுடைய வாயிலிருந்து வார்த்தைகளேதும் வராமற்போகவே, மதுபாலாவே திரும்பவும் வாயைத் திறந்தாள்.

(தொடரும்)

About The Author